மனத்தோடு நாம் எத்தகைய உரையாடல்களை நடத்தினால் அது சரியான உரையாடலாக இருக்கும் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இனி நாம் தெரிந்துகொள்ளப்போவது மனத்தோடு நடத்தப் போகும் முழுமையான உரையாடலை. எந்த விஷயமாக இருந்தாலும், அது முழுமையாக நடைபெற வேண்டுமானால், அதைக் குறித்து முழுத் தகவல்கள் தேவைப்படுகிறது. எல்லாம் அறிந்த ஆண்டவனிடம் முறையிடும்போதும், வரம் கேட்கும்போதும்கூட, முழுமையான வேண்டுதல்களாக இருக்க வேண்டும். புராணங்கள் அனைத்திலும், அரக்கர்கள் அழிவது, இறைவனின் ஆற்றல் மட்டுமின்றி அவர்களது அவசர புத்தியும், முழுமையாக சிந்திக்காததும்தான், என்பது அவற்றை நன்கு படித்தால் விளங்கும்.
பிரகலாதனின் தந்தையும், சகலவிதமான சக்திகள் மற்றும் அதிகாரங்களைப் பெற்றவனுமான இரண்யனும் அழிந்ததுகூட அரைகுறையான சிந்தனை (உரையாடல்கள்) கொண்டிருந்ததால்தான். பல காலம் தவமிருந்து ஆண்டவனின் தரிசனத்தைப் பெற்ற இரண்யன், தன்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும்படியான வரத்தைக் கேட்டான். காலங்கள், பருவங்களின் விளைவுகள், மனிதர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மிருகங்கள் ஆகிய அம்சங்களால் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது என்று கேட்டுப் பெற்றான். ஆனால் அவன் யோசிக்காமல் விட்ட மாலை நேரமும், மனிதனும் விலங்கும் சேர்ந்த உருவமும் தான், இரண்யன் மரணமடையக் காரணமாக இருந்தது.
எல்லாம் அறிந்த ஆண்டவனிடம் வரம் கேட்கும்போதுகூட முழுமையாக முறையிட வேண்டும் என்றால், நாம் சொல்வதை, நினைப்பதை மட்டுமே நம்புகிற, அதன் அடிப்படையில் மட்டுமே செயல்பட வைக்கும் நம் மனதுக்கு, முழுமையான தகவல்களைத் தராதபோது அதனால் ஒழுங்காக முடிவெடுக்க முடியாது. ஆழ் மனம் எடுக்கும் முடிவுகள் எண்ணங்களாக மாறும். இவைதான் மூளைக்குச் செல்லும் தகவல்களாக, ஆணைகளாக, மாற்றம் பெறும். இதன்படிதான் வாழ்க்கையும் அமையும். இத்தகைய காரணங்களால், எந்த விஷயமாக இருந்தாலும் முழுமையான தகவல்களுடன் தன்னுடன் பேசுதல் நிகழ வேண்டும்.
நம்மில் பல பேர் வாழ்க்கையில் முன்னேறாததற்குப் பல காரணங்கள் சொல்கிறோம். நமக்கு அமைந்த வேலை, தொழில், படிக்க முடிந்த படிப்பு, அமைந்த மனைவி மற்றும் பிள்ளைகள், பெற்றோர், பின்னணி, கிடைக்காத உதவிகள் போன்றவற்றைக் காரணமாகச் சொல்லி சமாதானம் அடைவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இவைதான் முன்னேறாமல் இருப்பதற்கு, முன்னேற முடியாததற்குக் காரணங்களாக, ஆழ் மனதுக்கு சொல்லப்படுகிறது. இதனால் உருவாகும் எண்ணங்களின்படி (உரையாடல் பதிவுகளின்படி) வாழ்க்கையும் நடக்கிறது. இதை மாற்றுவது எப்படி?
‘சிறு வயதில் பல்வேறு காரணங்களால், ஏழ்மைநிலை இருந்தது உண்மைதான். அதை இனி தொடர விட மாட்டேன். அதற்காக செய்ய வேண்டியது என்னவென்று யோசித்து செயல்படுவேன்’ என்று சொல்ல ஆரம்பித்து, என்ன யோசனை என்பது பற்றியும் முடிவு செய்து, செயல்பட ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிடும்போது, நமது தற்போதைய நிலை, என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் போன்றவற்றை சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
வெகு காலம் கழித்து, விழித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து, அவசரமோ, ஆதங்கமோ பட்டால், அனைத்தும் கெட்டுப் போகும். உணர்ச்சிகரமான மன நிலையிலும் சுற்றுச் சூழலை கணக்கெடுத்துச் செயல்படுபவர்கள், ஆபத்துகளைத் தவிர்த்து, வேண்டியதையும் பெறுகின்றனர்.
காட்டில் உள்ள ஒரு ஓடையில் தண்ணீர் அருந்துவதற்கு சிங்கமும், சிறுத்தைப் புலியும் ஒன்றாக வந்தன. இரண்டும் சம வலிமை உடைய விலங்குகள் மட்டுமின்றி ஆக்ரோஷமான மனோபாவத்தையும் இயற்கையாகப் பெற்றவை. இதனாலேயே தண்ணீரை யார் முதலில் குடிப்பது என்பது பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சச்சரவு பெரிதாகி, அவரவர் நிலைப்பாட்டில் மேலும் பிடிவாதமாக வாதம் செய்தனர். விட்டுக் கொடுப்பதைவிட, சண்டையிட்டுச் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலை இருவர் மனத்திலும் தோன்றியது. ஆத்திரம் தலைக்கேறி, இரண்டும் சண்டையிடத் தொடங்கின. அந்த நேரத்தில் பக்கத்தில் இருந்த மரங்களில் சலசலப்பு பெரிதாகத் தோன்றியது. இரண்டு விலங்குகளும், மேலே பார்த்தன. மரங்களுக்கு சற்றுமேல், கூட்டமாகக் கழுகுகள் வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தன. யார் சண்டையில் இறந்து போகிறார்களோ, அதைக் கொத்தித் தின்னத் தயாராக இருந்தன. இதைப் பார்த்த இரு விலங்குகளும், சண்டையிட இது நேரமல்ல என்பதை உணர்ந்து நிறுத்திக் கொண்டன. மனத்தில் ஆத்திரம் இருந்தாலும், சூழ்நிலை சரியில்லாததைப் புரிந்துகொண்டு, செயல்பட்டதால், இரு விலங்குகளும் தப்பித்தன.
இது கதையாக இருந்தாலும், உணர்ச்சியின் வசத்துக்குப் போய்விட்ட மனநிலையிலும், தங்களது சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு இருந்தால், உணர்ச்சி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருப்போம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
பிரச்னையைத் தீர்க்க முழுமையான உரையாடலாக மாற்றங்களை நிகழ்காலத்தில் நடப்பதுபோல சொல்லிப் பழக வேண்டும். இவ்வாறான நிலை இல்லாதபோதும், நடந்துகொண்டு இருப்பது போல மனத்தில் உருவகப்படுத்தி, உரையாடல் நடக்க வேண்டும். இம்மாதிரியான பொய்யான நிலையை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். நாம் இதுவரையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்த நமது, கடந்த காலத்தை வைத்து, எதிர் காலமும் வேறு எப்படி இருக்கப் போகிறது? என்ற முடிவில் மனத்தில் கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறோம். இதனால் மனத்தில் நம்பிக்கையின்மை, சோர்வு, பயம், வெளியிடத் தெரியாத ஆத்திரம் போன்றவை உருவாகி நம் வாழ்க்கையை நடத்துகின்றன.
கற்பனையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்களுக்கு பலம் இருப்பதுபோல, அதே கற்பனையில் உருவாக்கப்படும், சரியான, நேரான, நிகழ்காலத்தில் நடப்பது போன்ற எண்ணங்களுக்கும் அதே வலிமை கண்டிப்பாக இருக்கும். இதுதான் இயற்கை நியதி. ‘கான்சர்’ என்கிற புற்றுநோயைப் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. மருத்துவ வல்லுநர்களின் கூற்றுப்படி, கான்சர் செல்கள் மிகவும் பலவீனமானவை. அவற்றிற்கு பலம் கொடுப்பது மனித எண்ணங்களும் (சுய உரையாடல்களும்) அவற்றால் ஏற்படும் உடற்கூறு மாற்றங்களும்தான்.
எண்ணங்களுக்கு, அதாவது நமக்குள் நடக்கும் உரையாடல்களுக்கு அந்த அளவுக்கு வலு அதிகம். இந்த அறிவியல் உண்மையை நமது முன்னேற்றத்துக்கு உபயோகப்படுத்திக்கொண்டால், முன்னேற்றம் நிச்சயம்.
எது எப்படியிருந்தாலும், நமக்குள் சிறு தயக்கம், சலனம். இத்தகைய அவநம்பிக்கையை, மிக இயல்பாக நல்ல விஷயங்களில் புகுத்தி விடுகிறோம். உதாரணமாக, கடவுளை நம்புவோம். பிரார்த்தனைகளையும் செய்வோம். ஆனாலும் உள்ளுக்குள்ளேயே ஒரு பெருமூச்சு. ஹூம், நாமும்தான் வேண்டிக்கொண்டே இருக்கிறோம். கடவுள்தான் கண்களை திறக்க மாட்டேன் என்கிறார்…. என்கிற ரீதியில் பலரும் ‘பக்தியாக’ இருக்கிறார்கள். இவர்களது மனத்தில், கடவுளிடம் கேட்க வேண்டியவைகளைக்கூட முழுமையாகத் தோன்ற அனுமதிக்க மாட்டார்கள். பயம், நடுக்கம், கெட்ட சக்தி போன்றவை மீது நம்பிக்கை உடனடியாக வலுப்பெறக் காரணமே, அவற்றைப் பற்றி மிக வேகமாக, முழுமையாக சிந்திப்பதால்தான். நேர்மறையான, சரியான நிகழ்கால உரையாடல்களை எப்படி நிகழ்த்திக் கொள்வது? இதன் ஆரம்பம் பின்வருமாறு இருக்கலாம்.
வழக்கமாக நாம் நினைப்பது…
நான் எப்போதுமே அப்படித்தான்… எனக்கு எப்போதுமே துரதிருஷ்டம்தான்.. போன்ற புலம்பல்களுக்குப் பதிலாக, ‘இந்த கணத்திலிருந்து நான் உற்சாகமான மனிதன்…’
‘இந்த கணத்திலிருந்து நான் அதிர்ஷ்டசாலி…’
‘நான் அதை எப்படியும் செய்து விடுவேன் என்ற ‘உறுதி’ மொழிக்குப் பதிலாக,
‘அந்தப் பிரச்னைகளுக்கு மாற்று வழி இதுதான், இதில் இப்போதிலிருந்து பயணப்படுவேன்’… என்கிற ரீதியில் நமது உரையாடல்களைத் தெரிந்தே நிகழ்கால வழியில் நடத்த வேண்டும். பலன் வெகுவிரைவில் கிடைக்கும்.
0