தன் பயணங்களை முடித்துக்கொண்டு வெனிசூலா திரும்பியபோது இரு பெரும் பிரிவுகளாக மக்கள் பிளவுபட்டிருந்ததை பொலிவார் கண்டுகொண்டார். ஒரு பிரிவினர் ஸ்பெயினை ஆதரித்தனர். இன்னொரு பிரிவினர் ஸ்பெயினிடம் இருந்து விடுபடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சிகளைத் தொகுத்துக்கொண்டு ஸ்பெயினிடம் இருந்து வெனிசூலாவை விடுவிக்க செபாஸ்டியன் ஃபிரான்சிஸ்கோ மிராண்டா என்னும் ராணுவ ஜெனரல் ஒரு பெரும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால் வெனிசூலாவின் வடக்குக் கரையை முற்றுகையிடும்போது அவர் தோற்கடிக்கப்பட்டார். ஜேம்ஸ் மாடிசன், தாமஸ் ஜெஃபர்சன் போன்ற அமெரிக்க அதிபர்களின் நண்பராக இருந்தவர் மிராண்டா. பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு ஜெனரலாகப் பங்கெடுத்தவர்.
லத்தின் அமெரிக்காவில் பரவிய புரட்சி அலைக்கு 1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி ஓர் முக்கிய உந்துதலாகத் திகழ்ந்தது. இன்னொரு புரட்சி எங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் தீர்மானமாக இருந்த சமயம் அது. கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு உலகின் முக்கியச் சக்திகள் அனைத்துக்கும் இது ஒன்றே நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கை உணர்வையும்மீறி புரட்சி அலைகள் பரவின. அரசாங்கங்களின் செயலற்ற தன்மையை 1815க்குப் பிறகான தலைமுறை தீர்மானமான முறையில் வெளிப்படுத்தியது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ‘ஐரோப்பாவிலும் சரி உலகளவிலும் சரி, அடுத்தடுத்து பல இடங்களில் இவ்வளவு புரட்சிகள் நடைபெற்றது இதுவே முதல் முறை.’
சூழலையும் சூழலின் தேவையையும் புரிந்துகொண்ட பொலிவார் லத்தின் அமெரிக்காவின் விடுதலை ராணுவப் பாதையில் மட்டுமே சாத்தியப்படும் என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தார். ஸ்பெயினின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து முதல்முறையாக பொலிவார் குரல் கொடுத்தபோது அவர் மேல்தட்டு கிரியோல்களின் நலன்களை மட்டுமே பிரதிபலித்தார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஸ்பெயினிடம் இருந்து விடுபடுவதுதான் நமக்கு லாபகரமானது என்று அவர் கணக்குப் போட்டார். இதே எண்ணத்தோடுதான் 1806ல் கிளர்ச்சியாளர்களின் ஒரு சிறு படையுடன் பொலிவார் இணைந்துகொண்டார்.
1808ம் ஆண்டு நெப்போலியன் ஸ்பெயின்மீது படையெடுத்து அரசர் ஏழாம் ஃபெர்டினாண்டைக் கைது செய்தபோது அதன் தாக்கம் வெனிசூலாவிலும் எதிரொலித்தது. தன்னையே பாதுகாத்துக்கொள்ள இயலாத ஒரு நாட்டிடம் இனியும் எதற்காக நாம் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டும்? விரக்தி, கோபம், வெறுப்பு அனைத்தும் ஒன்று திரண்டு உருசேர்ந்தன. ஸ்பெயினும் ஸ்பெயினால் நியமிக்கப்பட்ட வெனிசூலா ஜெனரலும் பலகீனமாக இருந்த தருணத்தை கிளர்ச்சியாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். 19 ஏப்ரல் 1810 அன்று வெனிசூலா தாற்காலிக சுதந்தரப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. இதன் பொருள், ஃபெர்டினாண்டை இன்னமும் அவர்கள் தங்கள் அரசாரகவே கருதினார்கள். ஆனால், எங்களை நாங்களே ஆண்டுகொள்வோம் என்றனர்.
பொலிவார் விரும்பியது முழுமையான, நிபந்தனையற்ற சுதந்தரத்தை. பொலிவாரின் கருத்து பெரும்பாலானோரின் கருத்தாக மாறத் தொடங்கியபோது 5 ஜூலை 1811 அன்று முழுமையான சுதந்தரத்தை வெனிசூலா அதிகாரபூர்வமாக அறிவித்தது. எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன என்று பொலிவார் நினைத்த தருணத்தில் முடியாட்சிக்கு ஆதரவான குழுவினர் புதிதாக உருவான சுதந்தர அலையை அடக்கி ஒடுக்கினர். கிளர்ச்சியாளர்கள் வேட்டையாடப்பட்டனர். பொலிவார் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தப்பிச்சென்றார்.
ஆனால் வரித்துக்கொண்ட லட்சியத்தில் இருந்த அவர் பின்வாங்கவில்லை. 1812ம் ஆண்டு நியுவா கிரானடா (புதிய ஸ்பெயின்) என்றழைக்கப்பட்ட கொலம்பியாவுக்கு வந்த பொலிவார் அங்கே ஒரு கிளர்ச்சிப் படையை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார். உருவான படைக்கு அவரே தலைமை தாங்கவும் முன்வந்தார். பொலிவாருக்கு இப்போது சில விஷயங்கள் தெளிவாகத் தெரிந்திருந்தன. படையை உருவாக்கினோம், போர் தொடுத்தோம், வென்றோம், சுதந்தரம் பெற்றோம் என்று எளிமையான நேர் வரிசையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை உருவாக்கிவிடமுடியாது. துன்பங்களையும் தொடர் தோல்விகளையும் கடந்து தீர்மானமாகவும் திடமாகவும் போரிடவேண்டும். எது வந்தாலும், என்ன நடந்தாலும் ஓரடிகூடப் பின்னால் நகராமல், உயிர் போனால் பரவாயில்லை என்று உறுதிபூண்டு போராடினால் மட்டுமே லட்சியத்தை நெருங்கமுடியும். ஏனென்றால், சுதந்தரம் விலை மதிப்பற்றது. அதைச் சுலபத்தில் பெற்றுவிடமுடியாது.
பொலிவார் தனது நீண்ட பயணத்தைத் தொடங்கினார். வெனிசூலாவில் இருந்து பெருவுக்குப் பல ஆயிரம் மைல்களை குதிரையில் கடந்து செல்லவேண்டியிருந்தது. மீண்டும் பெருவில் இருந்து வெனிசூலா. மலைகளையும் கானகங்களையும் கடும் குளிரையும் கடக்கவேண்டும். ஓய்வு, உறக்கமின்றி குதிரைமீதே பழியாகக் கிடக்கவேண்டும். ஆனால் இத்தனைக்கு இடையில் பொலிவாருக்குப் படிக்கவும் சிந்திக்கவும் நேரம் கிடைத்தது ஆச்சரியமளிக்கக்கூடியது. முழுமுற்றான ராணுவப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதிலும், ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் பிரெஞ்சுத் தத்துவ வரலாறு குறித்தும் விடாமல் அவரால் படிக்கமுடிந்தது.
பொலிவாரின் படையில் அப்போது 200 வீரர்கள் இருந்தனர். ஸ்பானிஷ் படைகளோடு ஒப்பிட்டால் இது மிக மிகச் சிறிய எண்ணிக்கை. இருந்தாலும் பொலிவாரின் தலைமை இந்தப் படையை பல மடங்கு பலம் கொண்ட வலிமையான சக்தியாக மாற்றியது. அவ்வப்போது கிடைத்த சிறு சிறு வெற்றிகள் அவர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்தன. இந்த வெற்றிகள் தந்த துணிச்சலில் மேலும் மூர்க்கத்துடன் அவர்கள் ஸ்பானியப் படைகளை எதிர்கொண்டு போரிட்டனர். பொலிவாரின் பெயரும் அவருடைய புகழும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. ஒரு முறை அவரும் அவருடைய சிறு படையும் 90 நாள்கள் பயணம் மேற்கொண்டு, 700 மைல்களைக் கடந்து, ஆறு யுத்தங்களில் பங்கேற்றார்கள். ராயல் படையின் ஆறு பிரிவுகளை பொலிவாரின் படைகள் அடித்து வீழ்த்தின. ஆகஸ்ட் 1813ல் பொலிவார் தனது பிறந்த மண்ணான காரகாஸுக்குள் நுழைந்தார். ஆரவாரத்துடன் அவரை வரவேற்ற மக்கள், ‘லிபரேட்டர்’ என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கினர்.
ஒரு கட்டத்தில், வெனிசூலாவும் நியுவா கிரானடாவும் பொலிவாரின் வசம் வந்து சேர்ந்தன. ஆனால் இந்த முறையும் சுதந்தரம் நீடிக்கவில்லை. 1815ல் பொலிவார் தோற்கடிக்கப்பட்டார். மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தப்பியோடினார். மீண்டும் தன் படையைக் கட்டியெழுப்பினார். மீண்டும் போர்ப் பயிற்சிகள். மீண்டும் வெனிசூலாவுக்கு ஒரு பயணம். மீண்டும் ஒரு வெற்றி. கொண்டாடுவதற்குள் முடியாட்சிக்கு ஆதரவான ராணுவம் சீறிவரும். பொலிவார் தோற்கடிக்கப்படுவார். மீண்டும் தப்பியோட்டம்.
இந்தத் தொடர் படையெடுப்புகளும் தொடர் வெற்றிகளும் தோல்விகளும் பொலிவாரை மேலும் மேலும் உறுதியானவராக வளர்த்தெடுத்தன. கிரியோல்களின் நலன்களை முன்னிறுத்தி தன் போராட்டத்தைத் தொடங்கிய பொலிவார் இப்போது பரவலான மக்கள் நலன் நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருந்தார். முடியாட்சியிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல நோக்கம். காலனியாதிக்கத்தில் இருந்தும் நாடுகள் விடுபடவேண்டும். மட்டுமின்றி, விடுதலையோடு சமத்துவமும் தோன்றவேண்டும் என்று தன் லட்சியத்தை இப்போது விரிவாக்கிக்கொண்டிருந்தார் பொலிவார்.
வெறும் வார்த்தைகளுடன்கூடிய சம்பிரதாயமான முறையில் அல்ல, சட்டரீதியிலான சமத்துவத்தையே பொலிவார் முன்வைத்தார் என்கிறார் ஜான் லிஞ்ச். பொலிவார் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஒருவனுடைய வர்க்கப் பின்னணி என்னவாக இருந்தாலும் சரி, அவனுடைய நிறமோ நம்பிக்கைகளோ எப்படியிருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் ஒன்றுபோல் சமமாகப் பாவிக்கப்படவேண்டும்.’ பொலிவாரை ஒரு ஜனநாயகவாதி என்று கொள்ளமுடியும். அரசாங்கம் மக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடப்பாடு கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் பொலிவார் விரும்பினார். ‘பெரும்பான்மை மக்களே ஆள்வதற்குத் தகுதியானவர்கள். அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கும் எந்தவொரு சர்வாதிகாரியும் ஆதிக்கவாதியாகவும் சுரண்டல்வாதியாகவும் கருதப்படுவார்.’
தென் அமெரிக்காவை ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுவிப்பது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவப்பூர்வமாக பொலிவார் உணர்ந்திருந்தார். தென் அமெரிக்கா இன்னமும் முழுமையான ஜனநாயகத்துக்குத் தயாராகவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. நடைமுறை உண்மைகளுக்கு ஏற்ப பொலிவார் தன் சிந்தனைகளிலும் திட்டங்களிலும் மாற்றம் செய்துகொண்டே இருந்தார். ‘பொலிவாருக்குள்ளே ஒரு யதார்த்தவாதியும் ஒரு கனவுலகவாதியும் பின்னிப் பிணைந்திருந்தான்’ என்கிறார் ஜான் லிஞ்ச்.
சுதந்தரத்துக்காகப் போராடிய ஒரே காரணத்துக்காக மக்களைச் சிறைபிடித்து கொன்றொழித்த எதிரிகளை பொலிவார் இரக்கமற்ற முறையில் வீழ்த்தினார். அந்த வகையில், நாடு பிடிப்பதற்காகப் போரிட்ட நெப்போலியனிடம் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகப் போரிட்ட பொலிவார் துல்லியமாக வேறுபட்டு நிற்கிறார். ஸ்பெயினை எதிர்த்து வேறு நாகரிகமான முறையில் போரிடுவது சாத்தியமல்ல என்னும் முடிவுக்கு வந்தபிறகே பொலிவார் தன் குதிரைமீது ஆயுதத்துடன் ஏறி அமர்ந்தார்.
15 ஜூன் 1813 அன்று ட்ருஜிலோ என்னுமிடத்தில் பொலிவார் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ‘அமெரிக்காவின் (லத்தின் அமெரிக்காவின்) சுதந்தரத்துக்காகக் குரல் கொடுக்காத ஸ்பானியர்கள் எதிரிகளாக கருதப்படுவார்கள். தவறிழைக்காதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் எதிரிகள்தாம். அதே சமயம், தவறுகள் இழைத்திருந்தாலும் அமெரிக்கர்கள் எதிரிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.’ இந்த முடிவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது. பொலிவாருக்கு எதிரான படையிலும்கூட பெருமளவில் அமெரிக்கர்கள் திரண்டிருந்தனர். உதாரணத்துக்கு வெனிசூலாவிலேயே முடியாட்சியையும் ஸ்பெயினையும் ஆதரிக்கும் அமெரிக்கர்கள் இருந்தனர். யுத்த நியாயத்தின்படி, முடியாட்சிக்கு எதிரான யுத்தம் மூளும்போது அவர்களும் எதிரிகளாகத்தான் கருதப்படவேண்டும். ஆனால் பொலிவாரால் தன் சொந்த மக்களுக்கு எதிராகப் போரிட முடியவில்லை. அவர்கள் தவறான முடிவை எடுத்திருந்தபோதும் வரலாற்றுத் தவறுகள் இழைத்த போதிலும் அவர்கள்மீது ஆயுதத்தைத் திருப்ப முடியவில்லை. எனவே ட்ருஜிலோ பிரகடனம் ஸ்பானியார்டுகளையும் அமெரிக்கர்களையும் வகைப்படுத்தி பிரித்துக் காட்டியது. படை வீரர்கள் யாரை, எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தது. நடப்பது ஸ்பெயினுக்கும் அமெரிக்காவுக்குமான யுத்தம் என்று சுட்டிக்காட்டியது.
முறையாக பயிற்சியளிக்கப்பட்ட படை வீரர்கள், கெரில்லா வீரர்கள் ஆகிய இருவரோடும் இணைந்து பணியாற்றினார் பொலிவார். இவர்கள் சில சமயம் தமக்குள்ளும் மோதிக்கொண்டனர். அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரே திசையில் செலுத்துவது கடினமான காரியம். பொலிவார் ஒரே சமயத்தில் படை வீரராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்ததால் இந்த அசாத்தியமான காரியம் சாத்தியப்பட்டது. இந்த இடத்தில் ஜான் லிஞ்சின் வர்ணனை பொருத்தமானது. ‘பொலிவார் அதிகாரத்தையும் சுதந்தரத்தையும் ஒரே சமயத்தில் கோரினார். அவர் ஆட்சி புரிய விரும்பினார். மற்றொரு பக்கம் விடுவிக்கவும் விரும்பினார். ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காகவே அவர் போரிடவேண்டியிருந்தது.’
அந்த வகையில், போர்க்களத்தைக் கடந்தும் பொலிவாரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருக்கின்றன.
(அடுத்த பகுதி : பொலிவார் : புரட்சி வீரன்)