பேசு மனமே பேசு / அத்தியாயம் 1
உதயமானதிலிருந்து இன்று வரை, உலகநாடுகளால் ஒதுக்க முடியாத சக்தியாக தன்னை ஸ்தாபித்து வரும் நாடு இஸ்ரேல். ஆனால் ஒரு காலத்தில் இந்நாட்டு மக்களான யூதர்கள் இந்தியாவைத் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்டனர். இத்தனைக்கும் இந்நாடுகளில் பெரும்பாலானவை யூதர்களின் அசாத்தியமான அறிவுத்திறன் மற்றும் உடல் உழைப்புத் திறன்களை, பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருந்தவைதாம். ஆனால் அன்றைய சூழ்நிலை மாறுபாட்டினால் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அவை யூதர்களை வெளியேற்றின.
இன்றைக்கும் தங்களைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இதே யூதர்கள், கடந்தபோன அந்த துரதிஷ்டவசமான காலகட்டத்தில், கோழைகள், பலமற்றவர்கள், வாதம் செய்வதில் மட்டுமே வல்லவர்கள் என்றெல்லாம் கேலி செய்யப்பட்டனர். அப்போது அவர்களின் நடத்தையும் செயலும் அவ்வாறுதான் இருந்தன. இவை போதாது என்று, யூத மத குருமார்களின் போதனைகளும் மேற்படி காலகட்டத்தில் இக்குணங்களை வளர்ப்பதாகவே இருந்தன. ‘இந்தக் காலகட்டத்தில் இப்படித்தான் நடத்தப்படுவோம் என்று நமது வேதபுத்தகத்தில் கூறப்பட்டுள்ளது, ஆகவே இதை எதிர்க்கக்கூடாது’ என்று யூதர்களிடம் கூறி அவர்களை அடக்கி வந்தனர். அந்த இன மக்களும் மத குருமார்கள் சொன்னதை நம்பி, தங்களது அழிவை, ‘விதித்தபடியே நடக்கிறது’ என்று ஏற்றுக் கொண்டனர். இதனால் குறிப்பிட்டகாலம் வரை, எந்த எதிர்ப்புமின்றி நெருப்பில் அகப்பட்ட காய்ந்த புற்களைப் போல கிடந்து இறந்து போனார்கள்.
‘எதாக நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்’ என்பது விவேகானந்தரின் வாக்கு. இது அனைவருக்கும் பொருந்தும். இதை மனோதத்துவ நிபுணர்களும் ஆய்வுக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ளனர். யூதர்களின் விஷயத்திலும் இது உண்மையானது என்பது நிகழ்வுகள்மூலம் நிரூபிக்கப்பட்டது. கூட்டம் கூட்டமாக விஷவாயுக் கிடங்குகளில் கொல்லப்பட்ட சம்பவங்கள் உச்ச கட்டத்தில் இருந்த அதே காலகட்டத்தில், உலகத்தின் ஒரு கோடியில் உள்ள போலந்தில் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான யூதர் கூட்டத்தைச் சேர்ந்த இளைஞர் குழு திருப்பித் தாக்கத் தயாரானது. இந்த ஆரம்பப் புள்ளிதான், பின்னாளில் ‘இஸ்ரேல்’ என்ற மிகச் சிக்கலான அதே சமயத்தில் முழுமை பெற்ற கோலம் போன்ற நாடு உருவாகக் காரணமாக இருந்தது.
எது நடந்தாலும் அதில் நமது பங்கு, நாம் ஒப்புக்கொள்வதைவிட அதிகம் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் குறைவு. பழந்தமிழ்ப் பாடல்களில், ஒரு அற்புத வரி ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது. பிறவியில் ஊனம், ஏழ்மை, சமூக பாதிப்புகள் போன்றவற்றிற்கு, ‘அவரவர் பூர்வ ஜன்ம பயனே காரணம்’ என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. அதே சமயத்தில் இவ்வாறான சூழ்நிலையில் பிறந்தவர்களிலும் ஒரு பகுதியினர் தங்களது குறைகளையும் மீறி முன்னேறிப் பிரகாசிக்கிறார்கள். இதற்கு மற்றவர்கள் உதவி இருந்தாலும் அந்த உதவிகளைப் பெறத் தகுதிகளை ஏற்படுத்திக்கொண்டால் மட்டும்தான் உதவிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது என்பதும் உண்மைதானே?
சில வருடங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள சவேரா ஓட்டலில் ஒரு ஓவியக் கண்காட்சி நடந்தது. கணிணியின் உதவியால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதன் தனித்துவம், ஓவியர் நரசிம்மலு, குழந்தை பருவத்திலிருந்தே, மூளை பாதிப்பு நோயான செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர் என்பதுதான். இவர் 18 மாதக் குழந்தையிலிருந்து ஆந்திர மகிள சபா என்ற சேவா நிறுவனத்தின் ஆதரவில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்மலு உருவாக்கிய அத்தனை ஓவியங்களும் அவரது வலது காலை மட்டும் பயன்படுத்தி வரையப்பட்டவை. இவரைப் போன்றே, தீமை தானாகவே வந்தாலும், அதை எதிர்கொள்ளும் விதத்தில் அவற்றின் விளைவுகளும் மாறுபடுகின்றன. நாம் நம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நாம் என்னவாக இருக்கிறோம் அல்லது எப்படி இருக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது.
அதே சமயத்தில், எந்தவித குறிப்பிட்ட பிரச்னைகள் இல்லாமல் பிறக்கிறவர்களும்கூட நம்பிக்கையின்றி வாழ்வதும் இயல்பாகவே நடக்கிறது. பெரும்பாலும் அவர்களது பின்னணி, வளர்ந்த சூழ்நிலை போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. ஏறக்குறைய அனைவருமே 18 வயது வரை வேறு வழியின்றி பெற்றோர் மற்றும் உறவினர்களின் கட்டுப்பட்டில்தான் இருக்கின்றனர்.
தனிமனித சுதந்தரம் அபரிமிதமாக இருக்கிறது, மதிக்கப்படுகிறது என்று கூறப்படும் மேலை நாட்டில் ஒரு ஆய்வு நடந்தது. மனித நடத்தை தொடர்பாக நடந்த அந்த ஆய்வின் முடிவு, பிறந்ததிலிருந்து 18 வயது வரையிலான இள்ம் பருவத்தினர், தாங்கள் செய்ய விரும்பும் காரியங்கள், சிந்தனை வெளிப்பாடுகள் ஆகியன தொடர்பாக சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் தடவைகள், ‘வேண்டாம்’, ‘கூடாது’, ‘செய்யாதே’, ‘உன்னால் முடியாது’ என்ற எதிர்மறை செய்திகளை பெரியவர்களிடமிருந்து கேட்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.
18 வருடங்கள் என்றால் 6570 நாட்கள். இதற்குள்ளாக 1,48,000 முறை ‘எதிர்மறை செய்திகளை’ கேட்கவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு சராசரியாக இது போன்ற ‘அறிவுறுத்தல்கள்’ எத்தனைமுறை என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இத்தனைமுறை கேட்ட பின்பு நமது மூளையின் பதிவுகள் எவ்வாறாக இருக்க முடியும்?
இதெல்லாம் சரிதான், இத்தகைய பதிவுகளை மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு பதில், ‘நிச்சயமாக முடியும்’ என்பதுதான். இந்த மாற்றம் நம்மைப் பொறுத்தே அமையும். நாம் உள்வாங்கிய செய்திகள், அதுவும் எதிர்மறைச் செய்திகள், நம்மை வேண்டுமென்றே அமுக்குவதற்காக, பயமுறுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல. நம் நன்மைக்காக என்று நினைத்து, நம்பி சொல்லப்பட்டவை. இவற்றில் பல எச்சரிக்கைகள், பயங்கள், கட்டுப்பாடுகள். நாம் வளர, வளர பழுத்த இலைகளைப்போல தானாகவே ‘உதிர்ந்து’ விடக் கூடியவைதான்.
அந்த இடத்தில் புதிய சிந்தனைகள், நம்பிக்கையை வளர்க்கும் செய்திகளையும் சொல்லி நாம் நிரப்ப ஆரம்பித்தால், நாளடைவில் போகப் போக பெரும் மாற்றங்கள் உருவாகும். பழைய செய்திகளுக்குப் பதிலாக என்று மட்டும் இல்லாமல், அன்றாட வாழ்க்கையை சரி செய்யவும் இது முக்கியம். இதை யாரும் நமக்காகச் செய்ய மாட்டார்கள் என்பதால் நாமேதான் இதைச் செய்யவேண்டும். எப்படிச் செய்வது? நமது மனத்தில் வேண்டாத பல விஷயங்கள் மற்றவர்களிடமிருந்து, சூழ்நிலையை நாம் புரிந்துகொண்ட விதத்திலிருந்து, மனத்தில் பதிவுகளாகத் தங்கிவிட்டவை. இவற்றை மாற்ற, நாம்தான் நம் மனத்துடன் பேசவேண்டும். இது எப்படி முடியும் என்பதைப் பற்றி படிப்படியாகத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
0