Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

2014 – கணிப்பும் கனவும் : 7

$
0
0

முந்தைய பகுதி

dharavi-slums-mumbaiநம் பாரம்பரியம் உயர்ந்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள். அதில் பல பிழைகள் உண்டு அல்லவா? சாதி அமைப்பையே எடுத்துக்கொள்ளுங்கள். என் தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணியை நான் குடித்தாக வேண்டுமா என்ன?

இதை நான் இப்படியும் கேட்க முடியும்… உன் தாத்தாவுக்கு உப்பாக இருக்காத தண்ணீர் உனக்கு மட்டும் உப்பாகத் தோன்றுவது ஏன்?

என் தாத்தாவுக்கு அது உப்புக் கரிக்கவில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்?

அதை மாற்ற அவர் என்ன செய்தார் என்பதைவைத்துத்தான் அந்த முடிவுக்கு வருகிறேன்.

ஒருவர் ஓர் ஒடுக்குமுறையில் இருந்து விடுபட்டிருக்கவில்லையென்றால் அதில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு அது அவரை அழுத்தியிருக்கிறது என்றுதானே அர்த்தம்.

மீட்சிக்கான கயிறுகள் எதுவுமே வீசப்படாமல் இருக்கும்போது மட்டும்தான் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும். அப்படியான வாய்ப்புகள் இருந்த பிறகும் ஒருவர் ஒரே நிலையில் தொடர்ந்து இருந்தால் உண்மை வேறு என்றுதான் பொருள். அம்பேத்கருக்குமே கூட இந்த விஷயத்தில் பெரிய சந்தேகமும் ஆச்சரியமும் ஏற்பட்டிருக்கிறது. அவர், சாதி இந்துக்களின் கொடூரங்கள் என்று மிக விரிவாக உற்சாகமாகப் பட்டியல் போட்டுவிட்டார். இந்த அளவு கொடூரங்கள் நடந்தது உண்மையென்றால் மக்கள் ஏன் அதில் இருந்து மீள முயற்சி செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர் என்ன பதிலைக் கண்டடைந்தாரென்றால், தலித்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காதபடி இந்தக் கேடு கெட்ட சாதி சமூகம் தடுத்துவிட்டதாம். அதனால் அவர்களால் விடுதலை பெற முடியாமல் போய்விட்டதாம். அம்பேதகரின் இந்து வெறுப்புக் கோட்பாடு முழுவதுமே இந்த ஒற்றை வாக்கியத்தில்தான் வேர் கொண்டிருக்கிறது. அவர் மட்டும் கொஞ்சம் நிதானமாக விஷயத்தை அணுகியிருந்தால் அவருக்கு சாதி சமூகத்தின் உண்மையான சித்திரம் புலப்பட்டிருக்கும். தலித்களுக்கு வாழ்தலுக்கான வெளிகள் விசாலமாக இருந்தன. எல்லா வாழ்க்கையைப் போல் இதுவும் ஒரு வாழ்க்கை என்ற நம்பிக்கை இருந்ததால்தான் அவர்கள் இந்து சமூகத்தை விட்டு வெளியேற விரும்பியிருக்கவில்லை.

அம்பேத்கர் சொன்னதையே நீங்கள் மறுக்கிறீர்களா..?

அம்பேத்கர் என்ன கடவுளா, மறுக்கவே முடியாத அளவுக்கு. அவர் சொன்ன இந்த வாக்கியத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உலகில் எங்கெல்லாம் கலகங்கள் வெடித்திருக்கின்றனவோ எங்கெல்லாம் விடுதலைப் போராட்டங்கள் முளைத்திருக்கின்றனவோ அங்கெல்லாம் போராளிகளுக்கு ஆதிக்க சக்திகள் ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து, வாருங்கள் வந்து அடியுங்கள் என்றா சொல்லியிருக்கிறார்கள். ஆயுதங்கள் தேவையாக இருந்த இடங்களில் அவை தேடிக் கண்டடையப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. தலித்களுக்கு ஆயுதங்கள் ஏன் கிடைத்திருக்கவில்லையென்றால் அவர்கள் அதைத் தேவையாகக் கருதியிருக்கவில்லை. இத்தனைக்கும் இந்து சமூகத்தில் ஆயுதங்களை உருவாக்கியவர்களே தலித்கள்தான். ஈட்டிகள், அம்புகள் எனப் பழங்குடிகளிடம் இல்லாத ஆயுதங்களா? அருவாள், கத்தி, கடப்பாரை, வாள் என அனைத்தையும் செய்து கொடுத்ததே ஒரு தலித் பிரிவுதானே.

விஷயம் இதோடு முடியவில்லை. கடந்தகால இந்திய சாதிய வாழ்க்கை கடைநிலை சாதிகளுக்கு மிகப் பெரிய துன்பத்தைத் தந்திருந்தால் அவர்கள் அதை நிச்சயம் மாற்ற முன்வந்திருப்பார்கள். எப்படிச் சொல்கிறேன் என்றால், ஒரு தலித்துக்கு கடலும், காடும், மலையும் எப்போதும் திறந்தேதான் கிடந்தது. அந்த இடங்கள் எல்லாம் சாதி இந்துக்களின் குறிப்பாக பிராமணர்களின் செல்வாக்கு துளியும் இல்லாத இடங்கள். எனினும் தலித்கள் வயலோடும் சாதி இந்துக்களோடும் தம்மைப் பிணைத்துக்கொண்டு இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் அது ஏன் என்று அவர்களுடைய இடத்தில் இருந்து பார்த்துவிட்டு அதன் பிறகு நம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்வது நல்லது.

அவ்வளவு ஏன்… இந்தியாவில் கடந்த பத்து நூற்றாண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்தவ சக்திகள் தாங்க முடியாத அளவு அதிகாரத்துடன் ஆட்சி செய்திருக்கின்றன. தலித்களுக்கு இந்திய சாதி அமைப்பு உவப்பானதாக இருந்திருக்கவில்லையென்றால் அந்த நேச சக்திகளுடன் சேர்ந்து மாற்றிக் கொண்டிருக்கலாமே… விஷயம் என்னவென்றால், இன்றைய சாதியப் போராளிகள் மேற்குலகில் இருந்து கடன் வாங்கிப் பேசும் இந்துப் பாரம்பரிய எதிர்ப்பு வாதங்கள் எல்லாமே சாதி அமைப்பை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டு சொல்லப்படுபவையே.

தலித்கள் இந்து அமைப்பை விட்டு வெளியேற விரும்பாமல் இருப்பது அவர்களுடைய விசுவாசத்தைத்தான் காட்டுகிறது. அதை சாதி இந்துக்கள் அந்த அளவுக்குப் பொருட்படுத்தினார்களா… மதித்தார்களா?

விசுவாசம்… அங்கீகாரம் இதெல்லாம் பெரிய வார்த்தைகள் மட்டுமல்ல. பொருந்தாதவையும் கூட. தலித்கள் இந்துக்களாகத் தொடர்வதற்கான காரணம் தலித் என்பதும் இந்து என்பதும் வேறு வேறு அல்ல. அதனால்தான் இஸ்லாத்துக்கோ, கிறிஸ்துவத்துக்கோ, பவுத்தத்துக்கோ அவர்களுடைய பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்பவர்கள் அழைத்தவுடன் எல்லாரும் புறப்பட்டுப் போய்விடவில்லை. ஆதி திராவிடர்கள் என்று ஒரு வார்த்தைப் பிரயோகம் இருக்கிறதே அது உண்மையில் ஆதி இந்து என்றுதான் இருக்கவேண்டும். உருவ வழிபாடு, இயற்கை வழிபாடு, பூக்கள், தீபங்கள் கொண்டு வழிபடுதல், இறந்தவர் வழிபாடு, விபூதி-குங்குமம், அக மண முறை, சாதி (குழு) மனப்பான்மை என இந்து சமூகத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களுக்குமான வேர்கள் தலித் பண்பாட்டில்தான் ஊன்றியிருக்கின்றன.

சாதி அமைப்பு என்பதை ஒரு மரமாக நாம் உருவகித்தால், கடைநிலை சாதிகள் அதன் வேர் போன்றவை. இடைநிலை சாதிகள் தண்டும் கிளைகளும் போன்றவை. உயர் சாதிகள் என்பவை அந்த மரத்தின் பூவும் கனியும் போன்றவை. ஒட்டு மொத்த மரத்தின் குணத்துக்கு கனி, கிளை, தண்டு, வேர் என அனைத்துமே காரணமானவை. இன்னொரு முக்கியமான விஷயம், இந்தியாவில் சாதி அமைப்பு செல்வாக்குடன் இருந்த காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளில் என்ன அமைப்பு இருந்தது என்பதையும் ஒருவர் கணக்கில் எடுத்துக்கொண்டே பேசவேண்டும்.

சமத்துவம் என்பது நியாயமான அடிப்படையான விஷயம்தானே. நம் முன்னோர்களின் சமுதாயத்தில் அது இருந்திருக்கவில்லை. இன்றும் தைப் பெற கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில் சமத்துவத்தை மறுதலிக்கும் சாதி அமைப்பை எதற்காகத் தூக்கி வைத்துக் கொண்டாடவேண்டும்?

நிச்சயமாக சமத்துவத்தை நல்ல குணம் என்றே சொல்கிறேன். ஆனால், அதுவே முதலும் முடிவுமான விஷயம் அல்ல. சமத்துவம் இல்லாத நிலையிலும் சந்தோஷமாக இருக்கமுடியும். முற்போக்காளர்கள் ஒரு சில அடிப்படைகளை வைத்துக் கொண்டு இதெல்லாம் இருந்தால்தான் ஒருவர் சந்தோஷமாக இருக்கமுடியும் என்று சொல்வதில் அப்படியொன்றும் பெரிய நியாயமெல்லாம் இல்லை.

சமத்துவம் உண்மையில் ஓர் அரசியல் உரிமைதான். அடிப்படை உரிமை அல்ல. இயற்கை என்பது சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மனிதன் இயற்கையை மீறிய நியாயம் ஒன்றை ஒருகாலத்திலும் உருவாக்கிவிடமுடியாது. வடிவங்கள் வேண்டுமானால் மாறலாமே தவிர ஏற்றத் தாழ்வு ஏதாவது ஒரு வடிவில் இருந்தே தீரும். அந்த ஏற்றத் தாழ்வு கழுத்தை நெரிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். இந்திய சாதிய வாழ்க்கை மிகவும் லகுவானது. வாழ்தலுக்கான வெளியை அனைத்து பிரிவுக்கும் பகிர்ந்து தந்திருக்கும் அமைப்பு அது.

உலகில் இனம், நிறம், மதம், மொழி, சாதி எனப் பல அடையாளங்களின் அடிப்படையில் சமூகங்கள் உருவாகி வந்திருக்கின்றன. இதில் ஆகக் குறைந்த ஒடுக்குமுறை இருந்த வடிவம் எது என்று பார்த்தால் அது சாதிய அமைப்பே. அதிலும் நிறவெறியும் இனவெறியும் மத வெறியும் உலகில் ஆடியிருக்கும் ஊழிக் கூத்தை ஒப்பிடும்போது இந்த சாதிய அமைப்பு எவ்வளவோ மேல் என்பதுதான் உண்மை. நிற வெறியை ஒரு மாட்டின் கழுத்தில் பெரிய இரும்பு குண்டைக் கட்டி வைத்ததோடு வண்டியில் பூட்டி சாட்டையால் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்ததற்கு ஒப்பிடலாம்.  இன வெறியை எடுத்துக்கொண்டால் மாட்டின் கழுத்தைக் கால்களோடு இறுக்கிக் கட்டி, தர்க்குச்சியால் தடம் விழும் அளவுக்கு அடித்ததோடு ஒப்பிடலாம். சாதி அமைப்பானது முகத்தில் வைக்கோல் கூடையைக் கட்டி களத்து மேட்டில் சுற்றிச் சுற்றி வந்து நெல்லடிக்கப் பயன்படுத்தியதற்கு ஒப்பிடலாம். அவ்வளவுதான். மிதித்துப் பிரித்த நெல்லைக்கூட உண்ண விடாமல் வெறும் வைக்கோலைக் கொடுத்தார்கள் என்பது உண்மைதான். அந்த வைக்கோலே மாட்டுக்கு போதுமான சத்தைக் கொடுத்தது என்பது அதைவிட உண்மையே.

ஆனால், அம்பேத்கர் போன்றவர்கள் சாதி அமைப்புத்தான் அனைத்திலும் கொடூரமானது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். பிற அமைப்புகளில் ஒருவர் மேலே செல்ல வாய்ப்பு இருந்தன என்றும் சாதி அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்டவற்றை மீறவே முடியவில்லை என்றுதானே சொல்கிறார்கள்.

ஆமாம். அப்படித்தான் சொல்லவும் செய்வார்கள். அவர்களுடைய அரசியல் அதை மையமாகக் கொண்டதுதானே. நீக்ரோக்களில் மேலே வந்த சொற்ப நபர்களை உதாரணம் காட்டுவார்கள். ஆனால், இந்துக்களின் புனித நூல்களான ராமாயண, மகாபாரதத்தை எழுதியதே பழங்குடி, மீனவர்கள்தான் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். ராமர் சம்புகன் என்ற சூத்திரரின் தலையை வெட்டிக் கொன்றதைச் சொல்வார்கள். குகனை நால்வரோடு ஐவரானோம் என்று சகோதரராக ஆரத் தழுவியதை விட்டுவிடுவார்கள். அவர்கள் உண்மை நடப்புகளைப் பார்த்துக் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ளவில்லையே. பிரிட்டிஷாரால் கோட்பாடு உருவாக்கித் தரப்பட்டது. அதற்கு இவர்கள் இந்திய உதாரணங்களில் தேவையானவற்றை மட்டும் திணித்து உயிர்கொடுத்துக்கொண்டார்கள்.

சமத்துவம் இல்லாத நிலையிலும் சந்தோஷமாக இருந்த சமூகத்தை சமத்துவத்துடன் சந்தோஷமாக வாழ வைப்பது எப்படி என்பதுதான் நம் முன்னால் இருந்த, இருக்கும் பிரச்னை. இந்த உண்மையை யாரும் புரிந்துகொள்ளவில்லை. சமத்துவம் இல்லாததால் வேதனையுடன் இருந்தார்கள்; சமத்துவம் திட்டமிட்டு மறுக்கப்பட்டது என்றெல்லாம் நம் கடந்த காலமானது பிழையாக முத்திரை குத்தப்பட்டுத்தான் நம்முடைய நவீன உலகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த முதல் கோணல் தான் முழுவதையும் கோணலாக்கிவைத்திருக்கிறது.

நவீன சமுதாயம் சமத்துவ விழுமியங்களை முக்கியமானதாகக் கருதுகிறது. அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நேற்றைய சமுதாயத்தில் சமத்துவம் இருந்திருக்கவில்லை என்பதை எப்படிப் பார்க்கவேண்டும்? உலகின் பிற பகுதிகளில் அப்போது என்னவிதமான அமைப்புகள் இருந்தன? அங்கு சமத்துவம் இருந்ததா? மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் நிலவிய அந்தக் காலகட்டத்தில் உலகில் எங்குமே சமத்துவமும் ஜனநாயகமும் இருந்திராத நிலையில், இந்தியப் பாரம்பரியம் மட்டுமே, மேற்குலகத்தினர் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக இழிவானதாக ஆகிவிடுமா? என் கடந்த காலத்தைப் பழிக்காமலேயே நான் சமத்துவ, ஜனநாயக சமூகத்தை இங்கு உருவாக்க முடியுமே… மேலும் அது பெருமளவுக்கு சுமுகமாக உருவாகியும் வந்திருக்கிறதே… இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு அறிவுஜீவி செயல்படுகிறார் என்றால் அவர் நவ காலனியத்தின் மதிப்பீடுகளை முற்போக்கு என்ற போர்வையில் கிளிப்பிள்ளைபோல் சொல்கிறார் என்றே அர்த்தம். அதனால்தான் அவர்களைப் பார்த்துப் பேசும்போது, கள்ளக் குரலில் மட்டுமே பேசி வருகிறீர்களே… உங்கள் சொந்தக் குரலிலும் கொஞ்சம் பேசுங்களேன் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டிவருகிறது.

சாதி அமைப்பு பற்றி உங்கள் கணிப்பு என்ன?

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். வட இந்தியாவில் நடக்கும் உறியடி விழாவைப் பார்த்திருப்பீர்கள். நான்குபேர் கீழே நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மேலே மூன்று பேர் நிற்பார்கள். அவர்களுக்கு மேலே இரண்டு பேர் நிற்பார்கள். கடைசியில் ஒருவர் மேலே ஏறி பொற் கிழியை எட்டிப் பிடிப்பார்.  நம் சாதி அமைப்பின் மிக அற்புதமான குறியீட்டு வடிவம் இது.

தரையில் நிற்கும் நான்குபேர் அவர்களுக்கே மேலே நிற்கும் மூன்று பேரின் எடையைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள். மூன்று பேரின் மொத்த எடை 300 கிலோ என்று வைத்துக் கொண்டால், அது நான்கு பேரால் 75 கிலோ வீதம் சமமாகச் சுமக்கப்படும். அந்த மூன்று பேருக்கு மேலே இரண்டு பேர் இருக்கிறார்களே அவர்களுடைய எடையான 200 கிலோவானது 66 கிலோ வீதம் அவர்களுக்குக் கீழே நிற்கும் மூவரால் சுமக்கப்படும். கடைசியாக மேலே நிற்கும் ஒருவருடைய 100 கிலோ எடையானது இருவரால் ஆளுக்கு 50 கிலோ என்ற வீதத்தில் சுமக்கப்படும்.

குறைந்தபட்ச சுமை என்பது 50 கிலோ சுமையாகவும் அதிகபட்ச சுமை என்பது 75 என்பதாகவும்தான் இருக்கிறது. மேலடுக்கு நபர்களின் எடையில் சிறிதளவு தரையில் இருப்பவர்கள் மேல் மறைமுகமாக இறங்கும் என்றாலும் அதிகபட்ச சுமை என்பது 80-90 கிலோவுக்கு மேலாக ஒருபோதும் செல்வதில்லை. ஆனால், சாதி அமைப்பை விமர்சிப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மேலே மூன்றடுக்குகளில் ஆறு பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த ஆறு பேரின் மொத்த எடையான 600 கிலோவும் தரையில் நிற்கும் ஒரே நபர் மேல் ஏற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் பிழையான பார்வையே நம் சாதி சார்ந்த வாழ்க்கையை நரகம் என்று சொல்லி நம் பாரம்பரியத்தை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கச் சொல்கிறது.

இந்த அமைப்பில் கூட மேலே இருப்பவர் மீது எந்தச் சுமையும் இல்லையே. அவருக்குத்தான் பொற்கிழி கிடைக்கவும் செய்கிறது.

பொற்கிழியானது சமமாக இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பிரித்துத்தான் தரப்படுகிறது. ஒருவரே அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவதில்லை. அப்பறம் அவர் மேல் சுமை எதுவும் இல்லை என்பதை நீங்கள் வேறுவகையில் பார்க்கவேண்டும். நம் உடம்பில் கூட காலுக்கு மேல் இடுப்பு… இடுப்புக்கு மேல் வயிறும் தோளும். தோளுக்கு மேல் தலை என்றுதான் இருக்கிறது. தலைக்கு மேல் எந்தச் சுமையும் இல்லையே… அதற்கென்ன செய்ய… ஆனால், ஒரு காலினால் இடுப்பையும் தோளையும் தலையையும் சுமக்க முடியாமல் ஒருபோதும் போனதில்லை. காலின் வலிமையும் உடலின் தன்மையும் அப்படியானது. மேலும் தலைக்குள் இருக்கும் மூளை காலுக்கும் சேர்த்துத்தான் சிந்திக்கிறது. செயல்படுகிறது.

ஒரு மனிதருடைய உடலில் இருக்கும் பல்வேறு உறுப்புகள் ஒவ்வொரு வேலையைச் செய்வதுபோல், சமூகத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினர் பல்வேறு வேலைகளைச் செய்து வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வேலையில் இருக்கும் கடினத்தன்மையையும் இழிவையும் மாற்ற வேண்டிய பொறுப்பு அந்தந்தத் தொழிலில் ஈடுபட்டுவந்தவர்களும் உண்டு. பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வேலைகளை ஸ்பெஷலைசேஷனுக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு ஏன் மேம்படுத்தியிருக்கவில்லை. மந்திரம் ஓத விடவில்லை. அதனால்தான் மண்ணைச் சுமந்து வாழ வேண்டிவந்துவிட்டது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. மண்ணைச் சுமப்பதில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தவேண்டும் என்று தலைக்குள் இருக்கும் மூளை என்ற ஒன்றைப் பயன்படுத்திச் சிந்தித்திருக்கவேண்டும். அதை யாரும் தடுக்கவில்லையே… அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ள முடியாத ஒன்றை அரிச்சுவடியைப் படித்து மட்டும் கற்றுக் கொண்டிருக்க முடியுமா?

உடம்பில் முகத்துக்கு பன்னீரும் காலுக்குத் தண்ணீரும் தோளுக்கு மாலையும் காலுக்குச் செருப்பும் கிடைப்பதுபோலவே சமூகத்தில் ஒவ்வொரு வேலையைச் செய்து வந்தவர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைத்திருக்கும். நம் உடம்பையே நாம் பிரித்துத்தான் நடத்துகிறோம். இதை அநியாயம் என்று சொல்ல முடியுமா என்ன? இதேதான் சமூகத்துக்கும் பொருந்தும்.

நீங்கள் என்னதான் உதாரணங்கள் சொன்னாலும், கடை நிலையில் இருந்த ஒருவர் கால காலமாக அதிலேயே உழல வேண்டி வந்தது அநீதிதானே…

மனித இனம் பிறப்பின் அடிப்படையில்தான் அனைத்தையும் தீர்மானித்து வந்திருக்கிறது. சூரியனும் நிலாவும் எல்லாருடைய வீட்டில் இருந்தும் ஒரே தொலைவில்தான் இருக்கின்றன. யாருக்கும் எதுவும் கூடுதலாக எதையும் தந்துவிடவில்லை…

சினிமா கவிஞர் கண்ணதாசன் பாடியதுபோல் இருக்கிறது நீங்கள் சொல்வது.

உண்மை அதுதான். சேரி என்பது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதாக இன்றைய போராளிகள்தான் சொல்கிறார்கள். அன்றைய மக்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை. பணியிடமான வயலுக்கு அருகில் வீடு என்று பார்த்தார்கள். ஊரானது அக்ரஹாரத்தில் இருந்து ஆரம்பிப்பதாக நினைக்கும் ஒருவருக்கு சேரி ஒதுக்குப்புறத்தில் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மை அது அல்ல. வட்டத்துக்கு எது ஆரம்பம் எது முடிவு..? சேரி மதிப்பீடுகளை உயர்வாக நினைக்கும் ஒருவர் ஊரானது சேரியில் இருந்து தொடங்குவதாகவும் சொல்ல முடியும்.

ஒருவர், பிராமண மதிப்பீடுகளைப் பின்பற்றாதவர்களைப் பின் தங்கியவர்களாகப் பார்ப்பதே உண்மையில் பிராமண மதிப்பீடுகளை உயர்வாக நினைப்பதால்தான். அக்ரகாரத்துக்குள் நுழைய விடாததை ஒடுக்குமுறையாகப் பார்ப்பது ஏனென்றால், அக்ரகாரத்தை உயர்வானதாகக் கருதுவதால்தான். கடந்த கால மனிதர்கள் அக்ரகாரத்தை இன்னொரு தெரு என்றே பார்த்தார்கள். எனவே அதில் நுழைய விடாததை பெரிய ஒடுக்குமுறையாகப் பார்க்கவில்லை.

இல்லை… பிராமணர்கள் தம்மை உயர்வாகக் கருதிக்கொள்வதால்தான் அந்த மேட்டிமைத்தனத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகத்தான் அக்ரஹார நுழைவு போன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதைத்தான் தவறு என்கிறேன். நேற்றைய இடை கடைநிலை சாதியினருக்கு அது ஒடுக்குமுறையாகவே இருந்திருக்கவில்லை. எனவே அதை வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அடிப்படையிலேயே தவறானது. அதுபோலவே, செய்யும் தொழில்களை எடுத்துக்கொண்டால் எல்லாத் தொழிலுமே உயர்வானவையே… எதுவும் உயர்ந்தது தாழ்ந்தது என்று கிடையாது. நேற்றைய மனிதர்கள் அதை அப்படித்தான் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள்.

எல்லாத் தொழிலும் எப்படி உயர்வாகும்? எல்லாத் தொழிலையும் போலவே இதுவுமொன்று என்று மலம் அள்ளும் தொழிலைச் சொல்ல முடியுமா?

முடியாதுதான். முதலில் சொன்னதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன். எல்லாத் தொழிலையும் உயர்வானதாக ஆக்கிக் கொள்ள முடியும். தொழில்களில் உயர்வென்றும் தாழ்வென்றும் எதுவும் இல்லை. பழங்குடிகளாக வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் தங்கள் விருப்பம், திறமை ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு தொழில் செய்யும் சமூகமாக ஆகியிருக்கிறார்கள். ஒரு தொழிலை எளிமையானதாகவும் சமூக அந்தஸ்து மிகுந்ததாகவும் ஆக்கிக் கொண்டிருக்கவேண்டிய பொறுப்பு அந்தந்தத் தொழிலில் ஈடுபட்டுவந்தவர்களுக்கே இருந்திருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் ஒரே வேலையைச் செய்ய வைத்தது உண்மையிலேயே தாங்கள் செய்த செயலை எளியானதாகவும் உயர்வானதாகவும் ஆக்கிக் கொள்ளவல்லவா செய்திருக்கவேண்டும். அது ஒரு வரம் அல்லவா… வரத்தையே சாபமாக ஆக்கிக்கொண்டுவிட்டு தெய்வத்தைப் பழிப்பதில் எந்த நியாயமும் இல்லை. உண்மையில் பழங்கால மக்கள் அதை சாபமாகப் பார்த்திருக்கவில்லை. இன்றைய போராளிகள்தானே அப்படிப் பார்க்கிறார்கள்.

மனித மலத்தை மனிதரே அள்ளிய விஷயத்துக்கு வருவோம். இந்து மதம் குறிப்பாக பிராமணர்களே இந்த அநீதிக்கு முழுக் காரணம் என்பதுதான் சாதியப் போராளிகளின் வாதம். முதலாவதாக வாளியும் கரண்டியுமாகப் புறப்பட்ட ஒரு தோட்டி, சக்கிலியரின் குடிசையைக் கடந்து, பள்ளரின் குடிசையைக் கடந்து, பறையரின் குடிசையைக் கடந்து, தேவரின் வீட்டைக் கடந்து, வன்னியரின் வீட்டைக் கடந்து,  செட்டியாரின் வீட்டைக் கடந்து, பிள்ளைவாளின் வீட்டைக் கடந்துதான் அக்ரஹாரத்து கழிப்பறையை சென்றடைந்திருக்கிறார். இத்தனை வீடுகளில் இருந்த எவரேனும் வாளியையும் கரண்டியையும் பிடுங்கி எறிந்திருக்கலாம். செய்யவில்லை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். 3000-4000 வருடங்களுக்கும் முன்பாக சிந்து சரஸ்வதி நாகரிக காலகட்டத்திலேயே ஒவ்வொரு வீடுகளுக்குப் பின்னால் கழிப்பறையில் இருந்து ஒரு சிறிய கால்வாய் வெட்டப்பட்டு, அந்தக் கழிவுகள் எல்லாம் ஒரு இடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டு, அங்கிருந்து வேறொரு பெரிய கால்வாய் வழியாக ஊருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்த் தொழில்நுட்பத்தை தோட்டிகள் எளிதில் அக்ரஹாரத்தில் செய்து கொடுத்திருக்க முடியுமே… ஏன் செய்யவில்லை? இன்றைய ஃபிளஷ் அவுட் டாய்லெட் வழிமுறை கூட மிகவும் எளியதுதான். ஏன் 100 வருடங்களுக்கு முன்புவரை தோட்டிகளால் செய்யப்பட்டிருக்கவில்லை.

உலகம் முழுவதும் மனித மலத்தை மனிதர்கள் தானே 100 வருடங்களுக்கு முன்பு வரை அள்ளி வந்திருக்கிறார்கள். மேற்குலகில் கூட நவீனக் கழிப்பறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பல ஆண்டுகள் கழிந்த பிறகும் மனித மலத்தை மனிதரேதான் அள்ளி வந்திருக்கிறார்கள். இந்து சமுகத்தையும் பிராமணர்களையும் மட்டுமே இதற்கான ஒரே குற்றவாளிகளாக ஏற்றி தீர்ப்பை வழங்கும் முன் இந்த விஷயங்களையும் ஒருவர் கணக்கில் கொள்ளவேண்டுமல்லவா.

நான் பிராமணர்கள் செய்தது சரி என்று நிச்சயம் சொல்லவில்லை. அது தொடர்பாகச் சொல்லவேண்டிய வேறு விஷயங்களையும் சொல்லிவிட்டு பிராமணர்கள் பக்கம் வாருங்கள் என்றுதான் சொல்கிறேன். 600 கிலோ சுமை அல்ல… 75-90 கிலோதான் என்று சொல்கிறேன். வாளியையும் கரண்டியையும் முதல் தலைமுறையிலேயே கீழே போட்டிருக்க முடியும் என்றுதான் சொல்கிறேன். இந்த பதில்களையும் கேள்விகளையும் நான் போராளிகளைப் பார்த்துத்தான் கேட்பேனே தவிர கடந்த காலத்தில் இருந்து ஒரு தோட்டி எழுந்துவந்து, இப்படி மலம் அள்ளச் செய்துவிட்டீர்களே இது நியாயமா (அவர் அப்படிக் கேட்கவும் மாட்டார் என்பது வேறு விஷயம்) என்று கேட்டால், அடுத்த நிமிடமே அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பேன். ஆனால், போராளிகளைப் பார்த்துப் பேசும்போது, என்ன மயித்துக்கு நீ அள்ளின என்றுதான் கேட்பேன்.

தொழிலை மேம்படுத்திக் கொள்ளாதது தவறு என்றே வைத்துக் கொள்வோம். இயற்கை வளங்களை முறையாகப் பங்கிடவில்லையே… அது அநீதிதானே. பொதுக் குளத்தில் கூட இறங்கவே கூடாது என்று அல்லவா விரட்டி அடிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்திய சாதி அமைப்பில் இயற்கை வளங்களை எந்தவொரு பிரிவுவும் ஏகபோகமாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. கறுப்பர்களுக்கு எதையுமே தராமல் வெள்ளையர்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டார்கள். மதமும் அதையேதான் தான் சென்ற இடங்களில் எல்லாம் செய்தது. இன வெறியும் அதையேதான் செய்தது. ஆனால், சாதி அமைப்பில் பிராமணர்கள் அறிவுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருந்தார்கள். சத்திரியர்களுக்கு இருந்த அரசியல் அதிகாரம் என்பது பஞ்சாயத்து கிராம சபைகளோடு பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தது. வைசியர்களின் பொருளாதார அதிகாரமானது குறைந்த லாபத்தை லட்சியமாகக்கொண்டிருந்தது.

சரி… நீங்கள் சொன்ன பொதுக் குளத்தில் நீர் அள்ள விடவில்லை என்ற விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள், மழை வளம் மிகுதியாக இருந்த கடந்த காலத்தில் நம் தேசத்தில் ஆறுகள், கிணறுகள், ஏரிகள் என எண்ணற்ற நீர் நிலைகள் இருந்திருக்கின்றன. இவ்வளவு ஏன் நீர் அள்ளத் தடை விதிக்கப்பட்ட குளத்துக்கான நீர் வரும் கால்வாயானது சூத்திர, தலித்களின் புழக்கத்தில்தான் இருந்தன. நீரானது பாசி பிடித்து ஓரிடத்தில் தேங்குவதற்கு முன்பாகவே அதை அவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்திருந்தது என்பதுதான் உண்மை. நேற்றைய தலித்தும் சூத்திரரும் பொதுக் குளத்துக்கு குடத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்காததன் காரணம் என்னவென்றால் அவருக்கான நீர் வேறு இடத்தில் அமோகமாக அவருக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. பொதுக் குளத்தில் அவர்களை அனுமதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், காக்கா, குருவி இறங்கிக் குடிக்கலாம்… நாங்க இறங்கக் கூடாதா என்ற அபத்த உரிமைப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்கவில்லை. இல்லாததை வைத்து உரிமைக் குரல் எழுப்பப்படுகிறது. நேற்றைய மக்களோ இருந்ததை வைத்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

நம் முன்னால் இருக்கும் சவால் என்னவென்றால், சாதி அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள்  மறைந்து பெரு மதமாக நாம் ஆக வேண்டும். பெரு மதமாவதை நாம் விரும்பாத நிலையிலும் அது தவிர்க்க முடியாததாகிவிட்டிருக்கிறது. அதே நேரத்தில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் போல் ரத்த ஆறைப் பெருக்கெடுக்கச் செய்து அதைச் சாதிக்கவேண்டியதில்லை. நமது மத உருவாக்கம் சாதியின் நல்ல அம்சங்களையும் மதத்தின் நல்ல அம்சங்களையும் ஒருங்கிணைத்ததாக இருக்கவேண்டும்.

இதற்கு முதலில் ஒருவர் சாதிப் பிரச்னையின் அடிப்படையைப் புரிந்துகொண்டாகவேண்டும். ரவிக்கை அணியக்கூடாது என்பதில் ஆரம்பித்து தெருவின் வழியே செருப்புக் காலுடன் நடக்கக்கூடாது என்பதுவரை அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் ஆதாரமான அம்சம், நீ என்னைவிடத் தாழ்ந்தவன். நான் உன்னைவிட உயர்ந்தவன் என்ற மேல் சாதியின் எண்ணமே. இதை மீறி எழும் போராட்டங்களின் அடிப்படையான நோக்கம் செருப்பணிந்து நடப்பதோ மேலாடை அணிவதோ மட்டுமல்ல… நாம் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உரிமையை நிலைநாட்டுவதுவே. ஆக பிரச்னையின் ஆதாரமான அம்சம் கடை நிலை சாதியினரை இடை நிலை சாதியினர் தமக்கு சமமாக மதிக்கவேண்டும் என்பதுவே. இது எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்?

போராளிகள் இந்த விஷயத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்களென்றால், சாதி அமைப்பு மிகவும் மோசமானது. பிராமணர்களே இந்த சாதி அமைப்பின் சூத்திரதாரிகள். தலித்களிடமும் சூத்திரர்களிடமும் இருக்கும் சாதி உணர்வுக்கும் பிராமணர்களே காரணம். எனவே பிராமணர்களையும் அவர்களுடைய மதமான இந்து மதத்தையும் ஒழித்துவிட்டால் சமத்துவம் மலர்ந்துவிடும். இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் அம்பேத்கரில் ஆரம்பித்து ஈ.வே.ரா.வரை அனைவருமே போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

அப்படியான அணுகுமுறை என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புதிய தலைமுறை கொஞ்சம் நிதானமாகப் பார்க்கவேண்டும். பெரிதும் இடைநிலை சாதியையும் கடைநிலை சாதியையும் எதிரெதிர் அணியில் நிறுத்தும் செயலையே அந்தப் போராட்டங்கள் செய்திருக்கின்றன. இதையும் பிராமண சதி என்று கிளிப்பிள்ளைபோல் முழங்குபவர்களை, கொஞ்சம் ஓரமாகப்போய் விளையாடுங்கப்பா என்று சொல்லி அனுப்பிவிடலாம்.

முதலில் ஒருவர் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், சாதி உணர்வு மிகவும் அடிப்படையானது. ஒவ்வொரு மனிதரும் தம்மை விட உயர்ந்தவர்களாகச் சிலரையும் தம்மை விடத் தாழ்ந்தவர்களாகச் சிலரையும் நினைப்பது மிகவும் இயல்பானது. இந்த உணர்வானது அடுத்தவரின் கழுத்தை நெரிப்பதாக இருக்கக்கூடாது.

அடுத்ததாக, நவீன சமுதாயமானது எல்லாரும் சமமென்ற ஒரு விழுமியத்தை முன்வைக்கிறது. அதைக் கொண்டுவருவது எப்படி என்று பார்க்கவேண்டும். பல நூறு ஆண்டுகளாகத் தன்னை உயர்வாக நினைத்த ஒருவரை வெறும் ஒரு சட்டத்தைப் போட்டு அந்த மேலாதிக்கத்தை விட்டுக் கொடுத்துவிடு என்று சொல்லிவிட முடியாது. ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு ஊரில், தீயால் சூழப்பட்ட கோட்டைக்குள், நாகப் பாம்புகள் காவலிருக்கும் அரண்மனை ஒன்று இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு மந்திரக் குடுவைக்குள் மாய நீர் இருக்கிறது. அதை எடுத்து வந்து யார் மீது தெளிக்கிறோமோ அவர் உடனே கடந்த கால மேலாதிக்க எண்ணங்களையெல்லாம் விட்டொழித்துவிட்டு அனைவரையும் சமமாக நடத்த ஆரம்பித்துவிடுவார் என்று யாரேனும் சொன்னால் அந்த மாய நீரை எடுத்து வரும் சாகச யாத்திரைக்கு சீறிப் பாய்ந்து புறப்படும் முதல் குதிரை என்னுடையதாகத்தான் இருக்கும். ஆனால், அப்படியான ஒரு மாய நீர் குடுவை உலகில் இல்லை என்பதால், சமூகத்தின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புகிறேன்.

நேற்றுவரை என் முன்னே கை கட்டி நின்றவன் இன்று எனக்கு சமமாக உட்காருவதா என்ற மேல் சாதிக்காரர் ஒருவருடைய உணர்வைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். ஏனென்றால், நாற்காலியில் சரி சமமாக உட்கார விரும்புபவர் தனக்குக் கீழே இருப்பவர் தன் தோளில் இருக்கும் துண்டைத் தன்னைக் கண்டதும் இடுப்பில் கட்டிக் கொள்ளவேண்டும் என்று சொல்பவராகவேதான் இருந்துவந்திருக்கிறார். எனவே இதை தனிப்பட்ட சாதியின் திமிராக அல்லாமல், மனித இயல்பாகவே பார்க்கிறேன். அதை எப்படி மாற்றுவது என்று நிதானமாக யோசிக்க விரும்புகிறேன். சுருக்கமாகச் சொல்வதானால், மேல் சாதிக்காரரின் மனத்தில் அனைவரும் சமமென்ற எண்ணத்தை முதலில் உருவாக்கிவிட்டு, அவரே தாழ்ந்த சாதிக்காரருக்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்காரவைத்து அதன் மூலம் சமத்துவம் மலர வேண்டுமென்று விரும்புகிறேன். நேரடியாக ஒரு நாற்காலியைப் போட்டு அதில் தாழ்ந்த சாதிக்காரரை உட்கார வைத்து அதன் மூலம் மேல் சாதிக்காரரின் மனத்தில் சமத்துவ எண்ணத்தை நான் உருவாக்க முயற்சி செய்யமாட்டேன். அது மாட்டை வண்டிக்குப் பின்னால் கட்டும் முயற்சி.

நேற்றைய போராளிகள் அப்படிச் செய்ததன் மூலம் சமத்துவம் உருவாகாமல் இடைவெளி மேலும் அதிகரித்திருப்பதைப் பார்க்கும் இடத்தில் இருப்பதால் வேறுவிதமான தீர்வையே முன்வைக்க விரும்புகிறேன். இதை நான் எப்படிச் சமாளிப்பேன் என்றால், மேல் சாதிக்காரருக்கு சிம்மாசனம் ஒன்றைப் போடச் சொல்லி தாழ்ந்த சாதிக்காரருக்கு நாற்காலியை போடச் சொல்வேன். இப்போதும் சமத்துவம் வந்து சேர்ந்திருக்காதுதான். ஆனால், இந்த முயற்சியினால் கை கட்டி நின்றுகொண்டிருந்தவருக்கு உட்கார ஒரு இருக்கை கிடைத்திருக்கும். மேல் சாதிக்காரருக்கும் அவருடைய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு சிம்மாசனம் கிடைத்திருக்கும். அடுத்த தலைமுறையில் மேல் சாதிக்காரருக்கு தங்க சிம்மாசனமும் தாழ்ந்த சாதிக்காரருக்கு வெள்ளி சிம்மாசனமும் போட்டுக் கொடுப்பேன். அதற்கு அடுத்த கட்டத்தில் இருவருக்கும் வைர சிம்மாசனமொன்றைப் போடுவேன். சமத்துவத்தை நான் இப்படிப் படிப்படியாகத்தான் கொண்டுவர முயற்சி செய்வேன். கிளார்க்கை சீனியர் கிளார்க் ஆக்கிவிட்டுத்தான் பியூனை கிளார்க் ஆக்குவேன். எல்லாரும் சமம் என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே பியூனை மேனேஜராக்க மாட்டேன். இடைநிலை கடை நிலை சாதிகளின் மோதலினால் சிந்தப்படும் கண்ணீருக்கும் ரத்தத்துக்கும் சாதி சமத்துவத்தைப் பேசும் முற்போக்காளர்களே காரணம். அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உண்மையைப் புரிந்துகொள்ளத் தயாரில்லை. பழியை பிராமணர்கள் மீதும் இந்து மதம் மீதும் போட்டுவிட்டு தங்கள் கைகளைக் கழுவிவிடுகிறார்கள். ஆனால், ரத்தக் கறைகள் அவ்வளவு எளிதில் கைகளை விட்டுப் போககூடியவை அல்லவே.

மயிலே மயிலே இறகு போடு என்று கேட்டுப் பெறவேண்டும் என்று சொல்கிறீர்கள் அல்லவா?

நீங்கள் அப்படி நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள். முன்பே சொன்னதுபோல் நான் புதிய தலைமுறையின் பிரதிநிதி. சாதி விடுதலைப் போராட்டங்களும் கோட்பாடுகளும் என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைத் தள்ளி நின்று பார்க்க முடிந்திருக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன். முந்தின தலைமுறை சிந்தனையாளர்களை நான் மறுதலிக்கிறேன் என்றால் நான் அவர்களைவிட உயர்ந்தவன் என்பதால் அல்ல. காலத்தால் நான் வந்து சேர்ந்திருக்கும் இடம் எனக்கு இந்த சிந்தனையைத் தந்திருக்கின்றன. அவர்களுடைய சிந்தனையில் இருந்த போதாமைகளைப் பிழைகளைக் காலம் எனக்குக் காட்டியிருக்கின்றன. அவர்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால், அவர்களுக்கே இவை உரைத்திருக்க வேண்டும். அம்பேத்கர் காலத்திலும் ஈ.வே.ரா.வின் காலத்திலும் நடக்காத சாதிய மோதல்களா இப்போது நடந்துவிட்டிருக்கின்றன. அம்பேத்கர் சூத்திரர்களையும் சாதி இந்து என்ற சிமிழுக்குள் அடைத்தார். ஈ.வே.ரா. சூத்திரர்களுக்கும் தலித்களுக்கும் இடையில் எந்த சண்டையுமே இல்லை என்பது போலவும் இருந்த பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் பிராமணர்களே காரணம் என்று மட்டையடி அடித்தார். அம்பேத்கரும் ஈ.வே.ரா.வும் மேற்குலகம் தந்த கறுப்புக் கண்ணாடியால் உலகத்தைப் பார்த்தார்கள். எனவே, அது இருட்டாகவே தெரிந்தது. நான் என் கண்களால் உலகைப் பார்க்கிறேன். சாதியப் போராட்டம் ஏற்பட்ட பிறகு தலித்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் அதற்கு முந்தைய காலகட்டத்தைவிட வெகு அதிகம் என்பதும் சூத்திரர்களே அதன் சூத்திரதாரிகள் என்பதும் ஒரு எளிய உண்மையை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறது.

இடை நிலை சாதியினரின் மனம் கோணாமல் கடைநிலை சாதியினரை மேலேற்றுவது என்பது சாத்தியமா? அதிலும் இடை நிலைசதியினர் மிக அதிகமாக சுமார் 60-70 சதவிகிதம் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நல்லது செய்துவிட்டு கடை நிலை சாதியினர் பக்கம் வருவது என்பது அலைகள் ஓய்ந்த பிறகு கடலில் இறங்கலாம் என்று சொல்வதைப் போன்றதுதான்.

அப்படியில்லை. எண்ணிக்கை ரீதியில் இந்தப் பிரச்னை இருப்பது உண்மைதான். வளங்களைக் கூடுதலாக உருவாக்கித்தான் இந்தப் பிரச்னையைச் சமாளித்திருக்கவேண்டும். மூன்று பேர் அமர்ந்து செல்லும் இருக்கையில் வலுக்கட்டாயமாக நான்காவது நபரையும் உட்காரச் சொன்னால், மூன்றாவதாக இருப்பவருக்கும் நான்காவதாக இருப்பவருக்கும் இடையில் சண்டை மூளத்தான் செய்யும். நான்காவது நபரும் உட்காரும் வகையில் இருக்கையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று நபருக்கு கூடுதலாக ஃபேன் ஒன்றை மாட்டிவிடவேண்டும். இன, நிற வெறிகள் எப்படிக் குறைந்திருக்கின்றன என்பதைப் பார்த்தாலே போதும். உலகை காலனியாக்கிச் சுரண்டியதன் மூலம் கிடைத்த செல்வம் அவர்களுக்கு மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் சமத்துவத்தை வழங்கவும் உதவியிருக்கிறது. விஷயம் ரொம்ப சிம்பிள். எந்த அளவுக்கு மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிகிறதோ அந்த அளவுக்குத்தான் சமத்துவத்தை ஒருவர் அனுமதிப்பார். ஆக்ஸிமோரான்தான். என்ன செய்ய மனித இயல்பு அல்லவா அது.

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!