பேசு மனமே பேசு / அத்தியாயம் 6
நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் தள்ளிப் போனால் அல்லது செய்ய முடியாமல் போனால், அதைப் பற்றி பிறரிடம் கூறும்போது என்ன சொல்கிறோம்? ‘அவசியம் செய்யணும், அல்லது செய்திருக்கணும்’. ‘விடமாட்டேன் கண்டிப்பா செய்வேன்’. ஆனாலும் விஷயங்கள் நடக்காமல் போகின்றன. செய்ய முடியாமல் பாதியில் நிற்கின்றன. உதாரணமாக உடற்பயிற்சி, நெடுநாள் கடன் தீர்ப்பது, உறவினர்/நண்பரைப் பார்ப்பது போன்றவையும் இன்னும் பல சிறிய மற்றும் பெரிய விஷயங்கள் இந்தப் பட்டியலில் சேரும்.
இவை போன்ற காரியங்களைச் செய்ய நமக்கு விருப்பம் இருக்கிறது என்பது மட்டுமின்றி தேவையும் இருக்கின்றது. நமக்குள் பலமுறை நினைவுபடுத்தியும் கொள்கிறோம். ஆனாலும் செய்ய முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?
எதைச் செய்வதற்கும் முன்னால் அதைப்பற்றி எண்ணுகிறோம். அதாவது உள்ளூக்குள் பேசிக் கொள்கிறோம். நாம் இதை அதிவேகமாகச் செய்கிறோம். ஒரு விஷயத்தை எண்ணிக்கொண்டு இருக்கும்போதே மற்ற பல விஷயங்களும் மனத்தில் எழ அனுமதிக்கிறோம். குறைந்த பட்சம் அதைத் தடுக்கக்கூட முனைவதில்லை. இதனால் செய்யவேண்டிய விஷயத்தைக் குறித்து சரியான உரையாடல் நிகழ்த்த வேண்டியது மிக அவசியம். அதாவது காரண, காரியங்களோடு அர்த்தம் மனத்துக்கு செல்கிறார்போல வாக்கியங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நாளையிலிருந்து நான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’, ‘கண்டிப்பாக, அவரைப் பார்த்தேயாக வேண்டும்’ … ‘இந்த விஷயத்தை முன்னாலேயே செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யாமல் விட்டுவிட்டேன்.’
இவையெல்லாம், மேலோட்டமாகப் பார்க்கும்போது சரியான, முழுமையான வாக்கியங்கள் போலவே இருக்கின்றன. ஆனாலும் இவற்றால் வேலை நடந்ததா? நாம் மாறியிருக்கிறோமா? மாற்றங்கள் ஏற்பட்டதா என்று கேட்டால், பதில் ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். இதற்குக் காரணம் என்ன?
நமக்குள் பல்வேறு விஷயங்கள் குறித்து எண்ணும்போது, அதாவது உள் உரையாடல்களின் போது, பிரச்னையை, செய்யவேண்டியதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறோம். குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாம் என்ன செய்வதாக இருக்கிறோம் என்பவற்றை மட்டுமே சொல்கிறோம்.
‘நாளையிலிருந்து சீக்கிரமாக அலுவலகம் செல்ல வேண்டும்’ என்று ஒருவர் நினைத்தால், இதில் பிரச்னைக்கான காரணம், தீர்வு என்று எதுவுமே இல்லாத ஒரு எண்ணம் என்று கூறலாம். இதை எப்படி நினைக்க வேண்டும்?
‘நாளையிலிருந்து அலுவலகத்துக்கு சீக்கிரமாகப் போக வேண்டும். அதற்கு காலையில் சீக்கிரமாக எழ வேண்டும். செய்தித்தாளுக்கான நேரத்தைக் குறைத்து, நேரத்தை சமன் செய்யவேண்டும். இதைத்தான் தினமும் செய்வேன்’ என்று சொல்லிக்கொள்வதுதான் சரியானதாக இருக்குமே தவிர, வேறு எந்தவிதமான வாக்கியமும் எதிர்பார்த்த பலனைத் தராது.
இதே உதாரணம், அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். சுருக்கமாகக் கூறினால், பிரச்னைகளை, அதற்கான காரணம் மற்றும் தீர்வுடன் முழுமையாக எண்ணிப் பாருங்கள். உங்களுக்குள் பேசினாலும் சரி, அதையே வெளியே மற்றவர்களிடம் சொன்னாலும் – இதே முறையை கடைப்பிடியுங்கள்.
நாம் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் பேசும்போது அதாவது எண்ணும்போது, அதை யார் அல்லது எது கேட்கிறது? நமது ஆழ்மனது கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை அப்படியே பதிவும் செய்துகொள்கிறது. இந்தப் பதிவு செய்யப்பட்ட விஷயம்தான் நம்மை இயக்குகிறது. பதிவு செய்யப்படும் விஷயம் முழுமையானதாக இருந்தால், நமது ஆழ்மனதின் செயல்பாடும் முழுமையாக இருக்கும்.
இது கணிணியின் யுகம். நாம் எல்லாவற்றிற்கும் கணிணியை நாடுகிறோம். அதில் எதாவது தெரிந்துகொள்ள வேண்டுமானால், அதைப் பற்றிய கேள்வி கூட முழுமையாக இருந்தால்தான், முழுமையான பதிலும் கிடைக்கும். அதே போலத்தான் நமது ஆழ்மனதும். நமக்கு எதைப் பற்றியாவது முடிவெடுக்க வேண்டும் என்றால், அல்லது எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்குத் தேவையான விவரங்களை, முதலில் ஆழ்மனதுக்கு முழுமையாக அனுப்ப வேண்டும். அதற்கு முன்னால் இந்த முழுமையான நிலையைப்பற்றி மனத்தில் பேசி ஆய்வு செய்ய வேண்டும். அதாவது யோசனை செய்ய வேண்டும். பாதிச் செய்திகள், முழுமையில்லாத யோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், குறைகள் ஆகியனவற்றை ஆழ்மனதுக்கு அனுப்பினால் எந்தப் பயனும் இருக்காது.
‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்’ … ‘எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால்’ …‘அந்த வேளையில், அல்லது சமயத்தில் சரியான யோசனை தோன்றியிருந்தால்’ … என்று ஆரம்பித்து பல விஷயங்களை, இதே பாணியில் நினைத்திருப்போம். இதுபோல அரைகுறையான விஷயங்களை உள்ளே செலுத்தினால், மாற்றங்கள் வராது. மாறாக ஏமாற்றங்களும், ஏக்கங்களும்தான் பலனாக வரும். ஏனென்றால், வாக்கியங்கள், பேச்சுக்கள் முழுமையாக இல்லாது போகும்போது, அவை ஆழ்மனதுக்குள் அதே நிலையில்தான் பதிவாகும்.
வெற்று அறையில் பேசும்போது, அவை எதிரொலியாக, அதே சமயம் குழப்படியான சத்தத்துடன்தான் திரும்ப வரும். அதுபோலவே முழுமையான அர்த்தம் தராத வார்த்தைகளும், ஆழ்மனத்தில் போய், திரும்ப வரும்போது, கூடவே வெறுமையைக் கொண்டுவரும். இவற்றை ஏக்கங்கள் என்றும், ஆதங்கம் என்றும் கூறலாம். இதைச் சரிசெய்ய மனத்துக்குள் சரியான உரையாடல் இருக்க வேண்டும். உதாரணமாக, ‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்’ … என்ற வாக்கியம் முற்றுப் பெறாத வாக்கியம். இதை சரி செய்வது எப்படி?
‘நான் மட்டும் பணக்காரனாக இருந்தால்… நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இல்லையே… அதனால் பணம் சம்பாதிக்கக்கூடிய முயற்சிகளைத் தொடங்கி அதைத் தொடர்ந்து செல்வேன்…’ என்று நினைக்க ஆரம்பித்தால்…. அடுத்த கட்டமான எப்படிப் பணம் சம்பாதிப்பது என்ற நிலைக்குச் செல்ல முடியும்.
அதே போல, ‘எனக்கு மட்டும் அந்த யோசனை, அந்த சமயத்தில் தோன்றியிருந்தால்… சரியான விதத்தில் பிரச்னையை, சூழ்நிலையை அணுகியிருக்கலாம். அதனால் நான் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் தோன்றவில்லை. அதனால் அதன் விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இனி அதுபோன்ற சூழ்நிலை உருவாக விடமாட்டேன். அதனாலேயே, அடுத்த நிலை குறித்து யோசிக்கவும், செயல்படுத்தவும் போகிறேன்’ என்று மனத்தினுள் செலுத்தினால் அதனால் நன்மை விளையும்.
இதனால் பல லாபங்கள் உள்ளன. இறந்த காலத்தின் பிடியிலிருந்து விடுபட முடியும். மனத்தில் அதனால் ஏற்பட்டு இருக்கும் தேக்கநிலை, இறுக்கம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நீர்த்துப் போகும். இவை அனைத்துக்கும் மேலாக நிகழ்காலத்தின் முக்கியத்துவம் விளங்கும். இதற்கெல்லாம் அடிப்படைத் தேவை சரியான உரையாடல். இந்த உள் உரையாடல் சரியானதாக இருப்பதுபோல முழுமையாக இருப்பதும் அவசியம். அப்போதுதான் அதில் கடந்த காலத்தின் காயங்கள், வடுக்கள் மீதுள்ள தேவையற்ற ஆத்திரம், வருத்தம் மற்றும் வெறுப்பு போன்றவை உள்ளதா என்பதை அடையாளம் காண முடியும். இவற்றோடு நிகழும், நிகழ்கால திட்ட உரையாடல்களால் பாதிப்புகள் உண்டாகும் என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை எப்படிச் செய்வது?
0