Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

மங்கள்யான் : செவ்வாய் செல்லும் இந்தியன்

$
0
0

mangalyanசெவ்வாய் கிரகத்துக்கு (Mars) ‘விண்கலம் அனுப்புவது’ என்பது அத்தனை அபூர்வமான செய்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை இந்தியா அனுப்புகிறது என்பது பெருஞ்செய்தி. இதுவரை அந்த கிரகத்தை அடைய எடுத்த நாற்பதுக்கும் மேற்பட்ட முயற்சிகளில் பாதிக்கும் மேல் தோல்வி என்பதும் இத்திட்டத்துக்குக் கூடுதல் கவனத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தனைக்கும் அனுப்பியவர்கள் அனைவரும் விண்வெளி ஆராய்ச்சியில் நம்மைவிட முன்னேறியவர்கள்.

ஒப்புநோக்கு அளவில் மற்ற நாடுகளின் செவ்வாய் திட்டங்களைவிட, நமது மங்கள்யான் குறைந்த செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நாசாவும் செவ்வாய்க்கு MAVEN என்கிற விண்கலத்தை அனுப்புகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் (450 கோடி ரூபாய்) செலவைவிடப் பத்து மடங்கு அதிகம். எப்படி விண்கலத்தைக் குறைந்த செலவில் செவ்வாய்க்குக் கொண்டுசேர்க்கப்போகிறது இஸ்ரோ?

வேகப்பந்து வீச்சாளர் போடும் பந்தில் இருக்கும் வேகம்போல், பிரபஞ்சமே நமக்கு அபிரிமித சக்தியை வழங்கியுள்ளது. அந்தச் சக்தியை திறமையான பேட்ஸ்மேன்போல் உபயோகித்து பந்தை இலக்குக்கு அனுப்பவேண்டும். இங்கு நாம் உபயோகிக்கப்போவது பூமியின் ஈர்ப்பு சக்தியை. இதை விளக்க மற்றொரு விளையாட்டைத் துணைக்கு அழைப்போம். வட்டெறிதல் தெரியுமா? Discus Throw? அதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த வீரர்கள் சில தடவை சுழன்று, ஒவ்வொரு சுற்றுக்கும் வேகம் பெற்று கடைசிச் சுற்றில் வட்டை அப்பால் எறிவார்கள். கீழே இருக்கும் படத்தில் கிருஷ்ணா பூனியாதான் பூமி. வட்டுதான் மங்கள்யான்.

Mars trajectory and poonia

PSLV ராக்கெட்டைக் கொண்டு விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில்தான் இப்போது சேர்த்திருக்கிறோம். அதற்குமேல் அதனை செவ்வாய் நோக்கி அனுப்புவது பூமியின் சக்தி, கலத்திலேயே இருக்கும் சிறிய எஞ்சின் மற்றும் அதனை இயக்கும் எரிபொருள். ஒவ்வொரு சுற்றுக்கும் கலத்தில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு கலத்தின் சுற்றுப்பாதையை விரிவாக்க (அதாவது) வேகத்தை அதிகரிக்க சின்னத் திருத்தம் செய்யப்படும். கடைசிச் சுற்றில் செவ்வாயை நோக்கி மங்கள்யானைக் கடாசிவிட வேண்டியது.

கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் இது மிகச் சிக்கலான விளையாட்டு. நவம்பர் மாத இறுதியில்தான் இதன் முடிவு தெரியும். இதற்கு மாறாக நாசா அனுப்பும் ராக்கெட்டோ சக்தி வாய்ந்தது. நேரடியாகச் செவ்வாய்க்கு செல்லும் பாதையில் கலத்தை செலுத்திவிடுகிறது. அதனால் அதிகச் செலவு, ஒப்பீட்டளவில் சுலபமானது. நாசாவின் அதிகச் செலவுக்கு வேறு சில காரணிகளும் உண்டு.

இந்த முதல் வெற்றியைவிட முக்கியமான வெற்றி, செவ்வாயை நெருங்கும்போது தேவைப்படுகிறது. விண்கலத்தைச் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவது என்பது அத்தனை சுலபம் அல்ல. கிரிக்கெட்டில் wide ball மாதிரி விண்கலம் செவ்வாயின் கையில் சிக்காமலே போய்விடக்கூடும்; ஒரே வித்தியாசம், இங்கு பவுண்டரியே கிடையாது. ஜப்பானின் கலம் இப்படித்தான் வழுக்கிக்கொண்டு செவ்வாயை கடந்து சென்றுவிட்டது. மேலும் கதிர்வீச்சுகளால் விண்கலத்திற்கு பாதிப்புகள் வரக்கூடும். பத்து மாதங்கள் அண்டத்தின் குளிரில் பயணித்தபிறகு, கலத்தின் இயந்திரங்கள் மீண்டும் ஒழுங்காக உயிர் பெறவேண்டும். இப்படிப் பல ‘டும் டும் டும்’கள். இதன் முடிவு 2014 செப்டெம்பர் 24 அன்று தெரிந்துவிடும்.

எதற்கு இத்தனைச் சிரமப்பட்டு அனுப்புகிறோம்? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எப்படி இல்லாமல் ஆனது, உயிர்கள் இருப்பதற்கு அறிகுறியான மீத்தேன் உண்டா போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது, மண் மற்றும் கனிம வளங்களை அளப்பது போன்ற ஆராய்ச்சிகளை மங்கள்யான் மேற்கொள்ளும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு விண்கலன்களை அனுப்பும் அந்த மாபெரும் ஞானம்… அதை வளர்த்துக்கொள்வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

டூர் போய்விட்டு கேமரா இல்லை என்றால் எப்படி? மங்கள்யானில் ஒரு கலர் கேமராவும் உண்டு. இந்த உபகரணங்களின் மொத்த எடையே பதினைந்து கிலோதான். இவை தங்களுக்குத் தேவையான மின்சக்தியை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளும்.

தரையில் இருந்துகொண்டு எப்படிக் கலத்தை இயக்கப்போகிறோம்? செய்திகளைப் பெறப்போகிறோம்?

பெங்களூருதான் தலைமைக் கட்டுப்பாட்டகம். அத்துடன் பிஜி  தீவுக்கு அருகே இரு கப்பல்கள் தேவையான கருவிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நாசாவின் நெட்வொர்க்கும் இதில் நமக்கு சிறிது உதவப்போகிறது. கட்டளைகளை விண்கலத்துக்குப் பிறப்பித்துவிட்டு, அதன் முடிவு நமக்குத் தெரிய 6 முதல் 45 நிமிடங்கள்வரை ஆகலாம். மிக மெதுவான இணைய இணைப்பு உள்ள கணினியில் ஒரு லின்க்கை அழுத்திவிட்டு அந்த வலைத்தளம் திரையில் தோன்றும்வரை திட்டிக்கொண்டே காத்திருப்போமே, அதுமாதிரி. இதனாலும் கூடுதல் சிக்கல்கள்.

இப்போதுதான் (2008-ல்) நாம் நிலவையே நெருங்கினோம். அதற்குள் கடினமான செவ்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதுவும் இத்திட்டம் பிரதமரால் அறிவிக்கப்பட்டது 2012-ல்தான். அதன்பிறகு ஒரே வருடத்தில் விண்கலம் தயார்! ஏன் இந்த அவசரம்?

சீனாவின் சமீபத்திய செவ்வாய்த் திட்டம் தோல்வி என்றும் அதனால்கூட நாம் வேக வேகமாக ஒன்றை அனுப்பி அவர்களை முந்தப்பார்க்கிறோம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது பனிப்போர் வகைச் சண்டைகளை விரும்பும் மேலை நாடுகளால் சொல்லப்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசால் இது ஒரு சாதனையாகக்கூடக் காட்டப்படக்கூடும். ஆனால் இதெல்லாம் பல ஆண்டுகள் முன்னமேயே தொலைநோக்காகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது; மற்ற நாடுகளின் திட்டங்களோ, தேர்தல்களோ நம் திட்டங்களை மாற்றி அமைக்க முடியாது என்று ISRO கூறுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை இது ஒரு ‘காஸ்ட்லி’ திட்டம்தான். இந்தப் பணத்தில் நிச்சயம் சுகாதாரமான கழிவறைகள் பலவற்றைக் கட்டமுடியும். பாதாள சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும் கருவிகளைக் கண்டுபிடிக்கலாம். இவை ஒரு விண்கலத்தைவிட முக்கியமும் அவசியமும்கூட. ஆனால், எது முக்கியம் என்பதைவிட எது அவசியம் என்பதில் இதற்கு ஒரு விடை கிடைக்கக்கூடும். பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி சிலைகளை வைப்பது, உயிர்களைக் கொல்லும் ஆயுதங்கள் தயாரிப்பது போன்ற தேவையில்லாத திட்டங்களில் போடப்படும் பணத்தை, மனிதனின் அறிவைப் பல மடங்கு பெருக்கும் ஒரு விஞ்ஞான முயற்சியில் போடுவது நல்லது அல்லவா? செவ்வாய் என்பது நிச்சயம் அடையவேண்டிய, பெருமையான ஓர் இலக்கு. பிரபஞ்சத்தை அளக்க சந்திரயான் நாம் வைத்த முதல் அடி. மங்கள்யான் இரண்டாவது.

நன்றி : http://www.isro.org/mars/home.aspx

விக்கிபீடியா

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!