தருண் தேஜ்பாலுக்கு எதிரான குரல்கள் வலுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம், அவரை ஆதரித்தும் ஒரு சிறு கூட்டம் இயங்கி வருகிறது.
இவர்கள் தர்க்கத்தை, அதில் உள்ள பாவனைகளை விலக்கிவிட்டுப் பரிசீலித்தால் ஒரு எளிய உண்மை புலப்படுகிறது. குற்றச்சாட்டு இங்கே பின்னுக்குத் தள்ளப்பட்டு, குற்றம்சாட்டியவர் யார், அவர் பின்னணி என்ன என்பதும் யார்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் பின்னணி என்ன என்பதும் இங்கே முக்கியமாகியிருக்கிறது. நன்கறிந்த பிரபலம் ஒரு பக்கம். பெயர் கூட தெரியாத ஒரு பெண், இன்னொரு பக்கம். இந்த இருவரில் எதற்காக முகமற்ற, அடையாளமற்ற ஒருவரை நாம் ஆதரிக்கவேண்டும்?
தருண் தேஜ்பால் பலருக்கும் இங்கே ஓர் ஆதர்சமாகவும் திகழ்வது சிக்கலை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, 2002 குஜராத் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு புலனாய்வு பத்திரிகையின் நிறுவனர்மீது ஒரு சாதாரண பெண் பாலியல் குற்றச்சாட்டை வீசி ‘களங்கப்படுத்துவதை’ எப்படி ஏற்பது? தெஹல்காவை இந்தக் காரணத்துக்காகவே எதிர்த்து வரும் ஒரு பெருங்கூட்டத்துக்கு இப்போது மெல்ல அவல் கிடைத்துவிட்டது அல்லவா? எனவே இது ஏன் ஓர் திட்டமிடப்பட்ட அரசியல் சதியாக இருக்கக்கூடாது?
இதுதான் அவர்களுடைய சங்கடத்தின் மையப்புள்ளி. இந்தச் சங்கடத்தை மறைக்கவே சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நோக்கி இவர்கள் மீண்டும் மீண்டும் எரிச்சலுடன் சந்தேகக் கேள்விகளை வீசுகிறார்கள்.
எந்தவொரு பிரபலத்தின்மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் இத்தகைய உத்தி புகார் சொல்பவர்மீது பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இத்தனைக்கும் தருண் தேஜ்பால் தன் குற்றத்தைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அடுத்த சிக்கல் இங்கே எழுகிறது. ஆம் நான் பாலியலல் பலாத்காரம் செய்தேன் என்பதை தருண் தேஜ்பால் எப்படியெல்லாம் பூசி, மெழுகி வார்த்தை விளையாட்டுகள் விளையாடியிருக்கிறார் என்று கவனியுங்கள். எழுத்தாளர் அல்லவா? எனவே மோசமான ஒரு செயலையும் மூடி மறைத்து, வாசனைத் திரவியம் தெளித்து அழகாக முன் நிறுத்தும் கலை அவருக்குக் கைகூடியிருக்கிறது.
குற்றம் இழைத்திருப்பதால் அவருக்கும், அவரை ஓர் ஆதர்சமாகக் கருதுவதால் மற்றவர்களுக்கும் இத்தகைய சாமர்த்தியமான மழுப்பல்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
நமக்கல்ல.
நம் அன்றாட வாழ்விலும்கூட இப்படிப்பட்ட கடினமான முடிவுகளை நாம் எடுக்கவேண்டியிருக்கும். நமக்குப் பிடித்த ஆளுமைகள், நமக்கு நெருக்கமான மனிதர்கள் தவறிழைக்க நேரிடும். நம்மை ஈர்த்த தத்துவங்களில், கொள்கைகளில் குறைபாடுகள் இருக்கக்கூடும். இரு கண்களையும் காதுகளையும் மனதையும் திறந்து வைத்து நேர்மையாக குற்றங்களையும் குறைபாடுகளையும் நாம் பரிசீலிக்கவேண்டும்.
ஓர் அசாதாரணமான சூழல் ஏற்படும்போது நம் மதிப்பீடுகளை நாம் மீண்டும் கடினமான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். விருப்பு வெறுப்பற்று, புதிய மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
இது எனக்கும் பொருந்தும்.
Let’s learn to call a spade a spade.
0
மேலும் : தருண் தேஜ்பாலும் தெஹல்காவும்