ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் படம்பிடித்துக் காட்டும் திரைப்படங்கள் இதுவரை தமிழில் வலுவாக வந்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மேலோட்டமாக அந்தப் பின்னணியில் சுற்றி வளைத்துத் தொட்டுச் சென்ற படங்களே வந்துள்ளன. ஈழத்தில் ஈழ மக்களோடு நின்று ஈழ மக்களின் வாழ்வியல் அவலத்தை முதன்முறையாக ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
முள்ளி வாய்க்காலில் 2009ல் நடந்த சண்டையில் புலிகள் முழுவதுமாக ஒடுக்கப்படுகிறார்கள். அந்த நிகழ்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகப் படம் தொடங்குகிறது. இடைவேளைக்கு முன்பான பகுதிகளில் ஈழ மக்கள் சிங்கள ராணுவத்தால் எதிர்கொள்ளும் அராஜகங்கள் காட்டப்படுகின்றன. புலிகளின் தவறுகள் என்று எதுவும் காட்டப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் தங்களுக்குப் போரே வேண்டாம், உயிர்தான் வேண்டும் என்கிறார்கள். தன் படையினரைச் சேர்ந்தவர் ஒருவரையே சுட்டுக் கொல்லச் சொல்லி தலைவர் வீரமரணம் அடைகிறார். பொதுமக்கள் முள்ளிவாய்க்காலைவிட்டுச் செல்லக்கூடாது, அது பிறந்த மண்ணைக் கைவிடுவதற்குச் சமம், அதையும் மீறிச் சென்றால் அவர்களைக் கொல்லுவோம் என்று தமிழ்ப் போராளிகள் அறிவிக்கிறார்கள்.
இதையும் மீறிப் பத்து பேர் கொண்ட குழு தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா செல்ல முடிவெடுக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் கடலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. கடலில் வழிதவறிப் பயணம் செய்யும் அக்குழு எதிர்கொள்ளும் உயிர்ப் போராட்டங்களே மீதிக் கதை. இடைவேளைக்குப் பிறகு வரும் இக்காட்சிகள் உயிரை உலுக்குவதாக உள்ளன. இதை அனுபவித்த ஈழத் தமிழர்களைத் தவிர, மற்றவர்கள் இதைப் புரிந்துகொள்ள இயலுமா என்பதுகூட யோசனையாகவே உள்ளது. சராசரித் தமிழ்ப்பட ரசிகர்கள் ‘ரொம்ப அதிகப்படுத்தி காமிக்கிறாங்க’ என்று நினைக்கூடும்.
முதன்முறையாக ஈழத் தமிழரின் இன்னல்கள் தமிழ் வெகுஜனத் திரைப்படம் ஒன்றில் காட்டப்படுவது பெரிய சாதனைதான். ஆனால் அது இத்தனை நாடகத்தனமாக இருப்பது பெரிய வேதனையைத் தருகிறது. இடைவேளை வரும் காட்சிகள் வலுவில்லாமல் வெறும் வீர வசனங்களால் நிரம்பியிருக்கின்றன.
பிரபாகரன் கொல்லப்படுவதற்குக் காட்டப்படும் காரணம் மேலோட்டமாக உள்ளது. அவர் சிங்களவர்களால் கொல்லப்படவில்லை என்று இயக்குநர் நம்புகிறார் போல. அதற்கு அவர் காட்சிப்படுத்தியிருக்கும் காட்சிகள் எவ்விதத்திலும் நியாயம் சேர்க்கவில்லை.
படத்தில் எங்கும் பிரபாகரன் என்றோ புலிகள் என்றோ ராஜபக்ஷே என்று ஒரு வார்த்தைகூட வரவில்லை! இத்தனை முக்கியப் படத்தைக்கூட இப்படித்தான் எடுக்கவேண்டிய நிலை உள்ளது வெட்கப்படவேண்டியது. ராவண தேசத்திலிருந்து ராம தேசத்துக்குச் செல்லும் மக்களின் இன்னலுக்கு ராம தேசம் என்ன விடை வைத்திருக்கிறது என்பதையும் இயக்குநர் காட்டப்போகிறார் என்று காத்திருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. ராம தேசத்தின் நிலையை ஈழத் தமிழர்களின் பார்வையில், கடலில் மரணிக்கும் தருவாயில் அவர்கள் சொல்லும் வசனங்களோடு விட்டுவிடுகிறார் இயக்குநர். பயணம் செய்து கிட்டத்தட்ட மரணத் தருவாயில் அவர்கள் ராமதேசம் வருவதோடு படம் முடிந்துவிடுகிறது.
ஈழத் தமிழ் இப்படத்தில் கொலை செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். அவர்கள் பேசும் தமிழ் ஈழத் தமிழ் போலும் இல்லாமல், தமிழ்நாட்டுத் தமிழ் போலும் இல்லாமல் இருந்து வதைக்கிறது. திடீரென்று தூய தமிழும் தலைக்காட்டுகிறது. எதிலேயும் ஒரு அக்கறை இல்லை. ஒரு முக்கியமான திரைப்படத்தை எடுக்கும்போது செய்திருக்கவேண்டிய பின்னணித் தகவல்கள் திரட்டும் பணி இப்படத்தில் ஒழுங்காகச் செய்யப்படவில்லை. அவர்களின் கஷ்டத்தைக் காட்டினால் போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டதால், படம் மிகவும் மேலோட்டமாக உணர்வுகளைப் பேசுவதோடு நின்றுவிட்டது. சண்டையே வேண்டாம், உயிர் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் மனிதர்கள் அகதிகளாக ஆகக்கூட முடியாத அவலநிலையைச் சொல்லும் ஒற்றைப் பரிமாணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகையப் படங்கள் இன்னும் ஆழமான ஆய்வோடும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளோடும் வெளியாவது நல்லது. தமிழில் மட்டுமே இந்நிலை சாத்தியமில்லாமல் உள்ளது. இனி வரப்போகும் அத்தகைய நல்ல படங்களுக்கு முதற்படியாக இப்படம் அமையும் வாய்ப்புள்ளது என்பது மட்டுமே இப்படத்தின் சாதனை.
ராவண தேசம் – 40%
தமிழ்பேப்பர் திரை விமர்சனக் குழு