இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள்.
முகம்மது ஜியாவுதீன், ஓர்லாண்டோ மசோட்டா, கிளாசி மாலங், பகவான்ஜி, கும்நாமி பாபா, சவுல்மரி, இச்சிரோ உக்குடா போன்ற பல பெயர்களில் உலகின் பல பகுதிகளில் நேதாஜி உலவியிருக்கிறார். உலகின் மிகச்சிறந்த போராளி செய்யவேண்டிய அனைத்து செயல்களையும் தவறாமல் செய்தவர். அப் போராளி எதிர்கொள்ளவேண்டிய அனைத்து சிக்கல்களையும் துணிவுடன் எதிர்கொண்டவர். அப் போராளி பெறவேண்டிய பெரும் புகழினையும் பெற்றவர்.
தனிமையில் இனிமை
ஒடிசாவின், கட்டாக்கில், ஜானகிநாத் போஸ் – பிரபாவதிதேவி என்ற ஓர் இந்து வங்காளித் தம்பதியருக்கு 15 குழந்தைகள் பிறந்தன. அதில் ஒன்பதாவது குழந்தையாக 23.01.1897ஆம் நாள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். போஸ்க்கு எட்டு சகோதர்கள் மற்றும் ஆறு சகோதரிகள் இருந்தனர். போஸின் தந்தை பிரபலமான வழக்கறிஞர். நிறைய பணம் புலங்கியது. பெரிய வீடு. நிறைய உறவு. ஆனால், போஸ் தனிமையை விரும்பினார்.
ஆரம்பக்கல்வி பயில்வதற்காக ஐந்து வயதில் போஸை ப்ராட்டஸ்டன்ட் ஐரோப்பிய பள்ளியில் சேர்த்தனர். பிரிட்டிஷாரைகிலப் பாடம் அவருக்கு ஒத்துவரவில்லை. குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் போதனை அவரைக் கவர்ந்தது. ஆன்மிகத்தில் மனம் ஈடுபட்டது. பள்ளியில் அவருக்கு பைபிள் போதிக்கப்பட்டது. கிறித்துவத்திற்கும் இந்துத்துவத்திற்கும் இடையில் ஊசலாடினார்.
1913ஆம் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர் கல்வியை முடித்து அதில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்றார். தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். தனிமை அவருக்கு இன்பத்தையும் நிம்மதியையும் அளித்த்து. காசி, ஹரித்துவார், பிருந்தாவனம் எனப் பல ஆன்மிகத்தளங்களுக்குச் சென்றார். சந்நியாசிகளிடமும் மத, சாதி காழ்ப்புணர்வுகள் இருப்பதைக் கண்டு ஆன்மிகத்தில் வெறுப்படைந்தார். வீடுதிரும்பினார்.
முதல் எதிர்ப்பு
1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்தார். அங்குப் பணியாற்றிய சி.எப். ஓட்டன் என்ற பிரிட்டிஷ் பேராசிரியர் இந்தியர்களை இழிவாகப் பேசியதும் நடத்தியதும் போஸால் சகிக்கமுடியவில்லை. மாணவர்களைத் திரட்டி ஓட்டனைத் தாக்கினார். இந்தியர்களுக்காகப் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போஸ் நடத்திய முதல் போர் இது.
ஓட்டன் தாக்குதல் தொடர்பாக போஸ் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் 1917ஆம் ஆண்டு சேர்ந்தார். 1919ஆம் ஆண்டு பி.ஏ. படிப்பினை முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்.
பஞ்சாப்பிலுள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 13.04.1919ஆம் நாள் நடத்தப்பெற்ற படுகொலை போஸைக் கலங்கச்செய்தது. பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு அவருக்குள் மிகுந்தது. ஆனால், காலம் வேறுவிதமாகக் காய்களை நகர்த்தியது. போஸ் வெறுக்கும் பிரிட்டனுக்கே அவரை அனுப்பிக் கல்வி கற்க வைத்தது.
சுதந்திர தாகம்
தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப ஐ.சி.எஸ். படிப்புக்காக லண்டன் சென்றார். 1920 ஐ.சி.எஸ். தேர்வினை எழுதினார். நான்காவது மாணவராகத் தேர்ச்சிபெற்றர். அங்கு வந்திருந்த சரோஜினி தேவி இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அவ் உரை போஸைக் கவர்ந்தது. அது புதிய தெம்பினை அவருக்கு அளித்தது. இந்தியாவில் காந்தி புதிய வீச்சுடன் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை இந்தியர்கள் மத்தியில் தூண்டிக்கொண்டிருந்தார். இந்தியா சென்று விடுதலைப்போரில் பங்கெடுக்க வேண்டும் என்று போஸ் விரும்பினார்.
1921ஆம் ஆண்டு மே மாதம் தன்னுடைய ஐ.சி.எஸ். பதவியை ராஜனாமா செய்தார். 26.07.1921 ஆம் நாள் மும்பை வந்தார். காந்தியைச் சந்தித்தார். அவர் கல்கத்தாவில் உள்ள சி. ஆர். தாஸைச் சந்திக்கும்படிக் கூறினார். சென்றார். சந்தித்தார். சி.ஆர். தாஸ், போஸின் துணிவினையும் பலத்தினையும் புரிந்துகொண்டார். தன் வலது கரமாகப் போஸை வைத்துக்கொண்டார்.
சிறிய வயதில் பெரிய பதவி
கல்கத்தாவில் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதன் தலைவராக 25 வயதான போஸ் நியமிக்கப்பட்டார். மாணர்கர்களுக்குப் பாடம் நடத்தும் பாங்கில் சுதந்திர உணர்வை ஊட்டினார்.
முதல் உலகப்போரில் பிரிட்டன் சார்பாக இந்திய வீரர்கள் கலந்துகொண்டமையைப் பாராட்டும் வகையில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவின் வைசிராயராக லார்ட் ரீடிங் இருந்தார். அவர் இளவரசருக்கு இந்தியாவைச் சுற்றிக்காண்பிக்க எண்ணினார். இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பினை வலுவாகக் காட்டவேண்டும் என்று ரகசியமாகத் திட்டமிடப்பட்டது.
இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடையடைப்பு, வீட்டிற்குள் இருத்தல் என்ற முறையில் இளவரசருக்கு ஓர் இந்தியரும் தன் முகத்தைக்காட்டக்கூடாது என்று உறுதிகொண்டனர். இதுகுறித்து இந்தியாவின் பல இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
கல்கத்தாவில் பிரச்சாரம் செய்யும் குழுவிற்குத் தலைவராகப் போஸை சி.ஆர். தாஸ் நியமித்தார். கல்கத்தாவைப் போஸ் தன் கண்ட்ரோலுக்குக் கொண்டுவந்தார். 17.11.1921இல் இளவரசர் பம்பாய் வந்தார். அந்த இடம் மனிதர்கள் வாழா இடம்போலக் காட்சியளித்தது. கல்கத்தா வந்தார். அங்கு மயான அமைதி நிலவியது. திட்டமிட்டபடியே போராட்டம் சக்சஸ். கல்கத்தாவில் மட்டும் டபுள் சக்சஸ்.
சி.ஆர். தாஸ் போஸைப் பெரிதும் பாராட்டினார். இதற்குக் காரணம் போஸ்தான் என்பதனை அறிந்த பிரிட்டிஷாருக்கு வியர்த்தது. காரணம், பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை போஸ் பற்றி ஐந்து கருத்துகள் இருந்தன. ஓர் அகிம்சை வாதி, காந்தியின் நண்பர், ஆபத்தில்லாதவர், ஒரு திவிரவாதி, சிக்கலான ஆள். இவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. பிரிட்டிஷார் கூட்டிக் கழித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தனர். போஸைக் கைதுசெய்து ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்தனர். அதன்பின் போஸ் பிரிட்டிஷாரின் கண்காணிப்புக்கு ஆளானார்.
கட்சியும் பதவியும்
காந்தியின் போராட்டங்களில் சி.ஆர். தாஸ்க்கு நம்பிக்கையில்லை. சட்டசபைத்தேர்தலில் இந்தியர்கள் பங்கேற்கவேண்டும் என்று அவர் காந்திக்குக் கோரிக்கைவிடுத்தார். காந்தி அதனை ஏற்கவில்லை. காந்தி கோஷ்டி – தாஸ் கோஷ்டி என்ற இரு பிரிவாக இந்தியர்கள் பிரிந்தனர். நேரு இரண்டு கோஷ்டிக்கும் நடுவில் நின்றார்.
தாஸ் சுயராஜ்ஜியக் கட்சியினைத் தொடங்கினார். ஃபார்வர்ட் என்ற பிரிட்டிஷாரைகில நாளிதழினைத் தொடங்கினார். அப் பத்திரிகையின் ஆசிரியராகப் போஸை நியமித்தார். இச்சூழலில் மத்திய சட்டசபை மற்றும் மாகாண அசெம்ப்ளிக்கான தேர்தல் வந்தது. அதில் இரண்டிலும் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. கல்கத்தா கார்ப்பரேஷன் மேயராக 27 வயதான போஸ் நியமிக்கப்பட்டார்.
இத்தருணத்தில் போஸின் மனநிலை பற்றி மருதன் தன்னுடைய “சுபாஷ் மர்மங்களின் பரம பிதா“ என்ற நூலில், “போஸ்க்கு இது முதல் முக்கியப் பதவி. “இதோ இந்தியா! உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!“ என்று அவரது உள்ளங்கையைப் பிரித்து அதில் ஒரு தேசத்தை வைத்து அழுத்தி மூடியதைப் போல் அவர் சிலிர்த்துக் கொண்டார். ஒரு குழந்தையைப் போல உள்ளங்கையை விரித்து விரித்துப் பார்த்துப் பூரித்துப் போனார். அடிமனத்தில் தேங்கிக் கிடந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றிடத் துடித்தார்.“ என்று எழுதியுள்ளார். ஆம் அத்தகைய மனநிலையைத்தான் போஸ் அடைந்தார்.
அதிரடி மாற்றங்கள்
பதவியேற்றதும் போஸ் தன் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துக்கொண்டார். கார்ப்பரேஷன் ஊழியர்களின் சீருடையைக் கதர்த்துணியாக மாற்றினார். பிரிட்டிஷாரின் பெயர்களைக் கொண்ட பொதுக் கட்டடங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றித் தேசியப் பெயர்களை இட்டார். பிரிட்டிஷார் வழங்கிவந்த பாராட்டுப் பட்டங்களையும் சான்றிதழ்களையும் நிறுத்தினார். இன்னும் பல மாற்றங்களால் பிரிட்டிஷார் உஷாரானனர். பிறகென்ன கைதுதான்.
கைது – கலவரம் – விடுதலை
போஸ்மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பெற்று 25.10.1924ஆம் நாள் அதிகாலை கைதுசெய்யப்பட்டார்.போஸ்க்கு ஆதரவாகக் கல்கத்தாவில் கலவரம் ஏற்பட்டது. ஆதலால் பிரிட்டிஷார் போஸை மாண்டலே சிறைக்கு மாற்றினர். அங்குப் போஸ்க்குக் கடும் நோய் ஏற்பட்டது. இந்நிலையில் சி.ஆர். தாஸ் காலமானார். போஸ் நிர்க்கதிக்குள்ளானார். 1926ஆம் ஆண்டு போஸ் சிறையிலிருந்தபடியே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனாலும் பிரிட்டிஷார் போஸை விடுதலை செய்யவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் 15.05.1927ஆம் நாள் போஸ் விடுதலை செய்யப்பட்டார்.
கட்சியில் பிளவு
தாஸின் சுயராஜ்ஜிய இயக்கத்தை அவருக்குப்பின் அவரது மனைவி வசந்திதேவி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று போஸ் விரும்பினார். ஆனால், வசந்திதேவியின் விருப்பப்படி போஸே தலைமைதாங்கினார். அது போஸின் அளவிற்கு இயக்கத்தில் ஈடுபட்டுவந்த சென்குப்தாவுக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டது.
ஃபார்வர்ட் பத்திரிகைக்கு எதிராகச் சென் குப்தா “அட்வான்ஸ்“ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். தனித்தனியே தேர்தலில் நின்றனர். காந்தி இருவருக்கும் இடையில் நின்று சமரசம் செய்தார். ஆதலால் சென் குப்தா தேர்தலிலிருந்து விலகினார். ஆனாலும் போஸ், ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அடுத்துவந்த வங்க மாகாணத் தேர்தலில் போஸ் நின்றார். வென்றார்.
அதிருப்தி அளித்த காந்தி
1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸின் மாநாடு கல்கத்தாவில் நடைபெற உள்ளதாக காந்தி அறிவித்தார். மாநாடு ஏற்பாடுகளைப் போஸ் கவனித்தார். மாநாட்டில் நேரு, “குடியேற்ற நாடு என்னும் அந்தஸ்தைப் பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு வழங்கவேண்டும்“ என்று தீர்மானம் நிறைவேற்றினார். இது போஸ்க்குப் பிடிக்கவில்லை. அதனை உடனே மறுத்து, “சுயராஜ்யம் மட்டுமே தேவை“ எனப் பேசினார். காந்தி இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, “31.12.1929க்குள் இந்தியா குடியேற்ற நாடு அந்தஸ்தைக் கொடுக்கவேண்டும். இல்லையெனில் சுயராஜ்ஜத்தையே நாங்கள் கோருவோம்“ என்றார். இருவழியாக மாநாடு அதிருப்தியில் முடிவுற்றது.
காந்தியின் கொள்கைகளோடு ஒத்துப்போக முடியாத நேரு, போஸின் கொள்கையை ஏற்றார். இருவரும் இணைந்து “விடுதலைக் சங்கம்“ என்ற ஒன்றைத் தொடங்கினர். மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
புறக்கணிக்கப்பட்டார்
நாட்கள் உருண்டன. காந்தி விதித்திருந்த கெடு முடிவுற்றது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு குடியேற்ற நாடு என்ற அந்தஸ்தை அளிக்கவில்லை. லாகூரிர் காங்கிரஸ் மாநாடு கூடியது. காந்தி, “சுயராஜ்யம் மட்டுமே வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்தார். வெறும் கோரிக்கைகள் வேலைக்கு ஆகாது என்று தெரிந்ததால் போஸ் காங்கிரஸை உடைக்கத் துணிந்தார்.
காந்தியின் காங்கிரஸ் மிதவாத காங்கிரஸ் என்றும் அதனால் ஒன்றும் வழி கிடைக்கப் போவதில்லை என்றும் உறுதியாக நம்பிய போஸ், “காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி“ என்ற ஒன்றினைத் தொடங்கி அதின் தலைவராக ஸ்ரீனிவாச அய்யங்காரை நியமித்தார். போஸின் காங்கிரஸ் தீவிரவாத காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது.
காந்தி – போஸ் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்லும் குழுவில் இருந்து போஸின் பெயரைக் காந்தி நீக்கினார்.
அயர்லாந்து தந்த உற்சாகம்
இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த அயர்லாந்தில் டிவெலரா தலைமையில் புரட்சிவெடித்தது. அயர்லாந் சுதந்திரம் பெற்றது. இதனை அறிந்த போஸ் அயர்லாந்தின் இடத்தில் இந்தியாவை வைத்துக் கற்பனைசெய்து மகிழ்ந்தார்.
அங்கு நடந்த புரட்சியைப் போல் இந்தியாவிலும் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். செயல்பட்டார். கைதுசெய்யப்பட்டு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். மக்கள் ஆதரவினைப் பெற்றார். கல்கத்தாவில் நகராட்சி மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறையிலிருக்கும் போஸின் பெயரும் முன்மொழியப்பட்டு, போஸ் வெற்றி பெற்றார்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. நேரு முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். அச்சூழலில், 1930ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையானார். பிரிட்டிஷ் அரசின் தடையைமீறி மால்தா கிராமத்திற்குப் போஸ் சென்றார். அவரைப் பிரிட்டிஷார் கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர். அதன்பின் விடுதலையானார். 26.01.1931 ஆம் நாள் இந்திய விடுதலைநாளாகக் கொண்டாட போஸ் விரும்பினார். பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது. போஸ் மீறினார். ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பெற்று போஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியின் போக்கு
05.03.1931ஆம் நாள் காந்தி – இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது. அது இந்தியர்களுக்கு எந்த நலனும் தரவில்லை. போஸ் மனம்வெம்பினார். இந்நிலையில் பகத்சிங்கும் அவரது நண்பர்கள் இருவரும் ரகசியமாகத் தூக்கிலிடப்பட்டனர். அதுகுறித்து காந்தி கவலைப்படவில்லை. இது போஸ்க்கு வெறுப்தைத் தந்தது.
அரசியல் கைதிகளைக் குற்றவாளிகள் போல் நடத்துவதைக் கண்டித்து சிறையில் ஜாதின்தாஸ் என்பவர் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 13.09.1929ஆம் நாள் உயிர்நீத்தார். இது குறித்தும் காந்தி கவலைப்படவில்லை. இது போஸக்கு காந்தியின் மீதிருந்த நம்பிக்கை நீங்கக் காரணமானது.
இரண்டாம் வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது. அதிலும் இந்தியர்க்குச் சாதகமாக ஏதும் நடைபெறவில்லை. ஆதலால் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். போஸ் கைது செய்யப்பட்டு சியோனி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிப்படைந்தது. பிரிட்டிஷ் அரசு அவரைச் சிறைமாற்றம் செய்தது. பின் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படாததால் அவர் இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்ற நிபந்தனையுடன் 13.02.1933ஆம் நாள் ஐரோப்பாவுக்கு அனுப்பிவைத்தது.
வியன்நாவில் சிகிக்சை பெற்ற போஸ் உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று அந்நாடுகளின் அரசியல் அமைப்புகள் குறித்து ஆராய்ந்தார். இந்தியாவில் நடைபெற்று வரும்போராட்டங்கள் குறித்தும் அறிந்துகொண்டேயிருந்தார்.
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டு மக்கள் சேவையில் இறங்கினார். இது இந்திய விடுதலைக்குப் பின்னடைவைத் தரும் என்று கூறி, இது காந்திக்கும் இந்தியருக்கும் ஏற்பட்ட தோல்வி என்றும் காங்கிரஸ் இனி காந்தியை நம்பிப் பயனில்லை என்றும் காங்கிரஸைப் புதுப்பிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் போஸ் அறிக்கை வெளியிட்டார்.
காதல் வந்தது
1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவிலுள்ள பாட்கஸ்டீன் என்னும் பகுதிக்குப் போஸ் சென்றார். அங்கு எமிலி செங்கல் என்பவரைச் சந்தித்தார். எமிலி செங்கல் 26.12.1910ஆம் நாள் பிறந்தவர். அவரைத் தன் செயலராகப் பணியமர்த்தினார். பின்னாளில் எமிலி – போஸ் காதலர்களாக மாறினர். 27.12.1937ஆம் ஆண்டு தம்பதியர்களாக மாறினர்.
போஸ் – எமிலி செங்கல் திருமணம் ரகசியமாகவே நடைபெற்றது. தொடர்ந்து பிற நாடுகளுக்குப் பயணமானார். இப்பயணங்களுக்கு நடுவில் போஸ் 1934ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை 162 கடிதங்களை எமிலிக்கு எழுதியுள்ளார். போஸ் – எமிலி செங்கல் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனிதா எனப் பெயரிட்டனர்.
காங்கிரஸ் தலைவர்
1938ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போஸ் இந்தியா வந்தார். 51ஆவது காங்கிரஸ் மகா சபை ஹரிபுராவில் நடைபெற இருந்தது. அங்கு வாசிப்பதற்கான உரையினை ஓர் இரவில் எழுதிமுடித்தார். அதில் தாம் அகில இந்திய காங்கிரஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்றால் செய்யவுள்ள திட்டங்களின் முழுவடிவமும் இருந்தது. ஹரிபுரா கூட்டத்தில் உரையாற்றினார். அகில இந்திய காங்கிரஸின் தலைமைப்பொறுப்பினை ஏற்றார்.
பின்னர் திட்டக்குழுவினைக் கூட்டினார். இந்து-முஸ்லீம் பிரச்சனைக்கள் சுதந்திர இந்தியாவில் ஏற்படக்கூடாது என்பது குறித்து ஜின்னா முதலிய தலைவர்களுடன் விவாதித்தார். பின்னர் ஆறுமாதங்கள் கழித்து தேசிய திட்ட மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓர் நாடு திறம்பட வளர்வதற்கு என்னென்ன தேவையோ அவற்றை அதற்குரிய நிபுணர்களைக் கொண்டு திட்டமிடுவதே அம் மாநாட்டின் நோக்கம். இத்தகைய மாநாடுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் நடத்தப்படுவதே வழக்கம். ஆனால், போஸ் சுதந்திரத்திற்கு முன்பே அதனை நடத்தினார். இதனை உலக நாடுகள் இந்தியா குறித்த போஸின் எதிர்காலவியல் சிந்தனையாகக் கருதின.
மீண்டும் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வந்தது. காந்தி தன் தரப்பில் பட்டாபி சீதாராமய்யரை வேட்பாளராக நிறுத்தினார். போஸ் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். காந்தி தனித்துவிடப்பட்ட நிலைக்கு ஆளானார். போஸின் வெற்றிக்கொண்டாட்டங்கள் திருபுரி போன்ற சில இடங்களில் வரவேற்பைப் பெறவில்லை. காங்கிரஸ் ஆதரவாளர்களைக் கொண்டு சுதந்திரப்போரை நடத்தமுடியாது என்று அறிந்தார். இடதுசாரி சிந்தனை கொண்டவர்களால்தான் தீவிரமான போரில் ஈடுபடமுடியும் என்று கருதி, காங்கிரஸ் காட்சியின் தலைமைப் பதவியை ராஜினாமாசெய்தார்.
“ஃபார்வார்ட் பிளாக்“ என்ற புதிய கட்சியினைத் தொடங்கினார். இதில் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர் பலரை இணைத்தார். ஆனால், வகுப்புவாதக் கட்சிகள் பல தோன்றி மக்களைப் பாகப்பிரிவினை செய்துவந்தன. போஸ் மனம்தளர்ந்தார்.
கிரேட் எஸ்கேப்
இந்தியாவை விட்டு வெளியேறி உலக நாடுகளின் துணையுடன் இந்திய சுதந்திரத்தினைப் பெறவேண்டும் என்ற நோக்கோடு 13.06.1940ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். புதிய முறையில் இந்திய சுதந்திரத்தைப் பெற முயற்சிப்பதாகக் கூறினார். காந்தி வாழ்த்தினார்.
இந்நிலையில் கல்கத்தாவில் ஹால்வில் என்பவருடைய நினைவகத்தை அகற்றும் போராட்டத்தில் போஸின் புதிய கட்சி ஈடுபட்டது. அந்த விவகாரத்தில் போஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தாம் உண்ணாநோம்பு இருக்கப்போவதாக பிரிட்டிஷ் உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் அரசு அவரை விடுதலை செய்தது.
தன்னைப் பற்றி பிரிட்டிஷ் அரசின் உளவுப் பரிவு சேகரித்து வைத்துள்ள ஆணவங்களைத் தன் நண்பர் சத்ய ரஞ்சன் பக்க்ஷியின் உதவியுடன் படித்துப் பார்த்தார்.
பின்னர் இந்தியாவை விட்டு ரகசியமாகத் தன் குடும்பத்தாருக்கும் தெரியாமல் வெளியேறத் திட்டமிட்டார். 17.01.1941ஆம் நாள் வெளியேறினார். முகம்மது ஜியாவுதீன் என்ற பெயரில் இந்தியாவைத் தாண்டினார்.
பின் இத்தாலி சென்றார். அவர் அங்கு சென்ற பின்னரே இந்தியர்களுக்கு அவர் இந்தியாவை விட்டு வெளியேறிய விஷயம் தெரியவந்தது. அங்கிருந்து ஓர்லாண்டோ மசோட்டா என்ற பெயரில் ரஷ்யா சென்றார்.
பின்னர் ஜெர்மனி சென்றார். தான் எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. காரணம் இரண்டாம் உலகப்போர் காரணமாக பல நாடுகள் ஒன்றுக்கொன்று எதிர்நிலையில் இருந்தன. அவற்றுள் போஸ் நம்பியிருந்த நான்கு நாடுகளும் ஒன்றையொன்று எதிர்த்தன. இந்நிலையில் யாரை நட்புக்கொண்டாலும் மற்ற மூவரையும் பகைத்துக்கொள்ளும் நிலை இருந்தது. போஸ் ஜெர்மனிக்குள் சுற்றிக்கொண்டிருந்தார்.
அந்நிய மண்ணில் சுதந்திரத் திருநாள்
1941இல் பெர்லினில் “சுதந்திர இந்திய மையம்“ ஒன்றைத் தொடக்கிவைத்தார். “ஆசாத் ஹிந்த்“ என்ற வானொலி சேவையை 1942ஆம் ஆண்டு தொடங்கினார். “ஆதாத் ஹிந்த்“ என்ற பெயரில் ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷாரைகிலம் ஆகிய இரண்டுமொழிகளிலும் அப்பத்திரிகையை வெளியிட்டார். தேசியக்கொடியினை வடிவமைத்தார். தேசியப் பாடலாக ரவீந்தரநாத் தாகூர் இயற்றிய “ஜனகணமன“ பாடலை அறிவித்தார். “ஜெய்ஹிந்த்“ என்ற கோஷத்தைப் பிரபலப்படுத்தினார்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் கை ஓங்கியது. உடனே, போஸ் ஜப்பானின் உதவியைக் கோரி அங்குப் புறப்படத் தயாரானார். இறுதியாக முசோலினியையும் ஹிட்லரையும் சந்தித்தார். பலனில்லை. இந்திய விடுதலைக்காகப் பிறநாடுகளின் உதவியை எதிர்பார்த்தார். ஜெர்மனியும் இத்தாலியும் கையைவிரித்துவிட்ட நிலையில் ஜப்பான் மட்டுமே உதவிக்கரம் நீட்டியது. ஆதலால், போஸ் ஜப்பான் நோக்கிப் புறப்படத் தயாரானார்.
தன் மனைவி, மகளை ஐரோப்பாவிலேயே விட்டுவிட்டு, ஜப்பான் நோக்கி ஓர் நீர்மூழ்கிக் கப்பலில் 09.02.1943ஆம் நாள் ஒரு கடினமான பயணத்தை மேற்கொண்டார்.
ஐ.என்.ஏ. செயல்பட்டது
பயணத்தின் இடையே தான் ஒரு பெரும் புரட்சிப்படையை உருவாக்கிப் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடத் திட்டம் தீட்டினார். ஜான்சி ராணி ரெஜிமென்ட் தொடங்குவது பற்றியும் திட்டமிட்டார். 13.05.1943ஆம் நாள் ஐப்பான் வந்தடைந்தார்.
அங்கு முன்பே மோகன்சிங் மற்றும் ஃப்யுஜிவாரா ஆகியோர் இணைந்து பிரிட்டிஷ்க்கு எதிராப் போராட ஐ.என்.ஏ. என்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அது செயல்படாமல் இருந்தது. அதனைப் போஸ் செயல்படவைத்தார். அப்படைக்கு ஆள்சேர்த்தார். ராஷ் பிகாரி போஸ் என்பவரை ஐ.என்.ஏ.வின் தலைவராக்கினார்.
ஐ.என்.ஏ. வீரர்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு, அவர்கள் முன் “நான் உங்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச்செல்வேன்“ என்று உறுதியளித்தார். கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஐ.என்.ஏ. வுக்கு நிதியும் ஆள்பலமும் சேர்த்தார்.
பர்மிய நாட்டின் தலைவர் பா-மாவ் போஸின் ஆற்றல் வாய்ந்த பேச்சு பற்றி, “போஸ் ஆழமாகப் பேசத் தொடங்கினால் இன்னொரு சக மனிதரிடம் பேசுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்; மாறாக, நம்மை விடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றாய்வாளர் பீட்டர் ஃபே, போஸ், “போகுமிடத்திலெல்லாம் அவர் பேச்சைக்கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்குச் சமர்ப்பித்தார்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தென்கோடியிலிருந்து முத்துராமலிங்கத்தேவரின் முனைப்பில் பல்லாயிரக்கணக்கான தீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர சிங்கப்பூர் சென்றனர். ஐ.என்.ஏ. படையினருக்கு உலகின் பல நாடுகளிலும் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. “ஜான்சி ராணி“ என்ற பெண்கள் படையும் 12 – 18 வயதிற்குட்பட்ட பாலர் படையும் உருவானது. பெண்கள் படை தளபதியாக டாக்டர். லக்ஷ்மி செஹ்கல் சுவாமிநாதன் என்ற தமிழ்ப் பெண் தலைமை தாங்கினார்.
புதிய அரசு
சிங்கப்பூரில் 21.10.1943 ஆம் நாள் இந்திய சுதந்திர அரசை அறிவித்தார். அதற்கு “ஆசாத் ஹிந்த்“ என்று பெயரிட்டார். 38கோடி இந்தியர்களின் விடுதலைக்குப் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியுடன் அந்தப் புதிய அரசின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
ஒரு மாத காலத்துள் ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், ஜேர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் புதிய அரசினை அங்கீகரித்தன. அயர்லாந்து வாழ்த்து அனுப்பியது.
ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை அந்தப் புதிய அரசுக்கு வழங்கியது. போஸ் அந்தமானுக்கு “ஷாகித்“ என்றும் நிகோபாருக்கு “ஸ்வராஜ்“ என்றும் பெயர்சூட்டினார். 29.12.1943ஆம் நாள் இந்தியதேசியக் கொடியினை ஏற்றினார். பர்மா காட்டில் முகாம் அமைத்தார். டில்லிநோக்கித் தன் படைகளை நகர்த்தத் திட்டமிட்டார். தன் புதிய அரசுக்குரிய பணம், தபால்தலை போன்றவற்றை வடிவமைத்து அச்சிட்டார். நிர்வாகத்திற்காகப் பல துறைகளை வகுத்தார். பொறுப்புகளைப் பலருக்கும் பகிர்ந்தளித்தார். எல்லாம் ரெடி. நாடுதான் இல்லை. நாட்டைக் கைப்பற்ற டில்லி நோக்கி படை புறப்பட்டது.
ஐ.என்.ஏ. வின் தாக்குதல்
04.02.1944ஆம் நாள் இந்திய – பார்மிய எல்லையான சிட்டகாங் என்ற இடத்தில் ஐ.என்.ஏ. தன் முதல் தாக்குதலைத் தொடங்கியது. வெற்றிபெற்றது. பின் இம்பால் நோக்கி நகர்ந்தது.
22.04.1944ஆம் நாள் அங்குத் தாக்குதலைத் தொடங்கியது. பிரிட்டிஷ் புதிய முறையில் போரிடத் தொடங்கியதால் ஒரு மாதமாகப் போராடியும் பலனில்லை. இயற்கை எதிரியாக இருந்தது. தளவாடப் பொருட்கள் குறைந்தன. ஆதலால் ஐ.என்.ஏ. படை தளர்ந்தது. 2,20,000 பேரில் 1,30,000 பேரே மிஞ்சினர். ஆனாலும் போஸ் போரை நிறுத்தவில்லை.
தப்பித்தல்
பர்மாவில் இருக்க முடியாத சூழ்நிலை உருவானது. இந்திய தேசிய ராணுவம் ஒரு முழுப்பயிற்சி பெற்ற ராணுவமாகவோ அல்லது பிரிட்டிஷாரை எதிர்க்கும் அளவுக்கு ஆயுத பலம் வாய்ந்ததாகவோ உருவெடுக்க முடியவில்லை. இந்தியாவை நோக்கி படைதிரண்டு வந்தவர்களில் பத்து சதவீதம் பேரே உயிர் பிழைத்து இந்தியாவிற்குள் வர முடிந்தது. ஆனால் சாதி, மதப் பிரிவினைகளைத் தாண்டி தேசியவாத வேகத்தில் மக்களை இணைப்பதில் இந்திய தேசிய ராணுவம் வெற்றி பெற்றது.
போஸைத் தப்பிச்சென்றுவிடுமாறு ஐ.என்.ஏ. வீரர்கள் கேட்டுக்கொண்டனர். வேறு வழியின்றி போஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், ஜான்சி படைப்பிரிவினை மட்டும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அவர்களுக்குத் தக்கப் பாதுகாப்பும் நிதியும் வழங்கியபின்பே தாம் வேறு நாட்டுக்குச் செல்வதாகத் தீர்மானித்துக்கொண்டார்.
அவர்களை அழைத்துக்கொண்டு பாங்காக் வந்தார். அவர்களுக்கு நிதியளித்து விடைகொடுத்தார். பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் அமெரிக்காவினால் அணுஆயுத தாக்குதலுக்கு உட்பட்டு ஜப்பான் சரணடைந்தது. ஆதலால் நம்பிக்கை இழந்த போஸ் மனம் தளர்ந்துவிட்டார்.
அங்கிருந்து தன் நண்பர்கள் மூவருடன் 17.08.1945ஆம் நாள் ஒரு குண்டு வீசும் விமானம் மூலம் பாங்காக் சென்றார். அங்கிருந்து சாய்கோன் சென்றார். பின் வேறு ஒரு விமானத்தின் மூலம் தன்னுடைய ஒரு நண்பருடன் (ஹபிபூர் ரகுமான்) 18.08.1945ஆம் நாள் ஹாங்காங் சென்றார்.
போரின் முடிவில் 1945ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவக் கமாண்டர்கள் மூவர் (பிரேம் குமார் செகல் என்கிற இந்து, ஷா நவாஸ் கான் என்கிற இஸ்லாமியர், குருபக் சிங் தில்லன் என்கிற சீக்கியர்) பிரிட்டிஷ் ராணுவத்தால் ராஜதுரோகக் குற்றத்திற்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக நாடுகடத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆயுதமேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட இந்த மூவரையும் விடுவிக்க முன்வந்த வழக்கறிஞர்களில் ஜவஹர்லால் நேருவும் இருந்தார். இந்த விசாரணை நடக்க நடக்க, நாடே கொந்தளிக்கத் தொடங்கியது.
1946ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு, காங்கிரஸ் கொடியை ஏற்றி பம்பாய்க் கடற்கரையை ரோந்து வரத்தொடங்கின. இந்திய ராணுவம் முதன்முறையாகப் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டெழுவது கண்ட பிரிட்டிஷ் தலைமைக் கமாண்டர் ஆஷின்லெக் அவசர அவசரமாக இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று கமாண்டர்களையும் விடுதலை செய்தார்.
ஷா நவாஸ் கான் ஹிந்தி மொழி நடிகர் ஷாருக்கானின் வளர்ப்புத் தாத்தா ஆவார். அதாவது ஷாருக்கானின் தாயார் லத்தீப் பாத்திமாவை, ஷா நவாஸ் கான் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்து வளர்த்தவர் ஆவார். உறவு வகையில், இஸ்லாமுக்கும், ஷா நவாஸ்கான் தாத்தா முறை. இதனால் இஸ்லாமும், ஷாருக் கானும் கூடத் தூரத்து உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
ஷா நவாஸ் கான் சுத்தமான இந்தியராக விளங்கியவர். நேதாஜியின் படையில் முக்கிய தளபதியாகச் செயல்பட்ட அவர் முன்பு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் படையில் இருந்தார். 1942ஆம் ஆண்டு சிங்கப்பூரை ஜப்பான் படைகள் நாசப்படுத்தியபோது பிடிக்கப்பட்டார் ஷா நவாஸ் கான். பின்னர் அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து மேஜர் ஜெனரலாக உயர்ந்தார். அப்போதைய பர்மாவில் அவர் போரில் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நான்கு முறை எம்.பியாக இருந்தார்.
இரண்டு முறை இறந்தார்
18.08.1945ஆம் நாள் ஹாங்காங் செல்லும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி போஸ் இறந்துவிட்டார் என்றன உலகநாடுகள். இது அவரது முதல் இறப்பு.
இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் பைசியாபாத்தில் ஒரு சிறு ஆசிரமம் அமைத்து பகவான்ஜி என்ற பெயரில் அவர் வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சில நாடுகளுக்கும் சென்றுவந்தார். அவரைச் சீனாவில் தாம் பார்த்ததாக முத்துராமலிங்கத் தேவர் குறிப்பிட்டுள்ளார். தமது நெருங்கிய வட்டத்திற்குள் மட்டும் அவர் சில உதவிகளைக் கேட்டு வாங்கி வாழ்ந்துவந்தார்.
பகவான்ஜி பார்ப்பதற்குப் போஸ் போலவே இருந்தார். போஸ் போலவே பேசினார். அந்த வயதில் அவரது உயரமும் தோற்றமும் ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்களும் அந்த துறவி வீட்டில் கிடைக்கப்பெற்றன. பல் இடுக்கும் ஒத்திருந்தது. வயிற்றின் கீழே இருந்த தழும்பும் ஒத்திருந்தது. டீ. லால் என்ற ஆராய்ச்சியாளர் இருவருடைய எழுத்தும் நடையும் ஒத்துள்ளன என்றார். பகவான்ஜி ஒரு வங்காளி. பிரிட்டிஷாரைகிலம், இந்துஸ்தானி, சமஸ்கிருதம், ஜெர்மன் மொழியில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் தங்க வாட்ச் அணிந்திருந்தார். (18.08.1945ஆம் நாள் போஸ் மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ, தங்க வாட்சோ கிடைக்கப்பெறவில்லை) நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்ல, அவரது தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராகச் செயல்பட்ட டாக்டர். பவித்ரா மோகன் ராய், லீலா ராய், சுனில் தாஸ், திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகியோர் இந்தத் துறவியின் சீடர்களாக இருந்தனர். கும்நாமி பாபா என்று அறியப்பட்ட அந்தத் துறவி மர்மயோகியாகவே வாழ்ந்தார். திரைக்குப் பின்னிருந்தே மற்றவர்களைச் சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்டாமல் வாழ்ந்தார். 1985ஆம் ஆண்டு பகவான்ஜி இறந்தார். இது அவரது இரண்டாவது இறப்பு.
அவர் மறைந்த பொழுது அவரே போஸ் என்று செய்திகள் பரவின. உத்திரப்பிரதேச நீதிமன்றம் அவருடைய உடைமைகளை சீல் வைத்து பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு ஆணையிட்டது. 22.12.2001ஆம் நாள் முகர்ஜி கமிஷன் பார்வையிடுவதற்காக அந்த சீல் உடைக்கப்பட்டது.
சபாஷ் சுபாஷ்
சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து பற்பல வதந்திகள் உலவின. பல மர்மங்கள் இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நூல்களிலும் இணைய தளங்களிலும் பலர் கொடுத்திருந்த தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.
- தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து தாய்வானின் நடந்ததாக எந்தவித ரெக்கார்டும் இல்லை.
- பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்ததாகப் பதியப்பட்டிருக்கிறது.
- CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950ஆம் ஆண்டு வரையிலும் போஸ்க்கான தேடுதல் வேட்டையைத் தொடர்ந்திருக்கிறது. அவர் இறந்ததாகக் கூறிய நிலையில் அவரை ஏன் தேட வேண்டும்?
- 1946ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய அயர்லாந்து நாட்டின் தலைவர் டிவெலராவை டப்ளின் நகரில் போஸை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டிவெலராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமில்லாமல் 1946ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவிற்கு வந்திருந்த டிவெலரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்! 1945ஆம் ஆண்டு போஸ் இறந்திருந்தால் 1946ஆம் ஆண்டு டிவெலரா ஏன் அவரைச் சந்திக்க விரும்பவேண்டும்,
- பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் போஸ் எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப் பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
- ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர். சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் போஸ்வும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாகப் பக்கத்துப் பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே போஸ்க்குச் சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சிறையிலிருந்து போஸ் பலமுறை நேருவுக்குத் தான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார்.
- போஸின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், போஸ் அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
- பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் காபினட் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ் வருணிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது. ஆக போஸ் இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக் கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?
- பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் போஸைக் கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும். அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று எழுதி இருந்தது.
- 21.01.1967ஆம் நாள் போஸின் பிறந்த நாள் வருவதற்கு இரண்டு நாள் முன்பே முன்னாள் மத்திய அமைச்சரும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியருமான சமர் குகா பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்க்கு எழுதிய மடலில் சூரியன் உதிப்பதற்காக எல்லோரும் காத்துக் கொண்டுள்ளோம் என அவரின் மீள்வருகை பற்றிச் சூசகமாக்க் குறிப்பிட்டார். நேரு 1964ஆம் ஆண்டு மறைந்த பின்னர் போஸ் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சிந்திதிருக்கக் கூடும் என்பதற்குப் பேராசிரியரின் கடிதமே சாட்சியமாகும்.
- நேரு, காந்தி, ஜின்னா மூவரும் பிரிட்டிஷ் நீதிபதியிடம் உடன்பாட்டுக்கு வந்து போஸ் இந்தியாவுக்குள நுழைந்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று உறுதி அளித்ததாக நீதிபதி கோஸ்லா கமிஷன் முன் போஸின் மெய்க்காப்பளராக இருந்த உஸ்மான் பட்டேல் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.
- ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் அறுபதாண்டுகள் சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த நீதி விசாரணைக் கமிஷன் என்ற இடத்தில் 18.08.1945ஆம் நாள் விமான விபத்து நடக்கவே இல்லை. எனவே, விபத்தல் போஸ் இறந்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்ப்பளித்தது.
- 2001ஆம் ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு புலனாய்வு செய்து, ஆகஸ்ட் 18.08.1945 ஆம் நாள் போஸ் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை திட்டமிட்டே கட்டப்பட்டது. பின் தொடரும் நேச நாடுகள் படைகள் பிடியில் இருந்து தப்பிக்கவே இக்கதை கூறப்பட்டது. போஸ் சோவியத் யூனியனுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறியது.
போஸ் ஒரு முறைதான் பிறந்தார். ஆனால், இரண்டுமுறை இறந்தார். நாம் நமது அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதாலும் அதற்காக நாம் நமது மனசாட்சியை அடகுவைத்துவிட முடியாது என்பதாலும் நேதாஜி இரண்டுமுறை இறந்ததாக நாம் நம்புவதில் தவறில்லை.
(இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்)