ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 6
Determination, Passion இரண்டும் எனக்கு இயல்பாகவே உண்டு. இந்த இரண்டையும் ஒட்டித்தான் என்னுடைய வாழ்க்கைப் பயணமே. சுயபச்சாதாபத்துக்கு என்றைக்குமே நான் இடம் கொடுத்ததில்லை.
‘எது வரையிலும் நீங்கள் போராடுவீர்கள்?’ என்று யாராவது என்னை கேள்வி கேட்டால்… ‘வெற்றி கிடைக்கும் வரை… அல்லது உயிரோடு உள்ளவரை’ என்பதே என் பதிலாக இருக்கும்.
‘வாழும் வரை போராடு… வழி உண்டு என்றே பாடு’ என்பதுதான் இந்த விஷயத்தில் என் கொள்கை.
+1 மற்றும் +2 வகுப்பு இரண்டுமே நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் அதன் மூலம் எனக்கு ஆங்கிலத்தில் fluency என்று சொல்லப்படும் புலமை ஏற்படவில்லை. தட்டுத் தடுமாறி திக்கித் திணறித்தான் ஆங்கிலம் பேசிவந்தேன். ஆனால் அது ஆங்கிலத்தில் எனக்கு இருக்கும் பற்றை எள்ளளவும் குறைக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.
எங்கள் வகுப்பில் மொத்தம் 110 பேர். அங்கே டிசில்வா என்று ஒரு பேராசிரியர் இருந்தார். 110 பேருக்குமான வருகைப் பதிவேட்டை ஓர் ஒன்றரை நிமிஷத்துக்குள் டக் டக்கென்று எடுத்து விடுவார். அவரைப் பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்லலாம்.
அவரது ஆங்கிலம் பேசும் ஸ்டைல். அவர் மொழி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். அடுத்து அவருடைய தோற்றம். கை கடிகாரத்திலிருந்து, ஷூ வரைக்கும் எல்லாமே போட்டிருக்கும் உடைக்கு தகுந்தாற்போல் மேட்ச்சிங்காக இருக்கும்.
அவர் பாடம் நடத்தும்போது வகுபே பின்டிராப் சைலன்ஸ்ஸில் இருக்கும். பாடம் நடத்தும்போதும் நடத்தி முடித்த பின்னரும், கண்டிப்பாக கேள்விகள் கேட்பார்.
அவருடைய கேள்விகளுக்கு நல்ல ஆங்கிலப் புலமை இருக்கும் நான்கைந்து ஸ்டூடண்ட்ஸ் மட்டும்தான் எப்போதும் பதில் கூறுவார்கள். மற்றவர்கள் அமைதியாகத்தான் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் அது vocabulary சம்பந்தமாகத்தான் இருக்கும். எனக்கு அவர் பேசுவது ஒன்றும் புரியாது.
ஒரு பக்கம் ஆங்கிலத்தின்மீது தீராத தாகம். மறுபக்கம் இந்தப் புரியாமை நிலைமை. இந்த இரண்டுக்கும் இடையில்தான் எனது பெரும்பாலான இங்கிலீஷ் வகுப்புகள் கடந்தன. இதனால் டிசில்வா சாரின் வகுப்புகளில் என்னால் மன ரீதியாக மனமொன்றி பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மணிநேரமும் வீணாகக் கழிந்தது.
ஒவ்வொரு முறையும் அவர் கேட்கும் கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லிவிடவேண்டும் என்று மனத்துக்குள் சபதம் செய்து தயாராவேன். ஆனால் இறுதியில் வாய் பேசா ஊமையாகவே இருந்து விடுவேன்.
இப்படியே சில காலம் உருண்டது. இரண்டு செமஸ்டர்கள் முடிந்து மூன்றாவது செமஸ்டர் தொடங்கியது.
இடைப்பட்ட காலங்களில் என்னுடைய ஆங்கில சொல் திறனை வளர்த்துக்கொண்டேன்.
ஒரு நாள் டிசில்வா சார், ‘தி பாரடைஸ் லாஸ்ட்’ என்கிற பாடம் நடத்தினார். அப்போது ஒரு கேள்வி கேட்டார்.
அதாவது Imp என்றால் என்ன? என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் கேள்வி, கேட்டால் பொதுவாக ஐந்து அல்லது ஆறு நொடிகள்தான் காத்திருப்பார். சில விதி விலக்கான சமயங்களில் மட்டும், மாணவர்கள் சரியான பதில் சொல்கிறவரைக்கும் காத்திருப்பார். மாணவர்கள் எப்படியாவது அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட வேண்டுமென்று துடிப்பார்கள். இதனால அவருடைய ஒவ்வொரு கிளாஸுமே எல்லாருக்கும் சவாலாவே இருக்கும். குறிப்பா எனக்கு…
அதனால் ‘imp என்றால் என்ன?’ என்று அவர் கேட்டதுதான் தாமதம், நான் உடனே கை தூக்கி விட்டேன்.
அவர் உடனே என்னை பார்த்து, ‘எஸ்…’ என்றார். அவர் கேட்கும் விதமே கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.
நான் உடனே, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் imp என்றால் பேபி டெவில் என்று கூறினேன்.
அவர், ‘அப்சல்யூட்லி’ என்றார் உடனே.
அந்த நொடி நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நிகழ்வு சாதாரணமாகத் தெரியலாம். ஆனா, இது போன்ற அனுபவத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன் உண்மையனா மதிப்பு புரியும்!
இது விஷயமாக நான் சொல்ல ஆசைப்படுவது ஒன்றுதான்.
அதாவது விடாமுயற்சி… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பிலும் ‘டிசில்வா சார் கேள்விக்கு இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடணும்’, ‘இன்றைக்கு எப்படியாவது பதில் சொல்லிடனும்’ என்று ஒரு வெறியுடனேயே நான் காத்திருந்திருக்கிறேன். அவர் நூறு கேள்வி கேட்டிருப்பார் என்றால் அதில் பல கேள்விகளுக்கு நான் பதிலை யூகித்து சொல்ல முற்படுவதற்குள் வேறு யாராவது கையைத் தூக்கிவிடுவார்கள். ஆனாலும் என் முயற்சியை நான் விடவில்லை. என் தீர்மானத்தைக் கைவிடவில்லை.
மாணவர்கள் எல்லோரும் அதற்குப் பிறகு, ‘என்னய்யா… டிசில்வா கிளாஸ்லயே பேசிட்டியா நீ… பெரிய ஆளு தான்யா?’ என்று சொல்லி என்னை ஒரே குஷிப்படுத்திவிட்டார்கள். டிசில்வா சாரின் கிளாஸில் பதில் சொல்வது என்பது அந்த அளவுக்கு மிகப் பெரிய விஷயம். கௌரவம்.
இது போன்ற சாதனைகளில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை நாம் மறுக்கக்கூடாது. அதை அனுபவிக்கவேண்டும்.
மேற்கூறிய சம்பவத்துக்குப் பிறகு, டிசில்வா சார் வகுப்பில் என்னுடைய பங்கேற்பு ஏதாவது ஒரு வகையில் இருக்கும். சில சமயம் தப்பாகக்கூட பதில் சொல்லியிருக்கிறேன். அவர், ‘நாட் எக்சாக்ட்லி தட்’ என்று சொல்லி அதைத் திருத்திச் சொல்வார்.
நான் முதன்முதலில் பதில் சொன்ன மேற்கூறிய அந்த imp சம்பவம் என்னைப் பொருத்தவரையிலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகவே மாறிப் போனது. அதாவது எனக்கும் டிசில்வா சாருக்கும் இடையே இருந்த ஒரு திரையை அது விலக்கிவிட்டது. அப்படித்தான் நான் நினைத்தேன்.
யாருடைய வகுப்பில் நாம் ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல மாட்டோமா என்று ஏங்கினேனோ அவரை அவருடைய டிபார்ட்மென்ட் அலுவலகத்தில் தனியாகச் சந்தித்து பாடம் தவிர்த்து பிற பொதுவான விஷயங்களும்கூட உரையாடும் அளவுக்கு வந்தேன்.
இதை எப்படிச் சொல்வதென்றால் அதாவது நாம் யாரைப் பார்த்து பிரமிக்கிறோமோ… ரசிக்கிறோமோ அந்த நடிகரையோ நடிகையையோ அருகில் பார்த்துப் பேசி, அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு அவர்களுடன் கூடவே ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அதுபோன்று இருந்தது மேற்கண்ட எனது அனுபவம்.
எப்படியாவது ஒரு கேள்விக்காவது பதில் சொல்லிவிட வேண்டுமென்று எனக்கு ஏற்பட்ட வைராக்கியம் கடைசியில் எங்கே கொண்டு போய் உயர்த்தியது என்று பார்த்தீர்களா! எனவே எப்போதுமே மிகப் பெரிய விஷயங்களைப் பார்த்து ‘நம்மால் முடியுமா?‘ என்கிற மலைப்போடு நிறுத்திவிடக்கூடாது. தொட்டுப்பாருங்கள்… வானமே ஒருநாள் வசப்படும்!