ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 11
ஆண் : ஓ.கே. நாம ஷோவுக்குப் போவோம். ஆக்சுவலா நம்ம சிறப்பு விருந்தினர்கள் மூவரையும் தொடர்பு கொண்டு போபால் சம்பவத்துக்கு யார் காரணம் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி நடத்தப் போறதா சொன்னபோது மூன்று பேருமே ஒரே குரல்ல சொன்னது இதுதான் : இது ஒரு டீம் எஃபர்ட். எங்களைப் பிரிச்சிப் பேசாதீங்க. நாங்க மூணு பேருமே ஒண்ணாத்தான் எல்லாத்தையும் செஞ்சோம். அதனால எதுவானாலும் நாங்க மூணு பேரும் ஒண்ணாத்தான் கூடிக் கலந்து பேசி சொல்லுவோம். அப்படின்னு சொல்லிட்டாங்க.
பொதுவா நிகழ்ச்சிங்கள்ல ரெண்டு கட்சிங்க எதிரும் புதிருமா நின்னு வாதாடுவாங்க. தங்கள் தரப்புத்தான் உசந்தது. அவங்க செய்ததுதான் சரின்னு சொல்லுவாங்க. அல்லது அவங்க மேல தப்பு இல்லை. அடுத்தவங்க மேலதான் தப்பு அப்படின்னு சொல்லுவாங்க. பட்டிமன்றம் வழக்காடு மன்றங்கள்ல எல்லாம் அப்படித்தான் நடக்கும். ஆனா இந்த நிகழ்ச்சியை அப்படி நடத்த வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சியில யார் சிறப்பா வாதாடறாங்களோ அவங்க கட்சி ஜெயிச்சிட வாய்ப்பு இருக்கு. அங்க உண்மை இருக்கா இல்லையா அப்படிங்கறது பெரிய விஷயமே இல்லை. வாதம் ஜெயிச்சிடும். அதனால, இவங்க மூணு பேருமே என்ன சொன்னாங்கன்னா, நாங்க உண்மையை மக்கள் மத்தியில எடுத்து வைக்கறோம். அவங்களே யார் காரணம் அப்படிங்கறதைத் தீர்மானிக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால பார்வையாளர்களே… நிகழ்ச்சியை முழுசா பாருங்க. இங்க சொல்லப்படும் சம்பவங்களை நீங்களே அலசிப் பாருங்க. போபால் சம்பவத்துக்கு யார் காரணம் அப்படிங்கறதை 57576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். பண்ணுங்க. உங்களுக்காக ஒரு அற்புதமான பரிசு காத்துக்கிட்டிருக்கு.
அப்பறம் இந்த மூன்று சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே பேசிட்டிருந்தா பத்தாது அப்படிங்கறதுனால உங்களை சந்தோஷப்படுத்த போபால் கேஸ் விபத்துல பாதிக்கப்பட்டவங்க நம்ம முன்னால வந்து தங்களோட கண்ணீர் கதையைச் சொல்லப் போறாங்க. யார் சொல்றது ரொம்பவும் விறுவிறுப்பா, உணர்ச்சிபூர்வமா, சுவாரசியமா இருக்கு… யார் சொன்னதைக் கேட்டதும் நமக்கு கண்ணுல தண்ணி வருது… ஐ மீன் கண்ணீர் வருதுன்னு பாருங்க. நான்காவது தரப்பா அவங்களும் ஆட்டத்துல உண்டு. சிறப்பு விருந்தினர்கள் யாருமே காரணமில்லை… மக்கள்தான் காரணம்னு நினைச்சா அதையும் உங்க பதிலா அனுப்பலாம். மறுபடியும் சொல்றேன். போபால்… ஸ்பேஸ் உங்க பேரு… ஸ்பேஸ் யார் காரணம்னு நீங்க நினைக்கறீங்களோ அவங்களோட எண்… அதை டைப் பண்ணி 57576 என்ற எண்ணுக்கு உடனே எஸ்.எம்.எஸ். அனுப்புங்க. ஜெயிக்கறவங்களுக்கு முதல் பரிசா என்ன தரலாம் ரதி… (பெண்ணைப் பார்த்துக் கேட்கிறார்).
ரதி : அந்த ஃபேக்டரி இருக்கற இடத்துக்கு ஒரு இன்பச் சுற்றுலா கூட்டிட்டுப் போகலாமா..? இரண்டு இரவுகள் மூன்று பகல்கள்… தங்குமிடம், சாப்பாடு எல்லாம் ஃப்ரீ. இல்லைன்னா அந்த ஃபேக்டரில தயாரிச்ச கேஸை ஒரு பாட்டில அடைச்சு உறிஞ்சு பார்க்கச் சொல்லிக் கொடுக்கலாமா..?
விருந்தினர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
ஆண் : அருமையான ஐடியா..! நிச்சயமா உனக்கு இந்த பரிசு கிடைக்கட்டும்னு ஆண்டவனை நான் வேண்டிக்கறேன். ஓ.கே. லெட் அஸ் வெல்கம் அவர் ஃபர்ஸ்ட் எண்டர்டெய்னர்.
திரை மறைவில் இருந்து ஒரு சக்கர நாற்காலியை ஒருவர் தள்ளிக் கொண்டு வருகிறார். அதில் அமர்ந்திருப்பவர் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறார். நொடிக்கொரு தடவை இருமியபடியே இருக்கிறார். அரங்கின் மையப் பகுதிக்கு வந்ததும் விளக்குகளின் வெளிச்சம் தாங்க முடியாமல் கண்கள் கூசுகிறது. லேசாக கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.
ஆண் : மீட் மிஸ்டர் அப்துல்லா (அவர் பக்கம் திரும்பிப் பார்த்து லேசாகத் திடுக்கிடுகிறார்). மிஸ்டர் அப்துல்லா… என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. நீங்க அழப்படாது. நீங்க சொல்றதைக் கேட்டு நாங்கதான் அழணும். நீங்களே அழுதுட்டு பிரைஸை வாங்கிட்டுப் போகலாம்னு பார்க்கறீங்களா..? அது ரொம்ப ரொம்பத் தப்பு. (லேசாக சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரின் தோளில் தட்டிக் கொடுக்கிறார்) சரியா… ஆரம்பியுங்க… உங்க கதையை…
சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் எச்சிலோடு சேர்த்து சோகத்தையும் முழுங்கிக் கொள்கிறார் : அவரது கண்கள் சிறிது நேரம் சூன்யத்தையே வெறித்துப் பார்க்கின்றன. இருமல் பொத்துக் கொண்டு வருகிறது. அடக்கிக்கொள்கிறார் : அன்னிக்கு செத்தவங்க எல்லாம் புண்ணியம் செஞ்சவங்க. ஒரே நாள்ல உசிரு போயிடிச்சு. தப்பிப் பொழைச்சவங்க ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்டிருக்கோம்.
ஆண் : சம்பவம் நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க..? உங்களுக்கு ஊரே போபால்தானா..? பொழைப்புக்காக அங்க போயிருந்தீங்களா..?
அப்துல் : நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே போபால்லதான். நாசமாப் போன ஃபேக்டரிக்கு பக்கத்துலதான் குடிசை போட்டு வசித்துவந்தேன்.
ஆண் : என்ன வேலை பார்த்தீங்க. ஃபேக்டரியிலயே வேலை பார்த்தீங்களா..? இல்லைன்னா வேற வேலையா..?
அப்துல் : நாம் சமோசா, கச்சோரி, தஹி பரா (தயிர் வடை) வியாபாரம் பண்ணினேன்.
பெண் அறிவிப்பாளர் நாக்கைச் சப்புக் கொட்டுகிறார்.
அப்துல் : ஃபேக்டரி வாசல்லதான் காலைலயும் சாயந்திரமும் விப்பேன். அன்னிக்கும் அப்படித்தான் வித்துட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தேன்.
ஆண் : வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?
அப்துல் : நான், என் மனைவி, மகன் கலந்தர், மக முன்னி நாலுபேர் மட்டும் இருந்தோம்.
ஆண் : கேஸ் லீக் ஆனது அப்துல்லாவுக்கு எப்ப தெரிஞ்சது..? அப்ப அவரோட அனுபவம் எப்படி இருந்தது இதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னால ஒரு சின்ன பி…. ரே… க்.
பெண் : எங்கயும் போயிடாதீங்க. பாருங்க பாருங்க பார்த்துக்கிட்டே இருங்க.
அணு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கையெழுத்திட்ட பாரதப் பிரதமர் அவர்களை வாழ்த்தியும் அவர் அணு மின்சார உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல் நாட்ட வரப்போவதை வரவேற்றும் ஒரு விளம்பரம் ஓடுகிறது. சினிமா நட்சத்திரங்கள் தோன்றி அணு சக்தி நம் நாட்டுக்கு, ரொம்பவே தேவை என்று சொல்கிறார்கள். சூரியனை மறைத்தபடி பிரமாண்ட அணு உலை எழும்பி நிற்கிறது. இருண்ட குடிசைகள் ஒளி பெறுகின்றன. மோட்டார் பம்புகளில் இருந்து நீர் பொங்கிப் பாய்கிறது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் மடமடவென பெருகுகின்றன. அணு உலையில் ஒரு ஓரத்தில் மூலையில் சின்னதாக டேஞ்சர் என்ற விளம்பர பலகை தொங்குகிறது. வீசும் காற்றில் அது லேசாக நடுங்குவதுபோல் ஆடுகிறது.
விளம்பரம் முடிகிறது.
ஆண் : வெல்கம் பேக் டு தி ஒன் அண்ட் ஒன்லி… நம்பர் ஒன் துடப்பக் கட்டையின் நம்பர் ஒன் ஷோ!
பெண் : லெட் அஸ் கண்டினியூ அவர் ஷோ. சமோசா, கச்சோரி வித்தேன்னு சொன்னீங்களே அந்த வாழ்க்கை எப்படி போயிட்டிருந்தது?
அப்துல்லா : அல்லாவோட கருணையினால எல்லாம் ரொம்ப நல்ல நடந்துட்டிருந்துச்சு. அங்க இருந்தவங்க எப்பவுமே பசியோடதான் இருப்பாங்க. நல்லா வியாபாரம் ஆகும். தஹி பாரான்னு ஒண்ணு செஞ்சு விப்பேன்.
பெண் : தஹி பராவா..?
அப்துல்லா : ஆமா. உங்க ஊர்ல தயிர் வடைன்னு சொல்வீங்களே… மேல கொத்தமல்லியும் கார பூந்தியும் தூவி கொடுப்பேன் பாருங்க. எங்கிட்ட வாங்கிச் சாப்பிடறதுக்காகவே பக்கத்து ஊர்ல இருந்து பஸ் பிடிச்செல்லாம் வந்துட்டுப் போவங்க. அவ்வளவு அருமையா இருக்கும்.
பெண் : தயிர் வடையா… எங்களுக்கு ஸ்பெஷலா செஞ்சு எடுத்துட்டு வந்திருக்கீங்களா..? நாக்குல எச்சி ஊறுது.
ஆண் : கொஞ்சம் டீசண்ட்டா நடந்துக்கோயேன். எப்பப் பாரு தீனி தீனி. இதே நினைப்புதானா..? இந்த பிரேக்ல கூட நாலு வடை, ரெண்டு மசால் தோசை, ஒரு லிட்டர் காபி குடிச்சியே… பத்தாதா?
பெண் : ஏன் நான் சாப்பிட்டா உனக்கு என்ன..? வளர்ற புள்ள சாப்பிடறதை கண்ணு வைக்காத.
ஆண் : எது நீ வளர்ற புள்ள… இதப் பார்றா..? கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா இடுப்புல ரெண்டு, தலைல ரெண்டு, வயித்துல ரெண்டுன்னு பெத்துத் தள்ளியிருப்ப. நீ வளர்ற புள்ளையா..?
பெண் : சரி. நம்ம டீலிங்கை அப்பறம் வெச்சுப்போம். இப்ப சார் சொல்லறதை முழுசா ஒழுங்கா கேட்கவிடு. தாத்தா நீங்க சொல்லுங்க. விஷ வாயு கசிஞ்ச போது நீங்க எங்க இருந்தீங்க..? எப்படி தப்பிச்சீங்க..?
அப்துல்லா : யா அல்லா… விஷ வாயு கசிஞ்ச அன்னிக்கு ராத்திரியை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குதும்மா. அன்னிக்கு தலை சாய்ச்சது என்னமோ இந்த பூமியிலதான். ஆனா, கண் முழிச்சது நரகத்துலம்மா… வீட்டுல நாங்க நாலுபேரும் சாப்பிட்டுட்டு, தொழுதுட்டு படுத்திருந்தோம். வாசல்ல ஏதோ கூச்சல் குழப்பம். பக்கத்து வீட்டு சாவித்ரி அம்மா எங்க வீட்டுக் கதவைப் படபடன்னு தட்டினாங்க. கதவைத் திறந்து என்னன்னு கேட்டேன். ஓடுங்க ஓடுங்க. இங்க இருந்தா செத்துப் போயிடுவீங்கன்னு சொல்லிட்டே அந்த அம்மா ஓடினாங்க. எனக்கு மொதல்ல என்னன்னே புரியலை. வாசல்ல ஒரே புகை மூட்டமா இருந்தது. என் பொண்ணையும் பையனையும் அவங்க கூட ஓடிப் போகச் சொல்லிட்டு வீட்டுக்குள்ள புகுந்து கதவை மூடிக்கிட்டேன்.
ஆண் : ஏன் நீங்க அவங்க கூட போகலியா..?
அப்துல்லா : இல்லை. ஏன்னா புழுதிப் புயலோ மண் புயலோ அடிச்சா அப்படியே ஒரு இடத்துல முடங்கி உட்கார்ந்துடனும் அப்படின்னு எப்ப வாப்பா, உப்பாப்பா எல்லாம் சொல்லியிருக்காங்க. அதுமாதிரியே நானும் என் பொண்டாட்டியும் செஞ்சோம். கொஞ்ச நேரத்துல புகை வாசக் கதவு இடுக்கு, ஜன்னல் இடுக்கு வழியா உள்ள கசிஞ்சு வந்தது.
ஆண் (பெண் பக்கம் திரும்பி) : மணிரத்னம் சார் படத்துல கதவைத் திறந்தா பனிப் புகை வருமே அதுமாதிரி அருமையா இருந்திருக்கும் இல்லை.
அப்துல்லா : இது வேற புகை தம்பி. கொஞ்ச நேரத்துலயே அந்த வாயு தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடிச்சு. கண்ல இருந்து தண்ணி கொட்ட ஆரம்பிச்சது. தொண்டை எரிய ஆரம்பிச்சது. இருமல், வாந்தின்னு எடுத்தோம். என்ன பண்றதுன்னே தெரியலை. அப்படியே அரை மயக்கத்துல வீட்டுலயே விழுந்திட்டோம்.
ஆண்டர்சன் : அதுதான் சரியான விஷயம். இந்த விபத்துல நிறைய பேர் செத்ததுக்கு முக்கியமான காரணம் உண்மையில நாங்க யாருமே கிடையாது. அந்த மக்கள்தான். அவங்க மட்டும் வீட்டுக்குள்ளேயே கதவை அடைச்சிட்டு, வாயு உள்ள வராம இண்டு இடுக்குகளை அடைச்சிட்டு இருந்திருந்தாங்கன்னா வாந்தி மயக்கத்தோட போயிருக்கும். எல்லாரும் பயந்து அலறி அடிச்சு வெளிய வந்ததுனால அந்த நச்சு வாயுவை சுவாசிச்சு மூச்சு முட்டி செத்துட்டாங்க. மரணத்துல இருந்து தப்பிக்கறேன் பேர்வழின்னு மரணத்தை நோக்கியே ஓடியிருக்காங்க. இன்ஃபேக்ட் இந்த சின்ன தற்காப்பு விஷயத்தை அவங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தாக்கூட நிறைய பேர் பிழைச்சிருப்பாங்க. ஆனா, தேங்க காட் அந்த மாதிரி எதுவும் நடக்கலை.
சிங்ஜி : உண்மைதான். அப்படி நடந்திருந்தா விஷயம் சப்புன்னு முடிஞ்சிருக்கும். இப்படி வண்ணமயமான காட்சிகள் நமக்கு பார்க்கக் கிடைக்காம போயிருக்கும். நிறைய பேர் அன்னிக்கு இறந்ததுனாலதான் அவங்களுக்கு சரித்திரத்தில இடம் கிடைச்சது. பத்திரிகைகள், காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைச்சது. இன்ஃபேக்ட் அந்த இடத்துல நிறைய என்.ஜி.ஓ.ஸ் சேவை பண்றதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சது. இட் இஸ் தி ஸ்டார்டிங் பாயிண்ட். பிணங்களை எடுத்துப் போடறதுல ஆரம்பிச்சு நிறைய பேருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைச்சது. எல்லாவகையிலயும் அது ஒரு நல்ல ஆரம்பம்னுதான் சொல்லணும்.
ஆண் : சரியாச் சொன்னீங்க சார். சரி அப்பறம் என்ன நடந்தது?
அப்துல்லா : அடுத்த நாள் ரொம்பவும் மோசமான நாளா இருந்தது. வீட்டு வாசக்கதவைத் திறந்து பார்த்தேன். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் ஆடு மாடுகள், கோழிகள் என ஊரே இறந்து கிடந்தது. உயிர் தப்பியவர்கள் இறந்தவர்களை சோகமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.
ஆண்டர்சன் : அருமையான காட்சி. தெரு முழுக்க இறந்து கிடக்கும் சடலங்கள் மீது அதிகாலை சூரியனின் செந்நிற கதிர் ஒளி பட்டுத் தெறிக்கும் காட்சி என் மனக்கண்ணில் விரிகிறது. நீங்கள் பாக்கியவான். நேராக அதைப் பார்த்திருக்கிறீர்கள். தப்பிச்சு ஓடினாங்களே உங்க குழந்தைங்க என்ன ஆனாங்க..?
அப்துல்லா : பையன் இறந்துட்டான். வேகமா ஓட முயலைன்னு பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போய் மயங்கி விழுந்திடுச்சு.
ஆண்டர்சன் : நான் சொல்லலை. வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்திருந்தா பிரச்னையே இருந்திருக்காது. அதுவும் போக அந்த வாயு ரொம்பவும் கனமானது. அது தரையோட தரையாவே பரவிச்சு. அதனாலதான் குழந்தைகளும் சிறுவர்களும் நிறைய அளவில செத்தாங்க. பெரியவங்களுக்கு அவ்வளவு பிரச்னையில்லை. வேகமா ஓடினவங்க வேகமா மூச்சை இழுத்துவிட்டதால இறந்துட்டாங்க. அவங்க அப்படி செஞ்சிருக்கக்கூடாது. ஆனா விதியை என்ன பண்ண முடியும்..? சரி… நீங்க அதுக்கப்பறம் என்ன பண்ணினீங்க.
அப்துல்லா : காலைல எழுந்திரிச்சதும் தெருவுல இறங்கி நடக்க ஆரம்பிச்சோம். செத்து விழுந்த ஒவ்வொருத்தருடைய உடம்பையும் திருப்பிப் பார்த்தோம். யாருக்காவது கொஞ்சமாவது உசிர் இருக்கான்னு மூக்குல கை வெச்சுப் பார்த்தோம். உடம்பெல்லாம் விறைச்சு குளிர்ந்து கிடந்தது. ரொம்ப நேரம் பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சோம். பயங்கரமா பசி எடுத்துச்சு. வீட்டுல இருந்த சமோசா, கச்சோரிய எடுத்து சாப்பிட்டோம். அதுதான் நாங்க பண்ணின பெரிய தப்பு. அந்த விஷ வாயு வீட்டுல இருந்த எல்லா பொருளையும் விஷமா மாத்தியிருந்துச்சு. அது தெரியாததுனால அதைச் சாப்பிட்ட எங்களோட வயிறு ஒரேயடியா புண்ணாயிடிச்சு. தொண்டை வீங்கிடிச்சு. அன்னிக்கு ஆரம்பிச்ச வலியும் வேதனையும் 25 வருஷம் ஆகியும் இன்னமும் தொடர்ந்துட்டு இருக்குது. அந்த விபத்துக்கு அப்பறம் என்னால வேலைக்குப் போக முடியலை. வீட்டுல சம்பாதிச்சிட்டிருந்த ஒரே ஆள் நான்தான். இப்ப என்னால எழுந்திரிச்சு நடக்கக்கூட முடியலை. பெட்லயேதான் எல்லாம். என் பொண்ணுதான் எல்லாத்தையும் பார்த்துக்கறா… ரொம்ப கஷ்டமா இருக்கு… சாவு எப்ப வரும்னு காத்துக்கிட்டிருக்கேன் தம்பி.
ஆண் : சுதந்திரத்துக்காக காத்திருக்கறதைப் பார்த்திருக்கேன். வெற்றிக்காகக் காத்திருப்பதைப் பார்த்திருக்கேன். பிடிக்காதவங்களோட வீழ்ச்சிக்காகக் கூட காத்திருக்கறதைப் பார்த்திருக்கேன். ஆனா மரணத்துக்காக காத்திருக்கற ஆளை மொதல் தடவையா பார்க்கறேன். கிவ் ஹிம் அ பிக் ஹேண்ட்…
பார்வையாளர்கள் கை தட்டுகிறார்கள்.
(தொடரும்)