ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 25
இன்று மத்திய, மாநில அரசுகள் குறுந்தொழில் வளர்ச்சிக்குப் பலவாறான சலுகைகள் அளிக்கின்றன. இருந்தாலும், இன்றைய சூழலில் சுயதொழில் செய்ய யார் முன்வருகிறார்கள்? குறிப்பாக பெண்கள் முன்வருகிறார்களா? இல்லை என்றே பதிலளிக்கவேண்டியிருக்கிறது. காரணம், இன்றும் அரசாங்கச் சூழல் சிறுதொழிலுக்கு அனுகூலமாக இல்லை.
உதாரணத்துக்கு வங்கிகளை எடுத்துக்கொள்வோம். சுயதொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றனவா? பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. ஒருவேளை கடன் கொடுத்து அது திரும்பி வராமல் போனால் பதில் சொல்லியாகவேண்டும் என்னும் எண்ணத்தில் கடன் கொடுப்பதை இவர்கள் தவிர்க்கின்றனர். வங்கிக் கிளை மேலாளர்களுக்கு தெளிவான வழிமுறைகளையும் விதிகளையும் அரசாங்கம் முதலில் நிர்ணயிக்க வேண்டும்.
நேர்மாறாக, ஒரு சில வங்கி அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சிபாரிசோடு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தகுதியில்லா நபர்களுக்கும் கடன் கொடுக்கின்றனர். அசையாச் சொத்துகள் இல்லாத நபர்களுக்கும் கடன் கொடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவற்றை பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆகவே வங்கிக் கடன் குறித்த தெளிவான விதிமுறைகளை பொதுமக்கள் அறியுமாறு அரசு விளம்பரப்படுத்தவேண்டும். தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் கிடைப்பதையும் உறுதிசெய்யவேண்டும்.
குறுந்தொழில் அதிபர்களுக்கு திறமையான ஆள்கள் கிடைப்பது அரிதாகி கொண்டுவருகிறது. நல்ல நபர்களைத் தேர்வு செய்யும் பொழுது, பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க வேண்டி வருகிறது. இதற்கு அரசாங்கம் கீழ்க்கண்டவாறு செய்யலாம்.
- அரசாங்க வேலைக்கு பணி நியமனம் செய்யும்போது ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது அங்கீகரிக்கப்பட்ட, நேர்மையாக தொழில் செய்து கொண்டிருக்கும் குறுந்தொழில் அலுவலகங்களில் பணி புரிந்து இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
- குறுந்தொழில், சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் மேலெழுந்தவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரூ.25 அல்லது 50 லட்சம் டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் குறுந்தொழில் பிரிவிலும், 5 கோடி டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் சிறுதொழிலாகவும் பிளாண்ட் அண்ட் மெஷினரியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் விரிவாகப் பிரிக்கப்படவேண்டும். அதேபோல் வரிச்சலுகைகளும் இப்பொழுதைவிட அதிகமாக அளிக்கப்பட வேண்டும்.
- அரசு டெண்டர்களில் பங்கு பெறும்போது பலவித பெரிய ஆர்டர்களுக்கு அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், பங்குபெற முடியாமல் போகிறது. இதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள், எந்த தொழிலையும் வாங்குவதற்கு முன், அதன் எண்ணிக்கை மற்றும் அளவுக்கு ஏற்றவாறு அதைப் பிரித்து, அந்தந்த பகுதியிலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுக்க வழிவகை செய்தால் சிறுதொழில்கள் இன்னும் நன்கு வளரும்.
இன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி அதிகம் செய்வதால் பொருள்களின் விலையை கணிசமான முறையில் குறைக்க முன்வந்துள்ளன. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களால் அவற்றோடு போட்டிப் போட முடியவில்லை.
பொதுமக்களும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தைப் பற்றிய தங்களின் மதிப்பீட்டுகளை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும். எந்த தொழில் நிறுவனமும், தொழிலில் நேர்மையோடு பெயர் பெற்று விளங்குமானால், அவற்றின் பொருள்களுக்கு ஆதரவு அளிக்க மக்கள் முன் வர வேண்டும்.
அடுத்ததாக, குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பெரும்பாலும் விளம்பரம் அளிப்பதற்கு பணப்பற்றாக்குறை இருக்கும். ஆதலால் அரசாங்கம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பர வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலம் ஈட்டியிருக்க வேண்டும்.
இதை மேம்போக்காகச் செய்யாமல் கட்டாயமாக்கினால் நலிந்துகொண்டிருக்கும் சிறு மற்றும் குறுந்தொழிலின் சந்தை விரிவடையும். இதனால் அத்தொழில்கள் வீழ்ச்சி அடையாமல் வளர்ச்சி அடையும்.
அடுத்ததாக குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, அரசாங்கம் சில சலுகைகளை அளிக்க முன்வரவேண்டும். இதன் மூலம் ஈஎஸ்ஐ மற்றும் பிஎஃப் உட்பிரிவுகளுக்குள் வராத குறுந்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலன் காக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்தந்த நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.
குறுந்தொழில் அதிபர்களில் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கலாம். பொதுமக்களின் மத்தியில் அவர்களையும் அவரது நிறுவனப் பொருள்களையும் பிரபலப்படுத்தலாம். அரசாங்க விழாக்கள் மற்றும் அரசாங்கக் கண்காட்சிகள் போன்றவை நடக்கும்பொழுது, இந்தக் குறுந்தொழில் நிறுவனங்களின் பொருள்களை அத்தகைய இடங்களில் விளம்பரப்படுத்துவதற்கு அனுமதிக்கலாம்.
அரசாங்கமே, பல கண்காட்சிகளை வெவ்வேறு பிரிவுகளுக்காக நடத்தலாம். இந்தியாவை பொருத்தமட்டில் முறையாகப் பதிவு செய்து சரியாக வரிகள் செலுத்தி, நிலையாக குறு மற்றும் சிறுதொழிலை நடத்தும் நிறுவனங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. (Organised SME Sector) மாறாக, சில விசிடிங் கார்ட்டுகள் மற்றும் லெட்டர் பேடுகள், ஒரு கைப்பேசி எண் இவற்றைக் கொண்டு சிறு தொழில் செய்வதாக பாவனை செய்து கொண்டிருக்கும் நபர்களே அதிகம். அங்கீகாரம் இல்லாமல் தொழில் நடத்தும் நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு எத்தனையோ கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது.
என் அனுபவத்தில் பல குறுந்தொழில் அதிபர்கள் எந்த வித பதிவுகளுமின்றி கோடிக்கணக்கில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். கருப்பு பணப்புழக்கத்தை நாட்டில் அதிகப்படுத்துவதில் இதைப் போன்ற நபர்களின் பங்கு கணிசமானது. இவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தை கடுமையாக்கி தண்டனைக்கு உட்படுத்தினாலன்றி, இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. இந்தச் சூழலில் நாட்டுப்பற்றோடு சமுதாய நோக்கோடு, தானும் வாழ்ந்து பிறரும் வாழ, தொழிலின் துன்பங்களை ஏற்க முன் வரும் நபர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள்.
பெரும்பாலான சிறு தொழிலதிபர்களுக்கு, போடும் முதலீட்டை திருப்பி எடுக்கவே நெடுங்காலமாகிறது. இத்தகைய நிகழ்கால அச்சுறுத்தலால், தொழில் செய்ய திறமையுள்ள பல தனி நபர்கள் முடங்கிப் போகின்றனர். அதனால் அரசாங்கம் முழு வீச்சாக நடைமுறை சிக்கல்களைக் களைந்து, இன்னும் விழிப்புணர்ச்சியோடு, யதார்த்தமான திட்டங்களைத் தீட்டி குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் உயிர்ப்புடன் இருப்பதற்கு முனையவில்லையென்றால், இன்னும் சில வருடங்களில், திறமையிருந்தும், தொழில் செய்ய முன்வருவது நின்றுவிடும்.
மக்கள்தொகை பெருக்கமுள்ள இந்தியா போன்ற நாடுகளில், குறுந்தொழில்களின் அழிவு பெரிய பொருளாதாரச் சிக்கல்களையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளோ, ஒரு தொழிலின் தன்மை, அதற்குரிய சந்தை போன்றவற்றை நுணுக்கத்தோடு ஆராய்வதை விட்டுவிட்டு, பிணையாக கொடுப்பதற்கு அசையா சொத்து இருக்கும் பட்சத்தில் மட்டும் கடன் கொடுக்க முன் வருகின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விஷயமாகும். அதாவது தொழில் உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் கவனத்தைச் செலுத்தாமல், அது தொய்வடைந்து, தோல்வியடையும்போது தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அசையாச் சொத்துக்கள் உதவும் என்ற தவறான கண்ணோட்டத்தோடு வேலை செய்கின்றனர்.
உதாரணமாக, கடன் கொடுக்கும் சிறுதொழில்கள் எல்லாம் தோல்வியடையும்போது, அவர்கள் கொடுத்த அசையாச் சொத்துகளை அரசாங்கம் விற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொழிலதிபரின் தோல்வியின் மூலம், பல புதிய தொழிலதிபர்களை உருவாக்கமுடியாது. புதிய தொழில்கள் உருவாகாத பட்சத்தில், திறமையுள்ள தொழிலதிபர்களின் தொழில்கள் நலிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அரசாங்கம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்களை குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது, அந்தந்த பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்து, வல்லுனர்களை அழைத்து, தொழிலதிபர்களுடன் உரையாடல் செய்தால், தொழிலதிபர்களின் நடைமுறை சிக்கல்களை அறிந்துக் கொள்ள முடியும்.
0