இந்து மதத்தைச் சீர்திருத்தவேண்டும் என்னும் விருப்பத்துடன் தொடங்கப்பட்ட ஜாத்-பட்-தோடக் மண்டல் தன் வாழ்நாளின் மிகப் பெரும் தவறொன்றை 1936ம் ஆண்டு இழைத்தது. ஆரிய சமாஜத்தின் ஒரு கிளையான இந்த அமைப்பு, லாகூரில் நடக்கவிருந்த கருத்தரங்குக்குத் தலைமை தாங்கும்படி அம்பேத்கரைக் கேட்டுக்கொண்டது. ‘நீங்கள் மாபெரும் சிந்தனையாளர். உங்கள் அளவுக்கு சாதிப் பிரச்னையைப் பற்றி ஆராய்ந்தவர் வேறு யாருமில்லை. சாதி அமைப்பு எந்த மதக் கருத்துகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த மதக் கருத்துகளை அழித்தொழிக்காமல் சாதியை ஒழிப்பது சாத்தியமில்லை என்ற உங்கள் புதுக்கருத்தை விவரமாக அறிய ஆவலாக உள்ளேன்.’ என்று மண்டலின் செயலாளர் அம்பேத்கருக்கு கடிதம் எழுதினார்.
தொடக்கத்திலேயே அம்பேத்கர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்திருக்கிறார். ‘பொதுவாக சாதி இந்துக்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை. சமூகச் சீர்திருத்தம் பற்றிய அவர்களின் நிலைப்பாட்டுக்கும் என் நிலைப்பாட்டுக்கும் ஒத்துபோவதில்லை. எனவே அவர்களுடன் சேர்ந்து இயங்குவது கடினமாக உள்ளது.’
ஆனால் அம்பேத்கரின் மறுப்பை மண்டல் ஏற்கவில்லை. தனது பிரதிநிதி ஒருவரை மும்பைக்கு அனுப்பி வைத்து அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் மரியாதையுடன் மீண்டுமொருமுறை வரவேற்றார்கள். அம்பேத்கரும் தலைமை தாங்க ஒப்புக்கொண்டார். அவர்களுடைய விருப்பத்துக்கிணங்க தனது தலைமை உரையை அம்பேத்கர் முன்கூட்டியே அவர்களுக்கு அனுப்பிவைக்கவும் செய்தார்.
பிரச்னை ஆரம்பமானது. 22 ஏப்ரல் 1936 அன்று ஜாத்-பட்-தோடக் மண்டலைச் சேர்ந்த ஹர் பகவான் என்பவர் அம்பேத்கருக்கு எழுதினார்.
‘…உங்கள் உரையின் இறுதிப் பகுதி எங்களுக்குக் கிடைத்ததும் அது மிக நீண்டு இருப்பது கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவ்வளவையும் வெகு சிலரே படிக்க முடியும் என்பதே எங்கள் அச்சத்துக்குக் காரணம். மேலும் அதில் நீங்கள், இந்து சமூகத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்துவிட்டதாகவும் ஒரு இந்து என்ற முறையில் அதுவே உங்கள் கடைசி உரையாக இருக்கும் என்றும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வேதங்கள் முதலான இந்துக்களின் புனித நூல்களின் அறத் தன்மையையும் அறிவார்ந்த தன்மையையும் அநாவசியமாகத் தாக்கியுள்ளீர்கள். இந்து மதத்தின் சட்டப் பகுதியை விஸ்தாரமாக ஆராய்கிறீர்கள். எடுத்துக்கொண்ட பிரச்னையுடன் இது எவ்வித தொடர்புமற்றது. சில பகுதிகள் முற்றிலும் தலைப்புக்குப் பொருத்தமற்றதாகவும் சம்பந்தமற்றதாகவும் இருக்கிறது…
‘…மேற்சொன்ன பகுதிகளை நீக்கிவிடுங்கள்… அனாவசியமாகத் தூண்டிவிடும் விதமாக உரையை அமைப்பது அறிவுடைமையாகப்படவில்லை.
‘…உரையை முழுசாகத்தான் பதிப்பிக்க முடியும் என்று இன்னமும் நீங்கள் வற்புறுத்தினால் அது சாத்தியப்படாது என்று மிக்க வருத்தத்துடன் கூறுகிறோம்.
‘…சாதியமைப்பைப் பற்றிய உங்கள் உரை இது வரை எழுதப்பட்டவற்றிலேயே மதிப்புமிக்கது, அதை எழுதியதன்மூலம் எங்கள் மனதில் அழியாத இடம்பெற்றுவிட்டீர்கள் என்பதையும் நாங்கள் கூறவேண்டும். இதைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கெல்லாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.’
நான்கு தினங்கள் கழித்து அம்பேத்கர் பதில் அனுப்பினார்.
‘..நானும் என் பதிலைக் கூறியாகவேண்டும். சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி என் உரையைக் கத்தரித்தே ஆகவேண்டுமென மண்டல் வற்புறுத்தினால் நானும் கருத்தரங்கை ரத்து செய்யவே கூறுவேன்.
‘…என் முடிவு உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் தன் உரையைத் தயாரிப்பதற்கு ஒவ்வொரு தலைவருக்கும் உரிமை உண்டு. மாநாட்டில் தலைமை தாங்கும் கௌரவத்துக்காக அந்த உரிமையை விட்டுத்தர என்னால் முடியாது.’
படிக்க கஷ்டமாக இருக்கும் என்று மண்டலால் தீர்ப்பளிக்கப்பட்ட, மாற்றியெழுதுங்கள் என்று அறிவுறுத்தப்பட்ட அந்த நீண்ட உரையை அம்பேத்கர் தானே ஒரு தனி நூலாக வெளியிட்டார். அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு என்று ஆங்கிலத்திலும் சாதி ஒழிப்பு என்று தமிழிலும் வெளிவந்த அம்பேத்கரின் புகழ்பெற்ற அந்த நூல் குஜராத்தி, தமிழ்,மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் என்று பரவலாக அவர் காலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டு கடும் சர்ச்சைகளையும் வரவேற்பையும் ஒருசேர ஈர்த்தன. மண்டல் அமைப்பினரும் அம்பேத்கரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் இந்நூலின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
மண்டலுக்கு பதிலளிக்கும் ஒரு கடிதத்தில் அம்பேத்கர் ஓரிடத்தில் எழுதுகிறார். ‘சாதியை ஒழிக்க மிகச் சிறந்த வழி என நான் கண்ட முடிவு (உங்களுக்குத்) திகைப்பூட்டுவதாகவும் வேதனை அளிப்பதாகவும் இருக்கலாம். என் ஆய்வுமுறை தவறானது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சாதியின் பிரச்னைகளை அலசும் உரையில் சாதியை எப்படி ஒழிக்கமுடியும் என்பது பற்றி வெளிப்படையாக நான் விவாதிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்லமுடியாது.’
இன்னோரிடத்தில் எழுதுகிறார். ‘நான் இந்துக்களை விமரிசித்து இருக்கிறேன். இந்துக்களால் பூஜிக்கப்படுகிற மகாத்மாவின் மேலாண்மையை மறுத்திருக்கிறேன். இந்துக்கள் என்னை வெறுக்கிறார்கள். அவர்களுடைய தோட்டத்தில் உள்ள நச்சுப் பாம்பாக என்னை அவர்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்க, மரியாதை மிக்க இந்தப் பொறுப்பை ஏற்கும்படி என்னை அழைத்தது ஏன் என்ற அரசியல் அறிவுள்ள இந்துக்கள் கேட்கப்போகும் கேள்விக்கு மண்டல்காரர்கள் விளக்கம் தந்தாக வேண்டும்.’
சாதி அமைப்பின் தோற்றுவாய், வளர்ச்சி, சமூகத்தில் அது செலுத்தும் தாக்கம், அதனால் பெரும் பிரிவு மக்கள் அனுபவிக்கும் தீங்குகள் என்று விரிவாக ஆராயும் அம்பேத்கர்,சாதியின் அடித்தளத்தை நேரடியாகவே தாக்குகிறார். ‘உங்களுடைய சமூக அமைப்பை மாற்றினாலொழிய நீங்கள் முன்னேறவே முடியாது என்பதே என் கருத்து. தாக்குதலுக்கோ தற்காப்புக்கோ மக்களை ஒன்று திரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின்மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமை அடையாது.’
ஒரு காட்டுச்செடியைப் போல் சுயமாக முட்டி மோதி வளர்ந்து உச்சத்தைத் தொட்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) வாழ்க்கை தேவதைக் கதைகளை ஒருவருக்கு நினைவுபடுத்தக்கூடும். தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதும் இந்த அளவுக்கு தீர்க்கத்துடன் போராடுவதும் சாத்தியம்தானா என்னும் வியப்பையும் அச்சத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர அவரால் பல தரப்பினருக்கு அப்போது ஏற்படுத்தமுடிந்தது. தனது சொந்த அனுபவங்கள் மூலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் ஏற்படுத்திய அதிர்ச்சிகளாலும், விரிவான வாசிப்பின் வாயிலாகவும் அம்பேத்கர் தனது உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
செயற்பாட்டாளர், அரசியல் தலைவர், சமூக விஞ்ஞானி, பொருளாதார அறிஞர், சட்ட வல்லுநர் போன்ற எண்ணற்ற அடையாளங்களைத் தாண்டி அவர் அடிப்படையில் ஓர் அறிவுஜீவியாகவும் திகழ்ந்ததால் எதொன்றையும் நுணுக்கமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் அணுகி ஆராயும் போக்கு அவரிடம் இருந்தது. அவரது படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் இந்தப் போக்கு இறுதிவரை இடம்பெற்றிருந்தது.
இதனாலும்கூட அம்பேத்கர் பல சமயங்களில் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியாத, சுலபமாகத் தொகுத்துக்கொள்ள முடியாத ஒரு சிந்தனையாளராக இருக்கிறார். ஜோதிராவ் புலே, பெரியார் போன்றவர்களிடம் இருந்த எளிமையான, நேரடியான கருத்துப் பரிமாற்ற முறை இவரிடம் இல்லாததற்குக் காரணம் இவர் ஒரே சமயத்தில் பல அறிவுத் துறைகளில் தொடர்ச்சியாக இயங்கி வந்ததும், தனது கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பரிசிலீத்து, மாற்றிவந்ததும்தான்.
தீவிரமாக விமரிசித்து இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்தைத் தழுவிய பிறகும், இந்துத்துவச் சிந்தனையாளர்களால் இன்றும் அம்பேத்கரை தம்மில் ஒருவராக உரிமை கொண்டாட முடிவதன் காரணம் இதுதான். அம்பேத்கரின் படைப்புகளில் இருந்து ஆங்காங்கே சில வாசகங்களை உருவிப்போட்டு அவரை ஓர் இந்து விசுவாசியாக, இஸ்லாமிய எதிர்ப்பாளராக, சந்தைப் பொருளாதார ஆதரவாளராக, மதவாதியாக, முதலாளித்துவ ஆதரவாளராக சிலரால் முன்னிறுத்தமுடிவதும் இதனால்தான்.
அம்பேத்கர் தனது சமூகத்தின் விடுதலைக்காகவும் தனது நிலையில் உள்ள பிற பிரிவினரின் விடுதலைக்காகவும் சிந்தித்தார். தொடக்கத்தில் காந்தி போன்ற சீர்திருத்தவாதிகளாலும், கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட அணுகுமுறையாலும் அவர் ஈர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால், இவை விடிவை அல்ல ஆபத்தையே கொண்டுவரும் என்பதை அவர் விரைவிலேயே புரிந்துகொண்டார். சாதி எப்படி இயங்குகிறது, எங்கே வேர் கொள்கிறது, எப்படித் தன் கிளைகளைப் பரப்புகிறது, எங்கிருந்து பலம் பெறுகிறது, மாறும் சூழலில் எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்கிறது உள்ளிட்ட அனைத்தையும் அவர் முழுமையாகத் தெரிந்துகொண்டார்.
கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் எப்படி அவர் காலத்துத் தேவைகளை எதிர்கொண்டனவோ அவ்வாறே அம்பேத்கரின் சிந்தனைகளும் அவர் காலத்திய தேவைகளைப் பிரதிபலித்து, அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்தன. ‘உயர்சாதியினர் என்று அழைக்கப்படும் இந்துக்கள் அம்பேத்கரின் சமூகத்துக்கு ஒழுங்கு மீறிய கொடுமைகளை இழைத்தனர். இதனால் அம்பேத்கருக்குக் கடுமையான மன நிறைவின்மை ஏற்பட்டது. இந்த மனநிறைவின்மையில் இருந்துதான் அம்பேத்கரின் சிற்தனை எழுந்தது.’ என்கிறார் அம்பேத்கரிய ஆய்வாளர் டபிள்யூ.என். குபேர்.
மார்க்ஸைப் போலவே சமூகத்தை மாற்ற அம்பேத்கர் முன்மொழிந்த வழிமுறைகளிலும் கற்பனாவாதத் தன்மை இருக்கவில்லை. ‘அம்பேத்கர் ஒரு கற்பனாவாதி அல்லர். ஒரு செயல்முறை கோட்பாட்டாளர். அவர் ஒரு வலிமையான கருத்தியல் கோட்பாட்டைக் கொண்டிருந்தார். ’ என்கிறார் குபேர். இந்தக் கோட்பாட்டோடு முரண்படுபவர்கள் மார்க்ஸைப் புறக்கணித்ததைப் போலவே அம்பேத்கரையும் புறக்கணித்தனர்.
அம்பேத்கர் இந்திய அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் இருந்து எவ்வாறு ஓரங்கட்டப்பட்டார் என்பதை விவரிக்கும்போது கிறிஸ்டோஃபே ஜேஃப்ரிலோட் (Christophe Jaffrelot) தனது நூல் ஒன்றில் அடுக்கிக் காட்டும் சில உண்மைகளைப் பார்ப்போம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்திருந்த போதிலும் 1990ம் ஆண்டு வரை அம்பேத்கரின் உருவப் படம் இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெறவில்லை. அவுரங்காபாத்தில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் கோரிக்கையுடன் 1978ல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு குரல் கொடுத்தபோது, அதிர்ச்சியடைந்த மேல்சாதி மாணவர்கள் அவர்கள்மீது வன்முறையைச் செலுத்தினர். ஆயிரம் தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். வி.பி. சிங் ஆட்சியில் 1990ம் ஆண்டுதான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.
இத்தகைய புறக்கணிப்புகள் உணர்த்தும் தெளிவான ஓர் உண்மை, இன்னமும் இங்கே சாதி வெறி மறையவில்லை; எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவில்லை என்பதைத்தான். இன்றைய சமூகத்தில் அம்பேத்ரின் தாக்கத்தையும் தேவையையும் மதிப்பிடும்போது நாம் முதலில் தெரிந்தகொள்ளவேண்டிய உண்மை இதுவே.
(அடுத்த பகுதி : அம்பேத்கர் : சாதி எதிர்ப்பும் அரசியலும்)