சமீபத்தில், கோவை அவிநாசி சாலையில் ஒரு வணிக வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பெண்கள் பலியான செய்தியை வாசித்திருப்பீர்கள். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து புலனாய்வு ஒரு புறம் தொடங்கும் முன்னர், கட்டட வரைபட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவசர கதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம் சில விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அனுமதிக்கு மேலாக இரண்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்படவில்லை. தீயணைப்புச் சாதனங்கள் இல்லை.
சாதாரண நடுத்தர வர்க்க சாமானியன் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கினால் அல்லது வங்கிக் கடன் வாங்கப் புறப்பட்டால் அல்லது தன் கட்டடத்தில் ஒரு சிறு பகுதியை விரிவாக்கம் செய்ய முயன்றால் உடனே, வார்டு உறுப்பினர், வருவாய் ஆய்வாளர் முதல் மின்வாரிய பொறியாளர் வரை மாறி மாறி வந்துவிடுவாரக்ள். வரைபட அனுமதி உள்ளதா, வரி திருத்தியமைக்கப்பட வேண்டாமா, மின் இணைப்பு பெற பத்திர நகல் கொடு, வீட்டு வரி ரசீது கொடு என கெடுபிடிகள் பெருகிவிடும். ”நாங்கள் இரண்டு, மூன்று பேர் சார், பார்த்து கவனிங்க” என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படும்.
ஆனால் அதுவே கோடிக்கணக்கிலான திட்டம் எனில் உரியவர்களை உரிய முறையில் “கவனித்து”விட்டு வேலை தொடங்கப்படுவதால் விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. மலிவாகிப்போன மனித உயிர்கள் இழப்பு ஏற்பட்டவுடன் இது போன்ற விதி மீறல்கள் 3-4 நாட்கள் தலைப்பு செய்தியாகி பின்னர் மறந்து போகப்படுவது தொடர்கதையாகிறது.
சில மாதங்களுக்கு முன்பாக பள்ளி / கல்லூரி பேருந்து ஒன்றில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டவுடன் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு அந்த பிரச்னையை மறந்துவிட்டோம். பெரும்பாலான வாகனங்கள் உடனடியாக வர்ணம் பூசப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று காண்பித்து தகுதிச்சான்று பெறுவதற்கு சில (*)சலான் வெட்டுவதோடு அது மறந்து போகப்பட்டது. (சலான் – என்றால் கருவூல செலுத்துச்சீட்டு என எண்ணிக்கொள்ள வேண்டாம். அனைத்து வ.போ.அலுவலகத்திலும் கணிணிமூலம் அரசாங்கத்திற்கு ஒவ்வொரு மனுவுக்கும் கட்டணம் வசூலிக்கும் வழக்கம் வந்தாகிவிட்டது – பின்னர் இந்த சலான் என்பது? இன்றும் வ.போ.அ-களில் லஞ்சம் என்பதற்கு பயன்படுத்தப்படும் பரிபாஷை). விதிகள் நெருக்கிப்பிடிக்கப்படும் போது “கவனிப்பும்” அதிகரிக்கிறது.
பேருந்துகளில் எதிரில் வரும் வாகன ஓட்டியை கண்கூச வைக்கும் விதத்தில் 4 முகப்பு விளக்குகள் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால் ஒரு வருடத்துக்கு ஒரு முறை தனியார் பேருந்துகள் தகுதி்சான்று புதுப்பிக்க (ஆர்டிஓ) வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரும் போது மட்டும் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு ஹெட் லைட்டை கழற்றி ஒரு தகடால் மறைத்து ஸ்குரூ போட்டு மூடிவிட்டு, ஆய்வு முடித்து தடத்தில் செல்லும் போது மீண்டும் பளீரென்ற லைட்டுகள் மாட்டப்பட்டுவிடும். இந்த இரண்டு மணி நேர நாடகத்துக்கு சற்று சலான் அதிகம் கொடுக்க வேண்டும்.
மதுரையில் சில தினங்களுக்கு முன்பாக ஷேர் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். அன்று முதல் 3 தினங்கள் நகர் முழுவதும் ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றியதாக காவல்துறை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள்என வளைத்து, வளைத்து குற்றக் குறிப்பாணை, அபராதம் என்ற கெடுபிடிகள், ஆட்டோக்களின் பக்கவாட்டில் இந்த ஆட்டோவில்3 பேர்களுக்கு மேல் ஏற்றப்படமாட்டாது என பெயின்டினால் வாசகங்கள் என அமர்க்களப்பட்டது. 3 நாட்கள் கழிந்தவுடன், தினமும் வடக்கு, தெற்கு என ஒரு சரகத்துக்கு 3-4 ஆட்டோக்களை மட்டும் அபராதம் விதித்துக் கொள்கிறோம், மற்றபடி அதிக பயணிகளோடு செல்பவர்கள் அவ்வப்போது எங்களை ‘கவனித்து’ விடுங்கள் என்ற எழுதப்படாத உடன்பாட்டோடு அது மறந்து போகப்பட்டது.
தொடரும் விதிமீறல்களையும், அவை உடனுக்குடன் மறந்து போகப்படுவதையும் பார்க்கும் போது மிகுந்த அச்சம் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. குறைந்தபட்சம், உயிருக்கு உலை வைக்கும் விவகாரங்களில் மட்டுமாவது நேர்மையாக இருக்கக்கூடாதா?
0