தமிழகத்தில் பிறந்த மக்கள் வகுப்பு, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களில் வாழ்ந்தனர். இந்த நான்குவகை நிலத்திலும் தம்முன் ஏதும் வேறுபாடு இன்றி உண்ணல், கலத்தலைச் செய்து வந்தனர் என்பதை தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான தெய்வத் தமிழ் மறை நூல்களில் இருந்து அறியலாம்.
இவ்வாறு இந்த நான்கு வகை நிலத்திலும் வாழ்ந்த மக்களின் தொழில் வேறுபாடு பற்றிப் பல வகுப்பினராகப் பிரிக்கப்பட்டோருள் கொலையும் புலால் உணவும் மறுத்து, ஓதல், வேட்டல், அரசு புரிதல் வாணிகம் செய்தல், உழவு செய்தல் என்னும் உயர்ந்த தொழில் புரிந்தோர் ‘மேலோர்’ என்று கருதப்பட்டனர். கொலையும், புலையும் செய்வோர் கீழோர். இவ்வாறு இந்த இருபெரும் பிரிவில் வகுக்கப்பட்டு, அவரவரும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் தொழிலாலும் தத்தமக்குள்ள உயர்வு தாழ்வுகளை நினைத்து, கீழோர் மேலோர்க்கு அடங்கி நடந்து, மேலோர் தம் கீழ் வாழும் குடிமக்களை இனிது பாதுகாத்து வந்தனர். இவ்வாறு அமைதியாகவும் ஒழுங்காகவும் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கை நடைபெற்றது. அக்காலத்தில் தீண்டாமை இல்லை.
தென்னிந்தியாவில் தீண்டப்படாதாரைப் பறையர் என்பார்கள். இவர்கள் திராவிட இனத்தவர்களால் வெல்லப்பட்டார்கள். இவர்களுக்குக் கீழ்த்தரமான தாழ்வான கேவலமான சமூக வேலைகளைத் தந்தனர்.
தீண்டப்படாதார் திராவிடர்களுக்கு முன்னதாகத் தென்னகத்தில் வாழ்ந்த மலைவாழ் இனத்திலிருந்து வாழ்ந்தவர்களென்றும், இவர்கள் முதன் முதலில் திராவிடர்களால் தாழ்நிலைக்கும், அடிமை நிலைக்கும் தள்ளப்பட்டார்களெனவும் கால்டுவெல் கூருகிறார். தமிழ்நாட்டுப் பறையர்கள் சிறப்புமிக்க இனத்தவர்களாக மதிக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் சமயப் பண்டிகைகளிலும், விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் இவர்களுக்குத் தனித்த முன்னுரிமைகளும், சலுகைகளூம், மரியாதைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் கால்டுவெல் சுட்டிக்காட்டியுள்ளார்.
குர்யி என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவது போன்று தீண்டப்படாதாரெனத் தமிழகத்தில் கருதப்பட்ட மக்கள், திராவிடர்களுக்கு முன்னதாகத் தென்னிந்தியாவை தங்கள் நாடாகக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து தென்னகத்தில் குடியேறியதால், இவர்கள் காட்டுப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் குடியேறினர். அவ்வாறு மலை மற்றும் காட்டுப் பகுதிகளுக்குச் செல்லாமல் சமவெளிப்பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டு, தாழ்நிலை ஊழியர்களாக மாற்றப்பட்டனர்.
சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர நாகரிகத்துக்கு திராவிடர்கள்தான் சொந்தக்காரர்கள் என்பது, ஆதித்திராவிடர்களையே சாரும். தென்னகத்திலிருந்த திராவிட இனத்தாரிடையே ஆதிமக்களாகிய திராவிட இனத்தவர்கள் தீண்டப்படாதவர்கள் என்ற நிலைக்கு ஆளாக வேண்டியிருந்தது.
பிரான்ஸிஸ் அவர்கள் கூறுவது போன்று, பழைய தமிழ்ப்பாடல்களிலும் அதற்குப் பின்னர் வந்த நாட்களிலும் பறையர் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஆதிக்குடியினரான இவர்கள் எயினர் என்ற பெயரில் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் தமிழ் நூல்களில் உள்ளன. இந்த எயினர் என்பவர்கள் பறையரென்று அழைக்கப்பட்ட மக்களுக்கும் மூதாதையரென்று கருதப்படுகிறது.
பறையர்கள் இம்மண்ணின் ஆதிக்குடியினர். பறையர்கள் மற்ற தமிழர்கள் போலல்லாமல் தமிழ் மொழியை, தமிழ் நாகரிகத்தை, கலாசாரத்தை எந்த வித பிற நாகரிகக் கலப்பும் இன்றி தொடர்ந்து பின்பற்றிக் காத்து வந்தவர்கள். இவர்களது அன்றாட பேச்சு வழக்கிலுள்ள கஞ்சி, உறங்கு, சேரி, காய்ச்சல், கண்மாய், முடங்கு, வடக்கிருப்பு, தெற்கிருப்பு என்பன போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள் இவர்களை உண்மைத் தமிழர்கள் என்று இனம் கண்டு கொடுக்கின்றன.
தமிழகத்தில் ஆதித்திராவிடர்கள் ‘பறையர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். தென்தமிழ் மாவட்டங்களில் உள்ள பள்ளி இளஞ்சிறுவர்களின் சான்றிதழில் பறையர் என சாதி பெயர் இருப்பதை இன்றும் காணலாம், ஆனால் வட தமிழ்நாடு மாவட்டங்களிலுள்ள தீண்டப்படாத மாணவர்கள் பெயர் ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இவர்கள் தீண்டப்படாதவர்களில் பெரும்பான்மையினர் பறை என்ற இசைக்கருவிகளை நல்ல, கெட்ட வைபவங்களுக்கு வாசித்ததால் இவர்களுக்குப் பறையர் என்ற பெயர் கால வழக்கில் வந்ததாக எண்ணுகின்றனர்.
தமிழ் இலக்கியங்களில் போர் முரசு அறிவிப்பவர்களை வள்ளுவரென்றும், பறையரென்றும் அழைத்துள்ளனர். ‘பறைதல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்ற மலையாள வழக்கின்படிப் பார்த்தால், இவர்கள் செய்திகளை அறிவிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. இன்றைய ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் இசைகள் அன்று (இன்றும்) அவர்களால் நிகழ்ந்துள்ளன. நல்லதைக் கெட்டதை சொல்லுவதும், உணர்ச்சி எழுப்ப இனிய கதைப்பாக்கள் பாடுவதும் தொழிலாகக் கொண்ட ஓர் இனமாக இவர்கள் இருந்திருக்க வேண்டும். இறந்தவர்களுக்குப் பறை அறைதலையும் இவர்கள் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
பறையர் என்பவர், இலங்கையிலிருந்து கைது செய்து கொண்டு வரப்பட்ட நாகர்களென்றும், இதைப் போன்று கேரளத்தில் தீயவர்களென்று கருதப்படும் தீண்டப்படாதாரும், இலங்கையிலிருந்து கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்ட நாகர்களே என்றும் கருதப்படுகிறது. தமிழ் ராமாயணம் ஒன்றில் இலங்கை என்ற பகுதி பறையர் வாழும் ஒரு நகர் என்று குறிப்பிடப்படுகிறது.
பறையர்கள் கலப்பில்லாத தமிழ்க் குடியினர், பச்சைத் தமிழர். பறையர் என்ற சொல் சங்ககாலத்தில் தமிழ் இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படவில்லை. பறையர்கள் தங்களைப் பிராமணர்களுக்கு மூத்தவர்களாகக் கூறிக் கொண்டுள்ளதற்கு வழக்கில் ஆதாரம் உள்ளது.
‘பார்ப்பானுக்கு மூப்பான் பறையன் அவன் கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதி ஆனான்’ என்ற பழமொழி ஒன்று தமிழகத்தில் வழக்கில் உள்ளது. பார்ப்பானுக்கும் பறைச்சிக்கும் பிறந்த பிள்ளை நொறைச் சாதி என்றும், பாப்பாத்திக்கும் பறையனுக்கும் பிறந்த குழந்தை தாப்பாள் சாதி என்றும் பெயருண்டு.
அகநானூறு, திருமுருகாற்றுப்படை என்ற சங்ககால இலக்கியங்களில் இவர்கள் முருகனுக்கு ஆட்டை வெட்டிப் பலி கொடுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. பெரிய புராணத்தில் கண்ணப்பர் என்ற ஒரு வேடர் குல சிவனடியார் பன்றியின் இறைச்சியைச் சிவனுக்கு அளித்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கிறது.
இறைவனுக்கு மாமிசத்தை வைத்துப் படைத்து வந்த காலகட்டத்தில் தீண்டப்படாத இனத்தைச் சார்ந்தவர்கள் அர்ச்சர்களாக இருந்து வந்த ஆராதனைகளைச் செய்துள்ளன. மிருகங்களைத் தெய்வங்களுக்குப் பலியிடும் வழக்கத்தைக் கடுமையாகச் சாடிய காலத்தில் பிராமணர்கள் தீண்டப்படாதாரின் இடங்களைப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
பிராமண முறையை எதிர்த்தவர்களும், பிராமண முறையில் இணைந்து இந்துக் கடவுள்களை வணங்க முன்வராதவர்களும் பறையரென்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு பிராமணர்களின் முறையைத் தனியாக நின்று எதிர்த்தவர்கள்தான் தீண்டப்படாதவர்கள். இதனால்தான்.
‘ஆரியர் தமையொப்பா ஆதித்திராவிடரை சேரியில் வைத்தாரடி’ என பாரதிதாசன் தனது சமத்துவப் பாடல்களில் (1929) பாடியுள்ளார். இதேபோல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ஆரியர்களை எதிர்த்த ஆதிதிராவிடர்கள் என்றும், வெஞ்சமர் வீரர் என்றும், தஞ்சம் புகாத் தமிழர் என்றும், தம்மைப் பழிப்பவரிடமும் தளராத அன்பைக் காட்டும் பாங்கர் பறையர் என்றும் ஏற்றிவைத்துப் பேசுகின்றார்.
0