Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

முரட்டுச் சிங்கம் ஹைதர் அலி

$
0
0

hyderali_10461மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு.

எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி, மற்றொருவர் திப்பு சுல்தான். இவர்களுள் ஒருவர் சிங்கம் என்றால் மற்றொருவர் புலி. ஹைதர் என்பதற்குச் “சிங்கம்“ என்று அர்த்தம். ஹைதர்அலி உண்மையிலேயே சிங்கம்தான். ஆனால் கொஞ்சம் முரட்டுச் சிங்கம். திப்பு சுல்தானுக்கு ஜாகோபியன்கள் “குடிமகன்“ என்ற பட்டத்தினை வழங்கினர். மன்னர் மரபினர் அல்லாத மன்னர்கள் மக்களின் மனத்தில் வாழும் நல்ல குடிமகன்கள்தான் என்பதற்கு இந்தச் சிங்கமும் புலியுமே சான்று.

சூஃபி மரபு

ஹைதர் அலியின் முன்னோர்கள் “அகவிழிப்புடைய மனிதர்கள்” என்று அழைக்கப்படும் சூஃபி குடும்பத்தினர். அவர்களுள் ஒருவர் ஃபட்டா முகம்மது. சூஃபி மரபினர் போர் வீரராவது ஒரு வகையில் முரண்தான்.  சூஃபி இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை சுல்ஹ்-இ-குல் என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘அனைத்துடனும் சமாதானம்’ என்பதாகும்.

சமாதானத்தை விரும்பும் மரபில் போர் வீரர் உருவாவது முரண்தானே?. பத்தே முகம்மது ஆற்காடு நவாபின் முதன்மைத் தளபதியாக இருந்தவர். அவருக்கு இரண்டாவது மகனாக கி.பி.1720ஆம் ஆண்டு ஹைதர் அலி பிறந்தார்.

படைவீரர்

மைசூரை ஆண்ட இளம்வயது அரசர் கிக்க கிருஷ்ணராசாவிடம் படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் சேர்ந்தனர். கி.பி. 1749ஆம் ஆண்டு நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரம் கிருஷ்ணராசாவை வியப்பில் ஆழ்த்தியது. அப்போரில் பெற்ற வெற்றிக்குக் கைமாறாக கிருஷ்ணராசா ஹைதர் அலியைக் குதிரைப்படைத் தளபதியாக்கினார்.

பிரிட்டிஷ் எதிர்ப்பு

கி.பி.1750ஆம் ஆண்டு பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்திய மண்ணில் கடும்போர் ஏற்பட்டது. இந்நிலையில் அரசர் கிக்க கிருஷ்ணராசா பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தார். இப்போரில்தான் ஹைதர்அலி பிரிட்டிஷாரை எதிர்த்து முதல் முதலில் மோதினார். தன் அணியினரான பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து நவீன போர் நுணுக்கங்களையும் ஆயுதங்களையும் அறிந்துகொண்டார்.

ஆயுதப்படை

பிரிட்டிஷாரை ஹைதர் அலி எதிர்கொண்ட விதத்தையும் வீரத்தைக் கண்டு வியந்த மைசூர் அமைச்சர் நஞ்ஞராஜர் மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பினை ஹைதர் அலிக்கு வழங்கினார்.

திண்டுக்கல்லில் ஹைதர் அலி தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை உருவாக்கி, பிரிட்டிஷ் படையை எதிர்கொள்ளும் வகையில் பீரங்கிப் படையை அமைத்தார்.

வீரர்களின் நண்பர்

மைசூர் படையில் வீரர்களுக்கு ஊதிய நிலுவை, ஊதிய உயர்வு சார்ந்த சிக்கல்கள் எழுந்தன. அது பெருஞ்சிக்கலாகி கி.பி.1758ஆம் ஆண்டில் வீரர்களுக்கும் மன்னருக்கும் இடையில் ஒரு கலகமாக உருவெடுத்தது. அக்கலகத்தை அடக்கும் பொறுப்பை அரசர் கிக்க கிருஷ்ணராசா ஹைதர் அலியிடம் ஒப்படைத்தார்.

ஹைதர் அலி தன் சாட்டையைச் சொடுக்கிக் கலவரத்தை அடக்கி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். தன் முயற்சியால் கிருஷ்ணராசாவிடம் பணம்பெற்றும் தன் சொந்தப் பணத்தைக்கொண்டும் வீரர்களின் பண(மன)த்துயரைத் துடைத்தார். இதனால் படைவீரர்கள் மத்தியில் ஹைதர் அலிக்குச் செல்வாக்கு ஏற்பட்டது.

வெற்றிச்சிங்கம்

கி.பி. 1759ஆம் ஆண்டு மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. மைசூர் படைக்கு ஹைதர்அலியைத் தலைமையேற்குமாறு அரசர் கிக்க கிருஷ்ணராசா கட்டளையிட்டார். மைசூர் படை ஹைதர் அலியின் தலைமையில் மராட்டியப் படையினை எதிர்த்தது. மகத்தான வெற்றியினைப் பெற்றது.

அரசர் கிக்க கிருஷ்ணராசா அவ்வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் ஹைதர்அலியைப் பாராட்டும் வகையிலும் ஹைதர் அலிக்கு “பதே ஹைதர் பஹதூர்“ என்ற பட்டத்தினை வழங்கினார். அதாவது “தைரியம் உடைய வெற்றிச் சிங்கம்“ என்று பொருள்.

ஆட்சியைப் பிடி

அரசர் கிக்க கிருஷ்ணராசா இளம் வயதினர் என்பதால் அவரை ஏய்த்தபடியே தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் சுகவாழ்வு வாழ்ந்தனர். ஆனால், மறைமுகமாக ஹைதர்அலி மக்கள் மனத்தில் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்.

பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை மைசூரில் அவர்களுக்கு இணையான வீரராக ஹைதர் அலியை மட்டுமே கருதினர். ஆதலால், பிரிட்டிஷ் அரசு ஹைதர் அலிக்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கியது. அக்கூட்டணியில் மராத்தியர்களும் நிஜாம்களும் இருந்தனர். இதனை அறிந்த ஹைதர் அலி பிரெஞ்சுக்காரரர்களைத் தன்வசப்படுத்திக்கொண்டார்.  அவர்களின் வீரர்களின் உதவியுடன் தன் படைவீரர்களுக்குப் போர் நுட்பப்  பயிற்சியினை அளித்தார்.

இந்நிலையில் பிரிட்டிஷார் அமைச்சர்கள் தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகியோரைத் தன்வசப்படுத்திக்கொண்டு ஹைதர் அலிக்கு எதிராக அவர்களைச் செயல்படத் தூண்டினர். ஆனால், ஹைதர் அலி முந்திக்கொண்டார். அவர் தேவராஜர் மற்றும் நஞ்ஞராஜர் ஆகியோரைக் கைதுசெய்தார். அரசர் கிக்க கிருஷ்ணராசாவை ஆட்சிப்பொறுப்பிலிருந்து நீக்கினார். மைசூரின் அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். வீரர்களும் மக்களும் அவரைத் தம் அரசராக ஏற்றனர்.

தேவை படையும் பணமும்

மைசூர் சிம்மாசனத்தில் அமர்ந்த ஹைதர் அலி முதல்வேலையாகத் தன் படையினைச் சீர்படுத்தினார். தன்படையினருள் புதிதாக 200-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு வீரர்களை இணைத்துக்கொண்டார். அவர்களின் வழியாகத் தன் படையினரை நவீன வீரர்களாக மாற்றினார். 1.8 லட்சம் வீரர்களைக் கொண்ட பெரும் படையினைத் தயார்செய்தார்.

உலக அளவில் ஏவுகணை தயாரிப்பு வரலாற்றில் ஹைதர் அலிக்கு முக்கியப் பங்குண்டு. அட்டைக்குப் பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10 அடி உயரமுள்ள மூங்கில்களைப் பயன்படுத்தி ஆறு கிலோகிராம் எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார்.

அடுத்ததாக அவர் வேளாண்மையில் கவனம் செலுத்தினார். வயல் விளைந்தால்தான் அரசுக்கு வரி கிடைக்கும் என்ற தத்துவத்தைப் புரிந்துகொண்டார். ஒரு நாட்டிற்குப் படையும் பணமும் அதிமுக்கியம் என்பது அவரது கோட்பாடு. அவ்விரண்டையும் அதிகப்படுத்திக்கொண்டார்.

வந்தது முதல் மைசூர் யுத்தம்

எப்போதும் எதற்கும் தயார்நிலையில் இருந்த ஹைதர் அலிக்குப் போர் புரியும் வாய்ப்பு கிடைத்தது. போர் என்றால் சில நாட்கள் அல்ல. சில ஆண்டுகள். அந்த நெடிய யுத்தத்தை முத்தமிட ஹைதர் அலி விரும்பினார்.

பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையில் ஹைதர் அலிக்கு எதிராகக் கி.பி. 1767ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போர் தொடங்கியது. அப்போரைக் கண்டு அஞ்சிய ஹைதராபாத் நிஜாம் 23.02.1768ஆம் பிரிட்டிஷாருடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஹைதர் அலி தொடர்ந்து மோதினார். மராட்டியரை வென்று மங்களூரைக் கைப்பற்றினார். ஈரோட்டில் பிரிட்டிஷ் படைகளை தோற்கடித்தார். பிரிட்டிஷ் தளபதி நிக்ஸன் தோல்வியை ஒப்புக் கொண்டார். கி.பி.1767ஆம் ஆண்டு முதல் கி.பி.1769ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இப்போர் முதல் மைசூர் யுத்தம் என வரலாற்றில் குறிக்கப்பெற்றது.

ஒப்பந்தமும் ஓவியமும்

இப்போரின் முடிவில் பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டனர். அவரவர் ஆக்கிரமித்த நிலங்களை திருப்பியளிப்பது என்றும், மைசூர் ஆட்சிக்கு ஆபத்து எனில் பிரிட்டிஷ் படை உதவிக்கு வரும் என்றும் ஒப்பந்தமானது.

ஹைதர் அலியின் ஆணைப்படி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணி அடித்து, ஹைதர் அலிநொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்திருப்பதைப்போலவும், தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் பிரிட்டிஷ் அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து ஹைதர் அலி உலுக்குவதுபோலவும் டூப்ரேயின் தங் நாணயங்களைக் கக்குவதைப்போலவும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் பதக்கத்தை அணிந்த ஒரு நாய்  ஹைதர் அலியின் பின்புறத்தை நக்கிக்கொண்டு இருப்பதைப்போலவும் உடைய ஓர் ஓவியத்தைப் பதித்தனர்.

பிளாஷிப்போர் சொல்லிக்கொடுத்த பாடம்

ஆற்காடு நவாப் பிரான்சின் ஆதரவில் இருந்தார். இவர் கல்கத்தாவின் மீது போர் தொடங்கி, பல பிரிட்டிஷாரைக் கொன்றார். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக பிரிட்டிஷார் வங்காளத்தைத் தாக்கினர்.

ஹைதர் அலியைப் போல், கிழக்கிந்தியாவில் பிரிட்டிஷாரை எதிர்த்த வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தௌலாவுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே கடுமையான போர் 23.06.1757ஆம் நாள் பிளாஷி என்ற இடத்தில் நடைபெற்றது.

பிரிட்டிஷ் படைகளுக்கு இராபர்ட் கிளைவ் தலைமை தாங்கினார். நவாப்பின் படைகள் எண்ணற்றதாக இருந்ததால் இராபர்ட் கிளைவ் சூழ்ச்சி செய்தார். நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி போரில் மீர் ஜாஃபருக்கு உட்பட்ட படைப்பிரிவு பிரிட்டிஷாருடன் போரிடாமல் ஒதுங்கிக்கொண்டது. ஆதனால், இராபர் கிளைவ் வெற்றிபெற்றார். நவாப் சிராஜ் உத்-தௌலாக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரைக் கல்கத்தா துறைமுகத்தில் தூக்கிலிட்டனர்.

இச்செய்தி ஹைதரைத் துன்பத்தில் ஆழ்த்தியது. தன் தேசத்தின் சக போராளி வீழ்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிரிட்டிஷாரிடம் இந்திய மன்னர்கள் தோற்கக்கூடாது எனக் கருதி, மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் மீதான எதிர்ப்புகளை கைவிட்டார். மராட்டியர்களை இந்துக்கள் என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. பிரிட்டிஷாருடன் அவர்கள் இணைந்திருந்த காலகட்டங்களில், தேச நலனுக்காகவே அவர்களை எதிர்த்தார்.

வந்தது இரண்டாம் மைசூர் யுத்தம்

மராட்டியர்கள், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். ஒப்பந்தப்படி, பிரிட்டிஷ் படைகள் ஹைதருக்கு உதவிபுரிய வரவில்லை. கடுப்பாகிப்போன ஹைதர் அலி பிரிட்டிஷ் படைகள் மீது கி.பி. 1780ஆம் ஆண்டு முதல் ஒரு நெடும்போரினைத் தொடங்கினார்.

100 பீரங்கிகள், 90,000 வீரர்களுடன் ஹைதர் அலி தாக்குதலை நடத்தினார். ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் யுத்தம் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்ற இடத்தில் பிரிட்டிஷ் படைகளை வழிமறித்து ஹைதர் அலியின் படை சிதறடித்தது. அப்போரில் 2,000 பிரிட்டிஷார்  உட்பட 7,000 எதிரிப்படைகள் கொல்லப்பட்டனர். 2,000 பிரிட்டிஷார்  சிறைப்படுத்தப்பட்டனர்.

கல்கத்தாவில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் சென்னை கவர்னரைப் பதவியிலிருந்து விலக்கினார். சர் அயர் கூட் என்னும் படைத்தலைவர் தலைமையில் ஒரு பெரும்படையை ஹைதர் அலியின் மீது ஏவினார். அப்படை சிதம்பரத்தை அடுத்த பறங்கிப் பேட்டையில் கி.பி.1781 ஆம் ஆண்டு ஹைதர் அலியை எதிர்கொண்டது. இப்போரில் ஹைதர் அலி தோல்வியுற்றார்.

வீர உரையும் ஈர மடலும்

தன் படைவீரர்கள் நெடிய போரைக் கண்டு மனம் தளரக் கூடாது என்பதற்காக ஹைதர் அலி தன்னுடைய நீண்ட நெடிய போர் திட்டம் குறித்து தன் தளபதிகளிடம்,“பிரிட்டிஷாரை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஓர் இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (இன்றைய ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் பிரிட்டிஷாரைத் தாக்க வேண்டும்“
என்று கி.பி. 1782ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உரையாற்றினார். இந்த யுத்தத்தின்போது மராட்டியர்களையும் ஹைதராபாத் நிஜாமையும் இணைத்து “ஐக்கிய கூட்டணி“யை அமைத்தார்.

1782 டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஹைதர் அலி போர் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, கேரளாவின் மலபார் பகுதியில் அவரது மகன் திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தார். அப்போது போர் குறித்தும், இந்திய தேசத்தின் விடுதலை குறித்தும் இந்தியாவின் பெருமை குறித்தும் அவர் தன் மகன் திப்புசுல்தானுக்கு எழுதிய கடிதம் சிறந்த ஆவணம்.

அதில் அவர்,

“அன்பு மகனே… அதிகாரம் மற்றும் நமது மைசூர் ஆட்சியின் பாதுகாப்பு குறித்தும் நான் கவலைப்படவில்லை. நமது முன்னோர் முகலாயர் ஆட்சியில், ஆசியா கண்டத்தில் நமது இந்திய தேசம் கௌரவமான இடத்தை வகித்தது. ஆனால் இன்று நமது தாய்நாடு சிதறிப்போய் கிடக்கிறதே… நமது இந்திய மக்களுக்கு தேசத்தின் மீதான நேசம் குறைந்துப் போய்விட்டதே”

என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1780ஆம் ஆண்டு முதல் ஹைதர் அலி தொடங்கிய இந்த யுத்தம் கி.பி. 1784ஆம் ஆண்டு வரை அவரது மகன் திப்புசுல்தான் தலைமையிலும் தொடர்ந்தது. இதனை இரண்டாம் மைசூர் யுத்தம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டனர்.

சிங்கத்தின் மீளாத்துயில்

இரண்டாம் மைசூர் யுத்தத்தின்போது ஹைதர் அலிக்கு வயது 60. திப்புசுல்தான் தமிழ்நாட்டில் கும்பகோணம், கடலூர் ஆகிய பகுதிகளை வென்ற செய்தியைச் ஆந்திராவில் உள்ள சித்தூரில் இருந்த ஹைதர் அறிந்தார். இந்நிலையில் ஹைதர் அலி முதுகுத்தண்டு புற்றுநோய் காரணமாக 03.12.1782ஆம் நாள் காலமானார்.

அவரது உடலை அங்கிருந்து 60 மைல் தொலைவில் உள்ள கோலாருக்கு இரகசியமாக அனுப்ப ஹைதர் அலியின் மதிமந்திரி பூர்ணையா திட்டமிட்டார். அங்குதான் ஹைதர் அலியின் தந்தை ஃபட்டா முகம்மதுவின் சமாதி உள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட ஹைதர் அலியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(இன்று ஹைதர் அலி நினைவு தினம்)

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!