அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் இனப்பிரிவினை பார்க்கக்கூடாது என 1968 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு Fair Housing Act என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெள்ளை இனத்தவரின் சம்மதத்துடனே சட்டம் நிறைவேறியது. சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண் இனப்பிரிவினையிலும் தொடர்ந்து இருக்கிறதா என்பதை அறிய ஹுபர்ட் ஓ கோர்மான் என்பவர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்.
அமெரிக்க வெள்ளையர்களிடம் முதலில் அவர் தொடுத்த கேள்வி, நீங்கள் இனப் பிரிவினை பார்ப்பவரா? இனப்பிரிவினை பார்ப்பது தவறென நினைக்கிறீர்களா?. இக்கேள்விக்கு 82% வெள்ளையர்கள் தாம் இனப்பிரிவினை பார்ப்பவரல்ல என்று பதிலளித்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்ட கோர்மான் சில மாதங்களுக்குப் பிறகு தாம் ஆய்வு செய்த அதே அமெரிக்கர்களிடம் கேள்வியை மாற்றிப் போட்டார்.
இம்முறை அவரின் கேள்வி சற்று வித்தியாசமானது. பதிலிலிருந்து கேள்வியை எழுப்பினார். நீங்கள் இனப்பிரிவினைப் ( racist) பார்ப்பவரல்ல, ஆனால் உங்களைச் சுற்றியுள்ள வெள்ளையர்களோ, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வெள்ளையர்களோ இனப்பிரிவினை பார்க்கிறார்களா? என்ற கேள்வியை முன் வைத்தார். பதிலளித்தவர்கள், ஆமாம், எனக்குத் தெரிந்து நிறைய வெள்ளையர்கள் வீடுகளை கறுப்பர்களுக்குக் கொடுக்க விரும்புவதில்லை. அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின்மையே வீடுகளையோ அல்லது அவர்கள் வாழும் பகுதிகளில் கறுப்பர்கள் வாழ விருப்பப்படாதவர்களாகவே தாங்கள் சந்தித்த பல வெள்ளையர்களும் உள்ளதாகப் பதில் அளித்தனர்.
இந்த ஆய்வை அப்படியே தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டால் பதில் எவ்வாறு இருக்கக்கூடும். நீங்கள் சாதி, மதம் பார்த்து நட்பு கொள்பவரா? அல்லது நீங்கள் சாதிய சிந்தனைகள் உள்ளவரா? இதை நேரடியாகக் கேட்டால் அமெரிக்காவில் சொன்னது போலவே நான் அனைத்து சாதியினரிடமும் நட்புப்பாராட்டுபவன் என்றே பதிலமையும். என்னுடைய நண்பர்கள் இவர்கள்தான் என்று அடையாளப்படுத்தவும் முனைவார்கள்.
கோர்மான் கேட்ட இரண்டாவது கேள்வியை நம்மூரில் இவ்வாறு கேட்டால் பதில் எவ்வாறு இருக்கும். நீங்கள் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் உங்கள் வீட்டிலோ உங்கள் அக்கம்பக்கத்தாரோ சாதி பார்த்து மதம் பார்த்து வீட்டை வாடகைக்கு விடுகிறார்களா? பணம் யார் தருவார்கள் எனப் பார்த்து விடுகிறார்களா? என்ற கேள்வியை வைத்தால் பதில் மேலே பார்த்த அமெரிக்கர்களின் பதிலைப் போலவே இருக்கும். ஆம், எங்கள் வீட்டிலும் சரி, அக்கம்பக்கத்திலும் சரி, குறிப்பிட்ட சாதியினருக்கோ, அல்லது பிரச்னை செய்யாத சாதியரா? என்று பார்த்து விட்டே பெரும்பாலும் வீடுகளை வழங்குவதாக அவர்கள் சொல்லக்கூடும். சில சாதியினர் வாடகைக்கு வந்த பின் பணம் தராமல் போகக்கூடும் அல்லது வீட்டைக் காலி பண்ண மாட்டேன் என்று பிரச்னை பண்ணுவார்கள். ஆதலால் அவர்களிடம் மல்லுக்கு நிற்பதற்குப் பதிலாக, முதலிலேயே ஆள் பார்த்து விடுகிறார்கள் என்றே தாம் புரிந்து கொள்வதாக விளக்கம் அளிப்பார்கள்.
ஜெயமோகன் தமது ஒரு கட்டுரையில் சாதி பற்றிக் குறிப்பிடும் போது, தமிழகத்திலுள்ள பெரும்பாலோர் தாம் பழகும் நபர் என்ன சாதி என்று உள்ளுக்குள் அறிய விரும்புபவர்களாகவே உள்ளனர் என்று கூறுகிறார். அதன் மூலம் அவரிடம் பழகுவதை அவர்கள் நிறுத்தப்போவதில்லை. ஆனால் அவர்களிடம் எதைப் பற்றி எவ்வாறு பேச வேண்டும் என்ற முன்னெச்செரிக்கையுடன் பழகுகிறார்கள்.
மேற்கூறிய இரண்டு நிகழ்விலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது, அடிப்படையில் மனிதர்கள் தனிப்பட்ட முறையில் சாதி வெறியோடோ, இனப்பாகுபாட்டுடனோ இருப்பதில்லை. ஆனால் அவர்கள் சார்ந்த சமூகத்தில் பலர் அவ்வாறு உள்ளதாக நினைக்கிறார்கள். பலரும் சாதி வெறியரோ, இனப்பிரிவினை பார்க்கிற அளவுக்கு கொடூரமானவர்களுமல்ல, அதேபோல தான் பார்ப்பதில்லை என்று சொல்லிக் கொண்டே, மற்றவர்கள் இவ்வாறே இருக்கிறார்கள் என்ற பரவலான எண்ணம் அவர்களையும் தான் சார்ந்த சமூகச் சிந்தனைக்குள் பயணிக்கச் செய்கிறது. இந்தக் கேள்விகளை வரதட்சணை, ஆட்சி, அதிகாரம், ஜனநாயகம், வளர்ச்சி எனப் பலவாறாகக் கேட்டாலும் பதில்கள் இதைப் போலவே அமையக்கூடும்.
இந்தப் பிரச்சினையிலிருந்து அல்லது இவ்வெண்ணத்திலிருந்து மனிதர்கள் விடுபட என்ன வழி? நாம் பெரும்பாலும் வழி நடப்பவர்களாகவே இருக்கிறோம். சட்டத் திட்டங்கள் என வரையறுக்கப்பட்டவற்றை கேள்வி எழுப்புபவராகப் பெரும்பாலும் இருப்பதில்லை. இதுகுறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் அமைவதில்லை. இரு பக்கமும் அடுத்த பக்கத்தினரின் அராஜகம் பற்றியே கேள்வி எழுப்புகிறோம். சமூக வாதிகள் என சொல்லிக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நியாயம் பேச இயலும் என ஓரணியும், அரசின் அனைத்து சலுகைகளையும் வாங்கிக் கொண்டும், எண்ணிக்கையில் பலம் பெற்றவர்களாக இருப்பதால் இன்று ஒடுக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிரச்னை செய்கிறார்கள் என்று அடுத்த பக்கம் மட்டுமே நியாயம் பேசும் வரையிலும் இப்பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைக்கப்போவதில்லை.
இந்த ஒற்றைச் சார்பு மனநிலையோடு சாதிகள் ஒழிய வேண்டும் என்று நியாயம் பேசுவது வெறும் முற்போக்கு, பிற்போக்கு அடையாளமாகவே பார்க்கப்படும். மாறாக இரு பக்கமும் உள்ள தவறைப் புரிந்து கொள்ளும் மைய எண்ணத்தைக் கொண்ட சமூகவாதிகள் தான் இன்றைய தேவை. அவர்களாலும், கல்வியறிவு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றின் மூலமே இப்பிரிவினை எண்ணங்கள் ஒழியக்கூடும்.
0