எழுத்தாளர் இரா. முருகனின் கதை – வசனத்தில் அமைந்த மூன்று நாடகங்களைச் சமீபத்தில் ஷ்ரத்தா (Shraddha) நாடகக்குழுவினர் சென்னை நாரதகனா சபாவில் அரங்கேற்றினர். ஆனந்த் ராகவின் சிறுகதைகள் உட்பட ஏற்கெனவே பல நாடகங்களை அரங்கேற்றிய அனுபவம் கொண்ட அவர்கள், இம்முறை முருகனின் ஆழ்வார், சிலிகான் வாசல், எழுத்துக்காரர் என்ற மூன்று நாடகங்களை வரிசையாக அரங்கேற்றினர்.
கதை, கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை, திரைப்பட வசனம் என்று ஏற்கனவே படைப்புலகில் அழுத்தமாக தனது முத்திரையைப் பதிவு செய்திருக்கும் இரா.முருகன், நாடகத்துறைக்கு தற்போது ’லேட்’ ஆக வந்தாலும், ‘லேடஸ்ட்’ ஆக வந்திருக்கிறார். தனது குறும்பான வசனங்கள் மூலம் பல விஷயங்களை அவர் ‘சொல்லாமல் சொல்லி’ இருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.
ஆழ்வார்
1980கால கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட நாடகம் இது. திரை மேலே உயர்ந்ததுமே அரங்க அமைப்பு கண்ணைக் கவர்கிறது. முதலில் கண்ணுக்குப் படுவது ‘வைதேகி காத்திருந்தாள்’ பட போஸ்டர். அதன் வலப்புறம் ராஜா டீ ஸ்டால். இடப்புறம் பொன்முடி திருத்தகம். (பொன்முடி முடி திருத்தகம்னு இருக்கணும். பாரு எப்படி எழுதியிருக்கான்னு என்று ஆழ்வார் இதற்கு பின்னால் ஒரு விளக்கம் கொடுப்பார்) அதற்கு முன்னால் ஒரு ரைஸ் மில். அதற்கு இடப்புறம் எதிரே ராஜ் மேன்ஷன். மாடியில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டே, அரட்டை அடித்துக் கொண்டே சீட்டாடிக் கொண்டிருக்கின்றனர் மூன்று இளைஞர்கள். அது சென்னையின் ஒரு தெரு என்பது உடனே தெரிய வருகிறது. நடுநாயகமாக நாற்காலி போன்ற ஒன்றில் அமர்ந்திருக்கிறார் நாமம் போட்ட ஒரு பெரியவர். அவர் கையில் ஒரு குடை.
சைக்கிளை ஒருவர் தள்ளிக் கொண்டு வருவதோடு காட்சி துவங்குகிறது. இரண்டு பேர் ரைஸ் மில்லில் இருந்து வெளியே வந்து மாவைக் கொட்டி அதில் விழுந்திருக்கும் போல்ட்-நட்டைத் தேடுகின்றனர். ‘அடேங்கப்பா எவ்ளோ கரப்பான்பூச்சி. ஒவ்வொண்ணும் நம்ம மாவைத் தின்னு சிக்கன் சைஸூக்கு வளர்ந்திருக்குப்பா’ என்கிறார் ஒருவர். அவர்கள் செல்ல, இளைஞர்களின் மேன்ஷன் அரட்டை + சீட்டாட்டம் தொடர, பெரியவர் தனது குடையால் காலைச் சுற்றி வரும் கரப்பான் பூச்சியை அவ்வப்போது தள்ளி விடுகிறார். பின் திடீரென்று எழுந்து கொண்டு ‘சடகோபன், சடகோபன்’ என்று உரக்கக் கூவுகிறார், மேன்ஷனைப் பார்த்து. பின் மீண்டும் சென்று அமர்கிறார்.
சிறிது நேரத்தில் மீண்டும் எழுந்து வந்து மேன்ஷனைப் பார்த்துக் குரல் கொடுக்கிறார். ஒருவேளை தூங்கிண்டிருக்கானோ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே மீண்டும் சென்று அமர்கிறார். அப்போது பிரசவலேகியமும், மூங்கில் குருத்து ஊறுகாயும் விற்கும் ‘கறுப்பு ராசாவைத்’ தேடி வருகிறார் ஓர் இளைஞர். அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது, ஆழ்வார் நாடகம்.
இறந்து விட்ட சடகோபனை இருப்பதாகக் கருதி வாழ்கிறார் ஆழ்வார். சடகோபன் அவருக்கு மாப்பிள்ளையாக வேண்டியவன். ஆழ்வாரின் மனைவி வியாதியில் போய்ச் சேர்ந்துவிட ஒரே மகளைக் கரை சேர்க்க வழியும் அறியாமல், வாழ்க்கை நடத்தவும் தெரியாமல் வறுமையில் திண்டாடுகிறார். இதில் வீட்டில் முன்னோர்களால் ஏளப்பண்ணப்பட்ட ஆஞ்சநேயருக்கு ஆராதனை வேறு. அதற்காகப் பணம் திரட்ட சடகோபனையும் அவன் நண்பர்களையும் நாடிச் செல்கிறார். சடகோபன் இறந்து போனது தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை நம்ப விரும்பாமல் பார்ப்பவர்களையெல்லாம் சடகோபனின் நண்பனாகவே நினைத்து பேசுகிறார். சிலரை ஆஞ்சநேயர் ஆராதனைக்கு என்று சொல்லி வீட்டுக்கும் கூட்டி வந்து விடுகிறார். அப்படி கறுப்பு ராசாவைத் தேடி வந்த ராஜுக்கும் சடகோபனுக்காகக் காத்திருக்கும் ஆழ்வாருக்கும் நடக்கும் உரையாடல் தான் நாடகத்தை நகர்த்திச் செல்கிறது.
‘இந்த சடகோபனும் இப்படித்தான் தெரியுமோல்லியோ, உன்ன மாதிரியே பின்னாடி கையக் கட்டிண்டு நடப்பான். திடீர்னு, மாமா என்ன சொன்னேள்னு கேட்பான். திருமண் இட்டுண்டு ஆபீஸ் போனா என்னன்னா, வந்து இட்டுண்டாப் போச்சும்பான். பேண்ட், சட்டையும் நெத்தியிலே திருமண்ணும் சரியா வராதோ என்னவோ… நீ என்ன சொல்ற!’ என்றெல்லாம் அவர் பேசப் பேச, கோர்ட், சிரஸ்தார், முன்சீப், முதலியார் என்றெல்லாம் அவர் சொல்லச் சொல்ல ராஜுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘அனுமார்… திருக்கோளூர்லேர்ந்து வந்த ரூபம்… ஒரு மகான் கொடுத்துட்டுப் போனது… நோக்கு திருக்கோளூர் தெரியுமோல்லொயோ… அதாம்பா, உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம்னு வருமே ஒரு பாசுரம்’ என்று சொல்லி கன கம்பீரமாக அந்தப் பாசுரத்தை ஆழ்வார் பாட, பார்க்கும் எல்லாருக்கும் மெய் சிலிர்ந்துப் போகிறது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் கை கூப்பி வணங்கினார், கண்களில் வழிந்த கண்ணீரோடு.
பெரியவர் தொடர்கிறார். ‘அனுமார்னா பட்டாபிஷேகத்துலே பவ்யமா, ஒரு ஓரமா கையக் கூப்பிச் சேவிச்சுண்டு நிக்கற அனுமார்னு நினைச்சிடாதே… சதுர்புஜ அனுமாராக்கும்… கம்பீரமான ரூபம்… காலை இதோ இப்படிப் பரப்பி… இந்த உலகமே எனக்குத் தூசுங்கற பார்வையோட கையக் கட்டிண்டு கம்பீரமா இப்படி…’ என்று சொல்லி அவர் நின்று காண்பிக்கும்போது மேடைக்கு அனுமாரே வந்து விட்ட மாதிரிதான் தோன்றியது. சபாஷ் ஆழ்வார் (ஆழ்வாராக நடித்தவர் டி.டி.சுந்தர்ராஜன்).
ராஜூ அவரிடமிருந்து விலகிச் செல்ல நினைக்க, அவரோ அவனை கையைப் பிடித்து அழைத்து தன் வீட்டிற்கே அழைத்துச் சென்று விடுகிறார். வீட்டில் காத்திருக்கிறாள் வைதேகி. ஆழ்வாரின் மகள். சடகோபனுக்கு உரிமையாக வேண்டியவள், அவன் தீடீர் மறைவால் வாடி வயிற்றுப்பிழைப்பிற்காக வற்றல், வடகம் இட்டுப் பிழைக்கிறாள்.
வைதேகி – ராஜ் உரையாடல்கள் சிறப்பு. ‘கரண்ட்காரன் ஃப்யூஸைப் பிடுங்கிண்டு போனமாதிரி கட்டாத கடனுக்காக பேங்க்லே இந்த வடாத்தை எல்லாம் எடுத்துண்டு போவாளோ என்னமோ’ என்று அவள் கூறுவதில் அப்படி ஓர் அப்பாவித்தனம். குடும்பத்தின் நிலைமை ராஜுக்குப் புரிகிறது. அந்த வடகங்களை விற்பதற்காக தனது கடையே வாங்கிக் கொள்ளும் என்றும் மறுநாள் கடைக்கு வந்து என்னைப் பாருங்கள் என்றும் சொல்கிறான்.
வீட்டுக்கு வெளியே வாசலில் தையற்கடை வைத்திருக்கும் பாய் அழைத்ததில் வெளியே சென்று விட்டு வரும் ஆழ்வார், உள்ளே வந்ததும் “மனுஷாள்ல ஒருத்தரைப் பத்தி நாம நினைக்கறது எவ்வளவு சீக்கிரம் பிசகாப் போயிடறது” என்று சொல்வது, சில விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. அவர், ராஜூவிடம் அனுமாரைச் சேவிக்கச் சொல்லி ஆராதனை நோட்டை எடுத்து நீட்ட, அதில் ரூபாயை வைத்து விட்டு, கடை விலாசமாக, தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை வைதேகியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து செல்ல முற்படுகிறான் ராஜூ.
“உங்க பேர் எழுதலியே” என்கிறாள் வைதேகி.
“சடகோபன்னு வச்சுக்கங்க” என்கிறான் ராஜ்.
“கடைல வந்து அந்தப் பேரைச் சொன்னா உங்களைப் பார்க்க முடியுமா?”
“இல்ல. இல்ல. அடைக்கலராஜ்ன்னு சொல்லுங்க. முதலாளி என்னைக் கூப்பிட்டு விடுவார்” என்று சொல்லிச் செல்கிறான்.
வைதேகி திகைத்துப் போய் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நாடகமும் முடிகிறது.
வைணவ ஆழ்வார்…. அவர் வீட்டு வாசலில் கடை வைத்து அவருக்கு வாடகை தரும் இஸ்லாமியத் தையல்காரர்… ஆழ்வாரின் கஷ்டம் புரிந்து அவர் குடும்பத்துக்கு உதவ முன்வரும் கிறித்துவ அடைக்கலராஜ்.
இரா.முருகன் மூன்று மதத்தையும் ஒருபுள்ளியில் இங்கே இணைத்து விட்டார். நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாமே மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். ஆழ்வாராக நடித்த டி.டி.எஸ். அசத்தி விட்டார். அவருக்கு நாடக உலகில் நாற்பதாண்டு அனுபவமாம். ஆனால் 30 வயது ளைஞர் பாத்திரத்தில் வரும் ராஜூவாக நடித்த அந்த இளைஞரும் டி.டி.எஸுக்குச் சமமாக நடித்திருந்தது சிறப்பு.
நாடகம் துவங்கும்போதே அது நிகழும் காலம் எது என்பதை அரங்க அமைப்பும், வைதேகி காத்திருந்தாள் பட போஸ்டரும், வானொலியில் ஒலிக்கும் பாடலும் சுட்டிக் காட்டி விடுகிறது. ஆந்திரா மெஸ், கோமதி சங்கர் மிட்டாய் கடை என்று வசனமும் காலம் காட்ட உதவுகிறது. ஆனால் வைதேகி காத்திருந்தாள் என்பது வெறும் படத்தை மட்டும் குறிக்கவில்லை. ஆழ்வாரின் மகள் வைதேகி காத்திருப்பதையும்தான் பூடகமாகக் குறிக்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக வசனத்தில் ஆழ்வார், “இங்க வைதேகியும் காத்திண்டு இருக்கா .. சினிமாகூட அந்தப் பேர்ல எடுத்துட்டான் பாத்தியோ” என்று சொல்லியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.
ராஜூவை ஆழ்வார் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் நடக்க நடக்க, கூடவே ஸ்க்ரீனும் நகர்வது போன்ற காட்சி அமைப்பு மிகவும் சிறப்பு. ஒலி, ஒளி இரண்டுமே நாடகத்துக்குக் கூடுதல் பலம்.
சிலிகான் வாசல்
இது ஐ.டி துறையினரின் சிக்கலைப் பேசும் நாடகம். இதற்கு மிக வித்தியாசமாக அரங்க அமைப்பு செய்திருந்தார்கள். சினிமே செட் போல அந்தச் சின்ன அரங்கத்திற்குள் ஒரு ஐ.டி. ஆஃபிஸையே கொண்டு வந்து விட்டிருந்தார்கள்.
கதாநாயகன் சோலையப்பனால் சொன்னபடி சொன்ன தேதிக்குள் ப்ராஜெக்டை முடிக்கமுடியவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் துரை (தேவ்) கோபமுறுகிறார். வேலையை உடனடியாக முடி. இல்லாவிட்டால் வாசல் திறந்துதான் இருக்கு போ என்கிறார். அந்தச் சொல் சோலையப்பனை துன்புறுத்துகிறது. நண்பர்களோ இந்த வேலையை விட்டு விட்டு வா என்கிறார்கள் ஆனால் அவனுக்கோ வேலையை விட்டுப் போக மனமில்லை. விசுவாசம் தடுக்கிறது. மனமோ தன்னால் செய்ய முடியும் என்கிறது.
மனைவியோ வழக்கமான மனைவியாக இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சோலையைப் படுத்துகிறாள். பிளாஸ்மா டி.வி. இல்ல. தண்ணிக்குக் கஷ்டப்பட வேண்டி இருக்கு. 300 ரூபாய்க்கு ரங்கநாதன் தெருவுல அலைஞ்சு ட்ரஸ் வாங்க வேண்டியிருக்கு என்று புலம்பல். 30 வயது கடந்த சோலையப்பன் தடுமாறுகிறான். ஆபிஸிலேயே தங்கி ஓய்வு, உறக்கம் இல்லாமல் உழைக்கிறான். சிற்றப்பா மகள் திருமண வரவேற்பிற்கு அழைத்துச் செல்ல முடியாமல் மனைவியிடம் திட்டு வாங்குகிறான்.
மேனேஜர் ஐயங்காரோ சோலைப்பனை விட சூசைதான் கெட்டிக்காரன் என்று ரகசியக் குறிப்பை மேஜை ட்ராயரில் எழுதி வைத்து விட்டு, நடு ராத்திரியில் தன் வீட்டிலிருந்து ஆபிஸுக்குப் போன் செய்து சோலையப்பனை வேலை வாங்குகிறார். அந்தக் குரலின் மிடுக்கும், நீ செய்துதான் ஆக வேண்டும் என்ற மறைமுக அதிகாரத் தொனியும், சோலையப்பன் புலம்புவதும் ரசனை.
கஸ்டமர் என்ற பெயரில் வரும் ஆடாது, அசையாது அமர்ந்திருக்கும் பாத்திரம் நல்ல உத்தி. சோலையப்பன் தடுமாறும்போதெல்லாம் அவனை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, அறிவுரை சொல்லி நண்பன் போல் இருக்கும் அந்த ‘கஸ்டமர்’, நாடக இறுதியில் அவனை ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலைக்குத் தூண்டுவது ஒரு நகை முரண். பேசும் கம்ப்யூட்டராக தலையில் கம்ப்யூட்டரைச் சுமந்து பதில் சொல்லும் பாத்திரமும் ஒரு புதுமை.
பேக் அப் எடுக்காததால் வரும் தொல்லையை, க்ளௌடில் அது ‘சேவ்’ ஆவதை, ஐ.டி. துறையினரின் இன்னும் பல பிரச்சனைகளை குறிப்பாகச் சொல்கிறது இந்த நாடகம். நாடகத்தின் நடு நடுவே தேவ் குறுக்கும் நெடுக்குமாக வந்து வாசல் அங்க இருக்கு, வாசல் அங்க இருக்கு என்று நாடகத்தின் தலைப்பை சுட்டிக் காட்டிச் செல்வது நல்லதொரு நகைச்சுவை.
ஐ.டி. துறையினர் என்றால் சுகவாசிகளாக, காசு, பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பர் என்று நினைத்திருந்த எனக்கு, ‘தண்ணிக் கஷ்டமா இருக்கு. 300 ரூபாய்க்கு ரங்கநாதன் தெருவுல அலைஞ்சு ட்ரஸ் வாங்க வேண்டியிருக்கு’ என்று சோலையப்பனின் மலைவி புலம்புவது போன்ற சொல்லாடல்கள் வியப்பைத் தந்தன.
நாடகத்தில் தேவ் ஆக நடித்து வாசலைக் காண்பித்தவரது உடல் மொழியும் அந்த திமிர் பேச்சும் அருமை. அவரே, பின்னர் எழுத்துக்காரர் நாடகத்தில் ரகு பாத்திரத்தில் அம்மாஞ்சி மாதிரி முகபாவம் காண்பித்து நடித்து மேலும் அசத்தி விட்டார். அதுபோல மேனேஜர் ‘ஐயங்காராக’ வந்தவரும் ரொம்ப அசால்டாக நடித்திருந்தார். அவரே பின்னர் மனைவி சொல் மந்திரவாதியாக எழுத்துக்காரரில் தலைகாட்டியிருக்கிறார். அதுபோல அந்த குறுந்தாடி + கண்ணாடி அணிந்த ஐ.டி. இளைஞரும் என்னை மிகவும் கவர்ந்தார். அசால்டான, அலட்சியமான ஐடி இளைஞர்களுக்கே உரிய பாடி லாங்குவேஜ். குடத்தைத் தூக்கிச் செய்யும் கிண்டல் வசனம் என சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருந்தது எழுத்தாளர் மற்றும் இயக்குநரின் திறமையைக் காட்டியது.
குறிப்பாக அந்தக் குடங்கள். புதிய குடங்களாக இல்லாமல் நாம் வீட்டில் பயன்படுத்துகிற பழைய குடங்களாய்க் காண்பித்தது சிறப்பு.
எழுத்துக்காரர்
கடிதங்களை மின்னஞ்சல்களாக அனுப்புவதில் ஒரு அன்னியோன்னியம் இருப்பதில்லை என்று கருதும் நந்தினி பரணன் (பெயர் சரிதானா!?) தனது கணவரைக் கலந்தாலோசித்து சேவை.காம் நடத்தி வரும் ரகுவோடு ‘சாட்’ செய்வதாகத் துவங்குகிறது நாடகம். ஃபேஸ்புக்கில் எதற்கெடுத்தாலும் ‘லைக்’ போடுபவர்களின் தலையில் சற்று ஓங்கிக் கொட்டி விட்டே நாடகம் துவங்குகிறது. ரகுவிடம் தங்களுக்கு ஒரு எழுத்துக்காரர் வேண்டும் என்று கேட்கிறார் நந்தினி. அதற்காக அவர் போடும் கட்டளைகள்தான் சுவாரஸ்யம். அரங்கில் அப்போது தொடர்ந்த சிரிப்பொலி கடைசிவரை கேட்டுக் கொண்டே இருந்தது.
சில கட்டளைகள்….
எழுத்துக்காரர் தினசரி குளிப்பவராக, தூய்மையான ஆடை அணிந்தவராக இருக்க வேண்டும். மூக்குப் பொடி, வெற்றிலை, புகையிலை, பான்பராக் மெல்வது, சிகரெட் பிடித்தல் போன்ற எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவராக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் தினந்தோறும் ‘ஷேவ் ’ செய்து விட்டு வருவது அவசியம். இருப்பிடம் நான்காவது மாடியில் அமைந்த குடியிருப்பு என்பதையும், அவ்வப்போது லிப்ட் வேலை செய்யாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எங்கள் குழந்தை நஜனுடன் விளையாடக் கூடாது. போன் அடித்தால் இரண்டாவது மணியிலேயே எடுத்து விட வேண்டும். புத்தகங்கள் படிக்கலாம். ஆனால் அரசியல், சினிமா புத்தகங்கள் கொண்டு வரக் கூடாது. பாட்டு கேட்கக் கூடாது. நாற்காலியைச் சுவரோரம் போட்டு சுவரில் தலை சாய்த்து காலை நீட்டி அமரக் கூடாது. சிந்தாமல், சிதறாமல் மதிய உணவைச் சாப்பிட வேண்டும். உணவின் வாசனை அறையில் ஒருபோதும் இருக்கக் கூடாது. வரவேற்பறை தாண்டி பிற அறைகளுக்குச் செல்லக் கூடாது. கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது. அபார்ட்மெண்ட் கீழே உள்ள பொதுக் கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ள ஆட்சேபணை இல்லை.
சில கடிதங்களை ஐபேடில் செய்திருப்போம். அவற்றைக் கேட்டு அப்படியே copy செய்ய வேண்டும். இந்த வேலை பழகியதும், சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லியோ, கம்ப்யூட்டரில் எழுதியோ வைத்து விடுவோம். அவற்றை விரிவாக்கி, முந்தைய கடிதங்களோடு தொடர்பு படுத்தி முழுக் கடிதமாக எழுத வேண்டும். ஆனால் எங்களிடம் காண்பித்து அனுமதி பெற்றபின் தான் அனுப்ப வேண்டும்.
ரகசியம் காப்பவராக இருக்க வேண்டும்.
பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்கள், செக்யூரிட்டி இன்னபிறருடன் பேசக் கூடாது. புன்சிரிக்கலாம் தப்பில்லை. யாராவது தண்ணீர் கேட்டால் கொடுக்கலாம்.
இப்படியாக பல கண்டிஷன்களைப் போடுகிறார்.
நாடகத்தின் முடிவில் வரும் ட்விஸ்ட் ஒரு அவலத்தைச் சொல்கிறது. லைட்டிங்குக்கு ஏற்ப மாறி, மாறி நின்று அவர் கண்டிஷன்கள் போடுவது மாதிரியான உத்தி நாடகத்துக்கு மேலும் சுவை கூட்டியது.
கணவன் பரணன் எல்லாவற்றையும் மனைவி பொறுப்பில் விட்டு விடுவதும், நான் பேச வேண்டியதெல்லாம் நீயே பேசிட்டியே என்பதும் அழகான மனைவியின் அன்புப்பிடியில் இருக்கும் கணவர்களின் அடிமைத்தனம் என்று நினைத்தால் sorry. உண்மை அதுவல்ல. மனைவி அறிவாளியாக, புத்திசாலியாக இருந்தால் எல்லா பொறுப்புகளையும் அவள் தலையில் கட்டி விட்டு தான் மட்டும் எஸ்கேப் ஆகும், free ஆக வாழ நினைக்கும் ஆணாதிக்கவாதிகளைத் தான் பரணன் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார் முருகன்.
மொத்தத்தில் நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே உணர்ந்து நடித்திருந்தனர். அது செக்யூரிடியாக இருந்தாலும் சரி, வாட்ச்மேன் சாமிநாதனாக இருந்தாலும் சரி. சின்னப் பாத்திரம் என்றாலும் கூட அதை நிறைவாகச் செய்திருந்தனர். அரங்க அமைப்பு, ஒலி, ஒளி, மேக்கப் என்று எல்லாமே சிறப்பாக இருந்தது. ஒரு நல்ல டீம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை ’ஷ்ரத்தா’ வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது.
சோலையப்பனைப் பற்றியும் (சிலிகான் வாசல்) நந்தினியைப் பற்றியும் (எழுத்துக்காரர்) ஒன்றுமே சொல்லவில்லை என்று பார்க்கிறீர்களா? அவர்கள் எங்கே நடித்தார்கள், அந்தப் பாத்திரமாக அல்லவா மாறி விட்டார்கள்!!
ஏற்கெனவே திரைக்கதை வசனத்தில் (உன்னைப் போல் ஒருவன்) தனி முத்திரை பதித்த இரா.முருகன், தற்போது நாடகத்துறையிலும் தன் தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார். தன் சிறுகதைகளை நாடகமாக்கும் அதே சமயம், நாடகத்திற்கென்றே புதிதாக அவர் நிறைய எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
0