Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

சூத்திரர்களும் தலித்களும்

$
0
0

220px-Young_Ambedkarமறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 22

கடந்த காலத்தில் வயலும் வயல் சார்ந்த பகுதியில் மட்டும்தான் சாதி ஆதிக்கம் மிகுதியாக இருந்திருக்கிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகள், மலையும் மலை சார்ந்த பகுதிகள், காடும் காடு சார்ந்த பகுதிகள் ஆகியவை சாதி அமைப்பின் பிரதான ஆதிக்க சக்திகளான பிராமணர்கள், மன்னர்கள், வைசியர்களின் ஆதிக்கத்தில் இருந்து விலகி நின்ற பகுதிகளாகவே இருந்திருக்கின்றன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் சாதி அமைப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தலித்களுக்கு ஒருவகையில் நேச சக்திகளே. நாடோடிகள் என்ற பிரிவினரும் அவர்களுக்கு நண்பர்களே. சாதி அமைப்பு கொடூரமானதாக இருந்திருந்தால் தங்களுடைய விடுதலையை இந்த நேச சக்திகளுடன் இணைந்து தாழ்த்தப்பட்டவர்கள் எளிதில் வென்றெடுத்திருப்பார்கள். புறமண முறை, சமபந்தி போஜனம், வேலைகளைப் பிறப்பின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்ளாமல் இருப்பது என பல வழிகளில் தலித்களும் அவர்களுடைய நேச சக்திகளும் கடந்த காலத்தில் வளமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.

கடந்த 200 ஆண்டுகளாக சாதி விடுதலையை முன்னெடுத்து வரும் போராளிகள்கூட மேல் சாதிகளைப் பகைத்துக்கொண்டு சமத்துவச் செயல்பாடுகளை முன்னெடுத்ததற்கு பதிலாக, முதல் கட்டமாக தங்களுக்குக் கீழான அல்லது இணையான மக்களுடன் வலுவான கூட்டமைப்பை உருவாக்கியிருந்தால் அவர்களால் வெகு எளிதில் மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்க முடியும். அது நிச்சயமாக மேல் சாதியினரையும் கொஞ்சம் கலங்க வைத்திருக்கும். எதிரி பலசாலியாக இருந்தால் சமரசத் தீர்வுகளை நோக்கி நகர்வதுதான் மனித இயல்பு. அப்படியான ஒரு கூட்டிணைவு உருவாகவில்லை. இவையெல்லாம் சாதி அமைப்பில் கடந்த காலத்தில் தலித்களுக்கான வாழும் வெளி இருந்திருக்கிறது என்பதையும் மேல் சாதியினருடனான போராட்டமாக முன்னெடுத்த சாதிய விடுதலை முயற்சிகள் பெரும் பின்னடைவையே உருவாக்கியிருக்கிறது என்பதையும்தான் காட்டுகின்றன (அல்லது அதிகம் இழந்து கொஞ்சம் பெற்றிருக்கும் நிலை).

துரதிஷ்டவசமாக அம்பேத்கர், பெரியார் என இந்தியாவில் உருவான இரண்டு பெரும் சாதி எதிர்ப்புப் போராளிகளும் சாதி அமைப்பைப் பற்றிய முழுமையான, சுயமான சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. பிரித்தாளுதல் என்ற பிரிட்டிஷாரின் செயல்திட்டத்தைத் தங்கள் புரிதலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்து மதத்தை அழிக்க வேண்டிய ஒன்றாக மட்டுமே பார்த்தார்கள். காலத்துக்கு ஏற்ப சீர்திருத்த வேண்டும் என்றோ முடியும் என்றோ நினைத்திருக்கவே இல்லை. அம்பேத்கர் தமது சாதியினரைத் தனியாகவும் மேல் சாதியினரைச் சாதி இந்து என்றும் மனதுக்குள் தெளிவாகப் பிரித்துவைத்துக் கொண்ட பிறகுதான் சாதி தொடர்பான தனது ஆய்வுகளையே ஆரம்பிக்கிறார்.

ஒரு தலித் ஏன் இந்து அல்ல என்பதற்கு பிராமண மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாதது, மாட்டுக்கறி சாப்பிட்டது என வலிந்து பல காரணங்களை உருவாக்குகிறார். தாய்த் தெய்வ வழிபாட்டை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான அம்மன்களை வழிபடுதல், புற்று, மரங்கள் என இயற்கை வழிபாட்டில் ஈடுபடுதல், முன்னோர் நினைவாக வழிபாடுகள் செய்தல் என இந்து சமய வழிபாடுகளின் ஆதார அமசங்களைக் கொண்ட தலித்கள் இந்துக்கள் அல்ல என்று புது கோட்பாட்டை முன்வைக்கிறார். தீண்டப்படாதவர் என்று அவர் இழுத்துக் கட்டி உருவாக்குபவர்களுக்குள்ளும் எத்தனையோ உள் முரண்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் புறமொதுக்கிவிடுகிறார்.

தீண்டாமையை மிகப் பெரிய அடையாளமாக முன்வைக்கிறார். ஆனால், உண்மையில் அந்தத் தீண்டாமை இந்துக்களின் ஒட்டுமொத்த சாதிகளிலும் உப ஜாதிகளிலும் இருந்த ஒன்றுதான். அளவும் வெளிப்படும்விதமும்தான் கொஞ்சம் மாறுபட்டதாக இருக்குமே தவிர அது தலித் என்ற பிரிவினர் மீதுமட்டுமே குவிந்த ஒன்று அல்ல. ஒரு விஷயம் ஒரு பிரிவினருக்கு மட்டுமே எதிராக இருக்கும்போதுதான் அதை அவர்கள் மீதான ஒடுக்குமுறையாகச் சொல்லமுடியும். அனைத்துப் பிரிவுகளிலும் இருக்கும் என்றால் அதை வேறு கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.

இந்து என்றால் யார் என்ற கேள்விக்கு மிக எளிய பதில் சாதி உணர்வு உடையவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்பதுதான். இந்த சாதி உணர்வானது மேல் சாதியினர் மட்டுமல்ல. கீழ் சாதியினரிடமும்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அவர்களிடம்தான் அதிகமாக இருக்கிறது. உண்மையில் சாதிய மனோபாவம் என்பது பழங்குடி வேர்களில் இருந்து முளைத்து எழுந்த ஒன்று. அந்த வகையில் தலித்கள்தான் உண்மையான இந்துக்கள் என்று சொல்லவேண்டும். ஆதி இந்து என்று அவர்களைத்தான் சொல்லமுடியும். அம்பேத்கரோ வெகு எளிதாக அவர்களை இந்து அல்ல என்று பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றும் கருவியாக தன்னை வடிவமைத்துக்கொள்கிறார்.

மனு தர்ம சாஸ்திரத்தில் நான்கு வர்ணங்கள்தான் உண்டு. ஐந்தாவதாக எதுவும் இல்லை என்று சொல்வதை விசித்திரமாக விளக்குகிறார். அதாவது, ஐந்தாவது வர்ணத்தாரை மனிதர்களாகவே மதிக்கவில்லை. எனவே, அவர்களை நால் வருணத்துக்குள் இடம்பெற வைக்கவில்லை என்று சொல்கிறார். துவிஜர்களான முதல் மூவர்ணத்தினருக்கு சேவை செய்பவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் சொல்லப்பட்டிருக்கையில் தனியாக ஒரு பிரிவை தனது அரசியல் சார்ந்து உருவாக்கிக் கொள்கிறார். இடைநிலை சாதி – கடைநிலை சாதி மோதல் என்பது இயல்பானதல்ல. திராவிட ஆரிய பிரிவினையைப் போல் பொய்யான கோட்பாடாக முதலில் உருவாக்கப்பட்டு அதை நியாயப்படுத்தும் வகையிலான சம்பவங்கள் உருவாக்கி எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆரிய திராவிட பிரிவினை விஷயத்தில் அம்பேத்கர் உண்மைத்தரவுகளை அலசி ஆராய்ந்து ஆரியப் படையெடுப்பு என்பது முற்றிலும் பிழையான வாதம் என்ற முடிவையே அடைந்திருக்கிறார். அந்தவகையில் ஐரோப்பியர் விரித்த அந்த வலையில் அவர் சிக்கவில்லை. ஆனால், சாதி விஷயத்தில் மாட்டிக்கொண்டுவிட்டார். சுருக்கமாகச் சொல்வதானால், சூத்திர தலித் இடைவெளியானது கடந்த 200 ஆண்டுகளில் சமத்துவத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்த முயன்றதால் உருவானது.

உண்மையில், பழங்குடி சமூகத்தின் அடுத்த படியான நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையானது ஆரம்பகட்ட மோதல்களுக்குப் பிறகு ஒரு சுமுகமான நிலையை எட்டிவிட்டிருந்தது. சாதிப் படிநிலை சார்ந்த இந்து பண்பாடு, கலாசாரம், மதிப்பீடுகள் என எல்லாம் உருவாகி நிலைபெற்றிருந்தது. படிநிலை அடுக்கில் தனக்கு மேலே இருப்பவர்கள் மீது ஆத்மார்த்தமான விசுவாசமும் மரியாதையும் இருந்துவந்திருந்தது. இந்த அமைப்பில் மேல், கீழ் என இருபிரிவினரும் தமக்கான வெளிகளை உருவாக்கிக் கொண்டு வாழ ஆரம்பித்திருந்தனர். சமத்துவம் இல்லாதபோதிலும் சந்தோஷம் இருக்கத்தான் செய்தது.

எந்தவித அரசியல் சூத்திரங்களுக்கும் பொழிப்புரை எழுதாமல் கிராமப்புற சாதிய வாழ்க்கையை அதன் இயல்புத்தன்மையோடு எழுதியவர்களின் படைப்புகளில் இந்த உண்மையை ஒருவர் புரிந்துகொள்ளமுடியும். அப்படியாக, பரஸ்பர புரிதலுடன் அந்த வாழ்க்கை பல நூறு ஆண்டுகள் வாழப்பட்டிருக்கிறது. இன்றைய சமத்துவ மதிப்பீடுகளுக்கு உகந்ததாக அது இல்லாமல் இருக்கலாம். அது நம்முடைய பிரச்னைதான்.

தொழில் புரட்சியை ஒட்டி முதலாளித்துவ சமூகம் உருவானது. மேற்கத்திய நாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருந்தது. அதோடு இயற்கையைச் சூறையாடும் திறமை நவீன விஞ்ஞானத்தால் வெகுவாக அதிகரித்துவிட்டதால் புதிய சமூக உருவாக்கம் என்பது அங்கு எந்தவிதப் பெரிய உராய்வும் இல்லாமல் உருவாகிவிட்டது. நூறு ஏக்கர் நிலமும் பத்து அடிமைகளையும் வைத்திருந்த ஒரு வெள்ளை நிலப்பிரபுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தைச் சுரண்ட வழிபிறந்ததால் பத்து அடிமைகளை சுதந்தரமானவர்களாக ஆக்க அவருக்கு எளிதில் முடிந்தது. இதனால், மேற்குலகில் இருந்த வர்க்க ஏற்றத் தாழ்வு காலப்போக்கில் குறைந்தது. “சமத்துவ’ சமுதாயம் மலர்ந்தது. நேர்மாறாக, இந்தியாவில் மக்கள் தொகை அதிகம்.

இயற்கை வளங்களோ குறைவு. அதை பயன்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பத்திறமையும் குறைவு. எனவே, நேற்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் சமன்பாடுகளை நவீன முதலாளித்துவ சமுதாயத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பதில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டது. “சமத்துவம்’ எளிதில் சாத்தியமாகியிருக்கவில்லை. போதுமான வளங்கள் இல்லாததுதான் பிரச்னையே தவிர மையம் அழிக்கப்பட்ட சாதிய வாழ்க்கை இன்றைய இந்தியப் பின்னடைவுக்குக் காரணமல்ல.

உண்மையில் யார் யாருடைய நலன்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனவோ அவர்கள்தான் சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். அதுகூட மேலோட்டமானதுதான் என்பது வேறு விஷயம். ஆனால், பிறருக்கு கிடைப்பதை வன்முறை வழியில் தட்டிப் பறிக்க அவர்கள் முயற்சி செய்யாதவர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய தேவைகளும் ஆசைகளும் எளிதில் நிறைவேறுகின்றன என்பதால்தான். எனவே, அப்படியான வசதி வாய்ப்புகள் இல்லாத ஒருவர் சமத்துவத்தை ஏற்க மறுக்கும்போது அவரை கொடூரமானவராக முத்திரை குத்துவதற்குப் பதிலாக அவருக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கித் தருவதுதான் தீர்வாக இருக்க முடியும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்கள் அடிப்படையில் கெட்ட குணங்களும் கொண்டவர்கள்தானே.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மேல் சாதியினரின் சம்மதத்துடன் கீழ் சாதியினரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்து சமூகத்தை மறுமலர்ச்சி அடைய வைத்ததாக ஆகியிருக்கும். இந்து சமயம் தன்னை புதுப்பித்துக் கொள்வது அம்பேத்கருக்கும் அவரைப் பின்னின்று இயக்கிய பிரிட்டிஷாருக்கும் நோக்கமாக இருந்திருக்கவில்லை. அம்பேத்கர் வெகு எளிதாக மேல் சாதியினர் அனைவரையும் சாதி இந்து என்ற சிமிழுக்குள் அடைத்துவிடுகிறார். அதாவது பிராமணர்களும் பிராமண மதிப்பீடுகளைக் கொண்ட இடைநிலை சாதியினரும் அனைவருமே தலித்களுக்கு எதிரானவர்கள் என்று அடையாளப்படுத்திவிடுகிறார்.

தமிழகத்தில் பெரியாரோ இன்னொருபடி மேலாகப் போய், பிராமணர்களை மட்டும் தனிமைப்படுத்தினார். விஷயம் மிகவும் எளியது. பெரியார் இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பிராமணர்களை மட்டும் எதிரியாகக் கட்டமைத்தார். அம்பேத்கர் தலித் என்பதால் தலித் அல்லாத மேல் சாதியினரை ஒரே சிமிழில் அடைத்தார். ஒருவேளை தலித்துக்குக் கீழான சாதியில் இருந்து வேறொரு போராளித் தலைவர் தோன்றியிருந்தால் அவர் தலித்களையும் சாதி இந்துவாக முத்திரை குத்திவிட்டிருப்பார். இடுப்பைத் தலை அழுத்துவதாகச் சொன்னால், காலை இடுப்பு அழுத்துவதாகவும் ஒருவர் சொல்லலாம்தானே. இன்னும் கூட பாதம், கால் தன்னை மிதிப்பதாகக் கூடச் சொல்லலாம். ஓருடம்பின் உறுப்புகளில் ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு நம் இன்றைய நிலையே நல்ல எடுத்துக்காட்டு.

அம்பேத்கர் தீண்டப்படாதவர்களும் இந்துக்களும் என்ற தலைப்பில் ஏராளமாக எழுதியிருக்கிறார். தலித்கள் சாதி இந்துக்களுக்கு சமமாக உயர நினைத்தபோது என்னெவெல்லாம் வழிகளில் அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என பல்வேறு பத்திரிகைகளில் வெளியான ஆதாரங்களின் அடிப்படையில் தன்னுடைய தரப்பை முன்வைத்திருக்கிறார்.
பிரிட்டிஷாரின் காலகட்டத்தில் சமத்துவத்தை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றதால் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் எல்லாமே அம்பேத்கருக்குத் தன்னுடைய கோட்பாட்டை நிறுவிக்கொள்வதற்குக் கிடைத்த சமகால ஆதாரங்களாக ஆகின. உண்மையில் அந்த நிகழ்வுகளில் இருந்து அவர் தன் கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. கோட்பாட்டை உருவாக்கி விட்டு அதன் பிறகு ஆதாரங்களைக் கோக்கத் தொடங்கினார்.
தலித்களுக்கும் அவர்களுக்குக் கீழே இருந்த சாதியினருக்கும் இடையிலான சமத்துவத்தை முன்வைத்து ஒரு போராட்டம் கூட அவரால் முன்னெடுக்கப்பட்டிருக்கவிலை. தலித்களின் கோயில்களுக்குள் நாடோடிகளை அனுமதித்ததாகவோ தலித்களில் கீழ் நிலையில் இருப்பவர்களுடன் பிற தலித்கள் சமபந்தி உணவு உண்டதாகவோ எந்த செயல்பாடும் அவரால் பெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேல் சாதியினருடன் வலுக்கட்டாயமாக சமத்துவத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் மேல்சாதியினரை வன்முறையை நோக்கித் தள்ளியதில் மட்டுமே முடிந்திருக்கிறது.
சமத்துவத்தை சட்டத்தின் மூலமாக வலுக்கட்டாயமாக அமல்படுத்த முயன்றதற்கு முன்பாக மேல் சாதியினரின் மத்தியில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கத் தேவையான விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை ஓரிரு தலைமுறைகள் வலுவாக முன்னெடுத்திருக்கவேண்டும். எதனால், உங்களை மேலானவர்கள் என்று சொல்கிறீர்கள்? சம வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் தரப்பட்டால் கீழ்சாதி என்று நீங்கள் சொல்பவர்களும் உங்களுக்கு நிகராக, ஏன் உங்களைவிட மேலாக செயல்பட முடிந்தவர்கள்தான். எனவே, வீரமாக, நேர்மையான போட்டிக்குத் தயாராகுங்கள் என்று அவர்களை நிதானமாக ஆற்றுப்படுத்தியிருக்கவேண்டும். உரிமைகளை ஒவ்வொன்றாக, வென்றெடுத்திருக்கவேண்டும்.

சூத்திரர்களில் ஒரு பிரிவினரை அதாவது படிநிலையில் கொஞ்சம் கீழே இருப்பவர்களை இன்னொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்தியதன் மூலம் சாதி உறவுகள் சிக்கலாக்கத்தான் பட்டிருக்கின்றன (ஒருவேளை எதிர்மறை உதாரணங்களை மட்டுமே பார்ப்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ).

சாதி விடுதலைப் போராட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ பிரிட்டிஷாரின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றவர்களுக்கு மாற்றாக இன்னொருவரும் செயல்படத்தான் செய்தார். ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் ஆன்மாவாகச் செயல்பட்ட அவருடைய நேசக்கரங்கள் இன்றும் எதிர்க்கரம் இன்றி அந்தரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் விஷயத்திலும் அவர் அதையேதான் கடைப்பிடித்தார். இன்றும் இஸ்லாமிய தேசமான பாகிஸ்தானில் முஸ்லீம்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியைவிட பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் இந்தியாவில் முஸ்லீம்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி மிக மிக அதிகமே. ஆனால், இஸ்லாமியர்களின் தலைவரான ஜின்னாவோ அந்த நேசக்கரத்தை எட்டி உதைத்தார்.
தலித்களின் விஷயத்திலும் காந்தி மிதமான போக்கையே முன்வைத்தார். சிறுபான்மையின் நலன் என்பது பெரும்பான்மையுன் புரிதலில்தான் இருக்கிறது என்ற நடைமுறை உண்மை அவருக்குப் புரிந்திருந்தது. மேலும் தவறு செய்தவர்களே பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அவருக்கு இருந்தது. அம்பேத்கரின் அனல் கக்கும் வார்த்தைகளைக் கேட்டு சாதி இந்துக்களுக்கு எதிராகக் களம் இறங்கியவர்களைவிட காந்தியின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு சேரிகளுக்குச் சேவை செய்யப் புறப்பட்டுச் சென்ற மேல் சாதியினரின் எண்ணிக்கை வெகு அதிகம். ஆனால், ஜின்னாவைப் போலவே அம்பேத்கரும் காந்தியின் நல்லெண்ண முயற்சிகளைப் புறங்கையால் தள்ளினார்.

உண்மையில் சாதிய மோதல்கள் இப்படி மோசமானதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அதாவது, தீண்டப்படாதவர்கள் என்றொரு பிரிவு உருவாக்கப்பட்டு அது சார்ந்து ஒரு அரசியல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட அதேநேரம், நவீன அரசின் அதிகாரமோ மேல்சாதியினரிடம் தரப்பட்டது. உண்மையில் அதுதான் இந்திய சாதிய வாழ்க்கையின் பெரும் சாபமாக ஆகிவிட்டது. ஒரு பிரிவினரை வீர வசனங்கள் பேசி களத்துக்கு வரவைத்துவிட்டு இன்னொரு பிரிவினரின் கைகளில் ஆயுதத்தைக் கொடுத்த அபத்தம் நடந்தேறியிருக்கிறது.

இன்று நடக்கும் சாதி சார்ந்த வன்முறைகளைப் பார்க்கும் ஒரு அம்பேத் காரியவாதிக்கு கோட்பாட்டளவில் பெரிதாக வருத்தம் எதுவும் இருக்காது. அதாவது தலித்கள் பாதிக்கப்பட்டவர்கள்; சாதி இந்துக்கள் கொடூரமானவர்கள் என்ற அவருடைய ஏற்கெனவே இறுகி இருக்கும் கோட்பாட்டுக்குக் கூடுதல் தரவுகளாக மட்டுமே இந்த நிகழ்வுகள் அமையும். பெரியாரியவாதியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இடைநிலை சாதியின் வன்முறையை கள்ள மவுனத்தின் மூலம் கடந்து செல்லவும் மாய எதிரியாக மனுவை முன்னிறுத்தி வெட்ட வெளியில் அம்புகளை எய்யவும் நன்கு பழக்கப்பட்டவர்கள் அவர்கள். எனவே, இன்றைய வன்முறைகளை அவர்களாலும் எளிதில் கடந்துபோய்விட முடியும்.

ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவருக்கு இந்த நிகழ்வுகள் பெரும் வேதனையையே தரும். ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு எதிராக மோதும் அவலம் அது. ஒன்றாக மேய்ந்து கொண்டிருந்த நான்கு எருதுகளை சிங்கம் தனித்தனியாகப் பிரித்துக் கொன்ற கதை நினைவுக்கு வருகிறதா? பெஸ்கி பாதிரியார் குழந்தைகளுக்குச் சொன்ன கதை அல்ல அது.

0

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!