பேசு மனமே பேசு / அத்தியாயம் 15
ஆதி காலத்திலிருந்து, மனிதன் எழுத்துகளை உருவாக்கும்வரையில், உலகம் பேச்சில்தான் இயங்கியது. இன்னமும் கூட, அனைத்து நாடுகளிலும், கல்வியறிவு இல்லாதவர்கள் ஓரளவிற்கேனும் இருக்கின்றனர். சதவிகிதங்கள் மாறுபடுமே தவிர, படிப்பறிவு இல்லாதவர்கள், இல்லாத நாடே கிடையாது. தங்களது வாழ்க்கையை பேச்சின் மூலம், பிறர் கூறக் கேட்பதன் வழியாகவே நன்றாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். எந்த விஷயத்தையும் படித்து, ஆராய்ந்து புரிந்து கொள்வதை விட, யாராவது அதே விஷயத்தை எடுத்துக் கூறினால் மிக எளிதாகப் புரியும். பேசப்படும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இதன் அடிப்படையில்தான், அனைத்து நாடுகளின் கல்வி முறையும் இயங்குகிறது. நாம் மனதார உணர்ந்து சொல்லும், சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள், நம்மை வழிநடத்தும் சக்தி படைத்தவை.
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கிறித்துவ மத போதகர்கள் ஆகியோருக்கு பேச்சின் வலிமை புரிந்திருக்கிறது. எப்படிப் பேசினால், எந்த விதமான உணர்வை ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிந்து வைத்துள்ளனர். இதன் மூலமாக, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றியும் கொள்கிறார்கள். மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போதே, அதேபோல நடந்துகொள்ளத் தோன்றுகிறது. இதையே நாமே நமக்கு சொல்லி, அதைக் கேட்டால், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளுக்குத் தகுந்ததுபோல நடந்து கொள்வதை விட, பல மடங்குகள், நமது பேச்சைக் கேட்டு நடந்து கொள்வோம் அல்லவா? இதைத்தான் தன்னோடு பேசுதலின் மற்றொரு விதம் எனக் கூறலாம்.
நமக்குத் தீர்க்கத் தெரியாத பயம், அச்சங்கள், ஏனென்று தெரியாமல் மனத்தை பாதிக்கும் உணர்வுகள், இவற்றால் ஏற்படும் தலைவலி மற்றும் உடல் உபாதைகள் போன்றவற்றைப் போக்கவும், மன உறுதியோடு முக்கியமான விஷயங்கள் குறித்துத் தீர்மானிக்கவும்கூட தன்னோடு பேசுதல் என்கிற இந்த முறை கண்டிப்பாக நல்ல பயன் தரும்.
இது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் நிரூபணமான ஒரு விஷயம் பற்றி இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இரண்டு வயதில், எல்லா குழந்தைகளுமே மிக அதிகமான அளவில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பலருக்கு முரட்டுத்தனமும் சேர்ந்து இருக்கும். இந்த நிலை 6 வயதுவரைகூட தொடரும். இத்தகைய குழந்தைகள் தங்களுக்கே ஆபத்து வரவழைத்துக் கொள்ளும் அளவுக்கு கண்மூடித்தனமாக செயல்படுவார்கள். இவர்களது ஆபத்தான வேகத்தை மருந்தினால் கட்டுப்படுத்தத் தேவையில்லை என்றாலும், அவர்களது மனத்தைச் சாந்தப்படுத்துவது அவசியம். இதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அவர்கள் தூங்குவதற்குச் செல்லும்போதும், தூங்கி எழும் சமயத்திலும், வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களின் இசையைப் போட்டுவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், குழந்தைகளிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். செய்கைகளில் நிதானம் உருவாகும் என்பது மட்டுமின்றி, புத்திக்கூர்மை, கவனம் ஒருமுகப்படுதல் போன்றவை இயற்கையான முறையில் ஏற்படும். இந்த இசை அனைத்தும் உபகரணங்கள் மூலமாக உண்டாக்கப்படும் முறைப்படுத்தப்பட்ட சப்தங்கள்தாம். நமது பேச்சைப் போலவே.
ஹிட்லரின் முக்கிய தளகர்த்தரும், ஆலோசகருமான கோயபல்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவரை மனித சரித்திரத்தின் மாபெரும் பொய்யன் என்றுகூட சொல்லலாம். அவரது கருத்துப்படி, எந்த விஷயத்தையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், எதையும் உண்மை என்று நம்ப வைக்கலாம். அதேபோல உண்மைகளை பொய்களாக வெற்றிகரமாக சித்தரிக்க முடியும். இதை நடைமுறையில் நடத்திக் காண்பித்து, சரித்திரத்தில் மிகப் பெரிய இனப் படுகொலைக்கும் காரணமாக இருந்தவர். பெரும் பொய்யை உண்மை என்று சாதிப்பவனை, கோயபல்ஸ் போல பொய் சொல்பவன் என்று கூறும் வழக்கம் இன்றும் உள்ளது.
உண்மை, பொய், நல்லது, கெட்டது என்று எதுவாக இருந்தாலும், தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், அல்லது சொல்லிக் கொண்டால் அல்லது சொல்வதைக் கேட்டால் அதை நம்ப ஆரம்பித்து விடுவோம். அதன் பிறகு, நமது செய்கைகள் நமக்குள்ளேயே இருக்கும் இந்தப் பதிவுகளை ஒட்டித்தான் இருக்கும்.
இந்த உண்மையை நமக்குச் சாதகமாக ஏன் பயன்படுத்தக்கூடாது. நமது எதிர்மறை எண்ணங்கள், தோல்விகள் குறித்த பயங்கள், தாழ்வு மனப்பான்மைகள், மற்ற தேவையில்லாத எண்ணங்கள் போன்றவற்றால் வழி நடத்தப்படும் வாழ்க்கை, இவற்றைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும். இவற்றுக்குப் பதிலாக, நம்பிக்கை தரும் வாசகங்கள், வெற்றிகளை வழக்கமாக்கிக் கொள்ளும் தன்மை, திட்டமிடுதல், நேரம் தவறாமை, அமைதி, தைரியம், போன்றவற்றை சிந்தனைப் பதிவுகளாக்க வேண்டும். அவற்றை நிகழ்காலத்தில் நடப்பது போன்ற வகையில் மாற்றி அவற்றை நாமே, நமது சொந்த குரலில் ‘டேப்’ அல்லது நவீன உபகரணங்களான அலைபேசி, ஐ-பாட், போன்றவற்றில் பதிவு செய்ய வேண்டும். இதை நாம் படுப்பதற்கு முன்பும், காலையிலும் திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.
பொதுவாகவே, அதிகாலையில் நாம் கேட்கும் இறை பாடல்கள், ஸ்லோகங்கள், சொற்பொழிவுகள் மற்றும் இனிய இசை ஆகியவற்றுக்கு ஒரு சக்தி இருக்கிறது. காலையில் எழுந்தவுடன், அன்றைய நாளைக் குறித்த அவநம்பிக்கைகள், பயங்கள், எரிச்சல்கள், குழப்பங்கள் ஆகியவை மனத்தில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட பேச்சுக்கள் மற்றும் இசை ஆகியன நிச்சயமாக மனத் தெம்பைக் கொடுக்கும்.
எல்லாம் சரிதான், நானே வாசகங்களை எப்படி உருவாக்குவது, அப்படிச் செய்தால் சரியாக இருக்குமா? என்று தயங்குபவர்களுக்கு ஒரு வார்த்தை. ‘இன்னைக்கு என்ன ஆகப் போகிறதோ?’ ‘இவன் எனக்கு உதவி செய்வான்னு நம்பிக்கையே இல்லை, என்ன செய்யறது, வேற வழியில்லை…’ ‘தினமும் செக்கு மாடு மாதிரி ஒரே வேலை… ச்சே! ஏன்தான் பொழுது விடியுதுன்னு இருக்கு…’ ‘இருக்கிற பிரச்னை போதாது என்று, இது வேற…’ ‘எல்லாம் தலைவிதி…’ என்ற பல வாசகங்களை, நாமே நமக்கு உருவாக்கி அவற்றை திரும்பத் திரும்பச் சொல்லி, அவைகளால் வழி நடத்தப்பட்டுத்தான் உருப்படாமல் போகிறோம்.
அதே சமயத்தில், நம்பிக்கை தரும், வாழ்க்கையை முன்னேற்றும் வாசகங்களை உருவாக்குவதற்கு ‘சிந்தனையாளர்களை’ நம்பியிருக்கிறோம். நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக்கூடிய சாதாரணமான, அனைவருக்கும் தோன்றக்கூடிய இயல்பான வார்த்தைகள் இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவைகளைப் பின்பற்றலாம் அல்லது இந்த அர்த்தங்கள் வருவதுபோன்ற வார்த்தைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.
காலையில் எழுந்தவுடன், கண்ணாடியைப் பார்த்து, ‘குட்மார்னிங்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களது கை பேசியில் அல்லது கேஸட்டில் பின்வரும் வார்த்தைகளை பதிவு செய்துவிட்டு அவற்றை காலையில் கேளுங்கள். அதாவது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கேளுங்கள்.
‘இன்றைய நாள் என்னைப் புன்னகையுடன் இருக்கச் செய்யும். எனது திட்டத்தின்படி, விருப்பத்தின்படி இருக்கிறது. இந்த நாளை நான் நம்பிக்கையுடன் எதிர் நோக்குகிறேன். தினமும் செய்யும் வேலை/பணி ஆதலால், எளிதாக இருக்கிறது. எதையும், யாரையும் நம்பிக்கையுடன் எதிர் நோக்குகிறேன். என்னைவிட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். நானும் முன்னேறுகிறேன். இந்தப் பரிட்சையை/வேலையை/பிரச்னையை நான் நம்பிக்கையுடன் அணுகுகிறேன். இன்றைக்கான திட்டத்தில், மற்றவர்களால், சூழ்நிலைகளால் மாற்றங்கள் ஏற்படுமானால் அவற்றை வரவேற்கும் மனநிலையில் நான் இருக்கிறேன்.’ என்பது போன்ற வாசகங்களைப் பேசி, அவற்றைப் பதிவு செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் உங்களுக்குப் பிடித்த, நீங்கள் நம்பி விரும்பும் பொன்மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக பிரபலமானவர்கள், சுய முன்னேற்ற விஷயங்களைப் பேசி – பதிவு செய்த கேஸட்டுக்களைக் கேட்கும்போது, ‘எல்லாம் சரிதான், இவன் நம்மைப் போல கஷ்டப்பட்டிருப்பானா? பிரச்னைகளை சந்தித்து இருப்பானா? எல்லாம் தயார் செய்து கொண்டு பேசுவது பெரிய விஷயமே இல்லை, வாழ்ந்து பார்த்தால்தானே தெரியும்?’ என்று நீங்கள் எண்ணக்கூடும். அதற்குப் பதிலாக நமது குரலில், நாமே பேசி, அதை நாமே தினமும் கேட்கும்போது, இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.
0