ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 5
காட்சி எண் 1
இடம்: மலை அருவி
நேரம்: அதிகாலை
ஏராளமான மக்கள் சுற்றி நிற்கிறார்கள். அருவிக்கு அருகில் இருக்கும் பாறையில் கை கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறான் காவலன். சுற்றிலும் மரக் கிளைகளில் கழுகுகள் கூடியிருக்கின்றன. காவலனின் தலைப் பகுதி மட்டும் இல்லாத நிலையில் டாக்டரும் ஊர் பெரியவர்களும் அருவியை நெருங்கிப் பார்க்கிறார்கள். சிறு பாறை இடுக்குகள் தேங்கிக் கிடக்கும் நீரில் தலை மட்டும் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் வாயில் வெட்டப்பட்ட ஆண் குறி திணிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தது காவலன் என்பது உறுதியாகத் தெரிந்ததும் உற்சாகத்தில் ஆரவாரம் செய்கின்றனர். பெண்கள் குலவையிட்டு ஆடிப் பாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடைய தலைவர் அவர்களை சமாதானப்படுத்த முயல்கிறார். யாருக்குத் தெரியப் போகிறது என்ற தைரியத்தில் அவரையும் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது கூட்டம். ஆனால், அவர்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டனர். உயிரோடு இருந்த இன்னொரு காவலனை மறந்துவிட்டனர். அவனிடம் கேமரா ஒன்று இருந்ததை மறந்துவிட்டனர். நடப்பவற்றையெல்லாம் மறைந்திருந்து அவன் புகைப்படம் எடுத்ததையும் அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களால் என்றுமே சரி செய்ய முடியாத பிழையாக அது ஆகிப்போகிறது. அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டியிருந்த விலை அவர்களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடிந்திராத ஒன்று. அது ஆரம்பமாகிவிட்டது.
காட்சி எண் 2
இடம்: காவல் நிலையம்
நேரம்: காலை 10.00 மணி
கமிஷனரின் முன்னால் கொலை செய்யப்பட்ட காவலனின் புகைப்படங்கள் வரிசையாக பரப்பப்பட்டுள்ளன. வெறியுடன் அதையே உற்றுப் பார்க்கும் கமிஷனர் தலையை உயர்த்துகிறார். வரிசையாக காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
கமிஷனர் : மலைல மொத்தம் எத்தனை பேர் இருக்காங்க?
ஒரு அதிகாரி : 100 குடும்பங்களுக்கு மேல இருப்பாங்க சார். மொத்தம் 600 பேர்கிட்ட இருப்பாங்க.
கமிஷனர் : நீங்க மொத்தம் எத்தனை பேர்?
அதிகாரி : 150 பேர் சார்.
கமிஷனர் : அப்படின்னா ஒருத்தருக்கு 4 பேர்… கணக்கு சரிதான். (போட்டோக்களையே வெறித்துப் பர்க்கிறார் கமிஷனர். போட்டோக்களைச் சுட்டிக்காட்டி) இது எனக்கு நடந்ததா நினைக்கிறேன். என்னை இப்படிப் பண்ணினதா நினைக்கிறேன். உங்களுக்கு 24 மணி நேரம் டயம் தர்றேன். அந்த 24 மணி நேரத்துக்குள்ள நீங்க என்ன செஞ்சாலும் உங்கள யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.. போங்க. நான் இங்க காத்துக்கிட்டிருப்பேன். போங்க…
காவலர்கள் சிறிது தயங்குகிறார்கள்.
கமிஷனர் : தைரியமா போங்க. மலைக்கிராமத்துல இருந்தவங்க சாலை கேட்டு அமைதியா போராடிக்கிட்டிருந்தவரை அவங்க பக்கம் நியாயம் இருந்தது. நாம எதுவும் செய்ய முடியலை. இப்ப நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அரசியல்வாதிகிட்ட கூட மோதலாம். ஆனா, போலீஸ்காரன் கிட்ட மோதக்கூடாதுங்கறதை அவங்களுக்குப் புரியவைச்சாகணும். போலீஸ்காரன்னா தொப்பி வெச்சுக்கிட்டு தொந்தியைத் தள்ளிக்கிட்டு நிக்கறவன்னு நினைச்சிட்டானுங்க போல இருக்கு.
(சட்டென்று ரிவால்வரை உருவி குறி மேடையை நோக்கிச் சுடுகிறார்.) இதுவரை வெற்றுப் பலகையைச் சுட்டுப் பயிற்சி பெற்றிருப்பீர்கள். இப்போது உங்களுக்கு லைவ் மூவிங் டார்கெட்கள் தரப்படுகிறது. குறி பார்த்துச் சுடுபவர்களுக்குப் பரிசுகள் நிச்சயம்.
(புகைப்படங்களை மீண்டும் தொட்டுக் காட்டி)
இந்த அடி என் மார்பில் பட்டிருக்கிறது.
இந்த ரத்தம் என் ரத்தம்.
இந்த ஆண்குறி என் வாயில் திணிக்கப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு 24 மணி நேரம் தரப்படுகிறது.
தயங்கி நிற்காதீர்கள்.
திரும்பிப் பார்க்காதீர்கள்.
நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடுங்கள்.
துப்பாக்கிகள், லத்திகள், கேடயங்கள், ஹெல்மெட்டுகள் எடுத்துக்கொண்டு திமுதிமுவென காவலர்கள் மலைப் பகுதியை நோக்கி வெறியுடன் புறப்படுகிறார்கள்.
காட்சி எண் 3
இடம்: மலைப் பகுதி கிராமம்
நேரம்: காலை 9.00 மணி
மலைப் பகுதியில் மேகங்கள் பனிபோல் படர்ந்திருக்கின்றன. அதனூடே காவலர்கள் மெல்ல அணிவகுத்து வருகின்றனர். கிளைப்பாதைகளில் பிரிந்து சென்று அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைக்கின்றனர். மக்கள் இந்தப் பயங்கரம் எதுவும் தெரியாமல் தங்கள் நிலங்களில் வேலைகளில் ஈடுபட்டபடி இருக்கின்றனர். திடீரென்று, ‘அட்டாக்’ என்று ஒரு குரல் காற்றைக் கிழித்தபடி மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கிறது. வானை நோக்கி துப்பாக்கிகள் சுடப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் பறவைகள் பயத்தில் பறந்து செல்கின்றன. வீடுகளுக்குள் இருப்பவர்கள் வெளியில் வருகிறார்கள். சுற்றி வளைத்து அவர்களைக் காவலர்கள் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களது வீடுகளை இடிக்கிறார்கள். சிதறி ஓடுபவர்கள் ஒரு வாழைத் தோட்டத்தில் கூடுகிறார்கள். காவலர் நான்கு பக்கத்திலிருந்து வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியபடி வருகிறார்கள். கண் மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு விட நடுவில் மக்கள் மாட்டிக் கொள்கிறார்கள். வாழை மரத்தோட சேர்ந்து காவலர்கள் அவர்களையும் வெட்டுகிறார்கள். ரத்தம் வழிய எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார்கள். வயதானவர்களைத் தோளில் சுமந்து கொண்டு ஓடுகிறார்கள். ஒரு பெண் மூளை வளர்ச்சி குன்றிய தன் மகனைத் தோளில் சுமந்து கொண்டு காட்டுச் செடிகளை விலக்கியபடியே ஓடுகிறாள். அவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்படுகிறது. இரும்பைத் தேடி ஓடுகிறாள். எதிரில் ரத்தம் கசியும் அருவாளுடன் ஒரு காவலன் வருகிறான். தன் மகனின் நிலையைச் சொல்லிக் காப்பாற்றும்படிக் கெஞ்சுகிறாள். பின்னாலேயே வரும் வேறு சில காவலர்களும் சேர்ந்து கொண்டு அவளைக் கேலி செய்கிறார்கள்.
“நான் உனக்குக் கத்தியைத் தருவேன்… நீ என்ன என்ன தருவே…?” என்றபடியே காவலர்கள் அவளைச் சுற்றி வளைக்கிறார்கள்.
“என் புள்ளயக் காப்பாத்துங்கய்யா… என்ன என்ன வேணா செஞ்சுக்கோங்கய்யா” என்று கதறுகிறாள்.
“உன் புள்ள முன்னாலேயே உன்ன என்ன வேணா செய்யலாமா? அது ரொம்பத் தப்பு. இப்படி ஓரமா நீயே வா பாப்போம்” என்று அவளைத் தள்ளிக் கொண்டு போகிறான் ஒரு காவலன்.
காவலன் : எங்க உன் பொடவையை நீயா அவுத்துப் போடு பாப்போம்…
பெண் : ஐயா முதல்ல எம் புள்ளயக் காப்பாதுங்கய்யா.
காவலன் : டாக்டரக் கூப்பிடுடி… வருவான். அவன் பின்னால போனீங்களேடீ… வரச் சொல்லு அவன. கொடி பிடிச்சுக்கிட்டுப் போறயாக்கும்… உனக்கெல்லாம் வீட்டோட அடைஞ்சு கெடக்க முடியலை இல்லை.
பெண் : ஐயா தெரியாம செஞ்சுப்புட்டோமய்யா… என் புள்ள செத்துக்கிட்டிருக்கான்யா… முதல்ல அவனக் காப்பாத்துங்கய்யா… உங்களுக்குப் புண்ணியமாப் போகும்….
காவலன் : நான் நிறைய புண்ணியம் செஞ்சவன்டி… இனிமே பாவம்தான் பண்ணணும்… ஒவ்வொண்ணா நீயா அவுத்துப் போடறியா… இல்லை நான் அவுக்கட்டுமா…
திமிறியபடி ஓட முற்படுபவளைக் கீழே தள்ளி விட்டு, அவள் மீது மூர்க்கமாகப் பாய்கிறான். “என் புள்ள என் புள்ள” என்றபடியே கதறுகிறாள் அந்தப் பெண்.
காவலன் : அதுக்குத்தானடி நானும் சோலி பாக்கறேன். கத்தாத…
காவலன் எழுந்து சென்றதும் ரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டு தன் மகனை நோக்கி ஓடுகிறாள். மகனின் கையில் கத்தியைத் தருகிறாள். ஆனால், அவனோ சிறிது நேரத்தில் அம்மாவின் மடியில் தலை வைத்தபடியே இறந்து போகிறான். தன் மகனைக் கட்டி அணைத்தபடி கதறி அழும் அவளைக் காவலர்கள் சூழ்கிறார்கள்.
காட்சி : 4
இடம் : மலைக்கிராமம்
நேரம் : காலை
ரத்தம் வழிய பக்கத்தில் இருந்த வீடுகளுக்குள் ஓடி ஒளிபவர்களை சிந்திய ரத்தத் துளிகளை வைத்து தடம் கண்டுபிடித்து வெளியில் இழுத்துவந்து அடிக்கிறார்கள். பக்கத்தில் இருந்த வாழைத்தோப்புக்குள் போராட்டக்காரர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். காவலர்கள் நான்கு பக்கத்தில் இருந்தும் வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியபடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான வாழைமரங்கள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் வெட்டி வீழ்த்தப்பட மக்கள் நடுவில் மாட்டிக் கொள்கிறார்கள். வாழை மரத்தோடு சேர்த்து மக்களையும் வெட்ட ஆரம்பிக்கிறார்கள் காவலர்கள்.
அருகில் இருந்த கோவில் கருவறைக்குள் சிலர் ஒளிந்து கொள்கிறார்கள். ஷூ அணிந்திருப்பதால் உள்ளே நுழையாமல் கோவிலைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர் காவலர்கள். கர்ப்பக்கிரக இருளில் சிலர் பயந்து ஒடுங்கிக் கொள்கின்றனர். கருவறை ஜன்னல் வீசும் காற்றில் மெல்ல மெல்லத் திறந்து மூடுகிறது. ஒரு காவலன் கசியும் சிறு வெளிச்சத்தினூடாக உள்ளே எட்டிப் பார்கிறான். ஜன்னல் கதவை முழுவதுமாகத் திறக்கிறான். உள்ளே நடுங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறான். நாலைந்து காவலர்களை அழைத்து காண்பிக்கிறான். உள்ளே இருப்பவர்கள் பயந்து அலறி அடித்து வெளியே ஓடுவதற்குள் காவலர்கள் வாசலை மறித்தபடி சூழ்ந்துவிடுகிறார்கள். கோவிலின் கதவை மெதுவாக மூடுகிறார்கள். முற்றாகக் கவிழ்ந்த இருளில் மயான அமைதி நிலவுகிறது. பூட்ஸ் கால் சத்தம் மட்டுமே கேட்க காவலர்கள் உள்ளே நுழைகின்றனர். கருவறையில் சிலையின் பின்னால் போராட்டக்காரர்கள் பயந்து ஒடுங்கிக்கொள்கிறார்கள். காவலர்கள் கருவறைக்குள்ளும் நுழைகிறார்கள். ஜன்னல் கதவைச் சாத்துகிறார்கள். அகல் விளக்கு ஒன்றை ஏற்றுகிறார்கள். அந்த வெளிச்சத்தில் பயந்து ஒடுங்கி இருப்பவர்களின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. கேமரா மெதுவாக வெளியே நகர்கிறது. அபிஷேக தீர்த்தம் வரும் மடை வழியாக ரத்தம் சொட்டுச் சொட்டாக வழியத் தொடங்குகிறது.
காட்சி எண் : 5
இடம் : மலை அருவி
நேரம் : காலை
சிறுமி ஒருத்தியைத் தோளில் சுமந்தபடி அருவிக்குப் பக்கத்தில் இருக்கும் பாறைக்குள் மார்பளவு நீரில் மறைந்து நின்று கொண்டிருக்கிறான் ஒருவன். பாறையில் பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தம் கேட்கிறது. குழந்தையின் அழுகைகுரல் கேட்டுவிடக்கூடாதே என்று பயந்து சிறுமியின் வாயை இறுக மூடுகிறான். பதட்டத்தில் மூக்கையும் சேர்த்துப் பொத்திவிடவே சிறுமிக்கு மூச்சு முட்டுகிறது. தந்தையின் கைகளில் இருந்து திமிறி நீரில் விழுகிறாள். பிடிமானாமாகப் பற்றிக்கொள்ளும் பாறைகள் வழுக்கிவிடவே நீரில் அடித்துச் செல்லப்படுகிறாள். மகளைக் காப்பற்ற தந்தையும் பின்னாலேயே பாய்ந்து செல்கிறார். அவரைப் பார்த்துவிடும் காவலர்கள் நீண்ட லத்தியால் அவரது தலையில் அடிக்கிறார்கள். மண்டை உடைந்து ரத்தம் வழிய நீரிலேயே மயங்கி விழுகிறார். கீழே ஒரு மூலையில் மரத்தின் வேர் ஒன்றைப் பற்றியபடி மறைந்து கொண்டிருக்கும் சிறுமியின் முன்னால் ரத்தம் கலந்த நீர் வழிந்தோடுகிறது. தலையில் அடிபட்டு மயங்கிய தந்தையின் உடல் அவளுக்கு முன்பாக வந்து பாறையில் சிக்கி நிற்கிறது. சிறுமி பயத்தில் ஒடுங்கிக் கொள்கிறாள். ஓடும் நீர் தந்தையின் கையை மெல்ல மெல்லத் திருப்பிப் போடுகிறது. இறுதியில் கை விறைத்துப் போகிறது. சிறுமி தந்தையின் உடலின் மீது மயங்கிச் சரிகிறாள்.
காட்சி எண் : 6
இடம் : மலை கிராமம்
நேரம் : காலை
வாழைத்தோட்டங்கள் வெட்டப்பட்டுக் கிடக்கின்றன. ரத்தக் கறை மரங்களிலும் தரையிலும் சிதறிக் கிடக்கின்றன. வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வீதியில் வீசி எறியப்பட்டுக் கிடக்கின்றன. சில வீடுகள் தீ வைக்கப்பட்டு எரிந்து கிடக்கின்றன. கால் ஊனமுற்ற பாட்டி ஒருத்தி இடிபாடுகளினூடே நடந்து போகிறாள். அவளது தாங்கு கட்டையின் சப்தம் மட்டுமே அந்த வனாந்திரத்தில் கேட்கிறது. தள்ளாடித் தள்ளாடி ஒரு வீட்டுக்குள் போகிறாள். கட்டில்கள் பீரோக்கள் உடைத்துப் போடப்பட்டிருக்கின்றன. வீட்டில் இருந்த படங்கள் அடித்து உடைக்கப்பட்டிருக்கின்றன. படங்களில் அம்பேத்கர் படம் வெகு மோசமாகத் தாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதை கையில் எடுக்கிறாள் பாட்டி. போட்டோவில் இருந்து ஏதோ ஒரு திரவம் கீழே சொட்டுகிறது. லேசாக முகர்ந்து பார்க்கும் பாட்டி அதன் வாடை தாங்காமல் கீழே போடுகிறாள். அவளுக்கு அழுகை பொங்கி வருகிறது. அடக்கிக் கொள்கிறாள். கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. மெல்ல வீட்டை சுத்தம் செய்கிறாள். அடுப்பை சோதித்துப் பார்க்கிறாள். அது அதிக சேதம் இன்றி இருக்கிறது. பத்த வைக்கிறாள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு அரிசி எடுக்க பானைக்குள் கையை நுழைக்கிறாள். கையை மெதுவாக வெளியே எடுகையில் ரத்தம் கசிய அவளது இரண்டு கரங்கள் அவளது கழுத்தை நெரிக்க வருவது போல் வெளியே வருகிறது. பயந்து அலறியபடியே கிழே விழுகிறாள். கைதட்டி பானை கீழே விழுகிறது. உடைந்து போன பானைக்குள் கண்ணாடித் துண்டுகள் போடப்பட்டிருப்பது தெரிகிறது. ரத்தம் தோய்ந்த கரங்கள் அவள் கழுத்தை நெறிக்க வருவதுபோல் மனப் பிரமையில் சித்தம் கலங்கி கதறியபடியே ஓடுகிறாள்.
காட்சி எண் : 7
இடம்: மலைப்பகுதி மருத்துவமனை
நேரம்: மதியம்
மலையின் ஒவ்வொரு கிளைப் பாதையின் வழியாகவும் பெண்களைத் தரதரவென்று இழுத்தபடி காவலர்கள் மருத்துவமனை முன் கூடுகின்றனர். பிடித்து வரப்பட்ட பெண்களை கூட்டமாக உட்கார வைக்கின்றனர். சுற்றி சுற்றி வந்து காவலர்கள் அவர்களை அடித்தும் மிதித்தும் திட்டியும் அவமானப்படுத்துகின்றனர்.
காவலர்கள் : அப்படி என்னத்தடி டாக்டர் கிட்ட கண்டுட்டீங்க. சிவப்பா இருக்கானேன்னு அவன் கூடப் படுக்கவாடி போறீங்க. உங்களுக்கெல்லாம் உங்க புருஷன் சோலி பாக்கறது பத்தலையாடீ… எங்க கிட்ட சொன்னாப் போதுமே… டே ஷிப்ட், நைட் ஷிப்ட் போட்டு நாங்க வந்து சோலி பாப்போமேடி…
இந்தக் கையாலே தானடி கொடி பிச்ச
இந்த வாய் தானடி கோஷம் போட்டுச்சுது
இந்த மார்ல தானடி கொடியைக் குத்தின..
ஒரு போலீஸ்காரனக் கொன்னு போடற அளவுக்கு உங்களுக்கு கொழுப்பு கூடிப் போச்சாடி…
என்ன ஆட்டம் போட்டீங்கடி.. வக்காலி போலீஸ்ன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சாடி உங்களுக்கு…
எங்கடீ உங்க புது மாப்பிள்ளை…
பொட்டப் புள்ள மாதிரி எங்கடி ஒளிஞ்சிருக்கான். புடவைக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கீங்களாடி..
நீங்க கத்தற கத்துல ஒக்காலி அவன் ஆம்பளையா இருந்தா இங்க வரணும்டி…
எவன் அந்தப் போலீசைக் கொன்னானோ அவன் இந்த இடத்துக்கு வந்து சேரணும்டி…
இல்லைன்னா இங்க ஒரு மயிராண்டியும் உயிரோட இருந்திட முடியாது…
கத்துங்கடி… இன்னும் பலமாக் கத்துங்கடி… கோஷம் போடும் போது மட்டும் கத்தத் தெரியுதுல்ல…
சுற்றிச் சுற்றி வந்து அடிக்கின்றனர்.
பெண்களின் கதறல் மலைப் பகுதியில் எல்லா பகுதிகளிலும் பட்டு எதிரொலிக்கிறது.
0