பேசு மனமே பேசு / அத்தியாயம் 20
தன்னோடு பேசுதல் என்பதை முறையாகச் செய்வதற்கு, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இதுவரையில் தொடர்ச்சியாகப் பார்த்தோம். அந்த முறைகளை, வரிசைப்படுத்தி நினைவூட்டுவதற்காக, இங்கே சற்றுச் சுருக்கமாகக் காண்போம்.
தன்னோடு பேசுதலை உபயோகப்படுத்தும்போது, பின்வரும் விஷயங்களைப் பின்பற்றி இருக்கிறீர்களா என்று நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தமுறை அதற்கான பலனைத் தரும் என்பதை கண்டிப்பாக மறக்காதீர்கள்.
1. எதைப் பற்றி இருந்தாலும், உள் உரையாடல் அல்லது தன்னோடு பேசுதல், நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். ‘இனிமேல் அப்படிச் செய்வேன்; அல்லது செய்ய மாட்டேன்’ என்று இருந்தால், அது எதிர்காலத்து விருப்பத்தைச் சொல்வதாகவோ, ‘உறுதி மொழியாகவோ’ இருக்கும். அதனால் எந்தப் பலனும் இருக்காது. எந்த மாற்றமாக இருந்தாலும், ‘இந்தக் கணத்திலிருந்து’ என்ற செய்திதான் ஆழ் மனத்துக்குச் செல்ல வேண்டும். இந்த பாவனை ஏற்பட வேண்டுமானால், தன்னோடு பேசுதல் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
2. தெளிவாக இருத்தல் வேண்டும். பிரச்னையைத் தீர்க்க வேண்டியிருந்தாலும் சரி, குறிக்கோளாக இருந்தாலும் சரி, உள் உரையாடல், தெளிவாக, எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உரையாடல், தெளிவில்லாமலும், தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் இருந்தால், விளைவுகளும் அவ்வாறுதான் இருக்கும். நமக்கு என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவுதான், அதற்கான சரியான வழியை நமக்கு அடையாளம் காட்டும். நடத்திக்கொள்ள வேண்டிய விஷயத்தின் அனைத்து அம்சங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தால்தான், மனமும், உடலும் அதன் விளைவுகளுக்குத் தயாராகும். நமது பிரச்னை அல்லது குறிக்கோள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்க்கப் போகிறோம் அல்லது அடையப் போகிறோம் என்பதைத் தெளிவாக நினையுங்கள். அதையே பேசுங்கள்.
உடல்நிலை சரியில்லை என்று இருந்தால், எந்தப் பகுதி பாதித்து உள்ளதோ, அதற்கேற்ற மருத்துவம், மருந்துகள் போன்றவைதான் சரியான தீர்வாக இருக்க முடியும். ‘எப்படியாவது’ பாதிப்பை சரி செய்ய நினைத்தால், விளைவும் ‘வேறு ஏதாவது’ பிரச்னையில்தான் முடியும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், முக்கிய பாதிப்பை விட, தீவிரமாகவோ, மோசமாகவோ இருக்கக்கூடும். அதனால்தான் தன்னோடு பேசுதலும், எது நோக்கமோ, அதை மையப்படுத்தி இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் பேசிக்கொள்ளும் வார்த்தைகள், வாக்கியங்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது ஆழ்மனம், அப்போதுதான், நமது செய்தியை உடனே ஏற்றுக் கொண்டும். பதிவுகளும் அதே போல இருப்பதால், செயல்பாடுகளும் சரியாக இருக்கும்.
நாம் எதைப் பற்றியாவது சாதிக்க வேண்டும், நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அவற்றைப் பற்றிய உள் உரையாடலின்போது முக்கியமான ஒரு அம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாம் சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளை செயல்படுத்த வேண்டியது நாம்தான் என்பதை மறக்கக்கூடாது. அதனால், நம்மையும், நம் திறமையையும் மட்டும், மையப்படுத்திப் பேச வேண்டும். மற்றவர்களை, சூழ்நிலையை குறிக்கும் வார்த்தைகளான அவன்/அவள்/அவர் மற்றும் சூழ்நிலை ‘மாற வேண்டும், மாறுகிறது’ என்றெல்லாம் சொல்வது உங்களைக் கட்டுப்படுத்தாது. இதனால், உங்களது மனத்துக்கு எந்த செய்தியோ, கட்டளைகளோ கிடைக்காது. இவ்வகை செய்தியால் எந்தப் பலனும், மாற்றமும் ஏற்படாது. மாறாக, நான் ‘இப்படிச் செய்கிறேன்’, ‘இப்படியாக மாறுகிறேன்’ என்று உங்களை மையப்படுத்தி உங்களோடு பேசுவதால் மட்டுமே, மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என்பதை மறக்காதீர்கள்.
பெரும்பாலானோர், முன்னேறாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு வேண்டியது கிடைக்காமல், நடக்காமல், பெறமுடியாமல் போவதற்குக் காரணம், இறந்த காலத்தின் பிடியிலேயே இருந்து விடுவதுதான். இந்தப் பிடிப்பு இரண்டு விதமாக இருக்கிறது. எந்த விஷயத்தைச் செய்வதற்கு முனையும்போதும், அதுபற்றிய முன்னுதாரணம், முன் அனுபவம், முன்னால் ஏற்பட்ட மனப்பதிவு ஆகியவற்றைத் தேடுகிறோம். குறிப்பாக, நமக்கு முன்னால் இருக்கக்கூடிய வெற்றிகரமான உதாரணங்களையும், அனுபவங்களையும் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
இந்த முயற்சி நேர்மறை சிந்தனை போல இருந்தாலும், அடிப்படையில் இறந்த கால பயணம் என்பதை மறக்காதீர்கள். புதிய சூழ்நிலை, அதாவது நிகழ்காலத்தில் வெளி அம்சங்கள் மாறியிருக்க வாய்ப்புகள் இருப்பதால், கடந்த கால அனுபவங்களை, வெற்றிகரமாகவே அவை இருந்தாலும், அவற்றைப் பின்பற்றுவது முழு வெற்றியை அளிக்காது. அதே போல நமது கடந்த கால முயற்சிகளில், தோல்வி, சறுக்கல், தடைகள், தாமதம் ஆகியன ஏற்பட்டு இருந்தால், நமது மனத்தை, வேகத்தை ‘தளர்வடைய’ அனுமதித்து இருப்போம். இந்தத் தளர்வுதான், எப்போதும் நமது மனத்தில் பதிவுகளாக இருக்கும். இறந்த காலத்துக்குள் பயணித்தால், இவைதாம் நம்முடன் பயணித்து நிகழ்கால விளைவையும் தீர்மானிக்கும். இதையும், தன்னோடு பேசுதலின்போது கவனமாகக் கணக்கெடுக்க வேண்டும். நமது கடந்த காலத் தவறுகள் மற்றும் தோல்விகளில், நமது பங்கு இருந்தால் அதை நியாயமாகவும், நேர்மையான மனத்துடனும் நமக்குள்ளாகவாவது ஒப்புக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவற்றின் நிழல் கூட, நிகழ் காலத்தின் மேல் படியாமல் தடுக்க முடியும்.
இவை தவிர கீழ்க்காணும் நான்கு வாக்கியங்களை முக்கியமாக கவனப்படுத்தி தினமும் சொல்லுங்கள்.
1. எனது வெற்றிகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அவற்றை அடைவதற்காகப் பெருமை கொள்கிறேன். அதே பாவத்தோடு எனது தோல்விகளையும் என்னுடையவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தோல்வியை மட்டும் சூழ்நிலையின் மீதோ, பிறரின் மீதோ, போட்டுத் தப்பிக்க முயற்சி செய்வதை பழக்கமாகக் கொள்ளமாட்டேன்.
2. என்னால் செய்ய முடியாததற்கு, நான் சாக்குபோக்குகளைத் தேடுவதில்லை. தெரிந்த காரணங்களை சரியான முறையில் அணுகி அந்தக் குறைகளை நீக்குகிறேன். எதையும் அவற்றிற்கு ஏற்ற நேரத்தில் செய்கிறேன். நேற்றை விட இன்றைக்கு, எனது ஆழ் மன வலிமை கூடியிருக்கிறது.
3. எனது கனவுகள், லட்சியங்கள் என்னுள்ளிருந்து பிறந்தவை, அவற்றை நனவாக்குவதும், குறிக்கோள்களை அடைவதும் எப்போதும், எனது பொறுப்புதான். அதை மனமுவந்து ஏற்கிறேன். இந்தப் பொறுப்பேற்பதற்கான பொறுப்பும் என்னுடையதுதான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
4. என்னை நான் முழுவதும் நம்புகிறேன். அது எந்த அளவுக்கு வலிமையானது என்றால் ‘தோற்றுவிடுவோம்’ என்ற எண்ணத்தின் சாயல்கூட, எனது எந்தச் செயலிலும், எந்தச் சந்தர்ப்பத்திலும், சொல்லிலும், எழுவதும் இல்லை. படிவதும் இல்லை.
இவை மந்திர சக்தி கொண்ட சொற்கள் அல்ல. இவற்றின் சக்தியின் அளவு, ஆழம் அனைத்தும், இதை சொல்பவரது நம்பிக்கையிலும், வெற்றி பெற வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்திலும்தான் இருக்கிறது. இவைகளை தனியாக உங்களது கையெழுத்தில் தெளிவாக எழுதிக்கொண்டு, அட்டையில் ஒட்டிக்கொண்டு தினமும் நிலைக் கண்ணாடியின் முன் நின்று, வாய்விட்டுத் தெளிவாக, மெதுவாகவோ, சப்தமாகவோ படியுங்கள். கண்ணாடியில் தெரியும் உங்களது உருவத்தை நேசியுங்கள். உங்களுக்குள் ஒரு நண்பனை, இதுவரையில் அடையாளம் காணப்படாத ஒரு நபரைக் குறித்து நீங்களே உணர்வீர்கள். நம்புங்கள் – செயல்படுங்கள் – தொடர்ந்து செயல்படுங்கள் – வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் – அந்த வெற்றியை நிலைநிறுத்துங்கள்.
வாழ்த்துகள்.
(முடிந்தது)