சுயதொழில் பற்றிய கருத்தரங்குகளில் பெருமளவில் கேட்கப்படும் ஒரு கேள்வி இது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாமா? அதன் சாதக பாதகங்கள் என்ன? மேடம், என் மனைவி வீட்டுல சும்மா சீரியல் பார்த்துக்கிட்டிருக்காங்க, அவளுக்கு ஏதாவது தொழில் கத்துக்கொடுங்க என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். பெண்களும் இதே போல் கேட்டிருக்கிறார்கள். நான் என் கணவனோடு இணைந்து தொழில் தொடங்கவேண்டுமா அல்லது தனியாகவே தொடங்கவேண்டுமா?
தொழில் என்பது என்னை பொறுத்தமட்டில் பெருமளவு அறிவு சம்பந்தப்பட்டது. மனிதர்களை எடைபோடவும் சந்தையைப் புரிந்துகொள்ளவும் முடிவுகள் எடுக்கவும் ஆற்றல் படைத்தவர்களே தொழிலில் இறங்கவேண்டும். குடும்பம் என்பது சற்று மாறுபட்ட அமைப்பு. உறவுகளிலும் உணர்வுகளிலும் உண்மை இருந்தால் போதுமானது. புத்திபூர்வமான அணுகுமுறை பல சமயங்களில் குடும்பச் சூழலை இயந்திரத்தனமாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.
சமீபத்தில் பத்திரிகையில் படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. அதிகமான குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனைவியும், அதிகமாக நிறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் நட்பும், ஒருவனை என்றுமே உயர்த்துவதில்லை. தொழிலென்று வரும்போது, கணவனோ மனைவியோ தங்களது பலம் அல்லது பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
தொழிலை வழி நடத்திச் செல்லும் திறமை யாருக்கு அதிகம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். தலைமைப் பண்பு அதிகமுள்ள அந்த நபரை இன்னொருவர் ஏற்று அங்கீகரிக்கவேண்டும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது. ஒருவேளை, மனைவி தலைமேற்கும் பட்சத்தில், அவரை முன்னிலைப்படுத்தி தொழிலைக் கொண்டு போவதில் கணவனுக்கு எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. நட்புணர்வுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் இருவரும் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் அங்கே தொழில் வளர்ச்சி பெருகும்.
தொழில் நிமித்தமாகத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சமயங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கவேண்டியது அவசியம். ஒவ்வொரு தொழிலும், தட்பவெப்ப மாறுதல்களைப் போல் மாறுதலுக்கு உட்பட்டதே. வளமையான வசந்த காலங்களில் லாபத்தை அனுபவிக்கவும் தொழில் நலிவடையும் சமயங்களில், அந்தத் துன்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் இருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.
பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் தொழில்களில் தொழில் வளர்வதை விட, குடும்பச் சூழலில் நிம்மதி பறிபோவதுதான் அடிக்கடி நடந்துவிடுகிறது. இதற்கு தொழில் காரணமல்ல. சமூகத்தின் ஆண் பெண் கண்ணோட்டமே காரணம்.
பொதுவாக, பெண்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்ட முன்வரும் ஆண் வர்க்கம், தன் மனைவி என்று வரும்பொழுது, பெண்களின் புத்திக்கூர்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணின் கருத்துக்கு, வீட்டில் பெண் மறுப்பளித்தால் அது அவளுடைய ஆணவமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.
பெண்களும் பெரும்பாலும் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றனர். அதிகம் அடங்கிபோவது அல்லது அதிகம் அடக்கப் பார்ப்பது. இரண்டில் இருந்தும் விடுபட்டு, அவரவருக்குரிய இடத்தில் இருந்துகொண்டு அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் வாழ்க்கை அமைதியாகச் செல்லும்.
கணவன், மனைவி இருவருமே அறிவுகூர்மையில் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், தொழில்களைத் தனித்தனியாக செய்வதில் தவறில்லை. ஆண், பெண் என்ற பாகுபாட்டை மறந்து, தொழில் என்று வரும்போது, ஒருவர் மற்றவரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறவேண்டும். ஒரு தொழிலுக்கு பல திறமையாளர்கள் தேவைப்படலாம். ஆனால் முன்னிலைப்படுத்தப்படும் நபர் ஒருவராக இருப்பது நலம்.
பொதுவாக பணம் என்று வரும்பொழுது, பெண்கள் அதிகபட்ச பாதுகாப்பை மனதில் கொண்டு செயல்படுவர். ஆண்களோ அது சாம்ராஜ்யமாக விரிவடைவதில் அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் தொழில் செய்வதில் பெரும்பாலாலும் ஒரு நேர்த்தி, ஒழுங்கு முறை இருக்கும். ஆனால் பிரம்மாண்டங்களை அவ்வளவு எளிதில் அடைய மாட்டார்கள்.
இதற்கு விதிவிலக்குகளும் இருக்கலாம். பிரம்மாண்டத்தை உருவாக்கும் திறமை இருப்பினும், பெண்கள் பொதுவாக சிறிது அடக்கி வாசிக்கும் மனோபாவத்தை உடையவர்களாக இருப்பர். ஆண்களோ இதற்கு முற்றிலும் வேறாக, தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். மனைவிக்கு கணவனைப் போல் சிறந்த பிசினஸ் பார்ட்னர் கிடைப்பது அரிது. அதேபோல் கணவனுக்கும் நேர்மையான தொழில் பங்காளர் அமைவது அரிது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் திறமையைக் கண்டு அவரை ஊக்குவித்து, உலகப் பாடகியாக்கிய பெருமை திரு. சதாசிவம் அவர்களையே சாரும். இன்றும் திருமதி. சுதா ரகுநாதன், திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன், நளினி சிதம்பரம், கவிஞர் தாமரை, சுகாசினி மணிரத்தினம், ஐஸ்வர்யாராய் பச்சன், வாணி ஜெயராம் போன்றோர் உள்ளனர். பெண்களை முடக்காமல், அவர்களை முன்னிலைப்படுத்தி, ஊக்குவிக்கும் பெருந்தன்மை இருக்கும்பொழுது, பெண்கள் சாதனையாளர்களாக வர முடியும்.
குடும்ப வேலைகள் என்று வரும் பொழுது, சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளுதல் என்று பலவற்றிலும், ஆண் இறங்கி வந்து வேலைகளை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் போதுதான், பெண் பதட்டமின்றி வெளி வேலைகளைக் கவனிக்க முடியும். ஆனால் ஆண்களில் ஒரு பிரிவினர், ‘நான் வெளியில் போவதைத் தடுக்கவில்லையே, மேலே படிப்பதைத் தடை செய்யவில்லையே, வேலைக்குப் போவதை மறுக்கவில்லையே, நானும் சுதந்தரம் கொடுத்துதான் இருக்கிறேன்’ என்று சொல்வார்கள்.
ஆனால் இவர்கள் பெண்களிடம் ஓர் அஸ்திரத்தைப் பிரயோகிப்பார்கள். ‘நீ காலையில் எழுந்து எல்லா வீட்டு வேலை, சமையல் இன்றும் பிற வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, சில்லரை வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, மாலை இரவு மெனுவரை பிளான் செய்தபின்னர், என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்!’
இதை சொல்வது ஆண்களுக்கு எளிதானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்பொழுது உடலளவிலும் மனரீதியிலும் எளிதில் பலமிழந்துவிடுகின்றனர். அதற்குமேல் தொழில், வேலை போன்றவற்றில் சுமையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதற்கு மாறாக குடும்பப் பொறுப்புகளை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு, குழந்தை பராமரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஆண்கள், பெண்களை முன்னேற்றினால் அதிக அளவு தொழில் மாற்றங்கள் ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. கணவன் மனைவி இவர்களுக்கு மட்டும் இவை பொருந்தும் என்பதில்லை. குடும்ப உறவினருக்கிடையே நடக்கும் எந்தத் தொழிலிலும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் இரட்டையர்களான சூலமங்கலம் சகோதரிகள், ஹைதராபாத் சகோதரர்கள், பிரியா சகோதரிகள், கணேஷ் குமரேஷ் போன்ற பலரும், சுருதி பிசகாமல் ஒன்றிணைந்து இசையை வெளிப்படுத்தும் பொழுது, அது அதிக பட்ச உத்வேகத்தோடு, திறமைகள் உயர்ந்து வெளிப்படுகின்றன என்பதே உண்மை. சுருதி பிசகாத இசையைப் போல் லாபம் குன்றாத தொழிலும் ஒன்றிணைந்து இயங்குதல் என்பது மிக அவசியம்.
0