ஜெயிப்பது நிஜம் / அத்தியாயம் 7
சென்ற ஆண்டு மலேசியாவில் கெண்டிங் தீவுகளில் உள்ள ஒரு மிகப் பெரிய அரங்கத்தில் சுமார் 25,000 பேர் பங்கேற்ற ஒரு மாபெரும் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய உரையை முடித்தவுடன் வழக்கமாக நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்வு
நடைபெற்றது.
அப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று….
‘நீங்கள் மிகப் பெரிய சாதனையாளர். எத்தனையோ பேருக்கு வாழ்க்கையில் ஜெயிக்க ஒரு உந்துதலாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு யார் ரோல் மாடல்?‘ என்பதுதான்.
அதற்கு நான் ‘எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ‘ரோல் மாடல்’ என்று பார்த்தால் எனக்கு நான் தான் ’ரோல் மாடல்’, என்று சொன்னேன். உடனே பலத்த கைதட்டல்.
இன்ஸ்பிரேஷன் நமக்கு பலர் இருக்கலாம். உதாரணத்துக்கு சினிமா பாடகர்களில்
எஸ்.பி.பி., கே.ஜே.ஜேசுதாஸ், கிளாசிக்கல் பாடல்களில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,
நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் பி.எச்.அப்துல் ஹமீது, இப்படி பல்வேறு துறையில் பல
சாதனையாளர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்.
ஆனால் ரோல் மாடல் என்கிற கேள்வி வரும்போது… எனக்கு நான்தான் ரோல் மாடல் என்று சொன்னேன். அந்த பதிலை யாரும் எதிர்பார்க்காவிட்டாலும் அதை நான் சொன்னபோது மிகவும் ரசித்தார்கள் என்பது அப்போது எழுந்த கைத்தட்டல்களில் இருந்து புரிந்தது.
இதை நான் சொல்வதற்குக் காரணம்… தலைக்கனத்தின் காரணமாகவோ அல்லது தற்பெருமையினாலோ இல்லை. ஏதோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்கிற மமதையான நினைப்பினாலும் இல்லை.
என்னை நான் ரோல் மாடலாக முன்மாதிரியாக நினைத்துக்கொள்ளும்போதுதான், என்
வாழ்க்கையில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். விழவும்
பயமில்லை.. விழுந்த சுவடு தெரியாமல் எழுந்திருக்கவும் தயக்கமில்லை.
என்னை நானே ரோல் மாடலா நினைத்துக்கொள்ளும்போதுதான், ‘நான் அந்த நிகழ்வின்போது என்ன செய்தேன்? அந்த நேரத்தில் நான் எப்படி நடந்துகொண்டேன்? இதற்கு முன்பு அப்படியோர் சம்பவம் நடந்திருக்கிறதா? நடக்கவில்லையா? இப்போது நாம் என்ன செய்யலாம்? இதை ஒரு ரோல் மாடல் சம்பவமாக நமது வாழ்க்கையில் பதிவு செய்துவிடவேண்டுமானால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் யோசிப்பேன்.
நான் இப்படிச் சொல்வதனால் உங்களுக்குப் பிடித்த சாதனையாளர்களை ரோல்மாடலா வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அர்த்தமில்லை. உங்களுக்குப் பிடித்த நற்குணங்கள் நிரம்பிய
ஒரு சாதனையாளரை நிச்சயம் நீங்கள் ரோல் மாடலாக வைத்துக்கொள்ளலாம். கொள்கைப்
பிடிப்புடன் வாழும் ஒரு சாதனையாளர் சொன்னால் நான்கு பேர் கேட்பார்கள் என்ற நிலை இருப்பது நல்லதுதான். ஏனெனில் அவர்களுடைய அந்த ஐடியாலஜி இதன்மூலம் பரவும். ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு நீங்களே ரோல் மாடல் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முக்கியம்.
இது ஏன் என்றால், நீங்கள் உங்கள் ரோல் மாடலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர் செய்வது எல்லாம் சரி என்று அர்த்தம் கிடையாது. உங்கள் அபிமான சாதனையாளர் செய்வதில் எது சரி எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் காலப்போக்கில் உங்களுக்கு வந்துவிடும். அந்த நிலை வரும்போது நீங்களே உங்களுக்கு ரோல் மாடலாகிவிடுங்கள். அப்போது நீங்கள் இன்னும் உயரத்துக்கு செல்வீர்கள்.
வாழ்க்கையில் ரோல் மாடலைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொருவரும் மிக மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் நாம் எந்த அளவுக்கு சிரத்தை எடுப்போமோ அந்த அளவுக்கு கவனமும், எச்சரிக்கையும் பரிட்சைகளும் தேர்ந்தெடுக்கும் ரோல்மாடலுக்கும் அவசியம்.