பிட்ஸாவின் இரண்டாம் பாகம் என்று சொல்ல இதில் எந்தத் தொடர்ச்சியும் இல்லை. பிட்ஸாவின் அதே புத்திசாலித்தனம், அதே வார்ப்பில் இன்னொரு படம் என்பதால் இதை பிட்ஸாவின் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம்!
படத்தின் ஆசுவாசங்கள் என்று பார்த்தால், படம் மிக மெதுவாகச் செல்கிறது. எந்தவித தேவையற்ற வேகமும் நொடிக்கொரு தடவை மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகளும் இல்லை. தடாலென்று இசையைப் போட்டு உப்புச்சப்பில்லாத ஒருவரைக் காட்டி, இதுக்கா பயந்தோம் என்று நினைக்கவைக்கும் க்ளிஷே காட்சிகள் இல்லை. ஒரே ஒரு பாடல் மட்டுமே. அதையும் நீக்கியிருக்கலாம். ஃப்ளாஷ் பேக் சொல்கிறேன் என்று பார்வையாளர்களைக் கொல்லவில்லை. தமிழ்ப் பேய்ப் படங்களில் வரும் எல்லா கேரக்டர்களுமே பேய் போலவோ பைத்தியம் போலவோ பார்ப்பார்களே, அது இல்லை. ஹாலிவுட் படங்களைப் போல, மெதுவாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
படத்தின் எரிச்சல் தரும் விஷயம் என்று பார்த்தால், படத்தின் ஹீரோ ஏன் அப்படி முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறார் என்று தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகு டிவி நாடகம் போல பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கிளைமேக்ஸ்க்கு லீட் தரும் காட்சி வரை, பேசிப் பேசியே, அதுவும் அறிவுபூர்வமாகப் பேசிப் பேசியே பொறுமையைச் சோதித்துவிட்டார்கள். ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு கூகிளிலேயே எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய குறை, உச்ச காட்சிகளில் பேசும் வசனங்கள் எதுவும் காதில் விழவே இல்லை. பின்னணி இசைதான் கேட்கிறது. இதனால் பல பார்வையாளர்கள் ‘ஒண்ணும் புரியலை’ என்று சொல்லக்கூடும். பிட்ஸா திரைப்படத்தை நகலெடுத்த உச்சகட்ட காட்சி என்பதால், அதைப் போலவே, முதலிலிருந்து பார்வையாளர்கள் படத்தை மீண்டும் தங்களுக்குள் திரையிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும். இனியும் இப்படிப் படங்கள் வந்தால் அது செயற்கைத்தன்மை கொண்டதாகிவிடும். இந்தப் படத்திலேயே அந்த எண்ணம் லேசாக வருவதும் உண்மைதான்.
பேயை இதுவரை என்ன என்ன விதத்தில் எல்லாமோ ஓட்டியிருக்கிறார்கள். இதில் பேய் என்று சொல்லாமல் அவற்றை எண்ணங்களாக மாற்றியிருப்பது நல்ல கற்பனை. உண்மையில் எண்ணங்கள் என்பதே ஏற்கக்கூடியதாகவும் உள்ளது. ஆனால் அதற்கான அறிவியல் விளக்கங்கள் எல்லாம் மிகவும் மேம்போக்கானவையாகவும் மீண்டும் பேய்க்கான காரணங்களுக்கே செல்பவையாகவும் மட்டுமே உள்ளன. அதிலும் ஒலி மூலம் எதிர்மறை எண்ணங்களை சமனப்படுத்தும் முயற்சியெல்லாம் – அக்காட்சி மிக நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தாலும்கூட – நம்பும்படியாகவே இல்லை. எண்ணங்கள் என்னும் சாமர்த்தியத்தை, இந்த ஒலிவிஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
ஃப்ளாஷ் பேக் காட்சிகளை சில நொடிகளில் நாம் ரசிக்கும் விதமாக நிகழ்காலத்தோடு சொல்லியிருக்கும் விதத்துக்கு ஒரு சபாஷ். அதுதான் படத்தின் சிறந்த காட்சியும்கூட. கதாநாயகி, நாஸர் உள்ளிட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் சும்மா வந்து போகிறார்கள். யாருக்கும் வாய்ப்பில்லை. நன்கு வாய்ப்பு தரப்பட்ட கதாநாயகனோ எப்போதும் சோகத்தில் இருக்கிறார்.
பீட்ஸா 2 என்று போடுவதால், பார்வையாளர்கள் அந்தப் படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு, இதை நிராகரிக்கக்கூடும். இதனால் இதில் வரும் சில புத்திசாலித்தனமான காட்சிகளெல்லாம் கண்டுகொள்ளப்படாமல் போகும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு நல்ல படம் வந்தால், அதே போன்ற படங்கள் எடுத்து, அந்த முதல் நல்ல படத்தையும் சேர்த்து மழுங்கடிப்பது தமிழ் இயக்குநர்களின் வாடிக்கை. அது பீட்ஸாவுக்கும் நிகழாமல் இருக்கவேண்டும்.
அறிமுக இயக்குநர் தீபனுக்கு நல்வரவு. முதல் படம் என்ற அளவில் இப்படம் மோசமில்லை. அதிலும் 102 நிமிடங்களில் படம் எடுத்த தைரியத்துக்கு தனியே பாராட்டு. அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வாழ்த்துகள்.
வில்லா – மோசமில்லை. ஆனால் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்.
வில்லா – 42%
தமிழ்பேப்பர் திரை விமர்சனக் குழு