வட்ட மேஜை விவாதத்துக்கு முதல் பொருளாக சமீபத்தில் மருதன் அளித்த யூடியூப் பேட்டியிலிருந்தே தொடங்கலாம் என்று கருதுகிறேன். ஓட்டுப் போடாதே, புரட்சி செய் என்கிற அரசியல்படுத்துதல் ஒரு சதவீதம் கூட நாட்டில் நடக்கவில்லை. எனவே யாருக்கும் ஓட்டளிக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தை முதன்மையாக வைக்க முடியாது. மற்றொரு கேள்வியில் யார் வரக்கூடாது என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது Non-மோடி, Non-பிஜேபி அரசு அமையவேண்டும் என்று சொல்லிவிட்டு, காங்கிரஸ் வந்தாலும் பரவாயில்லை, ஜெயலலிதா வந்தாலும் பரவாயில்லை என்கிறார் மருதன்.
ஓர் இடதுசாரியாக, பாஜக அல்லாத காங்கிரஸ் அல்லாத அணி வரவேண்டும் என்று அல்லவா மருதன் சொல்லியிருக்கவேண்டும்? ( நான் மோடிக்கு ஆதரவாக இதை எழுதவில்லை).
2004ம் ஆண்டு முதல் 2013 வரை இந்திய திருநாட்டை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். இந்த அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். (1) 2ஜி அலைக் கற்றை ஊழல், (2) நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் (3) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் (4) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் (5) ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல் (6) ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல் (7) பங்குச் சந்தை ஊழல்.. இன்னும் பிற. காங்கிரஸ் கட்சியின் தயவால் கூட்டணி கட்சியினர் அடித்த கொள்ளைகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அடித்த கொள்ளைகள் ஆகியவை தனி.
ஊழல் மட்டுமல்ல. கார்ப்பரேட் ஆதரவு, உலகளாவிய கண்டனத்துக்கு உள்ளான இலங்கை இனப்படுகொலைக்குத் துணை போனது, பென்ஷனை இழுத்து மூடியது, அந்நிய முதலீடு, டீசல் இரட்டை விலைக் கொள்கை, எண்ணெய் விலை உயர்வை அம்பானியே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொன்னது… இப்படிப் பல பெருமைகளைக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் நாடாளுமன்றம் மிகக் குறைவான நேரம் பணியாற்றியிருக்கிறது. அப்படியிருந்தும் காங்கிரஸ் வந்தால் பரவாயில்லை என்று மருதன் ஏன் சொல்லவேண்டும்?
சரி, ஜெயலலிதாவை எப்படி ஆதரிக்கமுடியும்? நிர்வாகம் குறித்த அக்கறையில்லாமல், இலசங்களை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் ஒரு முதல்வர் நாட்டின் பிரதமரானால் என்னாகும்? இவரிடம் இருந்து என்ன மாற்றத்தை மருதன் எதிர்பார்க்கிறார்?
மூன்றாவது அணியை நம்பமுடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் ஆதரவு இருந்தும் கூட்டணி ஆட்சிகள் இதற்குமுன் எப்படிச் செயல்பட்டன என்பது நமக்குத் தெரியாதா? ஒரு நிலையான ஆட்சியின்மீது நமக்கு ஆசை வரவேண்டாமா?
இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் அதே நேரத்தில் பழங்குடிகளை அழிப்பது, எல்லாவற்றிலும் ஊழல், நிதி நிர்வாகத்தில் ஊக வணிகத்தை ஊக்குவித்து பங்கு சந்தைக்கு மட்டுமே முக்கியம் என்று நாட்டைச் சூறையாடும் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடும்போது மதவாதம் நிச்சயம் இந்தியாவின் தலையாயப் பிரச்னை அல்ல. ஒப்பீட்டளவில் மதவாதம் முந்தைய பிரச்னைகளைவிட அதிகம் தலைதூக்கியிருப்பதாகச் சொல்லமுடியாது.
வட்ட மேஜை மாநாட்டில் இது பற்றிய விவாதங்கள் நடைபெறுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.