பத்திரிகையாளர் ஞாநி, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார். தேர்தலில் நிற்கப்போகிறார் என்று தகவல் வந்துள்ளது. எந்தத் தொகுதி என்று அதிகாரபூர்வமாக இன்னமும் வெளியாகவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிகவும் கடினமானது. அத்துடன் ஒப்பிடும்போது சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது எளிது. இருந்தாலும் ஞாநி போன்றவர்கள் களத்தில் இறங்கி தேர்தல் விவாதத்தின் போக்கை மாற்ற முனையவேண்டும்.
அதிமுகவில் ஜெயலலிதா வைத்ததுதான் சட்டம். அங்கு புத்திசாலிகள், அறிவுஜீவிகள் ஆகியோர் தேவையில்லை என்று அவர் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டார். அவர் காலில் விழுவதற்கும் அவர் சொன்ன வேலையைச் செய்வதற்குமான அடிமைகள்தான் அந்தக் கட்சிக்குத் தேவை. திமுக, பல்வேறு குறுநில மன்னர்களையும் மையத்தில் ஒரு பேரரசரையும் கொண்ட கட்சி. எந்த ஏரியாவில் யாரை நிறுத்துவது என்பதைக் குறுநில மன்னர்களே பெரும்பாலும் முடிவு செய்துவிடுவார்கள். பேரரசர் கருணாநிதியை அடுத்து இளைய வாரிசு ஸ்டாலின் பேரரசராகப் பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறார். கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். குறுநில மன்னர்களுக்கோ பேரரசருக்கோ அறிவார்ந்தவர்கள், நல்லவர்கள் என்பதெல்லாம் தேவையில்லை. இந்த இரண்டு கட்சிகள் ஈர்க்கும் ஆட்கள்தான் அரசியலுக்குக் கெட்ட பெயரைக் கொண்டுவருபவர்கள். இந்தக் கட்சிகளில் இருக்கும் ஓரிரு நல்ல நபர்கள்கூட உள்கட்சி ஜனநாயகத்தை வலியுறுத்த முடியாத நிலையிலேயேதான் உள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் முற்றிலுமாக அழிந்துபோய்விட்டது. பெருங்காயம் வைத்த பாண்டம்தான். புதிய அரசியலை முன்னெடுக்க அங்கே யாருமே இல்லை. பழம் பெருச்சாளிகள் இன்று தேர்தலைச் சந்திக்க பயந்து நடுங்குகிறார்கள். அறிவார்ந்த யாரும் அந்தக் கட்சியில் இனியும் சேரத் தயாராக இல்லை. பாஜக எப்போதுமே தீண்டத்தகாத கட்சியாகவே இருந்துவந்துள்ளது. அதன் இந்துத்துவப் பின்னணி அதன் பலவீனங்களில் முக்கியமான ஒன்று.
கம்யூனிஸ்ட் கட்சிகள் திடீரென வெளியிலிருந்து வரும் யாரையும் அவ்வளவு எளிதில் உள்ளே சேர்க்கவும் மாட்டார்கள்; தேர்தல் இடங்களைக் கொடுக்க மாட்டார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் கட்சியில் பல பத்தாண்டுகள் பணியாற்றியிருக்கவேண்டும். தலித் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவை தத்தம் சமுதாய மக்களுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டவை.
அப்படிப்பட்ட நிலையில் ஞாநி போன்ற ஒருவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சிதான். ஆம் ஆத்மி கட்சியுடன் பலருக்குப் பல முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் இன்று இருக்கும் இந்திய அரசியலில் சில மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்தவேண்டியிருக்கிறது. ஆம் ஆத்மி சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும். அது தில்லியில் அடைந்த வெற்றி பல கட்சிகளையும் கொஞ்சமாவது யோசிக்கவைக்கும்.
இதற்குமுன் அறிவுஜீவிகளும் கட்சி அரசியல்மீது வெறுப்புகொண்ட சாதாரண மனிதர்களும் சுயேச்சையாகத் தேர்தலில் நின்று 500 வாக்குகள்கூட வாங்காமல் தோற்றுப்போவதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால் இப்போது ஆம் ஆத்மி போன்ற ஒரு கட்சி அமைப்பு உருவாகியுள்ளது என்பதால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
வரவேற்கப்படவேண்டிய ஒரு மாற்றமே இது.