1851ம் ஆண்டு பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார் ஜோதிபா புலே. அதற்கு முன்னதாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புனேயில் கிறிஸ்தவ மிஷினரிகள் ஒரு பெண்கள் பள்ளியை நிறுவியிருந்தனர். இதனால் தூண்டப்பட்டே புலேயும் தனது பள்ளியைத் தொடங்கியிருந்தார். புலே, அவர் மனைவி சாவித்திரி புலே இருவரும் அந்தப் பள்ளியைப் பல ஆண்டுகள் நடத்திவந்தனர். பிறகு வேறு ஒரு குழுவிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இரு பள்ளிகள் இதே போல் தொடங்கப்பட்டடன. இது நடந்து ஓராண்டுக்குப் பிறகு மகர்கள், மாங்குகள் உள்ளிட்டவர்களுக்காக மற்றொரு பள்ளியை புலே ஆரம்பித்தார்.மேலும் இரு பள்ளிகளும் சேர்க்கப்பட்டன. ஆனால் இவற்றால் புலே திருப்தியடைந்துவிடவில்லை. பெருமளவிலான பெண்களும் கல்வியறிவற்றவர்களும் இருக்கும்போது ஒன்றிரண்டு பள்ளிகளால் என்ன செய்துவிடமுடியும்?
படிப்பறிவற்றவர்கள் பெருகியிருப்பதற்கு யார் காரணம்? எப்படிப் பள்ளிகளை அதிகரிப்பது? எப்படி அவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிப்பது? இந்தப் பள்ளிகளை யார் நிர்வகிக்கவேண்டும்? எப்படி நிதி ஒதுக்கப்படவேண்டும்? ஆரம்பக் கல்வியா, உயர் கல்வியா எது முக்கியம்? ஆசிரியர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும்? புலேயின் தனித்தன்மையும் புரட்சிகரமான அணுகுமுறையும் இந்தக் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்களில் இருந்து வெளிப்படுகின்றன.
‘கல்வி ஆணையத்தின் கவனத்துக்கு ஓர் அறிக்கை’ என்னும் பிரசுரத்தின் தொடக்கத்தில் புலே எழுதுகிறார். ‘விஷயங்களை இந்த அளவு நெருக்கடிக்கு கொண்டு வந்ததற்கு ஓரளவு பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என நியாயபூர்வமாகவே கூறலாம். உயர்படிப்புக்கு தாராள நிதிகளும் ஏராள வசதிகளும் வழங்கி,பொதுமக்களின் கல்வியைப் புறக்கணித்ததில் அவர்களின் உள்நோக்கங்கள் யாதாயினும், இந்த நிலை சரியில்லை என்பதை, பொது மக்களுக்கு நீதிகோரும் யாவரும் ஒத்துக்கொள்ளவே செய்வார்கள். உழவர்களின் உழைப்பில் இருந்தே இந்தியப் பேரரசின் நிதிகளின் பெருமளவு பெறப்படுகிறது. இது யாவரும் ஒத்துக்கொள்ளும் உண்மையாகும். உயர்ந்த, செல்வந்த வகுப்புகள் அரசு கருவூலத்துக்கு எதையும் வழங்குவதில்லை. அல்லது மிகவும் குறைவாக வழங்குகின்றன. விவரமறிந்த ஆங்கில எழுத்தாளர் ஒருவர் எழுதுகிறார் : உபரி லாபத்தில் இருந்து அல்ல முதலில் (மூலதனத்தில்) இருந்தே நம் வருமானம் எடுக்கப்படுகிறது. ஆடம்பரங்களில் இருந்து அல்ல, அதி அத்தியாவசிய தேவைகளிடம் இருந்தே நம் வருமானம் பிடுங்கப்படுகிறது. பாவத்தின் கண்ணீரின் விளைவே அது.
‘இவ்வாறு பெறப்படும் நிதியின் பெருமளவு உயர் வர்க்கங்களின் கல்விக்குத் தாராளமாக அரசாங்கம் செலவிடுகிறது. அத்துடன் இந்த வர்க்கங்களே அதனை அனுகூலமாக்கிக் கொள்கின்றன. இது எவ்வகையிலும் நீதியோ நியாயமோ அல்ல. எல்லா வகையிலும் மேல்வகுப்பையே பேணுவதுதான் அவர்கள் நோக்கம்.’
மேல்சாதி வர்க்கங்களுக்கு மட்டுமே கல்வி என்னும் இந்தக் கொள்கையின் காரணமாக 20 கோடி மக்கள் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? இதன் தொடர்ச்சியாக இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார் புலே. மேல் சாதியினரையும் பணக்காரர்களையும் படிக்க வைத்தன்மூலம் இந்த தேசம் சாதித்தது என்ன? சகமனிதர்களின் துயரைத் துடைக்க அவர்கள் செய்தது என்ன?
இதன் பலனை முழுக்க அனுபவித்தவர்கள் பார்ப்பனர்கள்தாம் என்கிறார் புலே. உயர் கல்வி படித்த பதவிகளில் அவர்களே அமர்ந்துகொண்டனர். ‘குடியானர்களின் நலன் இதயத்தில் இருந்தால், துஷ்பிரயோகங்கள் மலிவதை தடுப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை என்றால், அது ஒரு நாளும் இந்த ஏகபோகத்தை குறுக்கிவர கடமைப்பட்டிருக்கிறது. அப்போதுதான் பொதுப்பணித்துறைகளில் மற்ற சாதியினரிலும் ஒரு பகுதியினரை அனுமதிக்கமுடியும்.’
ஆரம்பக் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்குமாறு செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார் புலே. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி என்பது உபகாரம் அல்ல, அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் கல்விக்காக அனைவரிடமிருந்தும் வரி வசூலிக்கிறது என்பதால் கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவாக அளிக்கப்படுவதே நியாயமானதாகும். பத்தில் ஒன்பது பங்கு கிராமம் நிறைந்திருக்கும் ஓரிடத்தில் கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு பல லட்சம் குழந்தைகள் அவதிப்படுவதை அரசு எவ்வாறு புறந்தள்ளமுடியும்? படித்த வகுப்பினரையே என்றென்றும் சார்ந்திருக்கும்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நீடிக்கவேண்டிய அவசியம் என்ன?
வறுமை எவ்வாறு கல்வி கற்கும் வழக்கத்தை ஒதுக்கி வைக்கிறது என்பதை புலே அதே பிரசுரத்தில் விவரிக்கிறார். விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் ‘பொதுவாக கல்வியை நாடுவதில்லை என்பது விதியாக இருக்கிறது. அவர்களின் குழந்தைகள் ஒரு சிலர் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் காணப்படுகிறார்கள். ஆனால் வறுமை முதலான காரணங்களால் அவர்களால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியவில்லை. இவர்கள் தொடர்ந்து படிக்க எந்த சிறப்புத் தூண்டுதல்களும் இல்லை. எனவே இயல்பாகவே ஏதாவது உடலுழைப்பு அல்லது அதைப்போன்ற வேலை கிடைத்ததும் அவர்கள் நின்றுவிடுகிறார்கள். கிராமங்களிலும் பெரும்பான்மை விவசாய வகுப்புகள் தம் அதீத வறுமை காரணமாகவும், கால்நடை மேய்க்கவும் கழனிகளைக் கவனிக்கவும் தமக்கு குழந்தைகள் தேவைப்படுவதாலும் ஒதுங்கியே உள்ளன.’
எனில், என்ன செய்யவேண்டும்? பள்ளிக்கூடங்களை அதிகரித்தால் போதாது என்கிறார் புலே. ‘உதவித் தொகைகள், அரையாண்டு அல்லது ஆண்டுப் பரிசுத் தொகைகள் முதலிய வடிவில் சிறப்புத் தூண்டுதல்கள்,சலுகைகள் மிகவும் அவசியம். அப்போதுதான் அவர்கள் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஊக்கம் பெறுவர். அதன்மூலம் குழந்தைகளின் படிப்பிலும் ஓர் ஆர்வத்தை உருவாக்கமுடியும். என் கருத்து என்னவென்றால், குறிப்பிட்ட வயது வரை, குறைந்தது 12 வயது வரையாவது பொதுமக்கள் ஆரம்பக்கல்வி பெறுவதை கட்டாயமாக்கவேண்டும்.’ புலே அவர் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு யோசனையை முன்வைத்தது வியப்பளிக்கக்கூடியது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக இன்றும் முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அளித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதுதான். புலே இதனை மறுக்கிறார். கடுமையான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் ஒரு சமுதாயத்தில் அந்த ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து போக்காமல் சமமான வாய்ப்புகள் வழங்குவதால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு யாதொரு பயனும் இல்லை என்பது புலேயின் நிலைப்பாடு.
‘இன்றைய கல்வி நிலையில் ஏழைகளும் படிப்பறிவற்றவர்களுமான மக்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிக்க அவர்களின் திறமையைப் பொறுத்து சலுகை அளிப்பது என்பது பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் கல்வி மீதான சுவையை, ஆர்வத்தை இன்னும் அவர்களுக்கு உருவாக்கவே இல்லை.’ இத்தகைய சிறப்பு சலுகைகளை ஓயாது அவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. ‘அவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கிவிடும் வரைக்கும் மேலே சொன்னது போல அரசாங்கப் பள்ளிகளும் சிறப்புச் சலுகைகளும் அத்தியாவசியம்’ என்று மட்டுமே வலியுறுத்துகிறார்.
இந்து மதத்தில் மட்டுமல்ல இஸ்லாமியர்களும்கூட கல்வியறிவு இல்லாததால் பின்தங்கியுள்ளதை புலே ஆதாரங்களுடன் எடுத்துக்கூறுகிறார். மேல்சாதிக் குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகளுக்கு அருகில் அமர்ந்து படிக்க மறுப்பதையும் முஸ்லிம்களுக்கென்று தனிப்பள்ளிகள் இல்லாததையும் புலே வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
ஆரம்பப் பள்ளிகளில் பார்ப்பனர்களே ஆசிரியர் பணியில் அமர்ந்திருப்பதை புலே விமரிசிக்கிறார். விவசாயப் பின்னணி கொண்டவர்கள் ஆசிரியர்களாகும்போது அவர்களால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் சுலபமாக ஒன்றிணையமுடியும், அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளமுடியும், அவர்கள் வளர்ந்து என்ன செய்யவேண்டும் என்பதையும் போதிக்கமுடியும். தவிரவும், ‘தேவைப்பட்டால் ஏர் பிடிக்கவோ தச்சரின் உளியைப் பிடிக்கவோ அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.’ ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடைய சம்பளம் உயர்த்தப்படவேண்டும், அதிக எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பவர்களுக்கு கூடுதல் சன்மானம் வழங்கப்படவேண்டும் என்றும் புலே கேட்டுக்கொண்டார்.
எப்படிப்பட்ட பாடங்கள் மாணவர்களுக்குப் போதிக்கப்படவேண்டும் என்பது குறித்தும் புலே சில கருத்துகள் கொண்டிருந்தார். ‘எண், எழுத்து இரண்டையும் எழுதப் படிக்க பழகவேண்டும். கணக்கு, பொது வரலாறு, பொது புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்கநிலை அறிவு. விவசாயத்தில் தொடக்கநிலை அறிவு. சுகாதாரம் மற்றும் நீதிநெறிகளில் சில பாடங்கள்.’ சிற்றூர்களில் போதிக்கப்படும் பாடங்கள் நகரப் பள்ளிகளைவிட குறைவாக இருக்கவேண்டும்.குறைவு என்பது பாடத்தின் அளவில்தானே ஒழிய தரத்தில் அல்ல.
புலே முன்வைக்கும் மேலும் சில யோசனைகள். தகுந்த ஆய்வாளர்களால் பள்ளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும், இதனை வெறுமனே சடங்கு போல் செய்யக்கூடாது. உள்ளூர் வரித் தொகையின் சரி பாதியை ஆரம்பக் கல்விக்கு ஒதுக்கவேண்டும். எல்லா நகராட்சிகளும் தம் எல்லைக்குள் இருக்கும் எல்லா ஆரம்பப் பள்ளிகளையும் பராமரிக்குமாறு சட்டம் இயற்றவேண்டும்.
புலே தனியார் கல்வியைத் திட்டவட்டமாக எதிர்க்கிறார். ‘இன்னும் நீண்ட காலத்துக்கு கல்வி அமைப்பு முழுவதும் நிர்வாக அளவிலும் செயல்பாடு அளவிலும் அரசாங்கத்தின் கைகளிலேயே இருத்தல் வேண்டும். உயர்கல்வி, ஆரம்பக்கல்வி இரண்டையுமே ஊட்டி வளர்ப்பதும் கவனிப்பதும் தேவை. அரசாங்கம்தான் அத்தகைய கவனிப்பை வழங்க முடியும்.’
ஆங்கில வழிக்கல்வியே உயர்வானது என்னும் கருத்தாக்கம் பரவியிருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த சமயத்தில் புலே மராத்தி வழி கல்வியை உயர்த்திப் பிடித்தது ஆச்சரியமளிக்கக்கூடியது. (அடித்தட்டு) மக்கள் மொழியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் அமைக்கப்படவேண்டும் என்னும் அவர் வேண்டுகோள் இன்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.
தாழ்த்தப்பட்டவர்கள் விழித்தெழுவதற்கு எவ்வாறு கல்வியை புலே முன்னிறுத்தினாரோ அதே போல் பெண்கள் விடுதலைக்கும் அவர் கல்வியையே முன்நிபந்தனையாக நிறுத்தினார். புலேயின் போராட்டங்களில் ஒரு முக்கியப் பகுதியாக பெண் விடுதலை திகழ்ந்தது. வன்முறை மற்றும் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சில சாதியினர் அடிமைப்படுத்தப்பட்டதைப் போலவே பெண்களும் அடிமைப்படுத்தப்பட்டனர் என்றார் புலே. பிற்காலத்தில் சில பெண்ணியவாதிகளின் தாக்கத்துக்கு உள்ளான பிறகு பெண்கள் குறித்த புலேயின் பார்வை இன்னமும் கூர்மையடைந்தது என்கிறார் கெயில் ஓம்வெட். பெண்கள் அடிமைப்பட்டதற்குக் காரணம் ஆண்வழிமரபுச் சமூகமே என்பதை புலே உணர்ந்துகொண்டார். இந்த விஷயத்தில் பிராமணப் பெண்களுக்கும் சூத்திரப் பெண்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் அவர் கண்டுகொண்டார். பிராமண சமூகம் சூத்திரர்களை மட்டுமல்ல தமது சமூகத்துப் பெண்களையும் சேர்த்தே ஒடுக்குகிறது. அதே போல் ஒரு சூத்திர ஆண் தன் மனைவி பதிவிரதையாக இருக்கவேண்டும் என்றும் தனக்கு யாசகம் செய்யவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். ஆக இருவருமே இரட்டை வேடம் போடுபவர்களாக இருக்கிறார்கள்.
புலே மத நம்பிக்கையற்றவர் அல்லர். கடவுள் ஒருவர் உண்டு என்பதை ஏற்பவர். சர்வஞனிக் சத்ய தர்மா என்னும் தன் நூலில் அவர் தனது நம்பிக்கை குறித்து உரையாடுகிறார். இந்தப் புத்தகம் போக அவர் எழுதி வெளிவந்த நூல்கள் இரண்டு. முதலாவது, சாதியம் குறித்து விவாதிக்கும் குலாம்கிரி. இரண்டாவது, விவசாயிகள்மீதான ஒடுக்குமுறையை விவரிக்கும் ஷேத்கர்யகா ஆசுத். இவை போக கவிதைகள், தர்க்க ரீதியிலான உரையாடல்கள், கடிதங்கள், பிரசுரங்கள் ஆகியவையும் அவருடைய படைப்புகளின் கீழ் இடம்பெறுகின்றன.
தீவிரமாகவும் கடுமையாகவும் புலே மேற்கொண்ட பிராமண எதிர்ப்பு குறித்து ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்தவேண்டும். சூத்திரர்களை அடிமைப்படுத்தியவர்கள், மேலாதிக்கத்தை நிலைநாட்டியவர்கள் என்று வகையில் அவர்கள்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை புலே சுமத்தினாலும், பிராமணர்கள் தவிர்க்கவியலாதபடிக்கு தீங்கானவர்கள் என்று புலே கருதவில்லை. அதாவது, ஒருவன் பிராமண குலத்தில் பிறந்துவிட்டதாலேயே அவன் தீங்கானவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல அவருடைய மதிப்பீடு. ‘தங்களுடைய போலியான புனித நூல்களைத் தூக்கியெறிந்துவிட்டு, அனைவரும் சமம் என்று அவர்கள் கருதுவார்களேயானால், உண்மையாக அவர்கள் நடப்பார்களேயானால் அனைத்து ஆண்களும் பெண்களும் ஆரியர்களின் நலனுக்காகக் கடவுளை வேண்டிக்கொள்வர். ’
புலே அவர் வாழ்ந்த காலத்தில் மகாராஷ்டிரத்தைத் தாண்டி அறியப்பட்டிருக்கவில்லை. அவர் எழுதியது மராத்தியில் என்பதால் இந்தியாவிலேயே அவர் நீண்ட காலத்துக்கு அறியப்படாதவராகவே இருந்தார். அவர் யாருக்காக எழுதி வைத்தாரோ அவர்கள் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்ததால் புலேயின் படைப்புகள் பரவலாக அறிவுதளத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களிடம் கல்வியறிவு இருந்தது. ஆனால் புலேவின் எழுத்துகளை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டிய கடமை அவர்களுக்கு இல்லை.
கெயில் ஓம்வெட் மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார். புலேயை தலித் பிரிவினரேகூட புறக்கணித்ததற்குக் காரணம் அவர் எந்தவொரு குறிப்பிட்ட சாதியையும் சார்ந்திருக்கவில்லை என்பதுதான். எனவே அவரைத் தூக்கி நிறுத்தவும் அவர் படைப்புகளைக் கொண்டாடவும் குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் யாரும் முன்வரவில்லை. பிற்காலத்தில் அம்பேத்கர், தனது ஆசான்களில் ஒருவராக புலேயை முன்மொழிந்தார் என்றபோதும் அவரிடமும்கூட புலேயின் தாக்கத்தை அதிகம் காணமுடியவில்லை என்கிறார் ஓம்வெட்.
மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் ஒரு பிரிவினரை ஒடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வகுப்புவாத மோதல்கள் இன்னமும் முடிந்தபாடில்லை. தீண்டாமை இன்னமும் ஒழிந்துவிடவில்லை. கல்வியறிவு அனைவருக்கும் கிடைத்துவிடவில்லை. பெண்கள் இன்னமும் சமத்துவத்தை எட்டிப்பிடித்துவிடவில்லை. முக்தாபாய் சொன்னதுபோல், மிஞ்சிய சோற்றுக்காக முதுகை வளைத்து மேல் சாதியினரிடம் கைநீட்டி நிற்கும் நிலை மறைந்துவிடவில்லை. எனவே, புலே இன்றும் தேவைப்படுகிறார். அதிகாரம், கல்வி, அறிவியல் மூன்றையும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும் ஒடுக்கப்பட்டவர்களும் கைகொள்ளவேண்டும் என்றார் புலே. இந்த மூன்றையும் மூன்று ஆயுதங்களாகக் கருதவேண்டும் என்றும் அவர் முழங்கினார். அவர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை லட்சியமாகக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் தரித்திருக்கவேண்டிய ஆயுதங்கள் இவை.
(அடுத்த பகுதி : இந்தியாவின் முதல் தலித் தலைவர்)