Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

சிமோன் பொலிவார் : லத்தின் அமெரிக்காவின் அடையாளம்

$
0
0

bolivarபுரட்சி / அத்தியாயம் 13

சிமோன் பொலிவாரின் கதையைச் சொல்வதென்பது ஒரு சிறந்த காவியத்தைச் சுருக்கிச் சொல்வதற்கு ஒப்பானது என்கிறார் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய எலிஸபெத் வா. பொலிவாரின் கனவுகள் இரண்டு. ஸ்பெயினின் காலனிகள் விடுவிக்கப்படவேண்டும். லத்தின் அமெரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டும். இந்த இரு கனவுகளையும் அடைவதற்காகவே தன் வாழ்வையும் உயிரையும் அற்பணித்தவர் பொலிவார். மஹோகனி மரங்களும் மகாவ் வகை கிளிகளும் நிறைந்த வண்ணமயமான ஒரு நிலப்பரப்பில்தான் பொலிவார் தன் பயணங்களையும் யுத்தங்களையும் தொடங்கினார். அவருடைய வாழ்வும்கூட அவர் வாழ்ந்து மடிந்த நிலப்பரப்பைப் போலவே வண்ணமயமானதுதான்.

இளவயதில் ஒரு முறை நோய் வாய்ப்பட்டிருந்தபோது அவரைப் பரிசோதிக்க வந்த மருத்துவர், தம்பி நீ பிழைத்துக்கொள்வாய் ஆனால் குதிரைமீது இனி நீ ஏற முடியுமா என்பது சந்தேகம்தான் என்று சொன்னாராம். ஆனால் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமான டான் குவிக்ஸாட் போல் பொலிவார் பல நீண்ட சாகசப் பயணங்களை அதற்குப் பிறகுதான் மேற்கொண்டிருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போதே பிரமிப்பூட்டுகிறது பொலிவாரின் வாழ்க்கை. ஜான் லிஞ்ச் அளிக்கும் ஒரு சுருக்கமான சித்திரம் இது. வெனிசூலா, கொலம்பியா,பனாமா, ஈக்வடார், பெரு, பொலிவியா ஆகிய ஆறு நாடுகளை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவித்திருக்கிறார். தேசிய விடுதலை குறித்து அறிவுபூர்வமான விவாதங்கள் நிகழ்த்தியிருக்கிறார். ஒரு ஜெனரலாக போர்க்களத்தில் பங்கேற்றிருக்கிறார். பல ஸ்பானிஷ் அமெரிக்கர்கள் பொலிவார் தங்களுடைய அரசராக இருக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்கள். பலர் அவரைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். பலர் துரோகி என்று தூற்றியிருக்கிறார்கள்.

பொலிவாரின் பெயரில் இன்று ஒரு நாடும் ஒரு நகரமும் ஒரு கரன்ஸியும் இருக்கிறது. அமெரிக்க நாடுகளில் பொலிவாரின் நூற்றுக்கணக்கான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. ஜனநாயகத்தை நேசிக்கும் வரலாற்றாசிரியர்களுக்கு பொலிவார் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஒரு புரட்சியாளர். சிலருக்கு அவர் ஒரு சர்வாதிகாரி. இன்னும் சிலருக்கு அவர் ஒரு சாகசவாதி மட்டுமே. ஆனால் அவரோடு முரண்படுபவர்கள்கூட தென் அமெரிக்காவின் அடையாளமாக பொலிவார் திகழ்கிறார் என்பதை மறுக்க மாட்டார்கள்.

‘யார் எப்படிச் சொன்னாலும் தென் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றை பொலிவாரை ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கமுடியாது. பொலிவார் இல்லாமல் ஒரு முழுமை கிடைக்காது. தென் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியிலும், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் பொலிவார் பங்கேற்றிருக்கிறார்.’ பொலிவாரை மதிப்பிடுவது அல்ல, புரிந்துகொள்வதேகூட அத்தனை சுலபமானதல்ல என்பதை ஜான் லிஞ்சின் இந்த வரிகள் நமக்கு உணர்த்தும். ‘அவர் லிபரலிசத்தை வெறுத்த ஒரு விடுதலைப் போராளி. ராணுவமயமாக்கல் அவசியம் என்று கருதாத ஒரு போர் வீரன். முடியாட்சியை விரும்பிய ஒரு குடியரசுவாதி.’

அமெரிகோ (முழுப்பெயர், Amerigo Vesupucci) என்னும் இத்தாலியப் பயணி 1499ல் கடல் பயணம் மேற்கொண்டபோது ஒரு புதிய இடத்தைக் கண்டடைந்தார். அவர் பார்த்த இடம் ஒரு சிறிய வெனீஸ் நகரம் போல் காட்சியளித்ததால் அதற்கு Veneziola என்று பெயரிட்டார். ஸ்பானிஷ் மொழியின் தாக்கத்தால் பிற்காலத்தில் இது வெனிசூலா என்றானது. அமெரிக்காவுக்கு அந்தப் பெயரை அளித்தவரும்கூட அமெரிகோதான் என்று சொல்லப்படுவதுண்டு. பலரும் கருதுவது போல் தான் கண்டடைந்த இடம் ஆசியாவின் ஒரு பகுதி அல்ல, அது ஓர் புதிய உலகம் என்று கருதிய அமெரிகோ தன் பெயரை அந்த இடத்துக்கு அளித்தாராம். அமெரிகோ எழுதிய கடிதங்களும் அவற்றில் அவர் விவரித்த காட்சிகளும் வாசிப்பவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தபோதிலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்கு உட்பட்டது. எது எப்படியோ, தன் பெயரையும் அமெரிக்காவின் பெயரையும் வெனிசூலாவின் பெயரையும் இந்த இத்தாலியப் பயணி பிரபலப்படுத்தினார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

வெனிசூலாவுக்குப் பெயரிட்ட அமெரிகோ அல்ல வெனிசூலாவை விடுவித்த பொலிவாரே இன்று மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறார். வெனிசூலா, காரகாஸில் 24 ஜூலை 1783 அன்று சிமோன் பொலிவார் பிறந்தார். அவருடைய மூதாதையர்கள் அனைவரும் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள். வசதியான பணக்காரக் குடும்பம். காரகாஸில் (வெனிசூலா) அவர்களுக்கு சுரங்கங்கள், தோட்டங்கள், வீடுகள் இருந்தன. வேலை செய்ய அடிமைகள் இருந்தனர். இரண்டரை வயதாகும்போது பொலிவாரின் தந்தை மரணடைந்தார். தாயாரும் சீக்கிரமே இறந்துவிட்டதால் பொலிவாரை உறவினர்களே கவனித்துக்கொண்டனர்.

பொலிவாரின் குடும்பத்தினர் கிரியோல்கள் (Creoles) என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள். 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஸ்பெயினின் காலனி நாடுகளில் (கரீபியன் தீவுகள் தொடங்கி பசிபிக் பெருங்கடல் வரை காலனிகள் பரவியிருந்தன) இந்தக் கிரியோல்கள் செழுமையானவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவும் இருந்தனர். கிரியேல்களின் மூதாதையர் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிற்காலத்தில் ஸ்பெயினின் காலனி நாடுகளில் குடியேறி ஒன்று கலந்தவர்கள். இவர்களுடைய நேரடிப் போட்டியாளர்கள் மெஸ்டிசோக்கள் (Mestizos. ஐரேப்பியர்கள் மற்றும் பூர்வகுடி அமெரிக்கர்களின் வழித்தோன்றல்கள் இவர்கள். அதே போல், ஆப்பரிக்க ஐரோப்பியக் கலப்பினத்தவர்கள் முலாட்டோக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஸ்பெயினின் ஆதிக்கம் லத்தின் அமெரிக்க நாடுகளில் நிலவிய காலத்தில் இத்தகைய பதங்கள் புழக்கத்தில் இருந்தன. ஸ்பெயின் ‘இனத்தூய்மை’ பற்றி அதிகம் கவலைகொண்ட ஒரு நாடு. யார் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும், அதற்குப் பிறகு யார், அவர்களுக்குக் கீழே யார் என்று ஒரு படிநிலை சமுதாயத்தைக் கட்டமைப்பதில் விருப்பம் கொண்டிருந்த நாடும்கூட. யூதர்கள், ஜிப்ஸிகள்,பழங்குடிகள் போன்றோர் கீழானவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்பெயினைவிட்டு வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

இதே வழக்கத்தை ஸ்பெயின் தன் காலனி நாடுகளிலும் கடைபிடித்தது. தன் அதிகாரத்துக்கு உட்படும் ஒரு காலனி நாடு, தன்னைப் போலவே இருக்கவேண்டும் என்பது ஸ்பெயினின் விருப்பம். எனவே, சமுதாயப் படிநிலை வரிசையை காலனி நாடுகளுக்கும் அது புகுத்தியது. வெனிசூலா அதற்கு விதிவிலக்கல்ல. அதிகாரத்தைப் பொருத்தவரை முதலிடம், ஜெனரலுக்கு. இந்த ஜெனரல் ஸ்பெயின் அரசரால் நியமிக்கப்படுவார். இவரும் இவருக்கு நெருக்கமானவர்களும் சுத்தமான ஸ்பானியர்கள் என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. இரண்டாவது இடத்தில் கிரியோல்கள். கிரியோல்களின் பூர்விகமும் ஸ்பெயின்தான் என்றாலும் ஸ்பெயினில் பிறந்து வளர்ந்த அசல் ஸ்பானியர்களைப் போல் (இவர்கள் பெனின்சுலார்கள் என்று அழைக்கப்பட்டனர்) சுத்தமான உயர் குடியினர் அல்லர் என்பதால் அவர்களுக்கு அடுத்த இரண்டாமிடமே கிடைத்தது.

அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் இந்த இரு பிரிவினருக்கும் இடையில் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது.போட்டி இத்தோடு முடிவடையவில்லை. மெஸ்டிசோக்களும் கிரியோல்களுடன் இடையிலும்கூட போட்டி நிலவியது. ஆக கிரியோல்களைப் பொருத்தவரை மேலே ஒரு பிரிவு, கீழே ஒரு பிரிவு. இடையில் அவர்கள் சிக்கியிருந்தனர். ஸ்பெயின் நம்மை அங்கீகரிக்கவில்லையே என்னும் கோபமும் வெறுப்பும் கிரியோல்களுக்கு இடையே வளர்ந்துகொண்டே இருந்தது.

இன்னொரு பக்கம் வெனிசூலாவில் உள்ள வணிகர்களும் ஸ்பெயினால் பாதிக்கப்பட்டனர். தனது காலனிகளில் உருவாகும் காபி, கோகோ, ஆடைகள், வைன், கனிமங்கள் என்று அனைத்தும் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று ஸ்பெயின் விரும்பியது. நம்மை மீறி இன்னொரு நாட்டுடன் வெனிசூலா எந்தவிதமான வணிகத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்தது ஸ்பெயின். வெனிசூலா வணிகர்ள சட்டத்தைமீறி பிரிட்டன், அமெரிக்க வணிகர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டனர். இதனால் வேறு வழியின்றி ஸ்பெயின் சற்று விட்டுக்கொடுக்கவேண்டியிருந்தது. இருந்தும் வணிகர்களின் கசப்புணர்வு மறையவில்லை.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சியில் வட அமெரிக்காவின் பதின்மூன்று மாகாணங்களும் ஒன்றிணைந்து போரிட்டு பிரிட்டனின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டன. லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு இது ஒரு புதிய துணிச்சலைக் கொடுத்தது. பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து வட அமெரிக்கா விடுபடுவது சாத்தியம் என்றால் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து வெனிசூலாவும் பிற லத்தின் அமெரிக்க நாடுகளும்கூட வெளியேறுவது சாத்தியம்தான் இல்லையா?

1788ம் ஆண்டு ஸ்பெயின் அரசர் மூன்றாம் சார்லஸ் (இவர் திறமையானவர் என்று கருதப்பட்டார்) இறந்துபோனார். அவர் இடத்துக்கு நான்காம் சார்லஸ் வந்து சேர்ந்தார். வேட்டை, பொழுதுபோக்கு என்று நேரம் செலவழித்த நான்காம் சார்லஸுக்கு சாம்ராஜ்ஜியத்தை ஆளும் அக்கறையும் ஆர்வமும் இல்லை. ஒரு கட்டத்தில் நெப்போலியனின் பிரான்ஸுடன் இணைந்துகொண்ட ஸ்பெயின் பிரிட்டனுக்கு எதிராகப் போரிட ஆரம்பித்தது. அரசரோ பலவீனமானவர். ராணுவமோ வேறு இடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தது. இந்நிலையில் கிரியோல்கள் முன்பைவிட அதிகம் சோர்வடைந்தனர்.

1805ம் ஆண்டு ட்ரஃபால்கர் யுத்தத்தில் ஸ்பெயினும் பிரான்ஸும் முறியடிக்கப்பட்டன. ஸ்பெயினின் பிடி தளரத் தொடங்கியது. மூன்று ஆண்டுகள் கழித்து அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் பகுதியை பிரிட்டன் தாக்கியபோது அதைக் காப்பாற்றக்கூட ஸ்பெயினால் முடியாமல் போனது. ஸ்பெயினின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த இதுவே சரியான தருணம் என்னும் முடிவுக்கு கிரியோல்கள் வந்து சேர்ந்தனர்.

266-11இந்தப் பரபரப்பான சூழலில் பொலிவார் வெனிசூலாவில் இல்லை. 1804 முதல் 1807 வரை ஐரோப்பாவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.  காரகாஸில் நல்ல பள்ளிகளில் அவருக்குக் கல்வி போதிக்கப்பட்டிருந்தது. பின்னர் ராணுவ அகாடெமியில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைத்தது. (அவருடைய தந்தை இங்கே ஒரு கர்னலாகப் பணியாற்றியிருந்தார்.) போர்முறைகள் குறித்தும் ஆயுதப் பிரயோகங்கள் குறித்தும் பொலிவார் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். ஆயுதங்கள்மீது இருந்த ஆர்வம் அரசியலில் இல்லை.

வெனிசூலாவில் நிலவி வந்த சமூகப் பிரிவினைகள் பற்றி பொலிவாருக்கு தெரிந்திருந்தது. கிரியோல்களிடையே பரவியிருந்த வெறுப்புணர்வு பற்றியும் தெரிந்திருந்தது. ஆனால் வெனிசூலா கொந்தளிப்பான கட்டங்களுக்கு அடுத்தடுத்துச் சென்றுகொண்டிருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு பணக்கார கிரியோலாக, செல்வந்தர் வீட்டு மகனாக அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சமயம் அது. சுற்றுப் பயணங்களை எல்லாம் முடித்துக்கொண்டு 1807ல் வெனிசூலா திரும்பியபோது பொலிவார் திகைத்துப்போனார்.

(அடுத்த பகுதி – பொலிவார் : விடுதலை வீரன்) 

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!