இலங்கையில் நடக்கப்போகும் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளலாமா கூடாதா என்பது தமிழகத்திலும் தில்லியிலும் விவாதிக்கப்பட்டு, இறுதியில் தமிழக அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக பாரதப் பிரதமர் இலங்கை செல்லும் திட்டத்தைக் கைவிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழுவை காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள அனுப்பியுள்ளார். தன்னால் வர இயலாததற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
காமன்வெல்த் மாநாடுகள் கூட்டமைப்பு என்பது முன்னாள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கட்டுப்பட்ட நாடுகளை இணைத்து இங்கிலாந்து அரசியைத் தலைவராகக் கொண்டு 1949-ல் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும். தற்போது இதில் 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இந்நாடுகள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சந்தித்து (Commonwealth Heads of Government Meeting – CHOGM ) தமக்குள் பொதுவான ஈடுபாடு உள்ள அம்சங்களை விவாதித்து தேவையான முடிவுகளை எடுப்பர். மேலும் காமன்வெல்த் நாடுகளுக்கிடையேயான காமன்வெல்த் தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
உலக அமைதி, பிரதினிதித்துவ ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனித உரிமை, மற்றும் ஏழ்மை, அறியாமை, நோய்கள், இனவாதம் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்கள் என்றெல்லாம் பல நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் பெரிதாக எதையும் இவ்வமைப்பு சாதித்ததில்லை. இவ்வமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கிடையே எந்தவிதமான சட்டக் கட்டுப்பாடுகளும் கிடையாது. நாளடைவில் இது ஒரு சம்பிரதாய அமைப்பாக மாறிவிட்டது. எனவே,
காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பினர் பதவி என்பது நாம் தேவையில்லாமல் தலைமேல் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு காலனிய பாரம் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் அவ்வமைப்பின் மாநாட்டை வைத்துக்கொண்டு, பல பக்கங்களில் பலவிதமான அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருகின்றன. இவ்வரசியலின் பின்னால் இருக்கும் நோக்கம் என்னவென்றால், இலங்கை-இந்திய உறவைக் கெடுக்கவேண்டும் என்பதும் இலங்கையைப் பிளவு படுத்தி தனி ஈழம் அமைக்கவேண்டும் என்பதும்தான். அவ்வாறு இலங்கை பிளவு படுவது, தமிழகத்திலும் பிரிவினையைத் தூண்டிவிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கும் பேராபத்து விளைவிக்கும். இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் யார், அவர்களைப் பின்னிருந்து ஊக்குவிப்பவர் யார் என்பது சற்று ஆராய்ந்து பார்த்தால் உண்மைகள் பளிச்சென்று நம் முகத்தில் அறையும்.
பழமையும் பெருமையும் கொண்ட உறவு
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தொடர்பு இதிகாச (ராமாயண) காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. பல நூற்றண்டுகளுக்கு முன்பே, இந்தியாவின் ஒடிஷா பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் குடியேறியவர்களும், தமிழகத்திலிருந்து சென்று குடியமர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
தமிழ்-சிங்கள உறவைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்கூட பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சங்கம் மருவிய காலத்தைக் கூறலாம். அதற்கு ஆதாரமாக பௌத்த துறவியான சீத்தலைச் சாத்தனார் பைந்தமிழாம் செந்தமிழில் எழுதிய காவியமான மணிமேகலையைக் காட்டலாம். பின்னர் ஏற்பட்ட சோழர் படையெடுப்பையும், பாண்டிய-இலங்கை மன்னர்களுக்கு இடையே இருந்த நட்புறவையும் கூறலாம். பண்டைய தமிழ் மன்னர்கள் தமிழகத்தில் புத்தமதம் வளர்வதற்கும் ஆதரவு அளித்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் பின்னாட்களில் சைவமும் வைணவமும் பெரிதும் வளர்ச்சி கண்ட போது பௌத்தம் தென்னகத்திலிருந்து முற்றிலும் மறைந்து போனது. வடக்குப் பகுதிகளில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் முற்றிலுமாக அழிந்து போனது. வீரம் கொண்ட ஹிந்து மன்னர்களாலும், அறிவு மிகுந்த ஹிந்து பண்டிதர்களாலும் புத்த கயா இஸ்லாமிய வெறியர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டது.
கிறுஸ்தவ ஆக்கிரமிப்பு தொடங்குவதற்கு முன்புவரை இலங்கையில் ஹிந்துக்களும் பௌத்தர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தமிழ் ஹிந்துக்கள் அனைத்து தளங்களிலும் பெரிதும் பங்களித்து வந்துள்ளனர்.
அன்னிய சக்திகள் உருவாக்கிய பிரிவினை
இரு சமூகங்களுக்கு இடையே பிரிவினையை முதன் முதலில் ஏற்படுத்தியது அன்னியர் தான். இந்தியாவில் எப்படி கிறுஸ்தவப் பாதிரிமார்களின் உதவியுடன் ஆரியப்படையெடுப்பு என்கிற பொய்யான கோட்பாட்டின் மூலம் ஆரிய-திராவிட இனவேறுபாட்டை உருவாக்கினார்களோ, அதே போல இலங்கையிலும் சிங்கள-தமிழ் இன வேறுபாட்டை உருவாக்கினார்கள். அவர்கள் வித்திட்ட அந்த விஷம் அவர்கள் இலங்கையை விட்டுச் சென்ற பிறகும் தொடர்ந்து, இன்றுவரை மக்களிடையே ஒற்றுமையை அழித்து பிரிவினையை வளர்த்து வருகின்றது.
ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற சுதந்திரம், இலங்கைத் தீவில் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த, பெரும்பான்மையினராக உள்ள சிங்களவருக்குத் தைரியம் அளித்தது. சுதந்திர இலங்கையில் முதன் முதலில் சிங்களவருக்கும் தமிழருக்கும் பிரச்சனை ஏற்பட்டது 1958-ல் தான். 25% சதவிகிதம் தமிழர்கள் இருக்கும் நிலையில், சிங்களத்தை ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்த முயன்றது முதல் தொடர்ந்து தமிழர்களை நிராகரிக்கும் விதமாக நடந்துகொண்டது இலங்கை அரசு. அதற்குக்காரணம் புத்தமத குருமார்களின் சிங்கள பேரினவாதம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அதைப் பயன்படுத்தி பிரிவினையை மேலும் வளர்த்ததில் கிறிஸ்தவ நிறுவனத்திற்குப் பெரும்பங்கு உளது. இலங்கை அரசிடம் கொண்டிருந்த செல்வாக்கை கிறிஸ்தவ நிறுவனம் பெரிதும் பயன்படுத்திக்கொண்டது. இலங்கை அரசின் அதிபர்களாக இருந்தவர்களின் பட்டியலைப் பார்த்தாலே அது விளங்கும். கிறிஸ்தவர்களாகவோ அல்லது அரசியலுக்காக பௌத்த மதத்திற்கு மாறியவர்களாகவோ அல்லது கிறிஸ்தவரை மணந்துகொண்டவராகவோ தான் இருப்பார்கள். மேலும் அவர்கள் அனைவரும் கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் படித்தவர்களாகவே இருப்பார்கள்.
இலங்கை அரசின் இந்தப் போக்கினால் அடிக்கடி 60-களிலும் 70-களிலும் வன்முறை வெடித்த்து. இலங்கைத் தமிழருக்கும் சரியான தலைமை வாய்க்கவில்லை. இதன் காரணமாக தமிழ் தீவிரவாதம் பெருமளவில் வளர்ந்து 1976-ல் பிரபாகரன் விடுதலைப் புலிகள் அமைப்பைத் துவக்கினார். அதே சமயத்தில் மேலும் சில அமைப்புகளும் தோன்றின. தமிழ்-சிங்கள மக்களிடையே வேற்றுமை ஏற்பட்டதற்கும், இலங்கை தன் அமைதியை இழந்ததற்கும், தமிழ் பிரிவினைவாதம் பிறந்து தீவிரவாதமாக வளர்ந்ததற்கும், ஆங்கிலேயர் விதைத்த இனப்பிரிவினைவாதம் ஒரு காரணம் என்றால் சிங்களவர்கள் தங்கள் ஆதிக்கத்தை தமிழர்கள் மீது அதிகாரத்துடன் செலுத்த முயன்றதும் ஒரு காரணம்.
எப்படி இலங்கை அரசின் தலைவர்களிடம் கிறிஸ்தவ நிறுவனம் செல்வாக்கு மிகுந்து இருந்ததோ, அதே போல் இலங்கைத் தமிழர்களின் தலைமையும் கிறிஸ்தவர்களிடம் இருந்ததால் கிறிஸ்தவ நிறுவனம் அவர்களிடமும் தன் செல்வாக்கைச் செலுத்தியது. பொன்னம்பலம் ராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம், ஆனந்த குமாரசாமி, வைத்தியலிங்கம் துரைசாமி போன்ற ஹிந்து தலைவர்கள் இல்லாத நிலையில் சாமுவேல் ஜேம்ஸ் வேலுபிள்ளை செல்வநாயகம் தமிழர்களின் தலைவராக கிறிஸ்தவ நிறுவனத்தால் முன்னிறுத்தப்பட்டார். கிறிஸ்தவ நிறுவனத்தின் விருப்பப்படி பிரிவினைவாதத்தை முதலில் ஆரம்பித்தவர் அவர்தான். அதாவது பாக் ஜலசந்தியின் இருபுறமும் “திராவிட தேசம்” நிறுவப்பட வேண்டும் என்றார் அவர். அவரைப்போலவே, இ.எம்.வி.நாகநாதன், சாமுவேல் சந்திரஹாசன் என்று தமிழர் தலைவர்கள் கிறிஸ்தவர்களாகவே தொடர்ந்தனர்.
ஆகவே, சரியான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த கிறிஸ்தவ நிறுவனம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நெருங்கி அதற்கு மேலும் பிரிவினை தூபம் போட்டு வளரச்செய்தது. அதற்கு நிதியுதவியும் ஆயுத உதவியும் ஏற்பாடுகள் செய்து கொடுத்து அதனுடன் மிகவும் நெருக்கம் கொண்டது. மற்ற தமிழ் தீவிரவாத குழுக்களையும் அதன் தலைவர்களையும் மட்டுமல்லாமல் அமிர்தலிங்கம் போன்ற மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களையும் விடுதலைப் புலிகள் கொன்றனர். முப்பது ஆண்டு காலமாக அவ்வியக்கத்தின் பின் நின்று அதை ஆட்டுவித்து இலங்கையில் பெரும் அழிவை ஏற்படுத்தி வந்தது கிறிஸ்தவ நிறுவனம். அதன் நெடுநாள் குறிக்கோள் என்னவென்றால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளையும் தமிழகத்தையும் இணைத்து ஒரு தமிழ் கிறிஸ்தவ தேசம் அமைக்க வேண்டும் என்பதுதான்.
கடைசியாக நடந்த ஈழப்போரில் விடுதலைப்புலிகள் முழுவதுமாக நசுக்கப்பட்ட பிறகு, “போர் குற்றங்கள்” “மனித உரிமை மீறல்கள்” என்கிற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அவ்வழியிலாவது ஈழத்தைத் தனியாகப் பிரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன அன்னிய சக்திகள். அதற்காகத்தான் தொடர்ந்து வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களையும் தமிழக அரசியல் கட்சிகளையும் பயன்படுத்தி வருகின்றன. கிறிஸ்தவ நிறுவனமான சானல்-4 அதற்கேற்றார்போல ஈழப் போர் குறித்த தன்னுடைய ஒளிநாடாக்களை இலங்கை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சர்வதேச கூட்டத்திற்கு முன்னரும் ஒவ்வொன்றாக வெளியிட்டு தமிழ் மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு தமிழக அரசியல் கட்சிகள் மூலம் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
போர்குற்றம் என்றால் இலங்கை ராணுவம் செய்ததை விட விடுதலைப் புலிகள் அதிகம் செய்திருக்கின்றனர். இலங்கை ராணுவமாவது தன்னுடைய எதிரிகளான விடுதலைப் புலிகள் மீதுதான் தாக்குதல்கள் புரிந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளோ தங்களுடைய சகோதரர்களான தமிழர்கள் மீதே தாக்குதல் நடத்தி அவர்களை அழித்தனர். 10-12 வயது சிறார்களை போர்க்களத்தில் ஈடுபடுத்தி ஆயிரக்கணக்கான சிறார்களின் சாவுக்குக் காரணமானவர்கள் விடுதலைப்புலிகள். கடந்த 30 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள அழிப்பும் இழப்பும் பயங்கரமானது.
இலங்கை தமிழர்களின் முதுகில் குத்திய திராவிடக் கட்சிகள்
தமிழகத்தில் வாய்ப்பந்தல் இட்டு வசைபாடுவதில் மட்டுமே தங்கள் வீரத்தைக் காட்டும் திராவிட இனவெறியாளர்கள் மற்றும் தமிழ் பிரிவினைவாதிகள் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. மாறாகத் தங்கள் சுயநலத்திற்காக அவர்களின் பிரச்சனைகளை வைத்து தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர். இவர்கள் மக்களைவிடத் தங்கள் அரசியல் லாபத்தை மட்டுமே பெரிதாக நினைப்பதால்தான் தங்கள் கூட்டணிகளையும் அவ்வப்போது மாற்றிக்கொண்டும், தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு மட்டும் ஆதரவு தந்துகொண்டும், அன்னிய சக்திகளின் விருப்பத்திற்கு இணங்க அரசியல் செய்துகொண்டும் இருக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அன்னிய சக்திகள் புகுந்து, பிரிவினைவாதத்தை தூபம் போட்டு வளர்த்து, அதன் மூலம் தமிழகத்திலும் பிரிவினை எண்ணங்களை ஏற்படுத்தி, தமிழ் தீவிரவாத இயக்கங்களை தோற்றுவித்து, இந்தியாவின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பல நிகழ்வுகள் நடக்கக் காரணமாக இருந்துள்ளன; அந்த அன்னிய சக்திகள் மேலும் மேலும் வலிமை பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதற்கு தற்போது தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களே சாட்சி.
இந்திய இறையாண்மைக்கு எதிரான போராட்டங்கள்
திராவிடக் கட்சிகளும், தமிழ் தீவிரவாத இயக்கங்களும், பிரிவினைவாத அமைப்புகளும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்கள் என்கிற பெயரில் தமிழகத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் பின்னிருந்து ஊக்கம் அளிக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக இயங்கி வரும் அமைப்பு கிறிஸ்தவ நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அவ்வமைப்பின் தலைவரான எஸ்.பி.உதயகுமார் என்கிற கிறிஸ்தவர்தான் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான மாணவர் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இம்மாணவர் இயக்கத்தின் போராட்டங்களுக்கு திராவிடக் கட்சிகளும், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம், நாம் தமிழர் கட்சி, மே-17 இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் போன்ற பிரிவினைவாத இயக்கங்களும் ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் அவர்களைத் தூண்டி விடுகின்றன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காஷ்மீர் தீவிரவாத இயக்கத் தலைவரான யாசின் மாலிக்கை அழைத்து வந்து தனி ஈழத்திற்காகப் பிரச்சாரம் செய்தார்.
இவ்வியக்கங்கள் மத்திய அரசு அலுவலகங்கள், இலங்கை தூதரகம், இலங்கை வங்கி ஆகியவற்றின் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகின்றன. மேலும் இலங்கையிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மீதும் வன்முறையை ஏவிவிடுகின்றன.
இப்போராட்டங்கள் எல்லாமே இலங்கைத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து நடந்தாலும் ஈழப் பிரிவினையையே நோக்கமாகக் கொண்டவை. அதன் ஒரு அங்கமாகத்தான் இந்தியா காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்கிற போராட்டமும் நடத்தப்படுகின்றது.
தமிழக சட்டசபை தீர்மானங்கள்
போராட்டங்கள் போதாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கக்கூடாது, இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது, காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும், தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நட்த்தப்பட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சிகளும் சரி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடுபவர்கள் தாங்கள்தான் என்று போட்டி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, உருப்படியான ஆலோசனைகளோ திட்டங்களோ முன்வைப்பதில்லை. இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது; மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தாது. அதைப்போல காமன்வெல்த் மாநாட்டை இலங்கையரசு நடத்துவதாலோ அல்லது காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் இருந்தாலோ சர்வதேச அளவில் எந்தத்தாக்கமும் பெரிதாக ஏற்படப்போவதில்லை. ஆனால் இவ்விஷயத்தில் மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம் இதைச் சுற்றி நடக்கும் அரசியல் விளையாட்டுகள் அல்ல. இலங்கைவாழ் தமிழரின் நலம் மட்டுமே, அதாவது “இலங்கையில் வாழும்” தமிழர் நலன் மட்டுமே.
இலங்கைவாழ் தமிழர் எண்ணங்கள்
இலங்கைவாழ் தமிழர்களைப் பொறுத்தவரை தனி ஈழத்தை அவர்கள் விரும்பவில்லை; ஒன்றுபட்ட இலங்கையில் தனி மாநில அந்தஸ்துடன் கௌரவமாக அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். தற்போது தேர்தலில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பே இதைத் தெளிவு படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா வந்து பிரதமரைச் சந்தித்தபோதும் இதையே உறுதிபடுத்திச் சென்றுள்ளனர். இலங்கைவாழ் தமிழர்கள், தனி ஈழத்திற்கான போராட்டங்களில் ஈடுபடும் வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் மீது கடும் கோபத்திலும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் மீது பெரும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள். வடக்குப் பிராந்திய முதல்வர் திரு விக்னேஸ்வரன் அவர்களே இதைத் தெளிவாகக் கூறியுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும் என்று வெளிப்படையாகப் பேட்டியும் கொடுத்துள்ளார்.
இந்தியா இலங்கை அரசுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சு வார்த்தை நடத்தி வடக்கு மாகாணத்திற்குத் தேர்தல் நடக்கும்படி செய்தது. வரலாறு காணாத அளவில் இலங்கைவாழ் தமிழர்கள் தேர்தலில் பங்குகொண்டு நீதியரசர் விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுத்தார்கள். வடக்குப் பிராந்தியத் தேர்தல் நடந்ததற்கு இந்தியாவின் உழைப்பு முக்கிய காரணம் என்பதால் பிராந்தியத்தின் முதல்வர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் இலங்கைவாழ் தமிழ் மக்களும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வருமாறு பாரதப் பிரதமரை அழைத்துள்ளனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் கிறிஸ்தவ சர்ச்சின் எதிர்பார்ப்புகளைக் குலைந்துபோகச் செய்துள்ளன.
தொடரும் பிரிவினை முயற்சிகள்
வடக்குப் பிராந்திய தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), இலங்கை தமிழரசு கட்சி (ITAK), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஆகிய கட்சிகள் உள்ளன.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன் தலைமையில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு.விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராகக்கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட்டு பெரும் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது வேற்றுமை நிழல் படர்ந்துள்ளது. முதல்வர் விக்னேஸ்வரன் அதிபர் ராஜபக்சே முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். ஆனால் அவருடன் அமைச்சரவையில் இருக்க வேண்டிய 4 அமைச்சர்களும் (மற்ற நான்கு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்) வெவ்வேறு இடங்களில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளனர். மூவர் வவுனியாவிலும் ஒருவர் முதல்வர் முன்னிலையிலும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
ஒற்றுமையாகப் போட்டியிட்ட கூட்டமைப்பினரிடையே திடீரென்று வேறுபாடுகள் தோன்றியதற்கு அன்னிய சக்திகள்தான் காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது முதல்வர் விக்னேஸ்வரன் ஹிந்துவாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர் என்பது மட்டுமல்லாமல் ஹிந்து மத ஆன்மீக கலாச்சாரப் பாரம்பரியத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அன்னிய சக்திகளுக்கும், தமிழக திராவிடக் கட்சிகளுக்கும் அவரைப் பிடிக்கவில்லை. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் உண்டாக்கப்படுவதாகத் தெரிகிறது.
இலங்கையில்தான் இவ்வாறு பிரிவினை முயற்சிகள் நடக்கிறதென்றால் தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்று மிகவும் அழுத்தம் கொடுத்து வந்தன. தீவிரவாதமும் பிரிவினைவாதமும் பேசும் இயக்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து “உலகத்தமிழர் பேரமைப்பு” என்கிற அமைப்பைத் தோற்றுவித்து அதற்குத் தலைவராக
தமிழ் தேசிய இயக்கத்தின் நிறுவனர் பழ நெடுமாறனைக் கொண்டு அவர் கீழ் அணிதிரண்டுள்ளன. அந்த உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாக தஞ்சை அருகே உள்ள விளார் என்னுமிடத்தில் 2009-ல் நடந்த நான்காம் ஈழப்போர் நினைவாக “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்” என்கிற நினைவுச்சின்னத்தை அமைத்துள்ளனர். இம்முற்றத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்கிற அடிப்படையில் 2011-ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இம்முற்றத்தில் “தமிழன்னை” சிலை ஒன்றை நடுநாயகமாக அமைத்து சுற்றியும் நான்காம் ஈழப்போர் காட்சிகளை சிற்பமாக வடிவமைத்துள்ளனர். காவல்துறை திறப்பு விழாவுக்கு அனுமதி தராத நிலையில் உயர் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றனர்.
இந்த நினைவு முற்றம் இந்தியாவிலும் மற்றும் பலநாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போற்றும்விதமாக அமைந்திருக்கிறது. எதிர்காலத்தில் இம்முற்றத்தில் பிரபாகரன் சிலைய்ம் வைக்கப்படலாம் என்றும், இது தமிழகப் பிரிவினையைத் தூண்டிவிட்டு இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பயன்படுத்தப்படலாம் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டு தியாகம் புரிந்தவர்கள் நினைவாகத்தான் இந்த முற்றம் கட்டப்பட்டுள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்பு கூறும் பக்ஷத்தில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஆகியவற்றின் தலைவர்களின் நினைவுகளும் போற்றப்படுமா? விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், பத்மநாபா, சுபத்திரன் தம்பிராஜா போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடவில்லையா? பிரபாகரனின் மைந்தர்கள் உருவங்களை சிற்பத்தில் வடிப்பவர்கள், பிரபாகரனின் சிலையை வடிப்பவர்கள், தமிழர்களுக்காகப் போராடிய மற்ற இயக்கத்தலைவர்களின் உருவங்களையும் முற்றத்தில் வடித்து வைப்பார்களா? அவர்களைப் பற்றியெல்லாம் உலகத் தமிழர் பேரமைப்பினர் ஏன் பேசுவதில்லை? என்று சரமாரியாக கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர்.
தமிழக அரசின் இரட்டை வேடம்.
பலவாறாக இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்ற ஏற்பாடு செய்த தமிழக அரசு, அவ்வாறு செய்ததன் மூலம் ஈழப்பிரிவினையைத் தூண்டிவிட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசு வாக்கு வங்கி அரசியலை மனத்தில் கொண்டு சில தவறுகளை வேண்டுமென்றே செய்துளது. கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேச விரோத சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அடக்காமல், மென்மையாகக் கையாண்டது; சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றியது; தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறியாமல் மென்மையாக நடந்துகொண்டது; நம் தமிழர் கட்சியினர் காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக்கை தமிழகத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தபோது முறையான நடவடிக்கைகள் எடுக்காமல் ஏனோதானோவென்று மேம்போக்கான நடவடிக்கை எடுத்தது; அதே போல தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றம் விஷயத்திலும் ஆரம்பத்திலேயே தடுக்காமல், அனுமதியும் அளித்து, திறப்பு விழா முடிந்தபின்னர் அதன் பெரும்பகுதியை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் இடித்தது; போன்ற செயல்பாடுகளின் மூலம் தமிழக அரசின் வாக்கு வங்கி அரசியலும் இரட்டை வேடமும் தெளிவாகத் தெரிகின்றன.
இந்திய தேசியக் கட்சிகளின் பலவீனம்
இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டுமென்றால் இந்தியா இலங்கை அரசுடன் நல்லுறவு பேணுவது மிகவும் முக்கியம். அவ்வாறு நல்லுறவு பேணவேண்டுமென்றால் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வது அவசியம் என்றும், மாநாட்டில் அனைத்து உறுப்பினர் நாடுகளின் முன்னிலையில் இலங்கை அரசு இலங்கைத்தமிழர் நலனில் அக்கறை கொள்ளாமல் நடந்து வருவதை எடுத்துச்சொல்லி அந்நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்களுக்குச் சாதகமாக தீர்மானங்கள் நிறைவேற்ற முடியும் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் அம்மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஈழப்பிரிவினையை விரும்புபவர்களும் அப்பிரிவினைக்குத் தூபம் போடுபவர்களும் கூறுகின்றனர். பிரிவினையை பின்னின்று ஊக்குவிக்கும் கிறிஸ்தவ சர்ச்சின் நிலைப்பாட்டை உறுதி செய்யும் விதமாக மன்னார் பேராயர் ராயப்பு ஜோஸஃப் பாரதப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிக்கை விட்டுள்ளார். இவருடைய இடையூறு காரணமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தலின் போது காணப்பட்ட ஒற்றுமை குறைந்து வேற்றுமை உருவாகியுள்ளது என்று கருதப்படுகிறது. இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுள் ஒருவரான டி.சித்தாதன் பாரதப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொண்டு வடக்குப் பிராந்திய முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பையும் ஏற்று யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பான்மையான இலங்கைத்தமிழரின் எண்ணமும் பாரதப் பிரதமர் இலங்கை வரவேண்டும் என்பதாகவே இருந்திருக்கின்றது.
இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சி குழம்பிப்போய் தவிக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சாரார் (அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் போன்றோர்) பிரதமர் இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று கூறிவந்தனர். மற்றொரு சாரார் (அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் போன்றோர்) போகவேண்டும் என்று சொல்லிவந்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தன்னுடைய அமைச்சகத்தின் மூலம், பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திற்குப் பரிந்துரை செய்திருந்தார்.
காங்கிரஸ் நிலைமைதான் இப்படியென்றால் மற்றொரு தேசிய கட்சியான பாஜகவின் நிலையும் குழப்பமாகத்தான் இருக்கிறது. தமிழக பாஜக பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை செல்லக்கூடாது என்று சொல்லியது. ஆனால் மத்திய பாஜக, பிரதமர் செல்ல வேண்டும் என்றதோடு மட்டுமல்லாமல் மன்மோகன் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறியது. அதே மத்திய பாஜக தலைவர்கள் தமிழகம் வந்தால் இப்படியும் இல்லாமல் அப்படியும் போகாமல் ஏனோ தானோ என்று பேசினார்கள். இலங்கைத் தமிழர் விஷயத்தில் தமிழக பாஜக சற்று தைரியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இங்கே பிரிவினைவாதம் பேசும் திராவிடக் கட்சிகளின் நிலையை அது ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்திய ஒருமைப்பாட்டை விரும்பும் தேச பக்தர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. அதே சமயத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்பிக்க நினைக்கும் அன்னிய சக்திகளின் பொறியில் நாம் விழுந்துவிடக்கூடாது. அதாவது ஈழத் தீவிரவாதிகளுக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பிரிவினைவாதம் என்பது வேறு; ஒன்றிணைந்த ஆட்சி முறைக்கும் உரிமைகளுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் பெறுவது என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் இலங்கை வாழ் சகோதரர்களின் நலனுக்கு நாம் போராட வேண்டும்.
வெளியுறவுக்கொள்கை என்பது வேறு; தேர்தல் பிரச்சனை என்பது வேறு. தேச விரோத கும்பல்கள் கிளப்பிவிடும் இறையாண்மைக்கு எதிரான ஒரு கோட்பாடை தேர்தல் பிரச்சனையாக ஆக்கி நமது நாட்டின் வெளியுறவுக்கொள்கையில் தேவையில்லாத மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போலத்தான்.
நல்லுறவின் மூலமே நன்மை கிடைக்கும்
இந்தியா இலங்கை இடையேயான நல்லுறவின் மூலமே இலங்கைவாழ் தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. இதைத் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இந்தியாவை விரோதித்துக்கொண்டு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது இலங்கைக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே, இந்தியா-இலங்கை நல்லுறவு என்பது இருநாட்டுத் தலைவர்களும் அடிக்கடி சந்தித்துப் பேசி, தங்கள் பரிமாற்றங்களை பல தளங்களில் மேம்படுத்தி, இரு நாட்டு மக்களும் பயனடையுமாறு செய்வதன் மூலமே சாத்தியம்.
பாரதப் பிரதமர் கமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தால் இலங்கைத் தமிழருக்கு நன்மை விளைந்திருக்கும். அம்மாநாடு முடிந்த பிறகு வடக்குப் பிராந்திய முதல்வர் திரு.விக்னேஸ்வரன் அழைப்பிற்கிணங்க யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை செய்து, பின்னர் கொழும்புவிற்கும் சென்று இலங்கை அதிபருடன் பேசி இலங்கைவாழ் தமிழ் மக்கள் பயனடையுமாறு செய்திருக்கலாம்.
ஆனால், இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் அன்னிய சக்திகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர இலங்கைவாழ் தமிழ் மக்களின் நலன் பாதுகாக்கப்படாது. அன்னிய சக்திகளின் நோக்கம் நிறைவேறுவது, இந்தியாவில் தமிழகப் பிரிவினைக்கும் தூபம் போடுவது போலாகும். காஷ்மீர் பிரச்சனையிலும் இந்தியா பெரும் சவால்களை சந்திக்க வேண்டி வரும். ஏன், காஷ்மீரை இழக்கும் நிலை கூட ஏற்படலாம். அதோடு மட்டுமல்லாமல், இந்திய-இலங்கை உறவு க்ஷீணம் அடைந்தால், இலங்கை-சீன உறவும் இலங்கை-பாகிஸ்தான் உறவும் மேலும் நெருக்கமாகும். இது தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவைப் பலவீனப்படுத்தும். இந்து மகாசமுத்திரம் பகுதியிலும் இந்தியாவின் நிலை பலவீனமடையும்.
நமது இந்தியத் திருநாட்டின் நலன் விரும்புபவர்கள், தேசப்பற்று மிக்கவர்கள் யாரும் இலங்கையைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறமாட்டார்கள். அன்னியத் தலைமைகொண்ட தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாபெரும் ஊழல்கள் செய்து தேச முன்னேற்றத்தை முழுவதுமாக நிறுத்தி வைத்துள்ளது. அதற்குத் தேசநலன் பற்றிய அக்கறையே இல்லை என்பதை கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆட்சிமுறையே தெளிவு படுத்திவிட்டது. அதனால்தான் வாஜ்பாய் காலத்தில் இருந்த சுமுகமான இந்திய-இலங்கை உறவும் தற்போது இல்லை; நேபாளம் போன்ற நட்பு நாடுகளையும் இழந்துள்ளோம்; மற்ற வெளியுறவுக் கொள்கைகளிலும் முன்னேற்றமில்லை; சர்வதேச அளவிலும் நம்முடைய மதிப்பையும் கௌரவத்தையும் பெரிதும் இழந்துள்ளோம்.
எனவே இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு விரைவில் நன்மை கிடைக்கவேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு தேசப்பற்று மிகுந்த பலமான அரசு அமைய வேண்டும். இந்திய நலனையும் தெற்கு ஆசியா பாதுகாப்பையும் மனதில் கொண்டு செயல்பட கூடிய மத்திய அரசு அமைய வேண்டும். அதற்கு முதற்படியாக தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும். இந்த மாபெரும் பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.