‘பறையன்’ என்ற சொல் உலக அளவில் தீண்டாமையைக் குறிக்கப் பல மொழியினரும் பயன்படுத்தும் சொல்லாகி வருகிறது. ‘தமிழர்கள் யார்?’ எனும் தலைப்பில் வித்தாலி பூர்ணிக்கா எனும் ருஷ்ய நாட்டு அறிஞர் எழுதிய ஒரு கட்டுரையில் ‘பறை முழக்கிய பறையர்களின் வாழ்க்கை சமூகத்தில் மிகத் தாழ்வானதாகக் கருதப்பட்டது. அவர்கள் தனித்து வாழ நேர்ந்தது. பிற சமூகத்து மக்களோடு இணைந்து வாழ முடியாதபடி தடுக்கப்பட்டிருந்தார்கள். தமிழகத்தில் இப்படிப் பெயர் பெற்ற ‘பறையர்கள்’ என்ற சொல் பல உலக மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது. ‘பறையர்கள்’ என்ற சொல் உலக மொழிகளில் இடம் பெற்றிருப்பது ஒருவகையில் பெருமைதான் என்றாலும், சமூக அநீதியின் சின்னமாக வழங்கப்பெறும் நிலைமை மாற வேண்டும் என்பதே முற்போக்காளர்களின் இன்றைய சிந்தனையாகத் திகழ்கிறது!’ என்று குறிப்பிடுகின்றார்.
தமிழ்ச் சமுதாயத்தின் ஆதி நிலை வாழ்க்கையைப் பற்றி பேசும் சங்க இலக்கியத்தில் காணப்படும் செய்திகளைப் பார்க்கையில் அக்காலச் சமுதாயமானது பிற்காலத்தில் காணப்பட்டதைப் போன்று ஏற்றத் தாழ்வானதாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. கி.மு. 100ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு. 300ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் நிலவிய தமிழ்ச் சமுதாயத்தில் பல்வேறு விதமான உற்பத்தி முறைகள் நிலவின என்பதை ஐந்தினை நிலங்கள் குறித்த விவரணைகளிலிருந்து அறியமுடிகிறது. சாதி அமைப்பு போன்றதொரு அமைப்பினை இக்காலக்கட்டத்தில் அடையாளம் காண முடியாது என்ற போதிலும் ஒரு சிலர் ‘கீழ்மக்களாக’க் கருதப்பட்டதற்கானச் சான்றுகள் உள்ளன.
தோல் தொடர்பான தொழில்கள், துணி வெளுக்கும் தொழில், மீன் பிடித்தொழில் முதலியவற்றை மேற்கொண்டவர்கள் ‘அசுத்த’மான வேலைகளைச் செய்பவராக கருதப்பட்டனர். மரணச் சடங்குகளுடன் தொடர்புடைய பிரிவினரும் இவ்வாறே கருதப்பட்டனர். ஏனையோர் மனத்தில் கட்டுக்கடங்காத பயத்தையும் பீதியையும் உண்டாக்கவல்ல அலாதியான ஆற்றல் கீழ்மக்களாகக் கருதப்பட்டவர்களிடம் இருப்பதாக நம்பப்பட்டது. பெண்களிடத்தும், பாணர்கள், பாடினியர், விறலியரிடத்தும் இத்தகைய ஆற்றல் குடிகொண்டிருந்ததாக சங்ககால மக்கள் நம்பினர். குழுத்தலைவர்களுடனும் குறுநில மன்னர்களுடனும் இணைந்து அவர்கள் போர்புரிந்த காலங்களில் அவர்களது பெருமைபாடி, தமது கற்பனையாற்றலாலும், அபாயகரமான சக்தியாலும் அரசர்களுக்கு தைரியத்தையும், உன்மத்தத்தையும் பாணர்களும் பிறரும் ஊட்டினர்.
கீழ்மக்களாயினும் அவர்கள் அரசனுக்குப் பெருமை சேர்ப்பவராகவே கருதப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் அம்மக்கள் செல்வாக்கிழந்தனர். கி.பி. 300ம் நூற்றாண்டுக்குப் பிறகு பார்ப்பனர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் தமது மேலாண்மையை நிறுவ வந்தனர். ஆன்மீக அறிவுடையராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் அரசர்களின் கவனத்தை ஈர்த்தனர். நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் மன்னர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் பெறத்தக்கவராயினர். பழைய சமுதாய ஏற்பாட்டில் பாணர்களுக்கும் பிற ‘கீழ் மக்களுக்கும்’ இருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும் குறையவும் அவர்கள் வெறும் கீழ் மக்களாக மட்டும் தாழ்த்தப்படவும் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் காரணமாக அமைந்தது.
ஆரியர்கள் வருவதற்கு முன் இந்தியாவில் வாழ்ந்த நாகரிக இனமான நாகர் அல்லது திராவிட இனத்தின் சிதறுண்ட மனிதர்கள்தான் பின்னர் தீண்டப்படாதார் என அழைக்கப்பட்டனர்.
தாசால் அல்லது தாசர்கள் என்பவர்கள் நாகர்களே. இவர்கள் ஹரப்பா நாகரிகத்துக்கு உரியவர்கள். நாகர்களோடு திராவிடர்கள் கொண்டிருந்த தொடர்பு மணிமேகலை நூலில் வருகின்றது. நாகர்கள் தொடர்புடைய நாகப்பட்டினர், நாகூர், நாகர்கோயில், நாகபுரி, நாகாலாந்து என்ற கடற்கரை மற்றும் உள்நாட்டு பட்டினங்கள் இன்றும் உள்ளன. தமிழ்நாட்டுக்கு நாவந்தீவு என்ற ஒரு பெயரும் உண்டு. இது நாகர்களை அடிப்படையாகக் கொண்ட பெயராகும். நாகர்கள் என்பதும், திராவிடர்கள் என்பதும் ஒரே கலாச்சாரத்தைச் சார்ந்த பழங்குடி மக்கள். இவர்களது தாய்மொழியாகிய தமிழ்மொழி ஒரு கால கட்டத்தில் இந்தியா முழுவதும் வழக்கில் இருந்தது.
நாகர்கள் பறையர்களின் மூதாதையர் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவர்கள் தென்னகத்தை ஆண்டதாக வரலாறு உள்ளது. நாகர்களின் கலாசாரமும் நாகரிகமும் தமிழகத்தில் பரவியிருந்தது. நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர் என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார்.
பல்லவ அரசகுடித் தோன்றல் ‘தொண்டைமான் இளந்திரையன்’ என்பவன் நாக இளவரசி பீலிவனை என்பவளின் மகனாவான். மகாராஷ்டிரம், ஆந்திரம், சிலோன் போன்ற நாடுகள் நாகர்கள் ஆட்சியில் பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளன. ஆந்திரப் பகுதிகளை ஆண்ட சாதவாகனர்கள் நாகர்கள் எனவும் இவர்கள் ஆதிதிராவிடர் வழிவந்த திராவிடர்களே எனவும் அம்பேத்கர் கூறுகிறார்.
நாகர்களால்தான் தண்டகாரண்யவனம், மக்கள் வாழும் பகுதியாக மாற்றப்பட்டது என்ற கருத்துள்ளது. ஆரிய நாகரிகத்தை ஏற்றுக்கொண்ட சேர, சோழ, பாண்டியர்கள், நாகர்களை வென்று தாழ்வான பணிகளுக்கு ஆட்படுத்தியும், அவர்களை தனியே ஒதுக்கி வைத்தும் தீண்டாத நிலைக்குக் கொண்டுச் சென்றார்கள்.
0
சங்க காலத்தில் சிறந்த இசைக் குடிகளின் வரிசையில் இடம் பெற்ற பறை முழக்கிய மக்கள் அக்கருவியையே அடையாளமாகக் கொண்டு குறிப்பிடப்பட்டனர். ‘பறை’ என்ற சொல்லும், பறை கொட்டுகிறவர் ‘பறையர்’ என்ற சொல்லும் தாழ்ந்த பொருண்மையை சங்ககாலத்தில் தரவில்லை, காப்பியத்திலும் தரவில்லை. ஏறத்தாழ சோழர் காலத்தில் இக்கொடுமைத் தொடங்கி கி.பி. 16, 17ம் நூற்றாண்டில் உச்ச நிலையை அடைந்தது.
பறையர் சங்ககாலச் சமுதாயத்தில் மிகக் கௌரவமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
‘தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால்
தீண்டாமைப் பட்டம் வேண்டாதார் இல்லையடி சகியே’
என்ற பாரதிதாசனின் சமத்துவப் பாடலின் வரிகளிலிருந்து இதனை உணர முடிகிறது.
‘பாணன், பறையன், கடம்பன், துடியன் இந்நான்கல்ல; குடியுமில்லை’ என்ற புறநானூற்று வரிகளில் இவர்கள் முக்கியக் குடிகளாகக் கருதப்படுகின்றனர். பண்டைய தமிழகத்திலிருந்த இந்த நான்கு அடிப்படைக் குடியிலிருந்துதான் ஏனைய குடியினர் தோன்றியுள்ளனர்.
‘பறையர் இழி குலத்தினர்’ என்று சங்க இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் துடியர்கள் இழியர், இழிப்பிறப்பாளர் எனக் கூறப்பட்டுள்லனர். இவர்கள் புலையரெனவும் அழைக்கப்பட்டுள்ளனர். தூய்மையற்ற அசுத்தமான சமூகப் பணிகளைச் செய்பவர்கள் அனைவரும் புலையர் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளனர். பிறப்பு அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் சாதிமுறை அமைதல் என்பது சங்ககாலத்தில் காணப்படாத ஒன்று.
ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன் என்ற மன்னன், தமிழ்ச் சமுதாயத்தில் நான்கு வகுப்பினர் இருந்ததாகக் கூறுகிறார். இந்நூல் குலத்தில் கீழானவன் என்று கல்லாதாரை மட்டுமே கூறியுள்ளது, தமிழ்ச்சமுதாயம்.
‘நாற்பாற் குலத்தில் மேற்பால் ஒருவன் கற்றிலனாயின் கீழிருப்போனே’ என்று புறநானூற்று அடிகள் குறிப்பிடுகின்றன. கற்காதவர்கள் குலத்தால் உயர்ந்தவர்களாயினும், கற்றவர் முன் கீழோரே என்பது தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த உயர்ந்த நீதியாகும்.
0