மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 28
இந்து மதத்தையும் இந்தியாவையும் விமர்சிப்பவர்கள் முதலும் கடைசியுமாகச் சொல்வது என்னவென்றால், அதன் சாதி சார்ந்த சமூகக் கட்டமைப்புதான் அனைத்து வீழ்ச்சிக்கும் காரணம் என்பதே. இந்த சாதி அமைப்புக்கு இந்து மதத்தின் முழு அங்கீகாரம் இருக்கிறது எனவே, சாதி அழிய வேண்டுமானால், இந்து மதம் அழிய வேண்டும் என்பதுதான் இவர்களுடைய இலக்கு. இந்து மதத்தின் பழங்கால நூல்களில் சாதி என்ற வார்த்தையே இல்லை என்பதும் அவை சொல்வதெல்லாம் வர்ண அடிப்படையிலான சமூகக் கட்டுமானம்தான் என்பதும் சொல்லிக் காட்டப்பட்டால், அந்த வர்ணமும் சேர்ந்தே அழிய வேண்டும் என்று முழக்கமிடுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி தரப்படவேண்டும்; அதன் மூலம் அவர் பெறும் திறமைக்கு ஏற்ப சமூகத்தில் அவருடைய வேலையும் இடமும் தீர்மானிக்கப்படவேண்டும் என இன்றைய நவீன சமூகம் எதைச் சொல்கிறதோ அதையேதான் வர்ணாஸ்ரம தர்மமும் முன்வைக்கிறது என்றாலும் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் சாதி எதிர்ப்புப் போராளிகளின் இலக்கு சமூக நல்லிணக்கமோ மேம்பாடோ அல்ல என்பதையே உறுதிப்படுத்திவருகிறார்கள்.
வர்ணத்துக்கும் சாதிக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கீதையில் கிருஷ்ணர் சொன்னதுபோல், நால் வகை வருணங்களை நானே சிருஷ்டித்தேன், குணங்கள், கர்மங்களின் அடிப்படையில். இதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆதாரம். இதில் முதல் வாக்கியத்தை மட்டுமே வைத்துக் கொண்டுதான் அனைத்து திரிபு வேலைகளும் நடந்துவருகின்றன. ‘கருணாநிதி ஒரு முட்டாள் என்று சொல்வது தவறு’ என்று ஒரு வாக்கியம் எழுதப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் மூன்று வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பேரியக்கம் ஆரம்பிக்கப்பட்டால் எப்படிப் பிழையாக இருக்குமோ அது போன்றதுதான் கீதையில் கிருஷ்ணர் சொன்ன வாக்கியத்தில் முதல் பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு மேலும் கீழும் குதிப்பதும்.
வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொரு மனிதருடைய குணமே அவருடைய வேலையையும் சமூக அந்தஸ்தையும் தீர்மானிப்பதாக இருந்தது. சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக அதை மாற்றியது. வர்ணம் சாதியாக மாறியது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
வர்ணாஸ்ரம தர்மத்தில் முதலில் ஒவ்வொரு மனிதருடைய வர்ணமும் சப்தரிஷிகள், மனு என்ற குழுவினரால் தீர்மானிக்கப்பட்டன. அதாவது, சமூகத்துக்கு எத்தனை சத்ரியர்கள் தேவை, எத்தனை வைசியர்கள் தேவை, எத்தனை பிராமணர்கள் தேவை எத்தனை சூத்திரர்கள் தேவை என்றவற்றின் அடிப்படையில் சமூகத்தில் இருக்கும் நபர்களைப் பிரித்து வகைப்படுத்தினார்கள். ஒவ்வொருவரும் தமக்கு என்ன வர்ணம் தரப்பட்டதோ அதற்குரிய பணியைச் செய்து வந்தார்கள். இன்று ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதுபோல் அன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் நடந்தது. யார்யாரெல்லாம் தங்கள் வர்ணத்தின் பணியைச் சிறப்பாகச் செய்தார்களோ அவர்கள் தொடர்ந்து அதே வர்ணத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். திறமையாகச் செயல்படாதவர்கள் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றப்பட்டனர். ஒரு வர்ணத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்களும்கூட வேறு வர்ணத்துக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டனர். சூத்திரராக இருந்த ஒருவர் பிராமணராகவோ வைசியராகவோ சத்ரியராகவோ ஆக முடிந்தது. பிராமணர்களில் இருந்து சிலர் சூத்திரர்களாக ஆக்கவும் பட்டிருக்கிறார்கள். இப்படி வர்ணங்களை மாற்றிக் கொண்டதற்கு ஏராள உதாரணங்கள் பழங்கால நூல்களில் காணப்படுகின்றன. வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆரம்பநிலை என்பது இதுதான். இப்படிப் பல ஆண்டுகள் நடைமுறையில் இருந்திருக்கிறது.
இந்த அனுபவங்களில் இருந்து வேறு சில படிப்பினைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான்கு வருடம் ஒரு வர்ணத்தில் இருந்தவர் வேறொன்றுக்கு மாற்றப்பட்டதால் அவருடைய சமூகப் பங்களிப்பு முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டிருக்கிறது. தனிநபர் என்ற வகையில் அவருக்கும் அது எந்த நலனையும் செய்திருக்கவில்லை. விவசாயத்துறையில் நான்கு வருடம் இருந்த ஒருவர் புரோகிதத்துறைக்கு மாற்றப்பட்டபோது அவரால் புரோகிதத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. விவசாயத்துறையிலும் சிறந்து விளங்க முடியாமல் போனது. இதனால், ஒவ்வொருவருடைய வர்ணத்தையும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றுவதை மறுபரிசீலனை செய்தார்கள்.
இது இன்றைய சூழலில் நமக்கும் நன்கு புரிந்துகொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். பத்திரிகைத் துறையில் நான்கு வருடம் பணி புரிந்த ஒருவரை அதற்கு அடுத்த நான்கு வருடத்துக்கு வங்கித் துறைக்கு மாற்றினால் அவரால் இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியாமல் போக வாய்ப்பு உண்டு அல்லவா. கிணற்றுக்குக் குழி வெட்டுவதானால், ஒரே இடத்தில் தொடர்ந்து வெட்டினால்தானே நீர் கிடைக்கும். ஓரிடத்தில் நான்கு அடி இன்னொரு இடத்தில் நான்கு அடி என்று வெட்டினால் நீர் எப்படிக் கிடைக்கும்? ஒரு துறையில் நான்கு வருடங்கள் பணி புரிவதால் கிடைக்கும் திறமையும் அனுபவ அறிவும் கவனத்தில் கொள்ளவேண்டியவைதானே. புதிய துறைக்கு மாற்றினால் அதைக் கற்றுக் கொள்ள சில மாதங்கள் ஆகும். அதுவரை பல தவறுகள் நடக்கும். தட்டுத்தடுமாறி விஷயங்களைக் கற்றுத்தேர்ந்து வரும் நிலையில் வேறொரு துறைக்கு மாற்றுவது மீண்டும் குழப்பத்தையே தானே கொண்டுவரும். எனவேதான், நான்கு வருடத்துக்கு ஒரு வர்ணம் என்ற முறையை மாற்றி ஒரு ஆயுள் முழுமைக்கும் ஒரு வர்ணம் என்று கொண்டுவந்தார்கள். இன்று 60 வயது வரை ஒரே துறையில் வேலை என்று சொல்கிறோமே அதுபோல். இந்த முறை நல்ல பலனைத் தந்தது. ஒவ்வொருவருடைய அனுபவ அறிவும் முழுவதும் சமூகத்துக்குப் பயன்பட்டது. தனி நபரின் நலனுக்கும் அது பெரிதும் உபயோகமாக இருந்தது. அப்படியாக ஒரு வர்ணம் (வேலை) என்பது ஒரு ஆயுள் முழுமைக்குமாக ஒருவருக்கு வந்தது.
ஆனால், இந்தக் காலகட்டத்திலும் தந்தை என்ன வர்ணமோ அதுதான் அவருடைய வாரிசுகளுக்கும் என்று தீர்மானமாகியிருக்கவில்லை. ஒருவர் ஆயுள் முழுவதும் புரோகிதராக இருந்திருக்கலாம். அவருடைய மகன் புரோகிதத்துறைக்கான திறமையோ ஆர்வமோ இல்லாதவராக இருந்தால் அவர் சூத்திரராகவோ வைசியராகவோ ஆக இடம் இருந்தது. ஒரு சூத்திரரின் மகன் சத்திரியராகவோ பிராமணராகவே ஆக முடிந்தது. இந்த அமைப்பு பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால், இந்த அமைப்பில் இன்னொரு குறை இருந்தது. ஒவ்வொருவருடைய வர்ணம் என்பது சப்த ரிஷிக்கள் என்ற குழுவினரால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. அதாவது, சூத்திர வர்ணத்துக்கான மனோபாவம் கொண்ட ஒருவரை பிராமணராகத் தவறாக தீர்மானித்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்துக்கு முழு வலிமையுடன் பங்களிக்க முடியாமல் போடுவிடும். தனிநபர் என்ற அளவிலும் அவருக்கு அந்தத் தீர்மானம் பெரும் தீங்கையே விளைவித்திருக்கும். இதைக் களைவதற்காக இன்னொரு வழிமுறையை அந்த சமூகத்தினர் கண்டடைந்தனர். அதுதான் வர்ணாஸ்ரமத்தின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு. கல்வியின் அடிப்படையில் வேலைகள் (வர்ணம்) தீர்மானமாக வேண்டும் என்ற இன்றைய அதி நவீன சமூகங்கள் முன்வைக்கும் அதே வழிமுறையைத்தான் அன்று நம் முன்னோர்கள் அதில் அமல்படுத்தினார்கள்.
அதாவது, ஒவ்வொரு மனிதரும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டு 12 வருடங்களுக்கு நான்கு வர்ணங்களிலும் முறையான பயிற்சி பெறவேண்டும். 12 வருட முடிவில் எந்த வர்ணத்தின் குணாம்சங்கள் ஒருவரிடம் மிகுதியாக இருக்கிறதோ அவர் அந்த வர்ணத்தினராக வேண்டும். இப்படியான தேர்வு அனைவருக்கும் உகந்ததாகவும் சமூக மேம்பாட்டுக்கு கூடுதல் பலனளிப்பதாகவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இது மிகவும் நியாயமானதாக இருந்தது. இதுவே வர்ணாஸ்ரமத்தின் உண்மையான வடிவம்.
காலப்போக்கில் இந்த அமைப்பு வேறு வடிவை அடைய ஆரம்பித்தது. இந்த இடத்தில்தான் இன்னொரு முக்கியமான அம்சம் செயல்பட ஆரம்பிக்கிறது. அதுதான் வர்ணத்தை சாதியாக மாற்றியது.
ஒவ்வொரு மனிதருடைய ஆளுமையையும் மூன்று விஷயங்கள் பாதிக்கும். முதலாவதாக, ஒருவருடைய மரபணுக்கள். நிறத்தில் ஆரம்பித்து உடல் உயரம், வலு, பருமன் என அனைத்தும் இந்த மரபணுவால்தான் தீர்மானமாகும்.
இரண்டாவதாக, ஒரு மனிதருடைய சிந்தனை, நடத்தை ஆகியவற்றை அவர் எந்தச் சூழலில் வாழ்கிறாரோ அது பெருமளவுக்குத் தீர்மானிக்கும். பாலியல்/பாலுறவு தொடர்பான சொற்களை இயல்பாகப் பேசும் சமூகச் சூழலில் வளரும் குழந்தை அந்த வார்த்தைகளைச் சரளமாகக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும். ஸ்லோகங்களைக் கேட்டபடி வளரும் குழந்தை இயல்பாகவே சுலோகங்களைச் சொல்லியபடி வளரும். மொழியைக் கற்றுக் கொள்வதுபோல் பல விஷயங்களைக் குழந்தைகள் தாம் வாழும் சூழலில் இருந்து கற்றுக் கொள்வார்கள்.
மூன்றாவதாக, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இருக்கும் உள்ளார்ந்த அம்சங்கள். இது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். மாபெரும் கலைஞர்கள் உருவாவதெல்லாம் இந்தத் தனிப்பட்ட உள்ளார்ந்த திறமையின் விளைவாகத்தான். இதை திட்டமிட்டு ஒருவரால் உருவாக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இப்படியாக ஒரு மனிதருடைய ஆளுமையைத் தீர்மானிப்பதில் பிறப்பு, வளர்ப்பு, உள்ளார்ந்த திறமை என மூன்று விஷயங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதில் முதல் இரண்டு அம்சங்களை மீறி வேறொரு வாழ்க்கைப் பார்வையையோ திறமையையோ ஒருவர் பெறுவது முற்றிலும் தற்செயலான நிகழ்வு. அது ஒருவகையில் விதி விலக்குதான். சமூகத்தை முன்னகர்த்திச் செல்வது இத்தகைய விதிவிலக்குகள்தான் என்பது உண்மையே. என்றாலும் சமூகங்கள் அமைக்கப்படுவது விதிகளின்படித்தான். விதிவிலக்குகளின் படி அல்ல. மக்களில் பெரும்பாலானவர்கள் பிறப்பு, வளர்ப்பு என்ற இரண்டின் செல்வாக்குக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களாகவே இருப்பார்கள். அதாவது, தனது பெற்றோர் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்களோ அதையே விரும்பி, திறமையாகச் செய்பவர்களாக இருப்பார்கள். வர்ணம் காலப்போக்கில் சாதியாக அதாவது பிறப்பின் அடிப்படையில் வேலைகளையும் அதன் மூலம் சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கும் அமைப்பாக மாறியதற்கு மனிதர்களின் இந்த இரண்டு அம்சங்களே காரணம். அவரையை நட்டால் அவரைதான் முளைக்கும். துவரை முளைக்காது என்பது மிகவும் எளிய, எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒரு விஷயம்தான். அதன் அடிப்படையில் பிராமணரின் மகன் பிராமணரானதையும் சூத்திரரின் மகன் சூத்திரரானதையும் நம் கடந்த கால சமூகம் மிகவும் இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால் அம்பேகர், வர்ணம் சாதியாக மாறியதை சதித் திட்டத்தின் அங்கமாகச் சொல்கிறார். அதாவது பிராமண, சத்ரிய, வைசிய வர்ணங்கள் உயர்வானவை. அந்த வர்ணங்களில் இருந்தவர்களுக்குக் கூடுதல் சலுகைகள் இருந்தன. நிறைய வசதி வாய்ப்புகள் இருந்தன. அதிகாரம் அவர்கள் கையில் இருந்தது. அவர்கள் அதை விட்டுக்கொடுக்க, குறிப்பாக, சூத்திரர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பவில்லை. எனவே, வர்ணாஸ்ரமத்தில் ஒவ்வொருவருடைய குணத்துக்கு ஏற்ப வர்ணம் தீர்மானமாவதை அவர்கள் மாற்றி அமைத்தனர். குரு குலப் பயிற்சிக்குப் பிறகு ஒருவருடைய வர்ணம் தீர்மானமாகும் முறையை மாற்றி ஒவ்வொரு குழந்தையின் அப்பாவே தன் வர்ணத்தைக் குழந்தைக்கு கை மாற்றித் தருவதாக ஆக்கினார்கள். இதன்படி பிராமணரின் மகன் குருவிடம் கல்வி கற்று அதன் பிறகு பிராமணராக ஆவதற்குப் பதிலாக பிராமணருக்குப் பிறந்ததன் மூலமே பிராமணராக ஆகிவிட்டார். இதுதான் சூத்திரரை சூத்திரராகவே இருக்கும்படிச் செய்துவிட்டது என்று அவர் சொல்கிறார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பிறப்பதன் மூலமே மகனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக மதிக்கப்பட்டுவிடமுடியுமா என்ற வாதத்தின் மூலம் பிறப்பின் அடிப்படையில் சமூக அந்தஸ்து தீர்மானமாவதைக் கேள்விக்குட்படுத்துவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை இங்கு கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். பிறப்பின் மூலம் கிடைத்த முன்னுரிமை என்பது ஒரு பள்ளியில் எளிதில் அனுமதி கிடைப்பதற்குச் சமமானது மட்டுமே. அந்தப் பள்ளியில் கடினமாக உழைத்து, ஒழுங்காகப் படித்து முடித்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கே முதலிடம் தரப்பட்டது. ஒரு மன்னரின் குழந்தை உரிய காலத்தில் வில் வித்தை, ஈட்டி எறிதல், தேரோட்டுதல் போன்றவற்றில் ஆரம்பித்து ராஜாங்க விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டே அரசர் பதவிக்கு வந்து சேர்கிறார். ஒரு பிராமணரின் குழந்தை உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டு, வேத வேதாந்தங்களைக் கற்றுத் தேர்ந்து, மது மாமிசத்தில் இருந்து விலகி நின்று, பாலியல் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்ததன் மூலமே சமூக அந்தஸ்தை வென்றெடுக்கிறார். தன் தந்தை பிராமணராக இருந்ததன் மூலம் அவருக்குக் கிடைப்பது ஒரு எளிய முன்னுரிமை மட்டுமே. எஞ்சிய சாதனைகளை அவர் சுயமாகச் செய்துதான் அந்த மரியாதைப் பெறுகிறார். இது எப்படி என்றால், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கடினமாக உழைத்து தானும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் போன்றது. இதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது.
சாதியப் போராளிகளுக்குப் புரியும்படிச் சொல்வதானால், பெரியாரின் சீடரும் அண்ணாவின் தம்பியும் பகுத்தறிவுப் பகலவனும் தமிழினத் தலைவரும் தலித் சம்பந்தியும் கூடவே கம்யூனிஸ்டுமான திருக்குவளை மு. கருணாநிதி, முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்தின் மூலம் பதவிக்கு பின்வாசல் வழி வந்தவரால் நடத்தப்படும் தொலைக்காட்சியில் திமுக ரவுடிக்கூட்டத் தலைவன் என்று அடையாளப்படுத்தப்பட்ட மதுரையின் கட்டை பஞ்சாயத்து மன்னரான மு.க. அழகிரிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது போல் அல்ல இது. பாளையங்கோட்டைச் சிறையில் பாம்புகளுக்கும் பல்லிகளுக்கும் இடையே தந்தை வாடியதுபோல் மிசா காலகட்டத்தில் சிறையில் வாடி, கட்சித் தொண்டனாக இருந்து இளைஞர் அணித் தலைவராகி, எம்.எல்.ஏவாகி., மேயராகி, துணை முதல்வராகி இன்று அடுத்த முதல்வராக ஆவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போலவேதான் அன்றைய பெரும்பாலான மன்னர்களும் வைசியர்களும் பிராமணர்களும் உரிய படிநிலைகளைக் கடந்தே அந்தந்த வர்ணத்தின் தொழிலைச் செய்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். யாரும் வெறும் பிறப்பை மட்டுமே வைத்து உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்துவிடவில்லை.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் வர்ணத்தின் அடிப்படையிலான அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களாக எந்த சூத்திரர் பிரிவை அம்பேத்கர் சொல்கிறாரோ சாதிக் கட்டமைப்பில் அதே சூத்திரர்களை (பிற்பட்ட சாதியினர்) சாதி இந்துவாக கட்டம்கட்டித் தாக்கவும் செய்கிறார். அப்படியானால், அவர்கள் யார்.. நல்லவர்களா… கெட்டவர்களா..? பாதிக்கப்பட்டவர்களா… பாதிப்பை ஏற்படுத்தியவர்களா?
அம்பேதகர் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகப் பட்டியலிடுபவற்றில் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். முதலாவதாக, அவர் பட்டியலிடுபவை, ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவர் அங்கு சிகிச்சை பெறும் அனைவருடைய நோய்களையும் ஒரே ஒரு நபருக்கு நேர்ந்ததாகச் சொல்வதைப் போன்றது. தலித் என்ற வகைக்குள் நில உடமையாளரான தலித், குத்தகைதாரரான தலித், விவசாயக் கூலியான தலித், சிகை அலங்காரம் செய்யும் தலித், ஆடு மாடு மேய்க்கும் தலித், வெட்டியானாக இருக்கும் தலித், மலம் அள்ளும் தலித், துணி வெளுக்கும் தலித் என எத்தனையோ பிரிவுகள் உண்டு. ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் அனுபவங்களும் ஒவ்வொருவிதமானவை. அதிலும்கூட மன்னர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தலித்தின் வாழ்க்கை வேறானது. நிலப்பிரபுக்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் நபர்களின் வாழ்க்கை வேறுவிதமானது. பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் சிகை அலங்காரம் செய்பவர்களின் வாழ்க்கை வேறானது. இவர்கள் அனைவருமே கூட சிகை அலங்காரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் வரமாட்டார்கள். இங்கு வர்க்கமும் சேர்ந்து செயல்படும்.
இந்த தலித் என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடைக்கப்படும் ஒவ்வொருவருமே தமக்கான தெய்வ வழிபாட்டுமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்திலும் வித்தியாசமானவர்கள். மேல்சாதியினருடனான இவர்கள் அனைவருடைய பரிமாற்றமும் வேறுபட்டவை. மன்னருக்கு சேவகம் செய்த தலித் பிரிவினர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டு அவர்கள் நில உடமையாளராகவே இருந்திருக்கிறார்கள். பல இடங்களில் குத்தகைதாரராக தலித்கள் இருந்திருக்கிறார்கள். அது அரை உடமையாளருக்கு சமமான நிலை. விளைச்சலில் கணிசமான பங்கை குத்தகைதாரர் எடுத்துக்கொள்ள வழி உண்டு. ஊடு பயிராக நடப்படுபவையும் நன் செய் நீங்கலாக நடப்படும் பயிர்களும் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும். வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டால் நஷ்டத்தை நில உடமையாளரும் சேர்ந்தேதான் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்த தலித்கள் பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானவர்கள். அம்பேகர் கண்ணில் இப்படியான ஒருவர்கூட பட்டிருக்கவில்லை.
கழுத்தில் கலயத்தைக் கட்டிக் கொள்ளவேண்டும்; இடுப்பில் விளக்கமாறைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் தலித்களில் ஐந்து சதவிகித மக்களுக்குக் கூட விதிக்கப்பட்டிருக்காத ஒரு வழிமுறை. துணி வெளுப்பவர்கள் இரவு நேரத்தில் உணவை யாசகம் கேட்டுச் செல்வார்கள். பிற பல தலித்கள் அப்படிச் செய்யமாட்டார்கள். மலம் அள்ளுதல் ஒரே ஒரு பிரிவு தலித்கள் மட்டுமே செய்யும் பணி. பிற தலித்கள் யாரும் அதைச் செய்யமாட்டார்கள். இந்தச் செயல்களுக்கான காரணங்களையும் இதில் இருந்து தப்ப என்னென்ன வழிகள் இருந்தன என்பதையும் பற்றியெல்லாம் எதுவுமே அம்பேத்கர் சொன்னது கிடையாது. மேலும் தலித்களுக்கு இருந்த சாதகமான விஷயங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு அனைத்து இழிநிலைகளையும் ஒரே ஒரு தலித் என்ற பிரிவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லும்போது மிகப் பெரிய அநீதி நடந்ததுபோல் தென்படும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இந்து மதத்தின் மீது சாதி இந்துக்கள் மீதும் கட்டுக்கடங்காத வெறுப்பையும் கோபத்தையும் அம்பேத்கர் கட்டமைத்துக்கொள்கிறார். இது அடிப்படையிலேயே தவறு.
இரண்டாவதாக, அவர் ஒடுக்குமுறைகளாகப் பட்டியலிடுபவை எல்லாமே ஒருவகையில் ஒடுக்குமுறையே அல்ல. அவையெல்லாம் நாங்கள் உங்களுக்கு சமம்தான் என்ற சவாலை அதிரடியாக முன்வைத்ததால் நடந்தவையே. ஒரு சமூகத்தில் வாழும் மக்கள் அனைவரும் சமம் என்பது உண்மைதான். சம வாய்ப்பும் சம வசதிகளும் அனைவருக்கும் தரப்படவேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், பழைய வாழ்க்கை முறையில் அந்த சமத்துவம் குறித்த கருத்துகள் இரு தரப்பிலுமே இருந்திருக்கவில்லை. வர்ணாஸ்ரம காலகட்டத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் சம வாய்ப்பு என்பது புதிய சிந்தனையே. ஆனால், பல நூறு ஆண்டுகளாக சிலரை மேலானவர்களாக மதித்து வாழ்ந்துவிட்டு திடீரென்று ஒருநாள் நாங்கள் உங்களுக்குச் சமமே என்று கோஷங்கள் இடுவது நடைமுறையைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையே. எளிய மக்களைப் பகடைக்காயாகவைத்து நடத்தப்படும் இதுபோன்ற அரசியல் கலகங்கள் ஆக்கபூர்வமான நோக்கத்தைக் கொண்டவை அல்ல. எதிர் தரப்பில் இருக்கும் மேல் சாதியினரை எதிரிகளாகவே ஆக்கும் குயுக்தி அரசியல்தான் இது.
வர்ணாஸ்ரம/சாதிய கட்டமைப்பைப் பற்றி விமர்சிக்கும்போது அம்பேத்கர் வெகு சாமர்த்தியமாக, கடினமான இழிவான வேலைகளை தலித்கள் செய்ய நேர்ந்தது குறித்து பெரிதாக எதுவும் சொல்லாமல் இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். ஏனென்றால், என்னதான் ஒரு சமூகத்தின் அறிவு வர்க்கத்துக்குத்தான் அனைத்து மக்களின் நலனுக்காக சிந்திக்கும் பொறுப்பு உண்டு என்று சொன்னாலும் கடினமான கேவலமான வேலையைச் செய்து வந்தவர்களுக்கும் அதை மேம்படுத்தும் பொறுப்பு இருக்கிறது என்ற உண்மை அவருக்குத் தெரியும். எனவேதான் அது பற்றி அதிகம் அவர் பேசுவது இல்லை. சாதி அடுக்கில் தலித்கள் மேலேற முற்பட்டபோது சாதி இந்துக்கள் எப்படியெல்லாம் அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையே அவர் தன் வாதங்களுக்கு அடிப்படையாக வைத்துக்கொள்கிறார். தேர்ந்த வக்கீல் அல்லவா..? உண்மையைவிட வாதத் திறமைதானே வெல்லும் என்பது அவருக்குத் தெரியுமே.
இதனால்தான் தலித்களுக்குள்ளும் சாதி வெறி இருக்கிறதே என்ற உண்மையைச் சொல்பவர்களை விஷமிகள் என்று அம்பேத்கர் சொல்கிறார். தன் தரப்பு மக்களிடம் இருக்கும் குறைகளையும் அவர் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் சக மனிதர்களை சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் நடத்தும் பண்பு மனித குலத்துக்கு இயல்பாகக் கைகூடும் ஒன்றாகவோ நீடித்து நிற்கும் ஒன்றாகவோ இல்லை. விழிப்பு உணர்வு பெற்ற ஒரு சிலர்தான் இதை மக்கள் மத்தியில் விதைத்து நிதானமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உண்மைகளைப் புரிந்துகொண்டிருப்பார். இந்து சமூகத்தை அதன் மூலம் ஒரு மறுமலர்ச்சிக்கு அவர் கொண்டு சென்றிருக்க முடியும். காந்தி அதைத்தான் செய்தார். ஆனால், அம்பேத்காருக்கோ இந்து தன் குறைகளைத் திருத்திக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு நகரவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்ற பிரிட்டிஷாரின் உத்தரவை தன்னுடைய கண்டுபிடிப்பாகவும் உரிமைப்போராட்டத்தின் முதல் முழக்கமாகவும் வைத்துக்கொண்டு சுய சிந்தனையாளர்போல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்தக் காரணத்தினால்தான் வர்ணாஸ்ரமத்தையும் அவர் அழிய வேண்டும் என்று கூறுகிறார். அவருக்கு வர்ணம் என்பது சாதியைவிடப் பல மடங்கு உயர்ந்தது என்பது தெரியும். அதை அவரே விரிவாகக் குறிப்பிடவும் செய்திருக்கிறார். நவீன உலகம் முன்வைக்கும் சமூக அமைப்பு என்பது வர்ணாஸ்ரம தர்மமே என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு மனமில்லை. அதாவது, பிரிட்டிஷாருக்கு அது உவப்பானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அவருக்கும் அது ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை. தொட்டியில் வாழும் தங்க மீனுக்குக் கடலின் அருமை எப்படித் தெரியும்?
0