இனி வெட்டியான் என்று அழைக்கப்படும் பிரிவினரைப் பற்றிப் பார்ப்போம்.
வெட்டியான்: உறவினர் அனைவரும் தங்கள் பற்றை உடல் அளவில் துறந்து உறவை வெட்டிவிடும் வேளையில் பிணத்துக்கும் தனக்கும் இடையே வெட்ட முடியாத பணிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்பவன்தான் வெட்டியான். பிணம் எரிவதற்கான குறுகிய நேரம்தான் இவனது பணிக்காலம் என்றாலும் இப்பணியின் பொழுது இவன் சற்றும் விலகிவர முடியாது.
வெட்டு, வெட்டி என்ற வேர்ச் சொற்களிலிருந்து பிறந்தது வெட்டியான் என்ற சொல். ‘வெட்டி என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு’ (ந.சி. கந்தையாப்பிள்ளை. செந்தமிழ் அகராதி. 1957) எனப்பல அகராதிகளும் பொருள் தருகின்றன. இதிலிருந்து பிறந்த வெட்டியான் என்பதற்கு ‘கிராம ஊழியர், பிணம் எரிப்பவர்’ எனப் பொருள் அறியப்படுகின்றது.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)என்னும் குறள், யாக்கை நிலையாமையைக் குறிப்பிடுகின்றது. நாம் உயிருடன் வாழும் காலத்தில் நற்பண்புகளிலிருந்து வழுவாமல் வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தவே பல நிலையாமைக் கருத்துகளை எடுத்துக் காட்டுகின்றனர். உடம்பினின்று உயிர் பிரிந்து விட்டால் இவ்வுடம்பால் யாதொரு பயனுமில்லை. எனவே வெட்டியான் அல்லது வீணான உடல் என்றாகி விடுகின்றது. இவ்வாறாகிவிட்ட உடலைப் பொறுமையுடன் பொறுப்புணர்வுடன் போதிய நேரம் எடுத்துக் கொண்டு எரிக்கின்றதால் தான், இத்தொழில் புரிவோனுக்கு ‘வெட்டியான்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது போலும். எனவே இத்தொழிலை வெட்டித்தொழில் அதாவது அழிந்த ஒன்றை மேலும் அழிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் வெட்டி முயற்சி எனக் கூறலாம்.
வெட்டியான்: ‘விருஷ்டி’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி’ என்ற சொல் வந்திருக்கும். வீணான-பயனற்ற வேலை செய்பவர்களை இன்று கூட ‘வெட்டி வேலை செய்பவர்’ என்றுதான் சொல்கிறோம். மன்னர்கள் காலத்தில் இந்த வேலையினை செய்யாவிட்டால் தண்டனை உண்டு; செய்தால் கூலி இல்லை. கோயில்கள் கூட இப்படித்தான் கட்டப்பட்டிருக்கக் கூடும். காவிரிக் கரையை உயர்த்துவதற்கு இத்தகைய வேலையே வாங்கப்பட்டிருக்கிறது. கோயில்களில் வேலை செய்யாதவர்களை ‘சிவத் தூரோகி’ என்று கூறி தண்டனைகள் தரப்பட்டிருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று; இருந்த நிலங்களின் உழைக்க வேண்டும். ஆனால் கூலி இருக்காது. கடவுளிடத்தில் போய் பேரம் பேச முடியாது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னன் 64 வகை ஊழியர்களை வைத்திருந்திருக்கிறான். ஊழியம் என்றால் வெட்டி வேலை. உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டிப் போடுவது அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஏற்ற ஊதியமோ, ஓலைக்கு கிரயமோ தர மாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும். இது ஓலை ஊழியம்.
உப்பு ஊழியம் என்பது தாமரைக் குளத்தில் எடுக்கப்பட்ட உப்பை நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலுக்கும், கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோயிலுக்கும் கொண்டு போய் கொடுப்பது. இந்த மாதிரியான ஊழியங்களும், வெட்டி வேலைகளும், பண்பாட்டு ஒடுக்குமுறைகளும், பொருளாதார சுரண்டல்களும் மன்னராட்சியில் இருந்தன. அங்கு ஜனநாயகம் கிடையாது.
சோழர் காலத்தில் இறுக்கமாகி, விஜய நகர காலத்தில் ‘தீண்டாமை’ முற்றுப் பெற்றிருக்கிறது. சோழர்காலத்தில் பார்ப்பனர் – வேளாளர் கூட்டாக இருந்து வேலை செய்திருக்கிறார்கள். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வது.
மேற்கண்ட வேலைகளை செய்பவர்கள் பொதுவாக வெட்டியான் என்றழைக்கப்பட்டனர் போலும்.
0
பறையர்களை ‘காலனிக்காரர்’ என்ற சொல்லாலும் குறிக்கப்படுகின்றனர். இப்படி ஆதிக்க சமூகத்தினர் குறிப்பதின் பொருள் என்ன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களுக்கும் அது விளங்காதென்பது எங்களுக்கும் விளங்கும்.
நகர நாகரிக வளர்ச்சிமிக்க இக்காலத்தில் பல இடங்களில் புதிய புதிய வாழ்விடத் தொகுதிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் காலனி என்னும் சொல்லால் குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இத்தகைய இடங்களைச் சுட்டுவதற்கு நாம் ‘குடியிருப்பு’ எனும் சொல்லைப் படைத்து வழங்கத் தொடங்கியிருக்கிறோம். தனக்கென தனி அமைப்புகளைப் பெற்றிருப்பதாலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது.
சுந்தரர் காலத்திலோ அதற்கு (கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்) முன்னோ தமிழ்நாட்டில் வலங்கையர் (முற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும், இடங்கையர் (பிற்பட்ட சாதியினர்) 98 பிரிவினரும் அணி திரண்டு உரிமைக் கோரிப் போரிட்டனர் என்று பேராசிரியர் நா.வானமாமலை தமது நூலில் (தமிழர் பண்பாடும் வரலாறும்) கூறியுள்ளார்.
நிலப்பட்டம், குடை கொடி பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள்; வெண்கவசி வீச்சு, சிவிகை, குதிரை முதலிய ஊர்தி; மேளவகை, தாரை வாங்க முதலிய ஊதிகள்; வல்லவாட்டி, செருப்பு ஆகியவை பற்றிக் குலங்களுக்கிடையே பிணக்கும் சச்சரவுகள் ஏற்பட்டதனால் கரிகாலன் என்னும் பெயர் கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063-69) அந்த வழக்கைத் தீர்த்து வைத்ததாகத் தெரிகின்றது.
சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமைந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாக உய்த்துணரலாம்.
சோழராட்சிக்குப் பின் பல்வேறு அரசுகள் ஏற்பட்டதனாலும் பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும் ஆங்கிலேயர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை இடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்தது. 1809ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பக்கவ், செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத் தீர்ப்பாளர் சார்சு கோல்மன் துரை அவ்வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டம் செய்தார். அவ்வகையில் பறையர்கள் வலங்கைக் குலங்களில் இடம் பெற்றிருந்தனர்.
0
நேர தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிசனங்கள்’ என்று 1931ல் காந்தியடிகள் பெயரிட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காந்தியடிகள் இவ்வாறு விளக்கம் அளித்தார். ‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு நபர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘எங்கள் குலத்தவர்களை அந்நியஜாஸ்’ என்று குறிப்பிடுவது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது மாறாக, நீங்கள் ஏதாகிலும் ஓர் புதிய பெயரை புனைந்தளியுங்களேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்து ‘பங்கிகள்’, ‘பறையர்கள்’ பெயர்களும் தாழ்த்தப்பட்டோருக்குப் பிடித்தமில்லாமலிருந்தது’ ஆகவே ‘அந்நியஜாஸ்’ (கடைசி மக்கள்) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டனர்.
சுவாமி சிரத்தானந்தர்தான் முதன் முதலில் ‘தலித்’ என்ற பெயரை உபயோகித்தார் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால், தீண்டாமை எனும் கொடிய நச்சு நமது சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் வரை எந்தப் புதுப் பெயரும் சில காலத்திற்குப் பிறகு வெறுக்கத்தக்கதாகிவிடும். எது எப்படியோ, அந்தியஜாஸ் அல்லது தலித் என்ற சொற்களுக்குப் பதிலாக வேறு தகுந்த பெயரை எவரேனும் சிபாரிசு செய்து எனக்கு எழுதுங்கள் என்று ‘நவஜீவன்’ (07.06.1931) இதழில் கேட்டிருந்தேன். பலர் பல்வேறு பெயர்களைப் பரிந்துரைத்தனர். ராஜ் கோட்டைச் சேர்ந்த ஜகந்நாத் தேசாய் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ‘ஹரிஜன்’ என்கிற பெயரைப் பிரஸ்தாபித்து எனக்கு எழுதிய கடிதத்தில் ‘பல கிராமங்களில் ஏற்கனவே ‘ஹரிஜனா’ என்ற பெயர் வழக்கில் உள்ளது. மேலும் மிகச்சிறந்த குஜராத்தி பக்திக் கவிஞரான நரசிங் மேத்தா தமது அந்தியஜா பக்தர்களை ஹரிஜனங்கள் (திருமாலின் புத்திரர்கள் – கடவுளின் குழந்தைகள்) என்று குறிப்பிட்டு வந்தார்’ என விளக்கமாக எழுதியிருந்தார்.
ஆகவே, ‘ஹரிஜன்’ என்ற சொல் புதிதல்ல, குஜராத்தி பக்தி கீதங்களின் பிதாவாகக் கருதப்படும் நரசிங் மேத்தாவினால் ஏற்கெவே புனையப்பட்டது. தவிர ‘சமூகத்தால் கைவிடப்பட்ட ஜனங்களும் ஹரியின் மக்களே’ என்ற அர்த்தமும் அப்பெயரில் தொனிக்கிறது’ (அரிசன் 07.06.1931).
1946, பிப்ரவரி 4 அன்று உளுந்தூர் பேட்டை ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி பேசுகையில் ‘ஹரிஜன சேவையில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் பொருட்டு எனக்கு 125 வருட ஆயுசு அருளுங்கள் இறைவா’ என்பதே எனது பிரார்த்தனை. நீங்களெல்லாம் தீண்டாமை எனும் பாவத்தைக் களைத்தெறியாத வரை நமக்கு மெய்யான சுயராஜ்யம் கிட்டாது; நமது மதமும் வெகுநாள் நீடிக்காது’ என்று அறிவுறுத்தினார். (தி ஹிந்து 04.02.1946).
‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற தலைப்பில் தமது 14.04.1946 தேதியிட்ட ‘அரிஜன்’ வார இதழில் மகாத்மா காந்தி இவ்வாறு எழுதியிருக்கிறார். ‘ஹரிஜன் என்ற பெயர் புனிதம் வாய்ந்தது. ஒரு தாழ்த்தப்பட்ட நபரால் பிரஸ்தாபிக்கப்பட்டது. சிறந்த பக்திக் கவிஞரால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட பெயர் அது. எப்பெயராயினும் தாழ்மை மனப்பான்மை அகல வேண்டும் என்பதே முக்கியம். அது இன்று வரை மிக மிக மெதுவாகத்தான் அகன்று வருகின்றது.
ஒவ்வொரு இந்துவும் உயர்வு-தாழ்வு மனப்பான்மையை உள்ளார்ந்த உணர்ச்சியுடன் அறவே விலக்கிக் கொண்டு நடைமுறையில் அனைவருமே ஹரிஜனங்களாக மாற வேண்டும். அப்போது நாம் எல்லோருமே கடவுளின் மெய்யான குழதைகளாகி விடுவோம். அதுவே ‘ஹரிஜன்’ என்பதன் மெய்ப்பொருள்.
காந்தியாரின் இக் கருத்தை ஏற்று ‘அரிஜன்’ ஆக விருப்பமுள்ளோர் இம் மனித கூட்டத்தில் யாரேனும் உண்டா? சோத்துக்கே வக்கில்லை என்றாலும் கூட அவனுடைய சொந்த சாதியை விட எந்த ஆதிக்கச் சாதியாவது தயாரா?
0