(அதிகாரம் – தகையணங்குறுத்தல்)
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
ஜிமிக்கியின் அதிர்வில்
மிக நினைவூட்டுகிறாள்
ஒரு பச்சைநீல மயிலை
ஒரு வான் தேவதையை.
*
குறள் 1082:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
கொஞ்சம் பார்க்கிறேன்
நிறைய முறைக்கிறாள்
பத்மவியூகத்துள் புகுந்த
வீரஅபிமன்யு ஆகிறேன்.
*
குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
ஒரு பெண்ணின் கண்களை
அதன் வசீகரத்தைப் பற்றிய
குறிப்புகள் நிறைந்திருக்கும்
என் மரண வாக்குமூலத்தில்.
*
குறள் 1084:
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
Satin போல், Velvet போல்
மென்மையானவள் தான்
திருஷ்டிப் பொட்டாயிந்த
உயிர் தின்னும் கண்கள்.
*
குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
சிறுக்கிச் சிறுபார்வை
எனைத் தீர மேய்ந்து
மானாய் மருள்கிறது
எமனாய் அருள்கிறது.
*
குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
கண்ணை ஒளிக்கத் தவறிய
புருவக்கோணல் – அன்றேல்
மனசு நேராயிருந்திருக்கும்
மப்பு நேராதிருந்திருக்கும்.
*
குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
மதங்கொண்டு வதஞ்செய்யும்
முரட்டுத்திமிரான யானைக்கு
முகமூடி அணிவித்தது போல்
அவள் இளஞ்சிவப்பு துப்பட்டா.
*
குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
உலகம் என் காலடியில்
மொத்தமும் ரத்து செய்து
அரைப்பிறை ஒளிர்நுதல்
கண்டு மண்டியிடுகிறேன்.
*
குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
தீராத வரதட்சணையாய்
வாங்க வேண்டும் அவள்
24 கேரட் அச்சத்தையும்
37 கிராம் நாணத்தையும்.
*
குறள் 1090:
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
பிடித்துக் குடித்தால் தான்
மிதக்கும் கள்ளின் போதை
படித்தாலும் பார்த்தாலும்
தெறிக்கும் காதல் போதை.
0