கடந்த சனிக்கிழமை மொழிபெயர்ப்பு குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தோம். சுமார் 40 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இயன்றவரை விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது அடிக்கடி நேரும் பிழைகளை நலங்கிள்ளி சுட்டிக்காட்டினார். செய்தித்தாள் மொழிபெயர்ப்பு என்று தனியாக ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பி சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் அ. குமரேசன். புனைவல்லாத எழுத்துகளையும் புனைவையும் ஏன் ஒன்றுபோல் மொழிபெயர்க்கமுடியாது என்று விளக்கிப் பேசினர் ஜி. குப்புசாமி. மொழிபெயர்ப்புப் பணியை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பத்ரி சேஷாத்ரி பேசினார். இவற்றின் ஒலிப்பதிவுகள் விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும்.
தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவில் வெளிவர என்ன செய்யவேண்டும்? அல்லது, அவ்வாறு வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் என்ன? இப்போதைக்கு எனக்குத் தோன்றும் 5 விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள் என பலரும் இணைந்துதான் இவற்றைச் செய்தாகவேண்டும்.
1) தேர்வு
புதிதாக என்னென்ன புத்தகங்கள் வெளிவந்துள்ளன, எவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதைப் பொதுவாகப் பதிப்பாளரே முடிவு செய்கிறார். இதிலுள்ள சவால்கள் : 1) புதிய புத்தகங்களைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்வது. 2) எது தேவை என்று முடிவு செய்வது. 3) துறை சார்ந்த மொழிபெயர்ப்பாளரைக் கண்டறிவது. வாசிப்பை அதிகப்படுத்துவதன்மூலம் முதல் பிரச்னையைத் தீர்க்கலாம்.
இரண்டாவது, விற்பனை / லாபத்தோடு தொடர்புடையது. எது தேவை என்பதைப் பெரும்பாலும் சந்தையே தீர்மானிக்கிறது. தனிப்பட்ட முறையில் ஒரு பதிப்பாளருக்கு குறிப்பிட்ட ஒரு புத்தகம் பிடித்திருந்தாலும் அந்தப் புத்தகத்தின் விற்பனை நிறைவைத் தராது என்று அவர் கருதினால் அதை அவர் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஏதேனும் அரசியல் அல்லது சித்தாந்த உந்துதலால் ஓர் இயக்கமாக நடத்தப்படும் பதிப்பகங்களால் மட்டுமே விற்பனை எண்ணிக்கையை மறந்துவிட்டு பல விதமான புத்தகங்களைத் தமிழில் கொண்டுவரமுடியும். இவ்வாறான பதிப்பகங்களின் எண்ணிக்கையும் குறைவு. இதனால் ஒரே சமயத்தில் தரத்தில் நல்ல புத்தகமாகவும் வணிகரீதியில் விற்பனையாகக்கூடிய புத்தகமாகவும் ஒரு மொழிபெயர்ப்பு நூல் அமைவது கடினமாகிவிடுகிறது.
மற்றபடி, பெரும்பாலும் சுயமுன்னேற்றம், துப்பறியும் கதைகள், ஆன்மிகம், உணவு போன்ற பெஸ்ட்செல்லர்ஸ் மட்டுமே அதிக அளவில் மளமளவென்று தமிழில் வெளிவருகின்றன.
மூன்றாவது சிக்கல் மிகப் பெரியது. அரசியல், கலை, இலக்கியம், தத்துவம், வரலாறு, பொருளாதாரம் என்று பல துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழாக்கம் செய்வதற்கான தேவை நீடித்து வருகிறது என்றபோதும் இவ்வளவு துறைகள் சார்ந்த அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. நல்ல வாசிப்பு அனுபவமும் எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிய நல்ல அறிவும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் ஒருங்கே பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது.
2) வருமானம்
மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் அப்பணியில் ஈடுபடுபவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த சன்மானம். பெரும்பாலும் தனிப்பட்ட ஆர்வத்தினால் மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர்களே இங்கே அதிகம். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் குறைவு. அவர்களை ஊக்குவிக்கும் பதிப்பாளர்களும் குறைவு. மொழிபெயர்ப்புமூலம் எங்களுக்குக் கிடைக்கும் லாபமும் குறைவு என்றுதான் பதிப்பாளர்களும் சொல்லக்கூடும். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் போதாமை நிலவும்போது மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.
3) உரிமம்
ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்க யாரை அணுகவேண்டும், எப்படி அனுமதி வாங்கவேண்டும், (வாங்க வேண்டும் என்பதேகூட பலருக்குத் தெரியாது!) ஒப்பந்தம் எப்படிப் போடவேண்டும் உள்ளிட்ட அடிப்படைகள் தெரியாத பல சிறிய, நடுத்தர பதிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் பெரும்பாலும் மூல நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அனுமதியின்றி மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். அல்லது, உரிமம் தேவைப்படாத புத்தகங்களை நாடுகிறார்கள். இத்தகைய பதிப்பங்களால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை சரிவர எடிட் செய்ய முடியவில்லை. வசதியில்லை. சில பெரிய பதிப்பகங்களாலும் அரசியல் இயக்கப் பின்புலம் கொண்டவர்களாலும் மட்டுமே மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டுவரமுடியும் என்னும் நிலை ஆரோக்கியமானதல்ல.
4) கோட்பாடுகள்
மூலப் பிரதிக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக ஒரு மொழிபெயர்ப்பாளர் இருக்கவேண்டும்? புதினத்தையும் அபுதினத்தையும் மொழிபெயர்க்கும்போது எத்தகைய சுதந்தரத்தை ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும்? மூல ஆசிரியரின் தவறுகளைத் திருத்தி மொழிபெயர்க்கலாமா? அளவில் அதிகம் என்றால் சில பகுதிகளைச் சுருக்கலாமா, முற்றிலும் வெட்டலாமா? இப்படி மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது தோன்றும் முக்கியமான பல சந்தேகங்களை மொழிபெயர்ப்பாளர் தனிமையில் தன்னிச்சையாக முடிவெடுத்து கடந்து சென்றுவிடுகிறார். அவருக்கு உதவ எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. எந்தக் கோட்பாடும் இங்கு உருவாகவில்லை அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இதே சந்தேகங்கள் ஒரு எடிட்டருக்கு எழும்போது அவரும்கூட அவ்வாறே தன்னிச்சையாக முடிவெடுத்துவிடுகிறார். பிழைகள், தப்பர்த்தங்கள் மலிந்துவிடுகின்றன.
5) விமரிசனம்
குப்பை, மட்டம், போர், மோசம் ஆகியவை விமரிசனங்களல்ல. கோட்பாட்டு வழியில் கூர்மையான, இரக்கமற்ற விமரிசனங்கள் தேவை. நல்ல எழுத்து எது என்பதையும் மோசமான எழுத்து எது என்பதையும் அதை எவ்வாறு சரிசெய்யவேண்டும் என்பதையும் தகுதியுள்ளவர்கள் விவாதிக்கவேண்டும், கற்றுக்கொடுக்கவேண்டும். நல்ல விமரிசனங்கள் இல்லாத இடத்தில் நல்ல படைப்புகள் வெளிவருவதில்லை.
0
வட்டத்தைச் சுற்றி வருவது போலத்தான் இதுவும். நல்ல விமரிசகர்கள் உருவாகவேண்டுமானால் நல்ல பல படைப்புகள் வேண்டும். அதற்கு நல்ல ரசனை வேண்டும். அதற்கு நல்ல வாசிப்பு அவசியம். அந்த வாசிப்பும் ரசனையும் ஒரு நல்ல பதிப்பாளரோடு உரையாடவேண்டும். அந்த உரையாடல் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரைச் சந்திக்கவேண்டும். அவர் அதனை நல்ல தமிழுக்குக் கொண்டுச் செல்லவேண்டும். அதை நல்ல வாசகர்கள் அடையாளம் கண்டு வாங்கி படிக்கவேண்டும். நல்ல நூல்களை வாசகர்கள் அடையாளம் காணவேண்டுமானால் அவர்கள் நல்ல விமரிசகர்களால் வழிநடத்தப்படவேண்டும்…
0
எல்லாவற்றையும் எங்கிருந்தாவது தொடங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக நானும் மொழிபெயர்ப்பில் காலடி எடுத்து வைக்கிறேன்.
0
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளில் நீங்கள் காணும் பிரதான குறைகள், குற்றங்கள் என்ன? அவற்றை எப்படிக் களையலாம்? உங்களில் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் யார்? நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு நூல்கள் என்ன? உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர் யார்?