ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 22
இன்றைய சூழலில், பன்னாட்டு நிறுவனங்களும் சரி, நம் நாட்டு பெரிய நிறுவனங்களும் சரி, கிடைக்கும் லாபத்தை சமூக சேவைக்காகச் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். இது உள்ளன்போடு செய்யப்படும் செயலா அல்லது கண்துடைப்பா என்பது அந்தந்த நிறுவனத்தை நடத்தும் இயக்குனர்களைப் பொறுத்தது. எனினும் சமூக அக்கறையோடு கூடிய தொழில் நிறுவனங்களாகவும் அதனை நடத்தும் தொழிலதிபர்களாகவும் அவர்கள் மாறக்கூடும். அல்லது அவ்வாறு மாற விரும்புபவர்களுக்கான உந்துசக்தியாகத் திகழமுடியும்.
சமூகத் தொழில்முனைவோர் என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் களைவதற்கு அல்லது மாற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கு தம்மால் இயன்றதைச் செய்ய முயற்சி செய்பவர்கள் இவர்கள்.
ஒரு தொழிலதிபர் எப்படி ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு நிறுவனத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே போல் சமூகத் தொழிலதிபர்களும், ஒரு சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டு, அதற்கான தீர்வுகளை முறையாக ஏற்படுத்தி, அதையொரு தொழில் போல் நடைமுறைப்படுத்தி வெற்றி காண்கின்றனர். இதற்கு நம் நாட்டில் வினோபா பாவே அவர்களை ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ள முடியும். பூமி தானத் திட்டத்தை உருவாக்கி சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை நிலமில்லாத ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்கி, சமுதாயத் தொழிலதிபர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார். இதைப்போல் பல உதாரணங்களை நாம் கொள்ள முடியும். எனவே, சமூகத் தொழிலதிபர்களாக மாறுவதற்கு ஆண்களும் பெண்களும் முன்வர வேண்டும்.
இன்று அரசாங்கமும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களும் சமூக அக்கறையுள்ள இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளனர். இத்தொழிலில் இறங்க விரும்புவோர், முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், மூலதனம். அதாவது, நாணயம், நம்பிக்கை, நேர்மை.
இவற்றை அடிப்படையாக அல்லது வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொண்டவர்கள், இந்தத் தொழிலுக்கு வரமுடியும். தாங்கள் வாழும் சமூகத்தில் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்னைகள், தேவைகள் போன்றவற்றை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டும். அடுத்து அத்தகைய பிரச்னைகளுக்கு அரசாங்கமோ அல்லது மற்ற இயக்கங்களோ என்ன செய்ய முன்வந்துள்ளது என்பதையும் நன்கு கவனிக்க வேண்டும். பின்பு அவற்றிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு புதிய வழிவகைகளைத் திட்டமிட வேண்டும். இதைப்போல் செய்தால் அப்பகுதி மக்களின் கவனத்தையும் பெரும் திட்டங்களிலுள்ள நிறுவனத்தின் கவனத்தையும் ஒருசேர ஈர்க்க முடியும்.
இந்நிலையில், சுயதொழில் செய்ய நினைப்பவர்கள், ஒவ்வொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைத் திட்டவரைவாகத் தயார் செய்து இத்தகைய நிறுவனங்களை அணுகும்போது, அது ஒரு நல்ல சுயவேலை வாய்ப்பாக அமையும்.
இத்தகைய சுயத்தொழில் செய்ய நினைப்பவர்கள், நிர்வாகத்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக எளிமையாக அனைவருடனும் பழகவேண்டும். கிராம மற்றும் நகர்ப்புற அரசாங்க அதிகாரிகளோடு இணக்கமான முறையில் பேசி, வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ளும் திறன் வேண்டும். பொறுமையும், ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்களை அவிழ்க்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மக்களின் மாறுபட்ட மனோபாவங்களை அறிந்து கொள்ளும் திறமையுள்ளவர்களாக இருக்கவேண்டும். அரசியல் தலையீடு இருந்தால், அதனால் வரக்கூடிய பிரச்னைகளையும் கையாளத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இத்திறமைகள் அனைத்தும் உள்ள நபர்களுக்கு சமுதாய தொழில் முனைவோராக ஆகும் வாய்ப்பு மிக அதிகம்.
ஒவ்வொரு திட்டத்தையும் (ப்ராஜெக்ட்) நடைமுறைப்படுத்துவதற்கு, இயக்குநர் பொறுப்பில் தனி நபர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஒரு தொழிலதிபருக்குரிய அத்தனை சுதந்தரத்தையும் பெற்று, அதே சமயம் அதற்குரிய வருமானத்தையும் ஈட்டலாம்.
இன்றளவும், திறமையான சில தொழிலதிபர்கள் இரண்டு அல்லது மூன்று திட்டங்களைக் கையாண்டு நல்ல பணம் சம்பாதிக்கின்றனர். எனவே சமூக நலனுள்ள தொழில்முனைவோருக்கு, பணத்தோடுகூடிய, அதே சமயத்தில் மனத்திருப்தியும் அளிக்கக்கூடிய தொழிலாக இது அமையும். இன்று பல அரசாங்கங்களும் உலகளவில் இத்தகைய சமுதாய தொழிலதிபர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில நேரங்களில் அரசாங்கம் இத்தகைய தொழிலதிபர்களுக்காக தனி அலுவலகம் அமைத்துக் கொடுத்து, பணியில் உதவி செய்வதற்கு ஆட்களையும் கொடுக்கும். இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு, அவர்கள் வாழும் இடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. குடும்ப நலத்திட்டம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, முதியோர் கல்வி திட்டம், சுயவேலை வாய்ப்புத் திட்டம் ஆகிய பல திட்டங்களும் இத்தகைய சமுதாய தொழிலதிபர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. நேர்மையானவர்கள் இத்துறைக்கு வரவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டால் நாடு வளம் பெறும் .
ரிப்பன் கபூர் தன் ஆறு நண்பர்களோடு சேர்ந்து ரூ. 500/- முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் இகீஙு. இந்தத் தொழிலதிபருக்கு எதிர்காலத்தை நன்கு கணிக்கும் ஒரு வியாபார திறமை இருந்தது. அதனால்தான் இந்தியாவின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் மிக நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்தியாவில் உருவான பல சமூக நிறுவனங்களைவிட இது மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டது. பல நல்ல உள்ளங்களின் ஆதரவைப் பெற்று மிகச் சிறப்பாக நடக்கிறது. மேற்படி இயக்குநரின் தீர்க்கதரிசனமே இதற்குக் காரணமாகும்.
முதலில் அவர்கள் வாழ்த்து அட்டைகளை, வீடு வீடாகச் சென்று, விற்று, நிதி திரட்டினர். பின்னர் பெரிய அலுவலகங்களை அணுகி, தங்களுடைய சமூக அக்கறையை எடுத்துரைத்து தங்கள் பணியை விரிவுப்படுத்தினர். கடந்த வருடம்வரை அதன் ஒரு நிறுவனராக இருந்த Ingrid Srimathi என்ற பெண்மணியின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்து அட்டைகளிலிருந்து இந்த நிறுவனம், பல பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து, பலவிதமான பொருட்களை விற்று வருகின்றனர். கைக் கடிகாரங்கள், கைப்பைகள் போன்றவை மிகவும் பிரபலமானவை. டைட்டன், பி அண்ட் ஜி, சிட்டி கார்ப்பரேஷன் ஆகிய பெரும் நிறுவனங்கள் க்ரைக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன.
0