மறைக்கப்பட்ட இந்தியா/ அத்தியாயம் 26
பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் பெரும்பாலானவை தாசிகளுக்கு எதிராகக் குடும்பப் பெண்கள் உருவாக்கிக் கொண்டவையே. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இன்றைய பெண்ணியவாதிகள் பெண்களின் ஒடுக்குமுறைகளாகச் சொல்லும் விஷயங்களில் பெரும்பாலானவை (உடல் தெரியும்படி ஆடை அணியக்கூடாது, இரவில் தலை வாரிக் கொள்ளக் கூடாது, அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும், வாசலில் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது என்பன போன்றவை) தாசிகளின் வழிமுறைகளாக இருப்பதைப் பார்க்க முடியும். அந்த ’ஒடுக்குமுறைகள்’ எல்லாம் அன்றைய குடும்பப் பெண்கள், தாசிகளுக்கு எதிரான வழிமுறைகளாக விரும்பி ஏற்றுக்கொண்டவையே.
சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது என்று சொல்லப்படுவதை இன்றைய பெண்கள் சுதந்தர மறுப்பாகப் பார்க்கக்கூடும். அன்றைய பெண்கள், “நானென்ன தாசியா… ஊரே திரும்பிப் பார்க்கிற மாதிரி சிரிக்க’ என்றுதான் கேட்டிருப்பார்கள். பெந்தகோஸ்தே போல் பூவும் பொட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது… வெள்ளை உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கெடுபிடிகளோ உடல் முழுவதையும் கறுப்பு ஆடையால் மூடிக்கொள்ள வேண்டும் என்ற ஒடுக்குமுறையோ நிச்சயம் இருந்திருக்கவில்லை. இந்து மதத்தைப் பொறுத்தவரையில் இன்று ஒடுக்குமுறையாகப் பார்க்கப்படுபவற்றில் பல அன்றைய பெண்கள் தங்கள் கழுத்தில் பெருமிதத்துடன் அணிந்துகொண்ட தங்கச் சங்கிலிகளாகவே இருந்திருக்கும், கழுத்தை நெரிப்பவையாக அல்ல.
சூத்திரர்களுடைய வாழ்க்கை தொடர்பாகச் சொல்லப்படும் பெரும்பாலான ஒடுக்குமுறைகளும் இப்படியானவையே. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சூத்திரர்களிடம் நிலம் இருந்திருக்கவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்படுவதுண்டு. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் என்ற இரண்டு பிரிவுகளை உள்ளடக்கிய சூத்திரர்களில் பலரிடம் நிலம் இருந்ததற்குப் பல சரித்திரச் சான்றுகள் இருந்தபோதிலும் அவர்களிடம் நிலம் இல்லை என்பதுதான் பொதுவாக நம்பப்படும் அல்லது நம்ப விரும்பப்படும் உண்மையாக இருக்கிறது. பிரிட்டிஷார் எழுதி வைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய காலகட்டத்தில் பெரும்பாலான அரசர்களாக சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள். மனு ஸ்மிருதியில் சூத்திரர் அரசாளும் நாட்டில் பிராமணர் இருக்கக்கூடாது என்று எழுதப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். ஆனால், நடைமுறையில் முழுக்க முழுக்க நேர்மாறாகவே இருந்திருக்கிறது.
உணவு தொடர்பாகச் சொல்லும்போது சூத்திரர்களுக்கு நெல்லுச் சோறு என்பதைப் பெரிதும் விசேஷ நாட்களில் மட்டும்தான் கண்ணால் பார்க்க முடியும் என்று அதைப் பெரிய வறுமையின் அடையாளமாகச் சொல்வார்கள். விஷயம் என்னவென்றால், நன்செய், புன்செய் பயிர் வகைகளில் கம்பு, சோளம், தினை, சாமை முதலான பெரும்பாலான உணவுப் பயிர்கள் எல்லாமே முழுக்க முழுக்க சூத்திரர்களின் உபயோகத்தில் இருந்தவையே. அந்த தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவுப் பொருட்களைத் தயாரிக்கவும் முடிந்தது. அந்த உணவுகள் சுவையிலும் சத்திலும் நன்செய் பயிர்களைவிட பல மடங்கு உயர்வானவை. இன்றைய மருத்துவ உலகம் அரிசியை மிகவும் அபாயமான உணவாகவே முன்வைக்கிறது. கேப்பை மிகவும் சத்தானது. இன்றைய ஹார்லிக்ஸ், போர்ன்விட்டாவைவிடவும் கேப்பையில் உருவாக்கப்படும் பானங்கள் சத்தானவை என்று இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. பழைய சோற்றில் நொதித்தல் வினை நடப்பதன் மூலம் சூடாகச் சாப்பிடும் உணவை விட அதிக சத்துகள் உருவாவதாக இன்றைய மருத்துவ உலகம் தெரிவித்திருக்கிறது. இன்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் அலங்காரத் தட்டுகளில் பரிமாறப்படும் காளான்கள், நண்டு வகைகள் எல்லாம் தலித்கள் காலகாலமாக இலவசமாக உண்டுவந்தவையே. அசைவ உணவு என்ற பிரிவு முழுக்க முழுக்க சூத்திரர்களின் கோட்டையாகவே இருந்திருக்கிறது.
சூத்திரர்கள் உண்டுவந்த கீரைகளில் இல்லாத சத்துக்களே இல்லை. மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரையில் ஆரம்பித்து அரைக்கீரை, சிறு கீரை வரை ஏராளமான கீரைவகைகள் பெரிதும் சூத்திரர்களின் கைக்கு எட்டியவையாகவே இருந்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த பெரிய விவசாய நிலமும் தேவையே இல்லை. வேலியோரங்களிலும் வீட்டைச் சுற்றிய சிறு சிறு இடங்களிலும் வளர்க்க முடிந்தவையே. பூமிக்குக் கீழே விளையும் கிழங்குவகைகள் முழுக்க முழுக்க கடின உழைப்பில் ஈடுபட்டுவந்த சாதியினரின் பயன்பாட்டிலேயே இருந்திருக்கின்றன. பிராமணர்களால் கிழங்குவகைகள் விலக்கப்பட்டதற்கான காரணம் அவற்றைச் செரிக்க கடின உழைப்பு தேவைப்படும் என்பதுதான். அவை முழுக்க முழுக்க சூத்திர்களின் உணவாகவே இருந்திருக்கின்றன.
பிராமணர்களின் விஸ்தாரமான உணவு வகைகளைப் பார்க்கும்போது வெறும் செல்வச் செழிப்பை மட்டுமே அது காட்டவில்லை. உடல் உழைப்பு குறைவாக இருந்ததால், உணவு ருசிக்காமல் இருந்திருக்கிறது. எனவேதான் வலுக்கட்டாயமாக உணவை ருசிப்படுத்திக் கொள்வதற்காக எதையெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். உண்மையில் சுவை என்பது ஆறேதான். ஒரு மடப்பள்ளியில் இடுப்பு வேட்டியை நெகிழ்த்திக் கொண்டு இலையின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை பதார்த்தங்களை அடுக்கி வைத்து முழங்கை வரை நக்கியபடி பிராமணர்கள் சாப்பிட்ட சாப்பாடு அவர்களுக்கு என்ன சந்தோஷத்தைத் தந்திருக்குமோ அதே சந்தோஷம் களத்து மேட்டில் மரத்தடியில் துவையலையும் பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் உப்புக் கல்லுடன் கடித்துக் கஞ்சி குடித்த சூத்திரருக்கும் கிடைத்திருக்கும். அதிலும் பிராமணர்கள் போஜனப் பிரியர்கள் என்பது உண்மைதான் என்றாலும் பிராமணர்களின் விருந்துச் சாப்பாடு பற்றி மிகையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. வெறும் இரசத்துடன் உப்பு நார்த்தங்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுக் கழித்த நாட்களே அதிகமாக இருக்கும்.
ஒரு மனிதர் உட்கொள்ளும் உணவைப் பற்றிப் பேசும்போது அதில் எத்தனை சதவிகிதம் சக்தியாக மாறுகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் உண்ணும் உணவில் 80 சதவிகிதத்துக்கு மேல் சக்தியாக மாற்றப்படும். உடல் உழைப்பு குறைந்தவர்களின் உணவானது சுமார் 40-50 சதவிகிதம் மட்டுமே சத்தாக உடலில் சேரும். புத்த பிட்சுகளின் உடலானது ஒரு நேர உணவில் இருந்தே ஒரு நாள் முழுவதும் தாங்கும் சக்தியை உருவாக்கும் வலிமை கொண்டதாக இருக்குமாம். அவரைப் பார்த்து நாளொன்றுக்கு ஒரு நேரம் தான் சாப்பிடுகிறார். ஐய்யோ பாவம் என்று சொன்னால் அதுபோல் பிழை வேறெதுவும் இருக்காது. உடல் உழைப்பில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உணவு போதுமானதாக இருந்ததா என்பதை அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்பதையும் மையமாக வைத்தும் பார்க்க வேண்டும்.
பிராமணர்கள் எத்தனை வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்களோ அதற்கு சற்றும் குறையாமல் இன்னும் சொல்லப்போனால் அதை விடக்கூடுதலாகவே சூத்திரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஏழெட்டு குழந்தைகள் பிறந்து அதில் இரண்டு மூன்று இறந்துவிடும் என்பது எல்லா சாதியிலும் நிகழ்ந்த ஒரு விஷயமே.
நன்செய் பயிர்களிலும்கூட சூத்திரர்களுக்கு சொந்தமாக நன்செய் நிலங்கள் இருந்திருக்கின்றன. அவர்களில் பலர் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஊடு பயிராகத் தங்களுக்கு தேவையான தானியங்களை விளைவித்திருக்கிறார்கள். நெல் அறுவடையான பிறகு உளுந்து போன்ற தானியங்களைப் பயிரேற்றி, தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எங்களுக்கு நிலமே இல்லை என்ற வாக்கியத்தில் இருக்கும் வேதனைக்கும் இவற்றுக்கும் இடையில் ஏராளமான இடைவெளி உண்டு. விவசாயக் கூலித் தொழிலாளர்களை எடுத்துக்கொண்டால்கூட அவர்களுக்குக் கிடைக்கும் கூலியானது அடுத்த அறுவடை வரையான வாழ்க்கையை நிம்மதியாகக் கழிப்பதற்குப் போதுமானதாகவே இருந்தது.
பெரும்பாலான முற்போக்காளர்கள் கடந்த கால விவசாயக் கூலியைப் பற்றிச் சொல்லும்போது ஒரு எஜமானரின் வயலில் பணிபுரிவதால் கிடைக்கும் தொகையை மட்டுமே சொல்லிக்காட்டுவார்கள். உண்மையில் ஐம்பது – நூறு ஏக்கர் நிலத்தைச் சுற்றிய பகுதியில் வசிப்பவர்கள் அனைத்து எஜமானர்களின் வயல்களில் நடக்கும் அறுவடையிலும் பங்கெடுப்பார்கள். அந்த நிலத்தில் விளையும் ஒட்டு மொத்த தானியங்களிலும் குறிப்பிட்ட அளவு கூலியாகக் கிடைக்கும். இது ஒருவகையில் ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலை செய்வதைப் போன்றது. அதோடு சம்பளத்தை முன் பணமாகப் பெறுவதுபோல் அவ்வபோது தேவைப்படும் தானியங்களைப் பெற்றுக் கொள்வதும் உண்டு. அவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஆண்டு முழுவதும் உழைத்தாலும் எந்த சம்பளமும் கிடைக்காது என்றுதான் போராளிகள் சொல்லிவருகிறார்கள்.
ஒரு ஏக்கர் நிலத்தில் பத்து பேர் வேலை செய்கிறார்கள். பத்து மூட்டை நெல் விளைகிறது என்றால் ஆளுக்கு ஒரு மூட்டை தரவேண்டும் என்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், ஒருவர் ஐந்து மூட்டையைத் தானே எடுத்துக்கொள்கிறார். எஞ்சிய 9 பேருக்கு வெறும் ஐந்து மூட்டை மட்டுமே கிடைக்கிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது அநீதியாகவே தோன்றும். ஆனால், அந்த ஒன்பது பேருக்கு அது போதுமானதாக இருக்குமென்றால் அதில் பெரிய தவறு இல்லை. வேறு பல இடங்களில் பணி செய்து அவர்களுக்கு மேலும் நெல் கிடைக்குமென்றால் அந்த கூலி அமைப்பு மிகவும் நியாயமானதுதான் (கலைஞர் டி.வி. நாளொன்றுக்கு ஒரு கோடி சம்பாதிக்கக்கூடும். ஆனால், பணியாளருக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் தருமென்றால் அந்த ஆயிரம் ரூபாயில் அவரால் ஒரு குடும்பத்தை நன்கு கவனித்துக் கொள்ளமுடியுமென்றால் அதில் எந்தத் தவறும் இல்லை அல்லவா).
முழு நேர விவசாயத் தொழிலாளியாக இருக்காத சலவைத் தொழிலாளி, குயவர், சிகை அலங்காரத் தொழிலாளி போன்ற பிற அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த அனைத்து நில உடமையாளர்களிடமிருந்து வருடந்தோறும் போதுமான அளவு நெல்லும் பிற தானியங்களும் கிடைக்கத்தான் செய்தன.
இவை தவிர வேட்டை, மீன் பிடித்தல், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஏராளமான வழிகள் இருந்தன. அதிலும் ஓய்வு நேரம் மிகுதியாக இருந்த கடந்த கால வாழ்க்கையில் வேட்டையும் மீன் பிடித்தலும் பிரதான உப தொழில்களாக இருந்திருக்கின்றன. சூரிய ஒளியில் காய வைத்து உணவைப் பதப்படுத்தி வைப்பதில் கடந்த காலத்து மனிதர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தனர். ஓரிடத்தில் நில்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த கீதாரிகள் கூட போகுமிடமெல்லாம் இருக்கும் பாறைகளில் மாமிசத் துண்டுகளைக் காய வைத்தும் கிடை போடும் இடங்களுக்கு அருகில் கத்தரி, மிளகாய் போன்ற சிறு சிறு செடிகளை வளர்த்தும் தங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றனர்.
கடந்த காலத்தில் விவசாய வேலைகள் மிகவும் ஆற அமரச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இன்றுபோல் வியாபார வழித்தடங்களும் பிற வாகன வசதிகளும் அதிகம் இருந்திருக்கவில்லை. எனவே, ஒரு மாவட்டத்தில் உற்பத்தியாவதில் கணிசமான பங்கு அந்த மாவட்ட மக்களாலேயே பயன்படுத்தப்பட்டன. பணி நேரம் என்பது பெரிதும் அதிகாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து பத்து மணியோடு முடிந்துவிடும். பிரிட்டிஷ் ஆட்சியை ஒட்டி ஜமீந்தார்களின் உருவாக்கம் நடைபெற்ற பிறகுதான் பணி நேரம் அதிகரித்தது. அதிலும் தொழிற்சாலைகள் உருவான பிறகுதான் காலை முதல் மாலை வரை வேலை என்பது நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்கு முன்பு வரை வெய்யில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டுக்குள் அல்லது மரத்தடிகளில் ஓய்வாக பல்வேறு விளையாட்டுகளில் நேரத்தைக் கழிப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் வேலை இருக்காது. பெரிதும் அறுவடைக்காலத்தில் மட்டுமே கடுமையான வேலைகள் இருக்கும். எஞ்சிய நேரங்களில் எல்லாருமே அவரவர்க்குப் பிடித்தமான செயல்களில்தான் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
அம்பேத்கார் போன்றவர்கள் தலித்களைப் பற்றிச் சொல்லும்போது ஆறு கோடிபேரும் இரவானால் தட்டேந்தியபடி தெருத்தெருவாகப் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட்டதாகவும் மாட்டுச் சாணத்தில் செமிக்காமல் இருக்கும் நெல்லைக் கழுவி எடுத்துத்தான் சாப்பிட்டதாகவும்தான் சொல்கிறார்கள். நிலங்கள் எல்லாம் மேல் சாதியினரிடம் இருந்ததால் இந்தியாவில் பஞ்சங்கள் ஏற்பட்டு ஏழை மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்ததாகச் சொல்கிறார்கள். பிரிட்டிஷாரின் ஏற்றுமதிக் கொள்கைகளினாலும் பணப்பயிர் விவசாயத்தாலும்தான் இந்திய மக்கள் பஞ்சத்தில் இறக்க நேரிட்டது… அதிலும் மக்கள் தாற்காலிகமாக கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து சென்றதைத்தான் இறந்து போனதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்பவர்கள் மிகவும் குறைவே.
கடந்த காலத்தில் இரு பிறப்பாளர்கள், குறிப்பாக, பிராமணர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்ததாகவும் பிறர் நரகத்தில் வாழ்ந்ததாகவும்தான் பெரும்பாலான அரசியல் ஆசான்கள் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். வேறென்ன… இந்தப் பூவுலகில் 3% தானே நன்னீர். 97% உவர் நீரால்தானே சூழப்பட்டிருக்கிறது.