தமிழ்ச்சங்கம் கண்ட பெருமைமிகு நான்மாடக்கூடல் மதுரையில் 8ம் ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த 30ம் தேதி தொடங்கியது. வாழ்வு முதல் மரணம் வரை அனைத்தையும் ஆர்ப்பாட்டமாகத் திருவிழா போல் கொண்டாடும் மதுரை புத்தக விற்பனைச் சந்தையையும் அவ்வாறே கொண்டாடி வருகிறது.
தொடங்கியது முதல் மூன்று தினங்கள் தினமும் மாலை மழை என்பதால் செப்டெம்பர் 2ம் தேதி மாலை தான் சென்றேன். தமுக்கம் மைதானத்தில் மிகப் பெரியதாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஏறக்குறைய 220 கடைகள் இருந்தன. உள்ளே செல்லும் வழி, மற்றும் வெளியே வரும் வழி ஆகியவற்றின் இரு புற சுவர்களிலும் கடந்த ஆண்டு கடை வரிசை எண் வாரியாக பதிப்பகங்கள் / புத்தக விற்பனையாளர்கள் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த முறை அது இல்லை. இதனால் குறிப்பிட்ட பதிப்பகத்தைத் தேடி வருபவர்களுக்குச் சிரமம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. பபாசி அமைப்பினர் அடுத்த ஆண்டு இந்தக் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திங்கள் கிழமையாக இருந்தும் அன்று மாலை நல்ல கூட்டம். அதற்கு முந்தைய தினம், ஞாயிற்றுக் கிழமை பகலில் பள்ளிகள் வாரியாக மாணவர்கள் வந்து சென்றிருந்தனர். அன்று மட்டும் சுமார் 40,000 பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்தனர் என்கிறது தி இந்து.
கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலையோசை போன்றவை மலிவு பதிப்புகளாக பல கடைகளில் காணப்பட்டன. கிழக்கு பதிப்பகம், உயிர்மை மற்றும் சில பதிப்பக அரங்குகளில் சுஜாதாவின் புத்தகங்கள் அதிகமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. புத்தகம் வாங்கும் ஆர்வத்தில் வந்தாலும் பலர் புத்தக விலையைப் பார்த்துவிட்டு மீண்டும் அதை இருந்த இடத்திலேயே வைப்பதையும் சில அரங்குகளில் பார்க்க முடிந்தது.
திரைப்படம், தொலைக்காட்சிகளில் தோன்றும் பிரபலம் என்பதில் ஒரு வித கவர்ச்சி இருப்பதாகத்தான் தெரிகிறது. விஜய் டிவி புகழ் நீயா, நானா கோபிநாத் எழுதிய புத்தகங்களை பெருமைக்காவது சிலர் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.
இலக்கியம், நவீன இலக்கியம் என்றால் புத்தகத்தின் பெயர் வித்தியாசமாக இருக்க வேண்டும். பெயரை மட்டும் படித்தால் புரியக் கூடாது. அட்டை முகப்பு மறைபொருள் ஓவியமாக இருக்க வேண்டும். இது எழுதப்படாத விதியா என தெரியவில்லை. இந்த விதிக்கு உட்பட்ட பல புத்தகங்களைக் காண நேர்ந்தது. வழக்கம் போல் தோளில் நீண்ட துணிப்பை, 4 நாட்கள் முகச்சவரம் செய்யப்படாத தோற்றத்துடன் சில இளைஞர்கள் கீழைக்காற்று, எதிர் போன்ற அரங்குகளில் காணப்பட்டனர்.
8ம் வகுப்புக்குக் கீழே படிக்கும், ஓரளவு சொன்ன பேச்சை கேட்கும் குழந்தைகளுடன் வந்திருந்த பல பெற்றோர்கள், சிறிய கதை புத்தகங்கள், ஓவியப் பயிற்சி புத்தகங்கள்- ஆங்கில கதைகள், வரலாற்று புத்தகங்கள் என தேர்வு செய்து கொண்டிருந்தனர்.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை இந்த வருடம் சந்திக்க இருக்கும் மாணவ, மாணவியருடன் வந்திருந்த பெற்றோர் 1000 ஒரு மார்க் கேள்விகள், நோட்ஸ்கள் என வாங்கிக்கொண்டிருந்தனர். ஒரு சிறிய கடையில் மிக அதிகமான பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னவென்று எட்டிப்பார்த்தால் அறிவியல் உபகரணங்கள். பூதக்கண்ணாடி, டெலஸ்கோப், காலம் அளவிடும் கருவி போன்றவை வைத்திருந்தார்கள், அதில் பலர் லென்ஸ் தேர்வு செய்து கொண்டிருந்தனர். ஒரு பெரியவரிடம் விசாரித்ததில் பல மருந்து மாத்திரைகள், சோப்பு போன்ற பொருட்களில் அதிக விற்பனை விலை (எம்ஆா்பி) மிகச்சிறியதாக அச்சிடுகிறார்கள், அவர்கள் சொன்னதுதான் விலையாக இருக்கிறது. எனவே தான் ஒரு நல்ல லென்ஸ் வாங்கினேன் என்றார். சிறப்பான யோசனையாக இருக்கிறதே என எண்ணிக் கொண்டேன்.
தொழிற்சங்கம் குறித்து கார்ல் மார்க்ஸ், சாதியம் குறித்த சில புத்தகங்கள், மாக்சிம் கார்க்கியின் தாய், காலச்சுவடு பதிப்பகத்தில் கிளாசிக் வரிசையில் தி ஜானகிராமன் எழுதிய அம்மா வந்தாள் உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.
முன்னதாக முற்போக்குச் சிந்தனையாளர் சனநாயக தொழிற்சங்க மைய பொறுப்பாளர் தோழர் மு தங்கபாண்டி அவர்கள் “மரண தண்டனையும், கம்யூனிஸ்டுகளும், அணுஉலையும் கம்யூனிஸ்டுகளும்” என்ற சிறு நூல் வெளியீடு கருத்துப்பட்டறை எனும் அரங்கின் முன் நடக்க இருப்பதாக தெரிவித்து அழைப்பு விடுத்திருந்தார். தோழரை பல நாள்களாகத் தெரியும். நல்ல சிந்தனையாளர். என்னுடைய மற்றொரு நண்பரான மீ.த. பாண்டியன் அவருடைய புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் பற்றிய எனது கருத்தை பின்னர் பதிவிடுகிறேன். மரண தண்டனை குறித்து பல தரவுகளையும் தகவல்களையும் இந்நூலில் அவர் தெரிவித்திருக்கிறார்.
புத்தகத்தை வெளியிட்ட தோழர், அழித்தொழிப்பு என்னும் பதம் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கவேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். அழித்தொழிப்பு என்பது இலங்கை இனப்படுகொலை, ஹிட்லர் வதைமுகாம் கொலைகள் போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டுமா என்ன? அணு உலை கட்டுரையில் நையாண்டியும் நக்கலும் நன்றாகவே கலந்திருக்கிறது. குறிப்பாக தா. பாண்டியனை விமரிசனம் செய்திருந்தாலும் இரு இடதுசாரி கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு, அவமதிக்கப்படும் சூழலில், ஊழல் மிகுந்திருக்கிற நிலையில், சிபிஐ, சிபிஎம் இரண்டும் ஏன் ஒன்றிணையக்கூடாது என்னும் ஆதங்கம் பலரிடம் உள்ளது. இந்த இருவரிடமிருந்தும் வேறுபட்டு முற்போக்காகவும் தீவிரமாகவும் சிந்திக்கும் ரேடிகல் கம்யூனிஸ்டுகள் சிறிய சிறிய அமைப்புகளாக பிரிந்திருக்கிறார்களோ என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு.
0
சில பள்ளி ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக பல புத்தகங்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர். பள்ளியில் மாணவர்களுக்குப் பரிசளிப்பதற்காக அவை வாங்கி செல்லப்பட்டன. இது போல் புத்தகங்கள் அதிகமாக வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி தருவது குறித்து பதிப்பகங்கள் முடிவு செய்ய வேண்டும்.
சமீபத்தில் எங்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நாங்கள் புத்தகங்களைத்தான் நினைவுப் பரிசாக அளித்தோம். அவர்கள் ஊர் சென்று சேர்ந்ததும், தனியாக அழைத்து புத்தக பரிசுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது மூத்த மகள் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வில் முதல் மாணவியாகவும், பாட வாரியாக 3 பரிசுகளும் – மொத்தம் 5 பரிசுகள் பெற்றாள். மதிப்பெண் சான்றிதழ் வாங்க சென்றிருந்த போது என்ன படிக்கப் போகிறாய் என உதவி தலைமை ஆசிரியர் கேட்டதற்கு BE (ECE) என்று சொல்லியிருந்தாள். அந்தப் படிப்புக்குப் பயன்படக்கூடிய வகையில் சிறந்த 5 புத்தகங்களைத் தேர்வு செய்து அடுத்த சில மாதங்கள் கழித்து நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவின் போது பரிசளித்தார்கள். 4 வருடமும் போற்றி பாதுகாத்து பயன்படுத்தக்கூடிய மிகச்சிறந்த பரிசாக அது அமைந்தது.
நான் 15 வருடங்களுக்கு முன் குடியிருந்த இடத்துக்கு அருகே வசித்த நண்பர் பிராடிஜி – கிரி பதிப்பகம் போன்றவற்றின் சிறிய புத்தகங்களாக நிறைய வாங்கியிருந்தார். அவரை சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டிருந்தபோது தான் தற்போது ஒரு அபார்ட்மென்டில் குடியிருப்பதாகவும், பல குடியிருப்புகளிலிருந்து குழந்தைகள் பிறந்த நாள் என சாக்லேட் கொண்டு வந்து தரும்போது, ஒரு புத்தகம், பென்சில், அல்லது பேனா என வயதுக்கு ஏற்ப பரிசளிப்பது வழக்கம் என்றும் சொன்னார்.
3 மணி நேரத்தில் அரை மணி நேரம் புத்தக வெளியீட்டிலும், சில நிமிடங்கள் வெளி அரங்கில் நடைபெற்ற பட்டிமன்ற பேச்சைக் கேட்டதிலும் செலவழித்ததால், திருவிழாவை முழுவதுமாகப் பார்த்த திருப்தி ஏற்படவில்லை. இன்னொருமுறை செல்லவேண்டும். பிறகு மேலும் கொஞ்சம் எழுதுகிறேன்.
0