(அதிகாரம் – கண்விதுப்பழிதல்)
குறள் 1171:
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
அவனைக் கண்டதும்
காதல்கொண்ட கண்
அவனைக் காணாது
கண்ணீர் கொண்டது.
*
குறள் 1172:
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.
தீதும்நன்றும் பிறர்தர
வாரா என்ற சங்கதி
சரிவரப் புரிவதில்லை
முட்டாள் கண்களுக்கு.
*
குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
கண்களின் அவசரம்
கண்ணீரில் முடியும்
நகை முரண்களால்
நிறைந்தது காதல்.
*
குறள் 1174:
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
தீராக்காதல் தந்து
தீர்ந்து போகிறது
கண்ணீர்த்திரளின்
கடைசித் துளியும்.
*
குறள் 1175:
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
காதல் தானமீந்த
கண் வள்ளலிடம்
தூக்கம் திருடியது
காதல் களவாணி.
*
குறள் 1176:
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
காதலைப் பிரசவித்த
கண்களின் வாதையில்
ரகசியமாய்க் கசிகிறது
உதட்டோரப் புன்னகை.
*
குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
அவனைப் பார்த்து
ப்ரியம் விதைத்த
கண்களிரண்டும்
நாசமாய்ப் போக!
*
குறள் 1178:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
நீ மெய்யோ பொய்யோ
உனைத் தேடிக் தவித்த
களைப்பிலும் தூங்காது
நீர் கோர்க்கும் கண்கள்.
*
குறள் 1179:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
பிரிந்து போனாலும்
திரும்பி வந்தாலும்
கண்களின் சாபம்
உறங்காதிருப்பதே!
*
குறள் 1180:
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
கண்களுடைய எவரும்
அதில் மிதக்கும் சோகம்
கடந்து காதல் ரகசியம்
காக்க முடிவதில்லை.
***