ஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 11
ஆண் : இந்த சம்பவத்துக்கு யார் காரணம்னு நீங்க நினைக்கறீங்க.
அப்துல்லா : எல்லாம் தக்தீர்தான்.
ஆண் : கரெக்டா சொன்னீங்க அப்துல்.
ஆண்டர்சன் அத்வானிஜியிடம் குனிந்து ‘தக்தீர்’ என்றால் என்ன என்று கேட்கிறார். விதி என்று அவர் சொல்கிறார். அப்படியா..?
மன்மோகன் சிங்ஜி : எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு செஞ்சு தந்திருக்கற பாதுகாப்பு இது. நாம் எல்லாத்தையும் செஞ்சிட்டு, நம்ம கைல என்ன இருக்கு. எல்லாம் விதின்னு வானத்தைப் பார்த்து கையைக் காட்டிட்டா போதும்.
ஆண்டர்சன், சிங்ஜியின் தோளில் தட்டிக் கொடுக்கிறார்.
ஆண்டர்சன் : ஆனா, இந்த நவீன விஞ்ஞான யுகத்திலயும் அதை நம்பறாங்களா..?
அத்வானிஜி : பழகிய தடத்திலன்றோ பாயும் பழையாறு.
மன்மோகன் ஜி : கரெக்டா சொன்னீங்க.
ஆண் அறிவிப்பாளர் (அப்துல்லாவைப் பார்த்து) : ஓ.கே. உங்க கதையை நல்லா சொல்லிட்டீங்க. ஐ திங் இட் ஈஸ் நைஸ். ஜட்ஜஸ் கிட்ட கேப்போம். சார் இவரோட பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கு?
ஆண்டர்சன் : இட்ஸ் குட். பட், அஸ் யு நோ, இட் ஈஸ் நாட் தி பெஸ்ட். இவங்க கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன்.
ஆண் : எவ்வளவு மார்க் கொடுப்பீங்க..?
ஆண்டர்சன் : ஐ திங் 6 வில் டூ.
பெண் : மன்மோகன் சிங்ஜி நீங்க எவ்வளவு மார்க் கொடுப்பீங்க..?
மன்மோகன் ஜி : 8.5
ஆண்டர்சன் மெதுவாக சிங் பக்கம் குனிந்து முஸ்லீம் ஃபேக்டர்..? என்று கேட்கிறார். மன்மோகன் சிங்ஜி, சீ போங்க… என்பதுபோல் செல்லம் கொஞ்சுகிறார்.
பெண் : ஆதர்ணிய அத்வானிஜி… நீங்க எவ்வளவு மார்க் கொடுப்பீங்க..?
அத்வானி ஜி : இந்தக் கதையில என்ன சோகமும் இருக்கறதா எனக்குத் தெரியலை. இவர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார். மனைவி கூட உயிர் பிழைச்சு ரொம்ப வருஷங்கள் உயிர் வாழ்ந்திருக்கங்க. மகள் நல்லாதான் இருக்கா. அவருக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்திகள் எல்லாம் இருக்காங்க. இந்தியால இருக்கற மத்தவங்க மாதிரிதான் இவரோட குடும்பமும் இருக்கு. அதனால எனக்கு 3.5க்கு மேல மார்க் கொடுக்க முடியலை.
ஆண்டர்சன் மறுபடியும் குனிந்து, தி சேம் முஸ்லிம் ஃபேக்டர் என்கிறார். சிங்ஜி இப்போது வாய்விட்டுச் சிரிக்கிறார்.
ஆண் : ஓ.கே. நீங்க போகலாம்.
சக்கர நாற்காலியைத் தள்ளியபடியே உள்ளே கொண்டு செல்கிறார்கள்.
பெண் : அடுத்த எண்டர்டெய்னரைப் பார்க்கறதுக்கு முன்னால ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்.
மெத்தில் ஐஸோ சயனைட் சோதனை
முதலில் எலியின் மீது…
அடுத்ததாக முயலின் மீது…
இறுதியாக இந்திய மக்களின் மீது.
கண்டறியப்பட்ட உண்மைகள் :
1. சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எலி, முயல் போலவே மனிதர்களும் இறந்தார்கள்.
2. எலி, முயல் மீது செய்த சோதனைக்கு யாரிடமும் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கவில்லை. அது போலவே இந்திய மனித சாம்பிள்கள் மீது செய்யும் பரிசோதனைக்கும் யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பிரேக் முடிந்து ஷோ ஆரம்பிக்கிறது.
ஆண் (ஆண்டர்சனை நோக்கி) : எப்படி இதெல்லாம் உங்களால முடிஞ்சது? ஏதாவது ரூம் போட்டு யோசிப்பீங்களா..?
ஆண்டர்சன் : சேச்சே… அதெல்லாம் இல்லை. எல்லாம் தானா வர்றதுதான்.
ஆண் : எல்லாமே நீங்க எதிர்பார்த்தமாதிரியே நடந்துச்சா..? இல்லைன்னா கூடுதலாவோ குறைவாவோ இருந்துச்சா…?
ஆண்டர்சன் : ஆக்சுவல்லி நாங்க விரும்பினதைவிட கொஞ்சம் கம்மின்னுதான் சொல்லணும். நீங்களே பாருங்களேன். நடந்த சம்பவங்களைச் சொல்ல நிறைய பேர் உயிரோட இருக்காங்க. அது உண்மையிலயே நாங்க எதிர்பார்க்காததுதான். அங்க பூச்சிக் கொல்லி தயாரிக்கப் பயன்படுத்தின பொருள் ஒருவகையான சயனைட்தான். அதை சுவாசிச்சும் இத்தனை பேர் உயிரோட இருக்காங்கன்னா அது பெரிய ஆச்சரியம்தான்.
ஆண் : ஓ… கூண்டோட கைலாசத்தைத்தான் எதிர்பார்த்திருந்தீங்க இல்லையா..?
ஆண்டர்சன் : ஆமாம். ஆமாம். கரெக்டா சொன்னீங்க. கூண்டோட கைலாசம்.
ஆண் : அடுத்த தடவை இந்தத் தப்பு இல்லாம பார்த்துப்பீங்க இல்லையா..?
ஆண்டர்சன் : நிச்சயமா. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இந்த ஃபேக்டரியை போபால்ல ஆரம்பிச்சது தப்பா போச்சு. இதையே தமிழ் நாட்டுல ஆரம்பிச்சு இப்ப நடத்தின கூத்தையெல்லாம் செஞ்சிருந்தா, திராவிட இன மானப் போராளிகள் ரொம்பவும் உற்சாகமா வட இந்திய சதி, ஆரிய சதி அப்படிச் சொல்லி இதை பெரிய லெவல்ல கொண்டுபோயிருப்பாங்க. தப்புப் பண்ணிட்டோம்.
சிங்ஜி : நல்ல யோசனையாத்தான் இருக்கு. இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போயிடலையே. நம்மால் முடியும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. கூடங்குளம்னு ஒண்ணு ரெடி பண்ணி வெச்சிருக்கோம்.
ஆண் : சரி… இந்த சாதனையை எப்படி செஞ்சீங்க. நேயர்களுக்கு விரிவாச் சொன்னீங்கன்னா ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும். நாலு இடங்கள்ல அவங்களும் செஞ்சு பார்க்க வசதியா இருக்கும்.
ஆண்டர்சன் : உண்மையிலயே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் லீவ் இட் டு தி எக்ஸ்பர்ட்ஸ் அப்படிங்கறதுதான் சரியா இருக்கும். அவங்களாலதான் இது மாதிரி பெரிய அளவுல ப்ரொஃபஷனலா செய்ய முடியும். சின்னச் சின்ன அளவுல செய்ய ஆரம்பிச்சா செய்யறவங்களே அதுல மாட்டிக்க வேண்டி வந்துடும். அது நல்லதல்ல. அதனால இதையெல்லாம் நாங்க எப்படிச் செஞ்சோம்னு தெரிஞ்சிக்கோங்க. நீங்களா செஞ்சு பார்க்காதீங்க. அப்படியே ஏதாவது செஞ்சுதான் ஆகணும்னா எங்களுக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்க. நாங்களே எல்லாத்தையும் அருமையா செஞ்சு கொடுக்கறோம். சரி நான் எப்படி செஞ்சோம்ங்கறதை சொல்றேன்.
மொதல்ல நாம என்ன செய்யப் போறோம் அப்படிங்கறதை நாசூக்கா, கவுரவமா சொல்லணும். அதாவது நமக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தா அதை நேரடியா சொல்லக் கூடாது. உலகத்துல மக்கள் பசியால வாடறாங்க. உணவுத் தட்டுப்பாடு அதிகமா இருக்கு. அதை நாங்க போக்கப் போறோம் அப்படின்னு பாலிஷா சொல்லணும்.
ஆண் : ஆரம்பமே பிரமாதமா இருக்கே.
ஆண்டர்சன் : இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி. இன்னும் போகப்போக எவ்வளவோ இருக்கு. உணவு உற்பத்தியை அதிகரிக்கறதுதான் நம்ம இலக்குன்னு சொல்லிட்டோம் இல்லையா. அதை எப்படி நடத்தறது?
பெண் : பெரிய ஏரிகள், குளங்களை வெட்டி அல்லது தரிசு நிலத்துல நீர்ப்பாசன வசதியைச் செஞ்சு அது மூலமா செய்யலாம் இல்லையா..?
ஆண்டர்சன் : அது ஓல்ட் ஃபேஷன். அதுவும்போக, அதுக்கெல்லாம் நிறைய மேன் பவர் தேவைப்படும். நமக்கு நிறைய மனிதர்கள் இந்த உலகத்துல இருக்கவேண்டிய அவசியமே கிடையது. நமக்கு எடுபிடி வேலை செய்ய நாலு பேர் இருந்தாப் போதும். அதோடு நாம எதையும் விஞ்ஞானபூர்வமா புதுமையா செய்யணும். உணவு உற்பத்தியையே எடுத்துக்கிட்டா விளையற பயிர்ல பாதிக்கு மேல பூச்சிகள் சாப்பிட்டு அழிச்சிடுது. இங்க நான் பயன்படுத்தற வார்த்தைகளை கவனமா பார்க்கணும். உண்மையிலயே பூச்சிகள் எல்லாம் இலை செடிகளைத் தின்னு வாழக்கூடியவை. அதனோட சர்வைவல் சார்ந்த ஒரு சாதாரண விஷயம்தான். ஆனா அதை அப்படி எளிமையா சொல்லக்கூடாது. பூச்சிகள் நம்மளோட எதிரி அப்படின்னு சொல்லணும். மனுஷன் நட்டு வளக்கற பயிர்களை அது சாப்பிட்டு அழிச்சிடுது. மனுஷனுக்குக் கிடைக்காம போயிடுது. அதைத் தடுக்க என்ன பண்ணனும்?
ஆண் : வேப்ப இலைக் கரசல் இல்லைன்னா சாணி, சாம்பல் கரைசலைத் தெளிக்கணும்… பூச்சிகள்லாம் பயந்து அலறி அடிச்சு ஓடிப் போயிடும்.
ஆண்டர்சன் : அங்கதான் நீங்க தப்பு பண்ணறீங்க. பூச்சியை விரட்டினா போதாது. அது மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு வந்துடும். அதனால ஒரேயடியா அழிச்சிடணும். அதுக்கு என்ன தேவை? சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி தேவை. அதைத்தான் நாங்க தயாரிக்கப் போறோம்னு களத்துல குதிச்சோம். சக்தி வாய்ந்த பூச்சிக் கொல்லியைக் கண்டுபிடிச்சோம்.
ஆண் : நீங்களே இதையெல்லாம் செஞ்சீங்களா..?
ஆண்டர்சன் : அதுக்கு அவசியமே இல்லை. இந்த உலகத்துல காசு இருந்தா போதும் எது வேணும்னாலும் கிடைக்கும். நாலு விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் தவிடும் புண்ணாக்கும் வெச்சாப் போதும்… மள மளன்னு குடிச்சிட்டு நமக்கு பாலா கொடுத்துடுவாங்க. நாங்க அதைத்தான் செஞ்சோம். நாலு விஞ்ஞானிகளைக் கூப்பிட்டு கொறைஞ்ச விலையில பூச்சிக்கொல்லி தயாரிப்பது எப்படின்னு கேட்டோம். மணி மணியா யோசனை சொன்னாங்க. அதன்படி மெத்தில் ஐஸோ சயனைட்ன்னு ஒரு விஷம். அதை வெச்சு பூச்சிக்கொல்லி தயாரிச்சா கொள்ளை லாபம் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. வேற முறையிலயும் அந்த பூச்சி மருந்தைத் தயாரிக்க முடியும். ஆனா அதுக்கெல்லாம் காசு ரொம்ப செலவாகும். அதனால மெத்தில் ஐஸோ சயனைட் வெச்சே தயாரிக்கறதுன்னு முடிவு பண்ணினோம்.
ஆண் : ரொம்பவும் அழகாச் சொன்னீங்க. ஆனா, அந்த பூச்சிக் கொல்லி நிறுவனத்தை எங்க நாட்டுல ஆரம்பிக்கணும்னு எப்படி தோணிச்சிது. எங்க மக்களோட கடின உழைப்பா… வியாபாரத்துக்கு இங்க இருந்த அழகான சூழலா..? எங்க தேசம் மேல அக்கறையா..? எது காரணமா இருந்தது.
(நடுவர்கள் மூவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கேள்வி கேட்டவருக்கு தான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டோமோ என்று குழப்பம் ஏற்படுகிறது. அதன் பிறகு தன் ஆடை எங்காவது கிழிந்துவிட்டதா என்று சுற்று முற்றும் பார்க்கிறார். ஒன்றும் இல்லை என்றதும் ஆண்டர்சனையே குழப்பத்துடன் உற்றுப் பார்க்கிறார்)
ஆண்டர்சன் (சிரிப்பை அடக்க முடியாமல்) : இந்தியர்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்ச்சி உண்டுன்னு சொன்னாங்க. ஆனா இந்த அளவுக்கு இருக்கும்னு நினைச்சே பார்க்கலை. குனிஞ்சு கொடுக்கறவன் முதுகுல தான தம்பி ஏற முடியும். சரி, விஷயத்துக்கு வர்றேன். விஞ்ஞானிங்க சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லியைக் கண்டுபிடிச்சிட்டாங்க. அதோட தயாரிப்பு செலவும் ரொம்பக் கம்மி. ஆனா அதுல ஒரு பெரிய பிரச்னை இருந்தது. அந்த தொழிற்சாலைல இருந்து கேஸ் லீக் ஆயிடிச்சின்னா மனுஷங்க எல்லாம் பூச்சி மாதிரியே சொத் சொத்னு செத்து விழுந்திடுவாங்க. போபால்ல கூட நீங்க பார்த்திருப்பீங்களே. நீங்க காட்டின ஷார்ட் ஃபிலிம்ல கூட பார்த்தோமே… தெருல, ரயில்வே ஸ்டேஷன்ல, மைதானத்துல கொத்துக் கொத்தா செத்துக் கிடந்தாங்களே… என்ன அற்புதமான காட்சி. தாந்தேயோட இன்ஃப்ர்னோல வர்ற மாதிரி ஹைலி ஆர்ட்டிஸ்டிக்… என்சாண்டிங் விஷுவல்ஸ்.
ஆண்: அப்போ அது அவ்வளவு மோசமானதுன்னு உங்களுக்கு மொதல்லயே தெரியுமா..?
ஆண்டர்சன் : அஃப்கோர்ஸ்… அதுல என்ன சந்தேகம்? அதனாலதான் இந்தியாவுல அதை ஆரம்பிக்கணும்னு முடிவு செஞ்சோம்.
ஆண் : இல்லை உங்க நிறுவனத்தோட மருத்துவர்களெல்லாம் வாயுக்கசிவு ஏற்பட்டு எல்லாரும் வாந்தி எடுத்து மயங்கி விழ ஆரம்பிச்சப்ப, அந்த வாயு ரொம்பவும் பாவம். ஒண்ணுமே செய்யாது. கொஞ்ச நேரம் எரிச்சல் இருக்கும் அம்புட்டுத்தான் அப்படின்னு சொன்னாங்களே.
ஆண்டர்சன் :பின்ன எல்லாரும் செத்துத்தான் போவாங்கன்னு ஓப்பனா சொல்ல முடியுமா என்ன? அதுவும் போக நாங்க இன்னொன்னு நினைச்சிருந்தோம். நச்சு வாயுவினால மக்கள் இறக்கலை. இந்தியர்கள் சரியா சாப்பிடறதில்லை. சுத்தமா இருக்கறதில்லை. குளிக்கறதில்லை. நிறைய சாராயம் குடிக்கறாங்க. அதனாலதான் வாயு உள்ல போனதும் தாங்க முடியலை. செத்துட்டாங்க. அப்படின்னு ஏதாவது சொல்லலாமான்னு தான் நினைச்சோம்.
மானினிய மன்மோகன் சிங் ஜி : மே பி. அதுகூடக் காரணமா இருந்திருக்கலாம்.
ஆண்டர்சன் (சிரித்தபடியே) : ஆனா இறந்தவங்களோட எண்ணிக்கை ரொம்பவும் அதிகமா இருந்ததுனால அப்படிச் சொல்ல முடியாம போச்சு.
ஆண் : ஆனா அமெரிக்காவில ஹூஸ்டனிலயும் இதே தொழிற்சாலையை கட்டியிருந்தீங்களே. அங்க எந்த பிரச்னையும் வரலியே..?
ஆண்டர்சன் : எப்படி வரும்? அங்கதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவுல இருந்ததே. மொதல்ல அந்த எம்.ஐ.சி. 4.5 டிகிரியிலதான் இருந்தாகணும் அதனால அதைச் சுத்தி குளிர் பதன ஏற்பாடு செய்திருந்தோம். சின்னச் சின்ன கொள்கலன்ல வெச்சிருந்தோம். அதையும் தாண்டி வாயு கசிஞ்சா அதுல உள்ள நச்சுப் பொருள் எல்லாம் எரிஞ்சு போகற மாதிரி சிம்னி ஏற்பாடு செய்திருந்தோம். அப்பறம் காஸ்டிக் சோடான்னு ஒண்ணு இருக்கு. அதைத் தூவினா இந்த வாயுல இருக்கற நச்சு எல்லாம் கரைஞ்சு போயிடும். இப்படி நிறைய அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அழகா செஞ்சு வெச்சிருக்கோம். அதுமட்டுமில்லாமல் இந்த ஃபேக்டரிக்கு பக்கத்துல குறிப்பிட்ட மைல் தொலைவுக்கு குடிமக்கள் வசிக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தோம். எல்லாமே பக்காவா இருந்தது.
பெண் : இந்த ஏற்பாடெல்லாம் போபால்ல செய்யலியா..?
ஆண்டர்சன் : செஞ்சிருந்தோம். ஆனா உலுல்லாகாட்டிக்காக செஞ்சிருந்தோம்.
ஆண் :அப்படின்னா..?
ஆண்டர்சன் : பாக்கறதுக்கு என்னமோ பெரிய பந்தோபஸ்து மாதிரி தெரியும். ஆனா உள்ள எல்லாம் பொக்கா இருக்கும். இப்போ உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். பாதுகாப்புக் கருவிகள் சரியா இயங்கலை அதனாலதான் இவ்வளவு பேர் செத்துட்டாங்கன்னு சொல்றாங்க இல்லையா. உண்மை என்னன்னா அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்கா இருந்திருந்தாலும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியாது. ஏன்னா நாங்க ஆரம்பத்துலயே அப்படித்தான் டிஸைன் பண்ணியிருந்தோம்.
ஆண்: அது எப்படி முடிஞ்சது?
ஆண்டர்சன் : அது ரொம்ப ஈஸி. மொதல் வேலையா இந்த நிறுவனத்தோட அதிகக் கட்டுப்பாடு எங்க கிட்டத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணினோம்.
பெண் : அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில ஆரம்பிக்கும்போது 49 சதவிகிதத்துக்கு மேல வெச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கே.
ஆண்டர்சன் : ஆமாம் இருக்கு. அதுக்கு என்ன இப்போ.
ஆண்: அப்ப உங்கிட்ட அதிக அதிகாரம் எப்படி வரும்.
ஆண்டர்சன் : ஏன் வராது. 51 சதவிகிதப் பங்குகளை இந்தியர்கள் வாங்கினாலும் அவங்களும் எங்க ஆளாத்தான் இருப்பாங்க. அதுமட்டுமில்லாம இந்த போபால் விஷயத்துல நாங்க இன்னொன்னு செஞ்சோம். இந்த டெக்னாலஜி ரொம்பவும் ஒசந்தது. அது இந்தியர்களுக்குத் தெரியாது. அதனால எங்க கை ஓங்கி இருந்தாத்தான் சரியா செய்ய முடியும்னு சொல்லி 50.9 சதவித அதிகாரத்தை நாங்க எடுத்துட்டோம்.
ஆண் : இந்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள் கேள்வி கேட்கலியா..? அவங்களை எப்படி சமாளிச்சீங்க.
ஆண்டர்சன் : சில பேர் கேஷாவே கொடுத்துடுங்கன்னு கேட்டாங்க. சிலபேர் மது மாது வேணும்னு கேட்டாங்க. அவங்க கேட்டதைக் கொடுத்தோம்.
ஆண்: அப்போ, டபுள் எம்.ஏ. வேலை பார்த்து வேலையை கச்சிதமா முடிச்சிட்டீங்க.
ஆண்டர்சன் : அப்படிச் சொல்ல முடியாது. நாய்க்கு எலும்புத் துண்டு போடற மாதிரின்னு தான் அதைச் சொல்லணும். நாம எந்த அளவுக்கு எலும்புத் துண்டு போடறோமோ அந்த அளவுக்கு விசுவாசமா இருக்கும். அதுவும் போக, இந்தியர்கள் மேல பழியைப் போடறது ரொம்ப ஈஸி. ஃபேக்டரியைச் சுத்தி வீடுகள் இருந்தது. அதனாலதான் நிறைய பேர் செத்துட்டாங்கன்னு சொல்லி ஈஸியா நாங்க தப்பிச்சிட முடியும்னு எங்களுக்கு ஆரம்பத்துலயே தெரியும். ஆனா ஒண்ணு மட்டும் இங்க கட்டாயம் சொல்லியாகணும். உங்க அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லைன்னா இதை எங்களால இவ்வளவு அழகா செஞ்சிருக்கவே முடியாது.
ஆண் : அவங்க என்ன பண்ணினாங்க.
ஆண்டர்சன் : போபால் ஃபேக்டரில கொஞ்ச நாளாவே பிரச்னை பெரிசாகிட்டு வர ஆரம்பிச்சது. சின்னச் சின்னதா நிறைய கேஸ் லீக் விபத்துகள் நடந்துச்சு. ஒண்ணு ரெண்டு பேர் செத்துட்டாங்க. நிறைய பேருக்கு உடம்புல நிறைய காயங்கள் ஏற்பட்டுச்சு. உங்க ஊர் பத்திரிகைக்காரர் கூட அழகா ஒரு விஷயம் சொன்னார்… போபால் ஒரு எரிமலையின் மேலே இருக்கிறது அப்படின்னு.
பெண் : யாரும் அதைப் பார்த்து பயப்படலியா.? எந்த நடவடிகையும் எடுக்கலியா..?
ஆண்டர்சன் : இல்லை நடவடிக்கை எடுத்தோமே. போபால்ல கேஸ் லீக் ஆகற விஷயமும் அதனால வர்ற பாதிப்புகளும் தெரிய வந்ததும் எங்களோட இன் ஜினியர்கள் டீம் ஒண்ணை அனுப்பி எல்லாத்தையும் நல்லா சோதிக்கச் சொன்னோம்.
ஆண்: உங்க ஊர்ல இருந்தே வரச் சொல்லியிருந்தீங்களா..?
ஆண்டர்சன் : ஆமா அமெரிக்கால இருந்தே வரவைச்சிருந்தோம்.
ஆண்: அவங்க பார்த்துட்டு என்ன சொன்னாங்க.
ஆண்டர்சன் : ஆமா, வாஸ்தவம்தான். ஃபேக்டரி மிகவும் மோசமான நிலையிலதான் இருக்கு. இந்த இந்த ஏற்பாடுகளை பலப்படுத்தணும்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ரிப்போர்ட் படி அப்படியே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பல மடங்கு அதிகரிச்சிட்டோம்.
ஆண்: பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிச்சீங்களா..? அப்பறம் எப்படி இந்த அளவுக்கு மக்கள் செத்தாங்க.
ஆண்டர்சன் : நான் ஏற்பாடுகளை அதிகரிச்சேன்னுதான் சொன்னேன். எங்கேன்ன்னு சொல்லலியே… போபால்ல கிடைச்ச ஆய்வு முடிவுகளை வெச்சு ஹூஸ்டன்ல ஃபேக்டரில பாதுகாப்பை பலப்படுத்தினோம்.
பெண் : எக்சலண்ட். இதை இதை இதைத்தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.
(தொடரும்)