Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

யார் உசந்தவா?

$
0
0

goats

ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 7

(ஜே நினைவாக நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் பங்குபெற்றவற்றில் முதலாவது படத்தின் திரைக்கதை வடிவம். தமிழ்ச் செல்வி எழுதிய ‘கீதாரி’ நாவலில் இருந்து சில சம்பவங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.)

காட்சி : 1

இடம் : அரச மரத்தடி

நேரம் : காலை

ஈர உடையுடன் சற்றே வயதான தம்பதி மரத்தடியைச் சுற்றி வருகிறார்கள். பின்னாலேயே பெண் குழந்தை (பேத்தி) ஒன்றும் சுற்றி வருகிறது. மூன்று சுற்று முடிந்ததும் பிள்ளையார் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்கள். பிறகு நதிக்கரையில் இருக்கும் பிரதான கோவிலின் மதில் சுவருக்கு அருகில் செல்லும் ஒற்றையடிப்பாதையில் நடக்கிறார்கள். மதில் சுவர் முடியும் இடத்தை அடுத்து  சிறிய வெட்ட வெளியும் அதன் விளிம்பில் நதிக்கரையை நோக்கி வளைந்து செல்லும் படிகளும் இருக்கின்றன. அங்கு ஆடுகள் கூட்டம் கூட்டமாக இறங்கிக் கொண்டிருக்கின்றன.

முன்னால் துள்ளிக் குதித்தபடியே ஓடும் பேத்தி அந்த ஆடுகளில் ஒன்றை தொட்டுக் கும்பிடப் போகிறாள்.

பாட்டி: அடி அசடே… ஆடைப் போய் யாராவது தொட்டுக் கும்பிடுவாளோடி…

பேத்தி : கும்பிட்டா என்னம்மா… நம்ம ஆத்துல இருக்கற மாடைத் தொட்டுக் கும்பிடறோமே…

பாட்டி : பசுவும் ஆடும் ஒண்ணாடி…

பேத்தி : ஏம் பாட்டி… அதுவும் பசு மாதிரி ஒரு ஜீவராசிதானே…

பாட்டி: நன்னா கேட்டாய் போ… பசு நாம வளக்கறது… ஆடு அப்படியா..?

பேத்தி : நாம வளத்தா மட்டும் அதைத் தொட்டுக் கும்பிடலாமா?

தாத்தா: நாமள்ளாம் உசந்தவா… அதனால நாம வளக்கற பசுவும் உசந்ததுடி.

பேத்தி : நாம மட்டும் எப்படி உசந்தவா..?

பாட்டி : நம்ம முன்னோர்ல்லாம் உசந்தவா. அதனால நாமளும் உசந்தவா.

பேத்தி : நம்ம முன்னோர்ல்லாம் எப்படி உசந்தவா?

பாட்டி : உனக்கு பதில் சொல்லி மாளாதுடியம்மா என்னால.

பேத்தி : தாத்தா நீயாவது சொல்லு… நாம எப்படி உசந்தவா?

தாத்தா : இதுல நோக்கு என்னடி சந்தேகம். சரி… நாம பசுவை எதுக்காக வளக்கறோம், சொல்லு பாப்போம்.

பேத்தி : பாலுக்காக…

தாத்தா : சமத்து… சரியா சொல்லிடுத்தே. அவா எதுக்காக ஆடு வளக்கறா தெரியுமா..?

பேத்தி : அதே பாலுக்குத்தான்.

தாத்தா : நன்னா வளத்தாளே பாலுக்காக. மாம்சத்துக்காக வளக்கறாடி.

பேத்தி : அப்படின்னா

தாத்தா (கொஞ்சம் குனிந்து தணிந்த குரலில்) : அந்த ஆடுகளை எல்லாம் பெருசானதும் வெட்டி சாப்ட்ருவாடி…

பேத்தி (பயந்து நடுங்கியபடியே) : வெட்டிச் சாப்பிடுவாளா.?

தாத்தா : ஆமாம். ஆட்டையெல்லாம் அவா ஆசையா வளக்கலை. அடிச்சுச் சாப்பிடறதுக்காக வளக்கறா.

பேத்தி : தப்பில்லையோ. ஆடெல்லாம் பாவம்லையா…

தாத்தா : என்னண்ட கேட்காதே. அவா கிட்ட போய்க் கேளு. அதனாலதான் அவா தாழ்ந்தவா… நாமெல்லாம் உசந்தவா. நம்மாத்துல இருக்கற பசுல எதையாவது யாராவது கை நீட்டி அடிச்சு நீ பாத்திருக்கயா… லட்சுமி, சீதான்னு பேர் சொல்லி குழந்தை மாதிரின்னா கொஞ்சுவா. பால்கூட கன்னுக்குட்டி குடிச்சதுக்கு அப்பறம்தானே நாம கறந்துக்கறோம். நாமல்லாம் மிருகங்களை மனுஷத்தன்மையோடன்னா வளக்கறோம். அதனாலதான் நாம உசந்தவா… நாம வளக்கற பசுவும் உசந்தது. இப்ப புரிஞ்சுதா அம்முக்குட்டி.

பேத்தி அந்த பதிலால் உற்சாகமடைந்து, நாமள்லாம் உசந்தவா… அதனால நாம வளக்கற பசுவும் உசந்தது… என்று சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்தபடி போகிறாள். போகும்போது வழியில் குறுக்கிடும் ஆடு ஒன்றை பயமுறுத்தி விரட்டுகிறாள்.

பின்னால் வரும் பாட்டியும் தாத்தாவும் அதை ரசித்துச் சிரிக்கிறார்கள். ஆடு மேய்த்துக்கொண்டு வரும் பேத்தியோ பாய்ந்து தன் ஆட்டை அரவணைத்துச் செல்கிறாள்.

 காட்சி : 2

நேரம் : மாலை

இடம் : அக்ரஹாரம்

அக்ரஹாரத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோவிலில் மணி ஒலிக்கிறது. குழந்தைகள் விளையாட்டை நிறுத்திவிட்டு அவரவர் வீட்டு வாசலுக்குப் போய் நிற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டு முன்னாலும் அந்தந்த வீட்டு நபர்கள் அனைவரும் வந்து நிற்கிறார்கள். கோவில் மணி தொடர்ந்து ஒலிக்கிற்து. சிறிது நேரத்தில் கோவிலில் தீபாராதனை காட்டப்படுகிறது. அக்ரஹாரத்தினர் த்த்தமது வீட்டு வாசலில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிடுகிறார்கள். சில பெரியவர்கள் தெருவிலேயே விழுந்து வணங்குகிறார்கள். தீபாராதனை முடிந்ததும் அனைவரும் வீட்டுக்குள் செல்கிறார்கள். வெளியூரில் இருந்து பைகள் சகிதம் அக்ரஹாரத்தில் நுழையும் ஒருவர் ஒரு வீட்டு வாசலில் நின்று கூப்பிடுகிறார்.

ராஜாமணி… ராஜாமணி…

ராஜாமணி (தோளில் துண்டை உதறிப் போட்டபடியே) : அண்ணா வாங்கோ… இவ்வளவு நாழியாழிடுத்தா… நாளைக்குத்தான் வருவேளோன்னு நினைச்சேன்.

அண்ணா : நினைச்சபடி எது நடக்கறது, இது நடக்க சொல்லு. சரி அது இருக்கட்டும். பிச்சை மாமாவை வரச்சே பாத்தேன். ஒரு கடுதாசி கொடுத்தார். விவரமெல்லாம் இதுல எழுதி இருக்கார். நான் ஆத்துக்குப் போய் குளிச்சிட்டு வர்றேன். விஸ்தாரமா பேசலாம்

ராஜாமணி : ரொம்ப சந்தோஷண்ணா. பதிலே காணுமேன்னு நினைச்சுண்டிருந்தேன். போய் நீங்க குளிங்கோ. செத்த நேரத்துல நானே வர்றேன். (உள் பக்கம் திருபியபடியே) டீ அம்மு… உங்க அம்மா எங்கடி…

பேத்தி : என்னை அம்முன்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எதுக்கு ஜானகின்னு பேர் வெச்சாய்…. அதைச் சொல்லிக் கூப்பிடேன்.

ராஜாமணி : போடி என் அம்முக்குட்டி. அம்மாவைக் கூப்பிடுடி. சீத்தாக்கா எங்க இருக்கா. அவளையும் அழைச்சுண்டு வா.

ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார். முகமெல்லாம் சந்தோஷம்.

பரபரத்தபடியே வீட்டின் உள் பக்கம் பார்க்கிறார்.

ராஜாமணி : அடியே விசாலம்… எங்கடி போனாய்?

விசாலம் (ஒரு பாத்திரத்தில் எதையோ கரைத்தபடியே) : இங்க தானேன்னா இருக்கேன். எங்க போயிடப் போறேன்.

ராஜாமணி : சீத்தாவை வர்ற வெள்ளி பொண் பாக்க வரப்போறாடி.

விசாலம் (பதறியபடியே) : வர்ற வெள்ளியா… ஏன்னா இன்னும் நாலு நாள்தானே இருக்கு.

ராஜாமணி : பொண்ணு பாக்கத்தானேடி வரப்போறா… அதுக்கே இப்படி அலர்றாய். கல்யாண வேலையெல்லாம் எப்படித்தான் செஞ்சு முடிக்கப் போறாயோ?

விசாலம் : நான் எதுக்கு பயப்படப்போறேன். நம்ம கைல என்னண்ணா இருக்கு. எல்லாம் அந்த பகவானும் நீங்களும் பாத்துக்கப் போறேள்.

ராஜாமணி : சரி சரி… மளமளன்னு ஆக வேண்டியதைப் பாரு. நான் போய் விச்சுவைப் பாத்துட்டு வர்றேன்.

காட்சி : 3

இடம் : அக்ரஹாரம்

காவி முக்காடு போட்ட பாட்டி வீட்டின் ஜன்னல் பக்கம் ஒடுங்கி நின்று கொண்டு வாசலில் விளையாடும் குழந்தையிடம் தெருவில் யாராவது வருகிறார்களா என்று பார்க்கச் சொல்கிறார்.

ராஜாமணி : ஆரம்பிச்சாச்சா சகுனம் பாக்க? சுத்தம்.

முக்காடு அணிந்த பாட்டி : குழந்தே நீ பாரும்மா.

ராஜாமணி : ஊரே உன் முகத்துல முழிக்கக் கூடாதுன்னு சகுனம் பாத்துண்டிருக்கு. நீ உனக்கு சகுனம் பாக்கறியா… நன்னா இருக்கு. இப்போ எந்த பட்டாபிஷேகத்தை நடத்தி வைக்கப் போறாய்?

பேத்தி : ஆமாம் அத்தைப் பாட்டி நீ எதுக்காக சகுனம் பாக்கறாய்?

பாட்டி : நான் எனக்கா குழந்தே சகுனம் பாக்கறேன். யாருக்கும் சகுனத் தடையா நான் இருந்துடப்டாதுன்னு தானே பாக்கச் சொல்றேன்.

ராஜாமணி : யாருக்கும் சகுனத்தடையா இருக்கப்டாதுன்னா அதுக்கு என்ன செய்யணும் தெரியுமோ? கண்காணாத இடத்துக்குப் போகணும்.

பாட்டி (கண்களில் நீர் முட்டிக்கொள்ள) : அந்த ப்ராப்தமும் இல்லாமப் போயிடுத்தே.

பேத்தி : பாட்டி யாரும் இல்லை. நீ வா.

பாட்டி ஒடுங்கி நடுங்கியபடியே தெருவில் இறங்கி கோவிலை நோக்கிப் போகிறாள்.

ஏழெட்டு வீடு தாண்டியதும் ஒரு குரல் வீட்டுக்குள் இருந்து கேட்கிறது.

அடியே கெளசி. கொஞ்சம் தூத்தம் கொண்டுவா. ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்குப் புறப்படும்போதுதான் இந்தச் சனியன் எதிர்ல வந்து நிற்பாள். ஆத்தோட அடங்கிக் கிடக்க வேண்டியதுதானே. இதுகளையெல்லாம் எதுக்கு பகவான் விட்டு வெச்சிருக்கான்.

கெளசல்யா : (தண்ணீர்கொண்டுவது கொடுத்தபடியே) : நல்ல காரியத்துக்குப் போகும்போது எதுக்குண்ணா இப்படியெல்லாம் பேசறேள்.

கெளசல்யாவின் கணவர் : நான் எங்க பேசறேன். பேச வைக்கறாளே.

முக்காடு போட்ட பாட்டி கூனிக் குறுகியபடியே திரும்பிப் போவதா… முன்னால் செல்வதா என்று தடுமாறுகிறாள். நீண்ட அக்ரஹாரம் முடிவற்று நீள்வதுபோல் அவளுக்குத் தென்படுகிறது. தலை சுற்றுவதுபோல் இருக்கவே ஒரு வீட்டின் திண்ணையை நெருங்கி சிறிது ஆசுவாசமாக அங்கிருக்கும் தூணைப் பற்றிக் கொள்ளப் போகிறாள். அந்த வீட்டு ஜன்னல் படாரென்று முகத்தில் அறைந்தாற்போல் மூடிக்கொள்கிறது. பெருமூச்சுவிட்டபடியே உடல் வலுவைத் திரட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கிறாள். ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொருவிதமான எதிர்ப்புகள். ஒருவழியாக கோவிலைச் சென்றடைகிறாள்.

அர்ச்சகர் வெளிப்புற சர விளக்கை ஏற்ற உள்ளிருந்து சிறிய விளக்கு ஒன்றை எடுத்துவருகிறார். பாட்டி கோவிலில் கால் வைக்கவும் அந்த விளக்கு வீசும் காற்றில் அணையவும் சரியாக இருக்கிறது. அர்ச்சகர் பாட்டியைப் பார்த்துத் திட்டியபடியே உள்ளே செல்கிறார். பாட்டிக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. வாசலில் சிறிது நேரம் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறாள். கண்களில் நீர் தாரைதாரையாக வழிகிறது. கோவில் திண்ணையில் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமி, பாட்டியை வருத்தத்துடன் பார்க்கிறது.

காட்சி எண் : 4

இடம் : வீட்டின் உள்ளறை

இளம்பெண் : கதவைத் திற அத்தை.

அத்தைப் பாட்டி : வேண்டாம்டி. யாராவது பாத்தா பெரிய பிரச்னை ஆயிடும்.

இளம் பெண் : யாரும் பாக்க மாட்டா. அம்மாவும் அப்பாவும் சாயந்திரம்தான் வருவா. நீ பயப்படாத.

அத்தைப்பாட்டி : அதுவும் இல்லாம அதெல்லாம் ரொம்பத் தப்புடி. எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ. இப்படி ஆயிடுத்து என் நிலைமை. இந்த ஜென்மத்துலயும் பாவம் செஞ்சு சுமையை ஏத்திக்க விரும்பலைடியம்மா.

இளம் பெண் : அதெல்லாம் ஒண்ணும் இல்லை அத்தை. பொட்டு மட்டும் வெச்சுக்க வேண்டாம். புடவை கட்டிக்கோ… நகை போட்டுக்கோ. பூ கூட வெச்சுக்கோ. ஒரு அரை மணி நேரம் ஆனதும் கழட்டி வெச்சுடலாம். யாருக்கும் தெரியாது. நான் பாத்துக்கறேன். கதவைத் தொற.

அத்தைப்பாட்டி : வேண்டாம்டி.

இளம் பெண் : அப்பற எதுக்கு உன்னோட கல்யாண போட்டோவை ராத்திரிகள்ல தூங்காம எடுத்து எடுத்துப் பாத்துண்டிருக்காய்.

அத்தைப் பாட்டி : அவரோட ஞாபகம்டி.

இளம்பெண் : அப்படின்னா கெணத்தடில உட்கார்ந்துண்டு எதுக்காக காயப்போட்ட புடவையை மேலே போத்திண்டு நிலாவை வெறிச்சுப்பாத்துண்டிருக்காய்?

பதில் இல்லை

இளம் பெண் : அப்பறம் எதுக்கு, சாகறதுக்கு முன்னால ஒரு தடவையாவது இதையெல்லாம் போட்டுண்டு பாக்கணும்னு ஏன் அழுதாய்.

அத்தைப் பாட்டி : அதைப் போட்டுண்டா மட்டும் எல்லாம் கிடைச்சிடப் போறத என்ன?

இளம் பெண் : அதெல்லாம் வேற விஷயம். என்னால் முடிஞ்சதை உனக்கு பண்ணறேன். உனக்காக வேண்டாம். எனக்காகவாவது போட்டுக்கோ. கதவைத் திற.

சிறிது நேர தயகத்துக்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது.

அத்தை : நீ மொதல்ல வாசக்கதவை பூட்டிண்டு வா.

இளம் பெண் : வாசக் கதவைப் பூட்டினாத்தான் சந்தேகம் வரும். இங்க யாரு வரப்போறா. நீ தைரியமா போட்டுக்கோ.

பாட்டியிடம் பட்டுப் புடவையைக் கொடுக்கிறாள். நடுங்கும் கரங்களால் அதை வாங்கிக் கொள்கிறாள் பாட்டி. காவிப் புடவையை அவிழ்த்து கீழே போட்டு அதன் மேலே ஏறி நிற்கிறாள். பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு நிற்கிறாள். இளம் பெண் பாட்டியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து பெரிய நிலைக்கண்ணாடி முன் பாட்டியை உட்காரவைக்கிறாள். ஒவ்வொரு நகையாக எடுத்து அணிவிக்கிறாள். அலங்காரங்களை எல்லாம் அழுதபடியே பார்க்கிறாள். கழுத்தில் ஆரங்கள், தோடு, மூக்குத்தி வளையல் என ஒவ்வொன்றாக அணிகிறாள். பாட்டி ஏக்கமும் சந்தோஷமுமாக அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறாள். கடைசியாக  இளம் பெண் குங்குமச் சிமிழை எடுக்கிறாள். பாட்டி பதறியபடியே தடுக்கிறாள். இளம் பெண்ணோ, சிரித்தபடியே பாட்டியை கண்ணாடியைப் பார்க்கும்படிச் சொல்லிவிட்டு, கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கு சந்தனம் இட்டுப் பொட்டு வைக்கிறாள். பாட்டியின் முகத்தைச் சிறிது சிறிதாக நகர்த்தி அந்தப் பொட்டுக்கு நேராக வைக்கிறாள். ஒரு நிமிடம் அதைப் பார்த்து ரசிக்கும் பாட்டி, பதறியபடியே அந்தக் குங்குமத்தை அவசர அவசரமாக அழிக்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் சிறிது நேரம் பார்த்துக் கொள்கிறார்கள்.

பாட்டியைக் கைத்தாங்கலாக அணைத்தபடி ஊஞ்சலில் உட்கார வைக்கிறாள். சீதா கல்யாண வைபோகமே… என்று பாடுகிறாள்.

பாட்டிக்கு அழுகை பொங்கி வருகிறது. இளம் பெண் பாட்டியை தன் உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள். பாட்டி கேவிக் கேவி அழத் தொடங்குகிறாள்.

காட்சி : 5

இடம் : அக்ரஹாரம்

மாப்பிள்ளை வீட்டார் மாட்டு வண்டியில் வந்து இறங்கி வீட்டுக்குள் செல்கிறார்கள். அனைவரும் இருக்கையில் அமர்ந்ததும் மணப்பெண் வந்து நமஸ்காரம் செய்கிறாள். விரித்திருக்கும் பாயில் அமர்ந்து பாடுகிறாள்.

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே…

பாடல் முடிந்ததும் இளம் பெண் எழுந்து உள்ளே செல்கிறாள். மாப்பிள்ளை வீட்டார் மாட்டு வண்டியில் ஏறி புறப்பட்டுச் செல்கிறார்கள்.

அக்ரஹாரத்தை அடைத்தபடி பந்தல் போடப்படுகிறது. திருமண ஏற்பாடுகள் மெள்ள சூடுபிடிக்கின்றன. ராஜாமணி வீட்டின் வாசலில் காப்பு கட்டி பந்தக் கால் நடுகிறார்கள். மாப்பிள்ளை அழைப்பு, திருமணச் சடங்குகள், காசி யாத்திரை, தாலி கட்டுதல், அம்மி மிதித்தல், ஊஞ்சல், நலுங்கு என ஒவ்வொன்றாக நடக்கின்றன. முக்காடிட்ட பாட்டி வீட்டினுள் ஜன்னல் அருகில் அமர்ந்துகொண்டு வாசலில் பந்தலில் நடக்கும் வைபவங்களை பார்க்கிறாள். தாலி கட்டியதும் மணப்பெண் பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குபவர் கணவனை அழைத்துக்கொண்டு நேராக அந்த பாட்டியிருக்கும் இடத்துக்குப் போகிறாள். ஓரிரு பெரியவர்கள் தடுக்கவே அவர்கள் கையைத் தட்டிவிட்டுச் செல்கிறாள். பாட்டியோ சந்தோஷமும் பயமும் கலந்தபடியே பெரியவாளை சேவிச்சுக்கோ. பெருமாளை சேவிச்சுக்கோ அது போதும் என்று பயந்து பின்வாங்குகிறாள். எனக்கு நீதான் பெரியவா… பெருமாள் எல்லாம். வந்து நில்லு என்று செல்லமாக அதட்டி அவர் காலில் விழுந்து ஆசிகள் பெற்றுக் கொள்கிறாள்.

பாட்டி (அழுதபடியே) : நான் என்ன சொல்லிடி உன்னை ஆசீர்வாதம் பண்ண. என் வாழ்க்கைல இருந்து எதைடீயம்மா நீ கத்துக்கமுடியும். எதை நான் உனக்கு சொல்லித் தரமுடியும்? பகவான் எனக்கு கொடுத்ததை உனக்குக் கொடுத்துடக்கூடாதுன்னு சொல்றதைத் தவிர வேற என்னடி சொல்ல. தீர்க்கசுமங்கலியா, கடைசி வரை பூவும் பொட்டோட இரும்மா.

திருமணத்துக்கு வந்தவர்கள் மணப்பெண்ணை அவசர அவசரமாக இழுத்துச் செல்கிறார்கள்.

மறுநாள் கட்டு சாத மூட்டைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உறவினர்கள் விடை பெற்றுச் செல்கிறார்கள். மணப்பெண் பெற்றோரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அழுகிறாள். கடைசியாகப் புறப்படுவதற்கு முன் அத்தைப் பாட்டியைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்கிறாள்.

காட்சி : 6

இடம் : ஆற்றங்கரை

இடையர்கள் ஆடுகளை ஆற்றில் இறக்கி அக்கரையில் இருக்கும் வயலுக்குக் கொண்டு செல்கிறார்கள். எதிர்க்கரை மேட்டில் இருக்கும் தோப்பில் தேங்காய் பறித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராஜாமணி இளநீர் அருந்தியபடியே அதை மேற்பார்வை செய்துகொண்டிருக்கிறார். ஆடு மேய்ப்பவர்களில் ஒருவர் கீழிருந்தபடியே ராஜாமணியைப் பார்த்துக் கும்பிடுகிறார். ராஜாமணி என்ன என்பதுபோல் தலை அசைத்துக் கேட்கிறார்.

இடையர் : தேவர் எதுனா சொன்னாரா?

ராஜாமணி: இல்லையே. என்ன விஷயம்?

இடையர் : கிடைக்கூலி கொஞ்சம் இப்பவே கொடுத்தா நல்லா இருக்கும். தேவர் சொல்றேன்னு சொன்னாரே.

ராஜாமணி : சொன்னான் சொன்னான். அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு.

இடையர் : பையனுக்கு வர்ற வெள்ளி கல்யாணம் வெச்சிருக்கோம்.

ராஜாமணி (புருவத்தைச் சுருக்கியபடியே) : அதுக்கு

இடையர் : கொஞ்சம் பணம் வேண்டியிருக்கும்.

ராஜாமணி : பையனுக்குக் கல்யாணம்னா வரவுதானே. செலவுக்குக் காசு கேக்கற.

இடையர் : நம்ம பக்கமும் கொஞ்சம் செலவு பண்ணனுமுல்ல சாமி.

ராஜாமணி : இப்படி திடீர்னு வந்து கேட்டா நான் என்ன பண்ண?

இடையர் : கல்யாணமும் திடீர்னுதான் சாமி முடிவாச்சுது.

ராஜாமணி : உனக்கென்ன… நாலு ஆட்டை வித்தா கல்யாணச் செலவு முடிஞ்சுது.

இடையர் : அது சரிதான் சாமி. உங்கள மாதிரி சாமிகளைக் கூப்பிட்டு நடத்தறதுன்னாத்தான் மந்தையையே விக்க வேண்டியிருக்கும். எங்களுக்குத் தெரிஞ்ச சம்பிரதாயத்துல அம்புட்டு செலவாகாதுதான். என்னாலும் துணி, தாலின்னு செலவு இருக்கத்தான சாமி செய்யும்.

ராஜாமணி : அது சரி. உம் புள்ளையை வேற ஊருக்கு ஆட்டோட அனுப்பியிருக்கேன்னு சொன்ன. இரண்டு நாள்ல கல்யாணம் வேற வெச்சிருக்கேன்னு சொல்ற? அவன் வந்துருவானா அதுக்குள்ள.

இடையர் : அதை ஏன் கேக்கறீங்க. ரெண்டு நாளைக்கு முன்னால அவன் கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அங்க அவன் கிடையப் பாக்க ஆளு வேற யாரும் இல்லை. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டான்.

ராஜாமணி : மாப்பிள்ளை வராம எப்படிடா கல்யாணம் நடத்துவ? பொண்ணை அவன் இருக்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போகப் போறியா. அதுக்கும் நேரம் இல்லியே.

இடையர் : அதுவும் இல்லை சாமி. ஓடைத்தொரை மாரியம்மன் கோவில்ல வெச்சுத்தான் கல்யாணம் நிச்சயிச்சிருக்காங்க.

ராஜாமணி : இது என்னடா புதுக் கதையா இருக்கு. உன் மகனும் இங்க வரமாட்டான்னு சொல்ற. பொண்ணையும் அவன் இருக்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போகமாட்டேன்னு சொல்ற. அப்பறம் எப்படித்தான் கல்யாணம் செய்வ?

இடையர் : ஆடு மேய்க்கற கம்புக்கு தலைப்பா கட்டி மாப்பிள்ளைகணக்கா நிக்கவெச்சு தாலி கட்டிப்புடுவோமுங்க.

ராஜாமணி : இது என்னடா புது சம்பிரதாயமா இருக்கு.

இடையர் : நமக்கு எது தோதுப்படுதோ அதுதான சாமி சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம்.

ராஜாமணி : நல்லா இருக்குடா உங்களோட சாஸ்திரம். மனுஷனுக்குப் பதிலா கம்பா?

இடையர் : ராஜாவுக்குப் பதிலா செருப்பு ஆளலாம். இடையனுக்குப் பதிலா கம்பு தாலி கட்டக்கூடாதா சாமி.

ராஜாமணி : இப்படிப் பேசிண்டு திரியறதாலதான் உன்னை ஆண்டவன் ஆட்டுக்குப் பின்னால அல்லாட வெச்சிருக்கான்.

இடையர் : அட என்னங்க சாமி… இந்த ஆடு மேய்க்கறவனத்தான சாமி இந்தக் கோவில்ல வெச்சுக் கும்பிடறீங்க.

ராஜாமணி : புளுக்கை போடற ஆட்டை மேய்ச்சதுக்காக அவனை நாங்க கும்பிடலைடா அபிஷ்டு. அவன் வேறயும் சில வேலைகள் செஞ்சிருக்கான். உனக்கு எங்க புரியப்போறது. சரி… இப்போ உனக்கு எம்புட்டு காசு வேணும். நாளைக்கு வந்து வாங்கிக்கோ. குடிச்சுக் கூத்தாடி காலியாக்காதே. உன் பொண்டாட்டியை வந்து வாங்கிண்டு போகச் சொல்லு.

இடையர் : சரி சாமி. அவளையே வரச் சொல்றேன்.

காட்சி எண் : 7

இடம் : மாரியம்மன் கோவில்

மணப்பெண்ணுக்கு அருகில் சந்தனம் குங்குமம் தடவி, தலைப்பாகை கட்டப்பட்ட ஒரு கம்பு வைக்கப்பட்டிருக்கிறது. பூசாரி மாலை எடுத்துக்கொடுகிறார். மணப்பெண் அந்த மாலையை கம்பின் மீது சாத்தி கீழே விழுந்து அதை வணங்குகிறாள். மாப்பிள்ளையின் தங்கை வந்து தாலியைக் கட்டுகிறாள். அனைவரும் குலவையிட்டு ஆசீர்வதிக்கிறார்கள்.

கறிச்சோறும் சாராயமுமாக திருமண விருந்து களைகட்டுகிறது.

 காட்சி எண் : 8

இடம் : வேறொரு அக்ரஹாரம்

பெண்மணி : பொழுது சாயலாச்சே. திண்ணையில படுத்துண்டு கார்த்தால போகப்டாதா..?

ஆண் : கிடு கிடுன்னு நடந்தா எட்டொம்பது மணிக்குள்ள ஆத்துக்குப் போய்ச் சேந்துடலாம்.

பெண்ணின் கணவர் : போகட்டும்டி. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம்கூட ஆகலையோன்னா. புது மாப்பிள்ளைக்கு ஆத்துக்காரி ஆசையா காத்துண்டிருப்பா.

பெண்மணி : அதில்லைண்ணா… மேகம் வேற கறுத்துண்டு வர்றது. போய்ச்சேர்றதுக்குள்ள மழை பிடிச்சுண்டுடும்னு தோன்றது.

பெண்ணின் கணவர் : அதெல்லாம் பிள்ளையாண்டான் சிட்டப் பறந்துடுவன். என்னடா… இருந்துட்டுப் போறயா?

புது மாப்பிள்ளை : வேண்டாம் மாமா. போற வழியில ஏதாவது மாட்டு வண்டி கெடைச்சா தொத்திண்டு போயிடுவேன். இல்லைன்னாலும் விடுவிடுன்னு போயிடுவேன். நீங்க கவலைபடாதீங்கோ.

பெண்ணின் கணவர் : பாத்துடா… வழில மொட்டைக் கிணறெல்லாம் இருக்கும்.

புது மாப்பிள்ளை : கைல லாந்தர் இருக்கு மாமா.

பெண்ணின் கணவர் : பாத்துப் போடாப்பா.

காட்சி எண் : 9

இடம் : இடயர் கிடை

நேரம் : நள்ளிரவு

மழை பெய்துகொண்டிருக்கிறது. அடுப்படிக்குள் வரும் தண்ணீரைக் காலால் ஒரு பக்கமாக எத்தித் தள்ளியபடியே அடுப்பில் வேகும் உணவைக் கிண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாள்.

பெண் : என்னங்க, இந்த நேரத்துல எங்க போறீங்க. மழை தூறிட்டுத்தான கெடக்குது

ஆண் (சாக்கை தலையில் போர்த்தியபடியே) : நீ வெஞ்சனம் வைக்கறதுக்குள்ள வெரசன வந்துருவேன்.

பெண் : பாத்துப் போங்க மச்சான். கண்டதும் லாந்தற நேரம். ஆடுகளுக்குக் காவலுக்கு ஆள் இருக்குல்ல.

ஆண் : ஆமாம் புள்ள. நீயும் சூதானமா இரு.

காட்சி எண் : 10

இடம் : மொட்டைக் கிணற்றடி

அதன் அரையடி உயரமுள்ள ஆங்காங்கே இடிந்து கிடக்கும் மதில் சுவரின் மேலே உட்கார்ந்துகொண்டு காகங்கள் கத்திக்கொண்டிருக்கின்றன. அந்த வழியாகப் போகும் பயணிகள்கூட்டம் தாகம் தீர்த்துக்கொள்ள கிணற்றை நெருங்குகிறது. உள்ளே எட்டிப் பார்க்கும் முதல் நபர் அதிர்ச்சியில் கூச்சலிடுகிறார். மற்றவர்கள் விழுந்தடித்து ஓடிப்போய் பார்க்கிறார்கள். அக்ரஹாரத்துப் புது மாப்பிள்ளையின் உடல் நீரில் மிதந்துகொண்டிருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் உடலை அடையாளம் கண்டு அழுதபடியே குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்த ஓடுகிறார்.

 காட்சி எண் : 11

இடம் : இடையர் கிடை

ஒரு உடல் நடுவில் கிடத்தப்பட்டிருக்கிறது. பலர் அதைச் சுற்றி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்கள். இறந்தவனின் காலில் பாம்பு கடித்த தடம் ஆழமாக இருக்கிறது. இறந்தவனின் மனைவி அந்தக் காலைத் தடவியபடியே சித்தம் கலங்கிய நிலையில் அமர்ந்திருக்கிறாள்.

 காட்சி எண் : 12

இடம் – ஒப்பனை அறை

நேரம் – மாலைப் பொழுது

இளம் பெண்ணின் அடர்ந்த கூந்தலில் மல்லிகைச் சரம் சூட்டப்படுகிறது. சூட்டும் பெண்ணின் கரங்கள் மெல்ல நடுங்குகிறது. நெற்றியில் குங்குமம்  தீட்டப்படுகிறது. இளம் பெண் மெல்ல நிமிர்ந்து குங்குமம் இட்டவரின் முகத்தை வெறித்துப் பார்க்கிறாள். குங்குமம் இட்ட பெண்  அந்தக் கண்களின் தகிப்பை எதிர் கொள்ளத் திராணியற்று தலையைக் குனிந்து கொள்கிறாள். கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன. பின்னணியில் வேதனையும் விசும்பலும் நிறைந்த குரல்¢கள் கேட்டவண்ணமிருக்கின்றன. ஒரு சின்ன குழந்தை இதையெல்லாம் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது. அதன் கண்கள் வியப்பில் விரிந்து நிற்கிறது.

மெல்ல இளம் பெண்ணை நெருங்கி

ஐய்யே… ஏன் அழற நீ. அலங்காரம் பண்ணும் போது அழலாமா? சிரிக்கண்ண செய்யணும். எங்க சிரி பார்ப்போம்.

வயதான பெண் அந்தக் குழந்தையை அடித்துத் தர தரவென இழுத்து செல்கிறாள்.

சிறு பெண்ணின் குரல்

ஏம்மா அடிக்கற. நாலு மாசத்துக்கு முன்னால அக்காக்கு அலங்காரம் பண்ணினப்ப எல்லாரும் சிரிச்சுண்டுதானம்மா இருந்தா.

அம்மாவின் குரல்

வாயை மூடுடி. சனியனே. எனக்குன்னு வந்து பொறந்தியே.

காட்சி எண் – 13

இடம் – குளக்கரை

நேரம் -பின் மாலைப் பொழுது

காவி முக்காடு அணிந்த இரண்டு பெண்கள் இளம் பெண்ணை கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்து வருகிறார்கள். ஊர் மக்கள் கைகட்டி வாயைப் பொத்தி நின்று கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்ணைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று நீரில் முழுக்காட்டுகிறார்கள்.

சற்று தள்ளி மணல் மேடான இடத்தில் ராஜாமணி நின்று கொண்டிருக்கிறார். அவர் முன்னால் நிற்கும் புரோகிதர் வெள்ளை புடவை ஒன்றை அவரது கையில் கொடுக்கிறார். அவர் அதை மெல்ல வாங்கிக் கொள்கிறார்.

கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஆக்ரோஷமாக ஒலிக்கிறது

இது வேண்டாம்னு சொன்னேனோல்லியோ

ராஜாமணி தீர்க்கமாக அந்தக் குரல் வரும் திசையைப் பார்க்கிறார். பின் படிக்கரையை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். இளம் பெண்ணை அடைந்து அவளது கழுத்தில் வெள்ளைப் புடவையை போடுகிறார். நாலைந்து பேராக அந்தப் பெண்ணை தள்ளிக் கொண்டு போகிறார்கள்.

கூட்டத்திலிருந்து கத்திய இளைஞன் பல்லைக் கடித்துக் கொண்டு அந்தப் பெண்ணை நோக்கி பாய்கிறான். கூடி நிற்பவர்கள் நாலைந்து பேர் அவனை இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள். அவன் கால்களை அந்தரத்தில் எட்டி உதைத்து வர மறுக்கிறான். அவனை அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டிற்குப் போகிறார்கள். கூட்டம் மௌனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறது. கூட்டத்தின் நடுவே ஒரு சிறுமி எல்லாவற்றையும் பயந்த முகத்தோடு பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

காட்சி – 14

இடம் – இளம் பெண்ணின் வீடு

நேரம் அதிகாலை

கல் பாவிய முற்றத்தில் கொலுசுச் சத்தம் மெல்ல ஒலிக்க சிறு பெண் நடந்து வருகிறாள். ஒரு கதவை மெதுவாகத் திறக்கிறாள். அங்கே இளம் பெண் தலை மழிக்கப்பட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு  மேல் கூரையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள்.  சிறுமி அருகில் வந்தது கூட தெரியாமல் அந்த இளம்பெண் எதையோ நினைத்தபடி அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவளது கண்களில் இருந்து மெல்லிய கோடாக கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. சிறுமி அந்தப் பெண்ணை நெருங்கி கண்ணீரைத் துடைத்து விடுகிறாள். இளம் பெண்ணோ எந்தவித சலனமும் இன்றி அமர்ந்திருக்கிறாள். ஒரு வயதான பெண் வேகமாக வந்து சிறுமியை தர தரவென்று இழுத்துச் செல்கிறாள். சிறுமி அந்த இளம் பெண்ணையே பார்த்தபடி போகிறாள். அது வரை அசைவற்று இருந்த இளம் பெண் மெல்ல திரும்பி சிறுமியைப் பார்க்கிறாள். அவளது முகத்தின் முன்னே கதவு சடாரென்று மூடப்படுகிறது.

வெளியில் இருந்து குரல் கேட்கிறது.

அந்த விதவைக்கு சுமங்கலி அலங்காரம் செஞ்சாய் இல்லியா.? அதான் அந்த முண்டச்சி உனக்கு அவளோட அலங்காரத்தைக் கொடுத்துட்டா…. படிச்சுப் படிச்சு சொன்னேனே. பெரியவா கால்ல விழு அந்த மூதேவி கால்ல விழாதேன்னு தலை தலையா அடிச்சுண்டேனே… முண்டச்சி ஆசீர்வாதம் பண்ணினா என்ன ஆகும்? தனக்குத் தங்காத தாலி வேற யாருக்கும் தங்ககூடாதுன்னு இப்படி செஞ்சுட்டாளே… சண்டாளி. செத்துத்தொலைடி. நீ செத்துத் தொலை.

அத்தை இளம்பெண்ணை நெருங்கி ஆறுதல் சொல்ல வருகிறாள். அந்தப் பெண் அந்தக் கையைக் கோபத்தில் தட்டிவிடுகிறாள். அத்தையை நேருக்கு நேராக சினத்துடன் பார்க்கிறாள். அத்தை நிலைகுலைந்து பின்வாங்கிச் செல்கிறாள்.

வெளியே ஏச்சுக்குரல் கேட்ட வண்ணம் இருக்கிறது.

காட்சி எண் : 15

இடம் : இடையர் கிடை

நேரம் மாலை

கிடை இருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் அனைவரும் கூடியிருக்கிறார்கள். க்ணவனை இழந்த பெண் ஒரு ஓரத்தில் தன் தாயின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறாள்.

மூத்த இடையர் : இங்க பாரு முத்துச்சாமி . கல்யாணம் கட்டிக்கிட்டு மூணு மாசம்கூட வாழலை. வம்சத்தை பெருக்கற சீவனை வங்குழில தள்ளப்பிடாதுடா.

முத்துச்சாமி : இவளைக் கட்டிக்கிட்டா அண்ணனை மாரியே நானும் செத்துப் போயிருவேன். எனக்கு வேண்டாம்.

மூத்த இடையர் : அண்ணங்காரஞ் செத்தா தம்பிக்காரணுக்குத் தாண்டலே கட்டிவெக்கறது. பச்சைக் குருத்த வாட விடக்கூடாதுடா.

முத்துச்சாமி : நான் கட்டிக்கிட மாட்டேன். அத்துவிட்டு வெரட்டிடுங்க.

மூத்த இடையர் : அப்ப உனக்கு அந்தப் பொண்ணு வேண்டாங்கற.

முத்துச்சாமி : ஆமா ஐயா.

மூத்த இடையர் (பெண்ணைப் பார்த்து) : நீ என்னம்மா சொல்ற..?

கணவனை இழந்த பெண் : அவுகளுக்கு விருப்பம் இல்லைன்னா அவுகளோட தம்பியைக் கட்டி வெச்சிடுங்க.

மூத்த இடையர் (சிறிது அதிர்ந்து) : என்னம்மா சொல்ற. அந்தப் பையனுக்கு  பத்து வயசு தான ஆகியிருக்கு. சின்னப் பையனால்ல இருக்கான்.

கணவனை இழந்த பெண் : இப்பத்தான் சின்னப் பையனா இருக்காப்ல. கொஞ்ச வருஷத்துல வளந்துடுவால்ல.

மூத்த இடையர் : இப்படி வெள்ளந்தியா இருக்குதே இந்தப் புள்ள. அடேய் முத்துசாமி. இம்புட்டு நல்ல புள்ளையவாடா வேணங்கற. உன் அண்ணனைக் கட்டிக்கிட்டதுக்காக உன் குடும்பத்தோடயே இருக்கணும்னு ஆசப்படுது பாருடா. அவளையா வேணாங்கற. நல்லாக் கேட்டுக்கடா. நீ அவளைக் கட்ட்லைன்னா உன் அப்பன் சொத்துல உனக்கு ஒரு பங்கும் கிடையாது. எங்குட்டாவது போயி கூலியாடு மேய்ச்சி பொளச்சிக்கற வேண்டியதுதான்.

முத்துச்சாமி : அது எப்படி? எம் பங்கு ஆடும் இருக்குல்ல. அதுகள ஓட்டி விட்ருங்க. நாந்தனியா போயிக்கறேன்.

மூத்த இடையர் : ஒம்பங்கு ஆடுகளா? பாவம் பழியில பங்கு இல்லதவனுக்கு ஆட்டுல மட்டும் பங்குருக்காலே?

முத்துச்சாமி மவுனமாக நிற்கிறான்.

மூத்த இடையர் : அப்பறம் இன்னொண்ணையும் சொல்றேன் கேட்டுக்கிரு. அண்ணம் பொண்டாட்டிய வேண்டாம்னு சொன்ன நீ நம்ம எடய சாதியில எந்த வூட்டுலயும் பொண்ணு கட்டக்கூடாது. மாட்டேன்னு சத்திய வாக்குக் கொடு.

முத்துச்சாமி : இது என்ன அக்குருமமா இருக்கு. ராமன் செத்தா சீதைய லட்சுமணருக்குக் கட்டிவெக்கற புது ராமாயணமா இருக்கு.

மூத்த இடையர் : அந்த ராமாயணக் கதையெல்லாம் இங்க வேண்டாம். இது மகாபாரதம். இடையனோட வேதம் வேற. ஐஞ்சு பேத்தை ஒருத்தி கட்டற வேதம். நீ சத்திய வாக்கு கொடு. திக்குக்கு ஒருத்தனா திரிஞ்சுக்கிட்டிருந்தாலும் ஆட்டுக்காரவுக அம்புட்டுப் பேருக்கும் தெரிஞ்சிபோயிரும் ஒங்கத. வாக்கு தீத்துக்கிறாம எவனும் ஒனக்குப் பொண்ணு குடுக்கமாட்டான் தெரியுமுல்ல.

முத்துச்சாமி என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருக்கிறார்ன்.

மூத்த இடையர் : சரி. நீ கெளம்பு. நின்னுக்கிட்டு இருக்கறதுல புண்ணீயமில்ல. இதையும் கேட்டுக்கிரு. இஞ்சேருந்து கட்டின துணியோடதான் நீ போவணும். சூத்துத் துணிக்கு மாத்துத்துணி கூட நீ எடுத்துட்டுப் போகக்கூடாது.

முத்துச்சாமி தலைகுனிந்தபடியே நின்றிருந்தான். வேறு வழியில்லை என்பது புரிந்ததும் மெள்ள வாய் திறந்தான்.

முத்துச்சாமி : அந்தப் பொண்ணோட கஷ்டம் எனக்குப் புரியாமல்லாம் இல்லை. எனக்கும் ஏதாவது வந்துருமோன்னுதான் பயமா இருக்குது.

மூத்த இடையர் (எழுந்து அவனை அரவணைத்தபடியே) : அட பைத்தியக்காரா. இதுக்கா இம்புட்டு பயப்படுற. அவன் விதி யாரும் பாக்காத நட்ட நடு ராத்திரில பாம்புக் கடி பட்டுச் சாகணும்னு இருந்திருக்கு. அதுக்கு அந்தப் புள்ள என்ன செய்யும்? இதுவே பகல்ல கடிச்சிருந்தா நாமளே காப்பாத்திருக்கமாட்டமா என்ன? அதை நெனைச்சு நீ பயறாத.

முத்துச்சாமி : உங்க பேச்சை ஏத்துக்கிடுதேன். அண்ணன் பொண்டாட்டியை கட்டிக்கிடுதேன்.

மூத்த இடையர் : சாதுல விழலை. சத்தமாச் சொல்லு.

முத்துச்சாமி (சிறிது வெட்கப்பட்டபடியே) : அடப் போங்கய்யா..

மூத்த இடையர் : சொல்லுடா… அண்ணன் மாதிரி செத்துப்போயிட மாட்டல்ல…

முத்துச்சாமி : ஆமய்யா… அந்த நேரம் மனசுல அப்படித் தோணுச்சு ஐயா… இப்ப தகிரியம் வந்திருச்சு. உங்க கெடை மாதிரியே என் வம்சமும் பெருகணும்னு வாழ்த்துங்கயா…

மூத்த இடையர் : அடேய் எங்கிடைல ஆயிரம் ஆடுக கெடக்குடா… அது சின்னப் பொண்ணு. அதுகிட்ட அம்புட்டு வேலையைக் காட்டிடாத. மந்தைய மேய்க்கற அளவுக்கு வம்சம் பெருகினாப் போதும்டா… மந்தை அளவுக்கு வேண்ம்டா…

(பஞ்சாயத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். கணவனை இழந்த பெண்ணும் வெட்கத்தைவிட்டு சிரிக்கிறாள்.

 காட்சி எண் : 16

இடம் : ஓடத்தொரை மாரியம்மன் கோவில்

முத்துச்சாமிக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இடையர் குடி திரண்டு வந்து ஆசீர்வதிக்கிறது.

காட்சி எண் : 17

இடம் : அக்ரஹார நதிக்கரை.

ராஜாமணி கரையோரத்தில் நின்றுகொண்டு சந்தியா வந்தனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவியும் பேத்தியும் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். இடையர் கூட்டம் ஆடுகளைப் பத்தியபடி வருகிறது. மூத்த் இடையருடன் மரமேறி ஒருவர் பேசியபடியே வருகிறார்.

மரமேறி : கடைசில என்னதான் ஆச்சுது.

மூத்த இடையர் : அண்ணன மாதிரியே நானும் செத்துப்போயிடுவேன்னு பயந்தான். கட்றா தாலியை. இல்லைன்னா துரத்திவிட்ருவோம்னு லேசா மெரட்டினேன். பய வழிக்கு வந்துட்டான்.

மரமேறி : நல்ல வேலை செஞ்சீங்க.

மூத்த இடையர் : புருஷன் செத்தா அதோட அந்தப் பொண்ணோட வாழ்க்கை முடிஞ்சிடுதா என்ன. காலம் பூரா தனியாவா அது காலம் தள்ள முடியும். அப்படி ஒரு நரகத்துல பச்ச மண்ணைத் தள்ள முடியுமா என்ன..?

மரமேறி : சரியாச் சொன்னீங்க. யாரை நம்பி யார் பொறக்கறாங்க. செத்தவன் பேரைச் சொல்லி உசுரோட இருக்கறவங்களை எதுக்கு தண்டிக்கணும்.

சந்தியாவந்தனம் செய்யும் ராஜாமணி காதில் அந்த வார்த்தைகள் விழுகின்றன.

அதைக் கேட்டு ஸ்தம்பித்து நிற்கிறார். பாட்டியும் பேத்தியும் குளித்து முடித்துவிட்டுக் கரையேறுகிறார்கள்.

பேத்தி (தாத்தாவை நெருங்கி) : மிருகங்களை மனுஷத்தன்மையோட நடத்தறதா பெருமைப்படற நீங்க மனுஷாளை மிருகத்தன்மையோட நடத்தறேளே தாத்தா? மிருகங்களை மனுஷத் தன்மையோட நடத்தாட்டாலும், மனுஷாளை மனுஷத்தன்மையோட நடத்தற அவாதானே தாத்தா நம்மளைவிட உசந்தவா?

ELT200805090726526860343பாட்டியின் கைகளில் இருந்து விடுவித்துக்கொண்டு ஆடுகளை நோக்கிப் போகிறாள் பேத்தி. ராஜாமணி கீழே இருந்தபடியே அவளைப் பார்க்கிறார். தாத்தாவை தீர்க்கமாகப் பார்த்தபடியே ஆட்டைத் தொட்டுக் கும்பிடுகிறாள். இடையரின் முகத்தில் அலட்சியமாக சிறு புன்னகை தோன்றி மறைகிறது. ராஜாமணி மென்று முழுங்கியபபடியே இடையரை அண்ணாந்து பார்க்கிறார்.

பேத்தியைத் தொடர்ந்து பாட்டியும் கண்களில் நீர் கசிய ஆட்டைத் தொட்டுக் கும்பிட்டபடி போகிறாள்.

ராஜாமணி தலையைக் குனிந்தபடியே ஆற்றில் தெரியும் தன்னுடைய அலங்கோலமான பிம்பத்தைப் பார்த்தபடி நிற்கிறார்.

மூத்த இடையர் (மேலிருந்தபடியே) : சாமி எப்ப மேல ஏறப் போறீங்க.. ஆடுகளைப் பத்தணும்.

ராஜாமணி இடையரை நிமிர்ந்து பார்க்கிறார். அவருடைய கண்களில் லேசாக நீர் கோக்கத் தொடங்கியிருக்கிறது.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!