இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலை நாட்டைப் போல் வகுப்புச் சமூகமாக அமையாமல் இது ஒரு சாதிச் சமூகமாக அமைந்திருப்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை. சாதிகள் வருணங்களில் இருந்து தோன்றின. வருணங்கள் கடவுளின் படைப்பாகப் போற்றப்பட்டன. வேதங்களும் அவற்றின் விளக்க உரைகளாக அமைந்த ‘அற நூல்கள்’ எனப்பட்ட தரும சாத்திரங்களும் வருணநெறிகளை அரசியல் சட்டங்களாக்கின.
இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு கால நிலையில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. தன்னைத் தானே ஒரு சாதியாகவும் அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப்பெரியனவாகவும் மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமும் ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்து என்பது தத்துவார்த்த அளவில் தாராளத் தன்மையுடையதும், சமூகப் பழக்க அளவில் கெடுபிடியான கட்டுத் திட்டங்கள் கொண்டதுமான ஒரு மதமாகும். இதனால்தான் நாத்திகம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களையும் இது தனது தத்துவமாக உள்ளடக்கி அறிவிக்கும் அதே வேளை, சாதியக் கட்டமைப்பில் மட்டும் கறாரான கட்டுத் திட்டங்களைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. இதனாலேயே இந்துக்கள் தங்கள் இருப்பைச் சாதிய வடிவிலேயே வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த இந்துக்களும் உலகம் முழுக்க, இந்தியா முழுக்க வாழ்ந்தாலும் இவர்களும் மத அடிப்படையை வைத்து அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக தேசிய இனத்தை வைத்தே அடையாளம் காணப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், வங்காளி, குஜராத்தி என்றே அறியப்படுகிறார்களே யொழிய பொதுவில் இந்துக்கள் என்று அல்ல.
இன்றைய சமூகத்தில் இந்து மற்றும் இந்துத்துவத் தாக்கமுள்ள எந்த ஒரு மக்கள் பிரிவும் சாதியை வைத்தே அடையாளம் காணப்படுகிறது. மனிதனின் சாதிய அடையாளமே மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. மனிதன் பிறந்து பெயர் வைக்கும் முன்பே ஏன் பிறக்கும் முன் கருவிலேயே மனிதனின் சாதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்படி அகமண முறையில் கெட்டித்தட்டிப் போயும், இறுக்கமடைந்தும் மாற்றமுடியாததாகவும், நிலவும் சாதியக் கட்டமைப்புக்குள் மனிதனுக்கு சுதந்தரம், சனநாயகம், சமத்துவம் எதுவும் இல்லை.
சாதி அமைப்பு என்பது படிநிலை ஏற்றத்தாழ்வுகளை கொண்டது. சாதாரண நோக்கில் பார்ப்பன சாதி, பார்ப்பனரால்லாத மேல்சாதி, பிறப்படுத்தப்பட்ட சாதி, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி இன்னும் அதற்குள்ளே நிலவும் உட்சாதி ஆகிய எந்த சாதியை எடுத்துக்கொண்டாலும் இந்த சாதிக்குள் சமத்துவம் இல்லை என்பதோடு இது படிநிலை வரிசையுடையதாக கட்டமைக்கப்பட்டிருப்பதும் இதுவே சமூகத்தில் அதன் இருப்பை தெளிவுப்படுத்துவதாக இருப்பதும் கவனிக்கத்தக்கது.
சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளில் மிகக் கொடூர அல்லது மிக இழிந்த வடிவமே தீண்டாமை என்பது. என்றாலும் மேலே சொன்ன படிநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கும் தீண்டாமைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. மேலே சொன்ன சாதிகளெல்லாம் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தொட்டால் தீட்டு என்னும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.
எனவே, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் மத்தியில் நிலவும் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும், தாழ்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதாருக்குமான படிநிலை ஏற்றத்தாழ்வையும் தீண்டாமைக் கொடுமையையும் ஒன்றாக்கி அதாவது சமப்படுத்திப் பார்த்துக் கொள்ள முடியாது. பார்த்துக்கொள்ளக் கூடாது.
சமுதாயத்தில் படிநிலை ஏற்றத்தாழ்வுகள் தோன்றும் முன்பே சாதி இருந்தது. அது இன்று நாம் காணும் சாதி என்னும் நோக்கில் அகமண முறையில் கட்டமைக்கப்பட்ட சாதியாக இல்லாமல் இந்திருக்கலாம். தொழில் ரீதியில் மற்றும் வேறுபல ரீதியில் பிரிவினையாக இருந்திருக்கலாம். இப்பிரிவினையே முதலில் தோன்றியது.
சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் உற்பத்தி உறவு என்கிற வகையில் புற நிலையாகவும், மேல் கட்டுமானத்தில் பண்பாட்டு வடிவம் என்கிற வகையில் அகநிலையாகவும் செயல்படுகிறது என்பது கிட்டத்தட்ட பெரும்பாலான சமூக ஆய்வாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
இதிலும் உற்பத்தி என்பதை மனித உற்பத்தி, பொருள் உற்பத்தி என இரு வகையாகக் கொண்டு நோக்க, இவ்விரண்டிலுமே சாதியச் செயல்பாடுகள் நிலவுவது தெரியவரும். இங்கு மனித உற்பத்தி என்பது சொந்த சாதிகளின் வடிவில் அதாவது அகமண உறவில் நிகழ்கிறது. பொருள் உற்பத்தி என்பது பெருமளவும் மாற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும் இன்னும் சில சாதிய அடிப்படையிலேயே நீடிக்கிறது. பொதுவான தொழில் கட்டமைப்பும் சாதி சார்ந்தே நிலவுகிறது.
வருணக் கோட்பாடு என்பது சாதியத்தை, தீண்டாமையை வலியுறுத்தும் ஒன்று. பார்ப்பனர், பார்ப்பனரல்லாத உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்கிற படிநிலை வரிசையைக் கொண்டுள்ளது. இது பிறப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்கிற ஒரு கோட்பாடாகும்.
இப்படி இது கீழ் மேல் அடுக்கு வரிசைகளைக் கொண்டுள்ளதால் இப்படிநிலை வரிசையில் இடையில் உள்ள ஒவ்வொரு சாதிப்பிரிவினரும் தங்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்களை எதிர்க்க விரும்பும் அதே வேளை, தங்களுக்கு கீழுள்ளவர்களைக் கண்டு நிறைவுற்று அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தி அதிலேயே அகமகிழும் போக்கும் இருந்து வருகிறது.
0
சடங்கு புரோகிதர்களாக விளங்கிய பிராமணர்கள் ஒரு நாட்டின் அரசனைக் காட்டிலும் மேலானவர்களாக மாறிய நிலைதான் சாதியத்தின் அடித்தளம்.பொருளியியல் நிலையிலும் அரசியல் மேலாண்மையிலும் எஜமானர்களாகத் திகழ்ந்த அரசர்களின் ‘அதிகாரம் என்னும் தளமானது ஆன்மிகம், வேள்வி/யாகம், சடங்கு இவற்றைக் கொண்டு மன்னனுக்கும் – அரசனுக்கும் நாட்டுக்கும் மேன்மை ஏற்படுத்திய பிராமணர்களின் ‘சமூகத் தகுதி’ என்னும் தளத்தோடு கொண்ட உறவே சாதியத்தின் அடித்தளம் என்பார் துய்மோன் (1980:2).
‘சாதி என்பது குல – இனக்குழு அமைப்பின் எஞ்சிய வடிவங்களில் ஒன்று’ என்பார் கார்ல் மார்க்ஸ்.
‘சாதி என்பது ஒரு அமைப்பு முறை. இந்த அமைப்பில் ஆண் – பெண் எந்த குறிப்பிட்ட குழுவில் பிறந்தனரோ அந்தக் குழுவின் மூலமாகவே அவர்களுக்குச் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. சமூகப்படிவரிசையில் ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பிட்ட மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தொழில் – அல்லது தொழில்கள் உள்ளன. அக்குழுவுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்’ என்கிறார் கெய்ல் ஓம்வெட் (நூல்: வர்க்கம், சாதி, நிலம். பக்.60).
சாதி என்பதற்கு குலம், வருணம், இனம், ஓரினப்பொருளின் பொதுவாகிய தன்மை, திரள் என்றெல்லாம் தமிழ் லெக்சிகன் அகராதி (பக்.1367) பொருள் கூறுகிறது.
ஆறு பேரினமாக, ஒன்பது கிளையினமாக இருந்து பின்னர் நான்கு மொழியினமாக மாறிய இந்திய சமூகத்தில் சாதிகள் படிப்படியாக வளர்ந்து பெருகலாயின. பின்னர் மதங்கள் தோன்றின. குலக்குறி வழிபாடுகளால் பிரிந்து நின்ற மனிதன் மதங்களால் மேலும் பிரிந்தான்.
ஆரியர்கள் வருணாசிரம கோட்பாடுகளைப் புகுத்தினர். தொழில் அடிப்படையில் இருந்த சாதிகள் பிறப்பு அடிப்படைக்கு மாற்றப்பட்டன.
ஒரு சாதியில் பிறப்பதற்கு அந்த மனிதன் முற்பிறவியில் செய்த கர்மவினைகளே காரணம் என்றும், இழிவான நிலையில் பிறப்பதே – வாழுவதே இறைவன் ஒரு சில சாதிகளுக்கு இட்ட கட்டளை என்றும் போதனைகள் செய்யப்பட்டன.
ஆரியர் வருகைக்குப் பின்னர் தொழில் அடிப்படையில் தோன்றியதாகச் சொல்லப்பட்ட சாதிகளைப் பற்றி மண்டல் கமிஷன் அளிக்கும் புள்ளிவிவரம் இது. 3741 பிற்படுத்தப்பட்ட சாதியினரும், அவர்களுள் 2105 மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மற்றும் 1088 ஷெட்யூல்டு இனத்தவரும் 648 மலைவாழ் இனத்தவரும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 85% சூத்திர – தீண்டப்படாதவர்கள் என்றும், இங்குள்ள 11 கோடி முஸ்லிம்களில் 10 கோடி பேர் இந்துக்களாக இருந்து இஸ்லாத்துக்கு சென்றவர்களென்றும், அதில் பெரும்பாலோர் தீண்டப்படாத இனத்தவர் என்பதும் ஏற்கவேண்டிய உண்மையாகும்.
அக் காலத்திலே பல சாதிகள் இருந்ததை நாலாயிரம் திவ்வியப் பிரபந்தத்தின்மூலம் அறிய முடிகிறது. சமயம், இலக்கியம், கல்வி என பல்வேறு கட்டுமானங்கள் இருந்தபோதும் சாதியை ஒழிக்க முடியவில்லை. சாதிப் பூசல்கள் மட்டுமின்றி சமய சண்டைகளும் நம் நாட்டில் இன்றுவரை நடந்துவருவது வேதனையானது.
‘இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம்’ 1985ல் இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் இனவரைவியல் மதிப்பாய்வினை ‘இந்தியாவின் மக்கள்’ என்னும் திட்டத்தில் வழியாகத் தொடங்கியது. இவ்வாய்வின்படி இந்தியாவில் இன்று 4635 சமூகங்கள் உள்லன. (சிங் 1992).
‘ஜாதிப் பிரிவினைகளை அகற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் காந்தியடிகள் தமது ‘அரிஜன்’ (16.11.1935) இதழில் எழுதியுள்ள கட்டுரையில் ‘இன்று நிலவிவரும் ஜாதி அமைப்புகள் பண்டைய வர்ணாசிரம விதி முறைகளுக்கு நேர் எதிரிடையான விகற்பங்களேயாம். அனைத்து மக்களும் ஒருமித்து ஜாதிப் பிரிவினைகளை விலக்கிக் கொள்ளும் காலம் எவ்வளவுக்கெவ்வளவு துரிதமாக வருமோ அவ்வளவுக்களவு நாட்டுக்கு நல்லது’ என்று வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு கட்டுரையில் காந்தியடிகள், ‘பிறப்பின் காரணமாக ஜாதி வித்தியாசங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நெறிகெட்ட வழக்கு, ஒழுக்கக் கேடானது. இத்தகைய சாதிப் பிரிவினைகளால் நாம் அவதியுற்றுத் தீமைக்கு ஆளாகிவிட்டோம். உயர் ஜாதி – கீழ் ஜாதி என்கிற மனப்பான்மை நமது சமூக இழிவை இழிவுபடுத்தி விட்டது’ என்றெல்லாம் கடுமையாகச் சாடியுள்ளார் (அரிசன் – 2.5.1936).
டாக்டர் அம்பேத்கர் ‘சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்னும் கட்டுரையில் கூறும்போது ‘சாதீய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் தவறானது. உட்சாதிகளை ஒழித்துவிடுவது என்பதே சாதிகளை ஒழிப்பதற்கு வழி வகுத்து விடும் என்று எப்படி உறுதியாக நம்ப முடியும்? இதற்கு மாறாக சாதி ஒழிப்பு, உட்சாதிகளை ஒழிப்பதுடன் நின்று விடலாம் அல்லவா? அப்படியானால் உட்சாதிகளை ஒழிப்பது சாதிகளை வலுப்படுத்தவே துணைபோகும். சாதிகள் முன்பு இருந்ததை விட வலிமை மிகுந்தவையாகி, முன்பைவிட மிகுந்த விஷமத்தனமாகி விடும். எனவே, சாதியை ஒழிப்பதற்கு உட்சாதிகளை ஒன்றாக இணைத்து விடுவது என்கிற வழி, நடைமுறைச் சாத்தியமானதுமல்ல, பயனுள்ளதும் அல்ல. இது தவறான வழி என்பது எளிதில் நிரூபணமாகும்’ என்று குறிப்பிட்டார்.
0