Quantcast
Channel: தமிழ் பேப்பர்
Viewing all articles
Browse latest Browse all 405

நெல்சன் மண்டேலா : வெளிச்சமும் இருளும்

$
0
0

ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம் அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும் முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம் ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும்.

- நெல்சன் மண்டேலா

Nelson-Mandela’s-Top-Five-Contributions-to-Humanityசிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. தென் ஆப்பிரிக்காவில் அதுவரை வெளிவந்த புத்தகங்களில் அதிக எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்த புத்தகம் இதுவே. தென் ஆப்பிரிக்கா தனது நீண்ட பாதையில் ஓரடியைத்தான் எடுத்து வைத்துள்ளது என்று மண்டேலா அதில் குறிப்பிட்டிருந்தார்.  அனைவருக்கும் விடுதலை தேவை. ஒடுக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்குபவர்களுக்கும். ‘விடுதலைக்கான நீண்ட பாதையில் நான் நடந்து சென்றிருக்கிறேன். ஒரு கணம்தான் என்னால் ஓய்வெடுத்துக்கொள்ளமுடியும். சுதந்தரத்தோடு சேர்ந்து பொறுப்புகளும் வந்து சேர்ந்துள்ளன. எனவே, எனது நீண்ட பயணம் இன்னும் முடிவடையவில்லை.’ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மண்டேலா அந்தப் பாதையில் ஓய்வில்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

ஆட்சியல் அவர் அமருவதற்கு முன்பே ஆப்பிரிக்கானர்கள் மண்டேலாவிடம் பேசினார்கள். அடுத்து உங்கள் கரங்களில்தான் தென் ஆப்பிரிக்கா வரப்போகிறது. என்ன செய்யப்போகிறீர்கள் எங்களை? நாங்கள் இங்கே தொழில் நடத்தலாமா? எங்கள் இருப்பிடங்களில் தொடர்ந்து வசிக்கலாமா? எங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர்கள் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்பது மண்டேலாவுக்குத் தெரியும். இத்தனை காலமாக கறுப்பர்களான உங்கள் மீதேறி சவாரி செய்துகொண்டிருந்தோம். எங்களை முறியடித்துவிட்டு கறுப்பர்கள் நீங்கள் வந்திருக்கிறீர்கள். எங்களைப் பழி வாங்குவீர்களா? வெள்ளையினம் எங்களை வெறுத்தது போல் நாங்கள் வெள்ளையினத்தை வெறுக்கமாட்டோம் என்று உறுதிகூறினார் மண்டேலா. அரசாங்கத்தின் கொள்கையும் அப்படித்தான் அமைந்தது.

அபார்தைட் என்னும் இனஒதுக்கல் ஒழிந்துவிட்டது என்றாலும் அதன் சில வேர்கள் மிக ஆழத்தில் புதைந்துகிடந்ததால், அழிக்கமுடியவில்லை. பல சவால்கள் மண்டேலாவுக்காகக் காத்திருந்தன. முன்னூறு ஆண்டு கால காலனியதிக்கம் ஏற்படுத்தியிருந்த சமத்துவமின்மையைக் களையவேண்டும். மக்களின் அன்றாட வாழ்நிலையில் முன்னேற்றம் காணவேண்டும்.

1998ல் டி கிளார்க் அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொண்டார். பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய அரசாங்கம்தான் என்றாலும் ஏ.என்.சி.யே ஆதிக்கம் செலுத்தும் பலத்தைப் பெற்றிருந்தது. ஆரம்பத்தில், இது விமரிசனத்துக்கும் உள்ளானது. ஆனால், மண்டேலா ஜனநாயகத்தை அழுத்தமாக வலியுறுத்தினார். வலிமையான எதிர்க்கட்சி உருவானது. ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் முழுவதுமாக அகற்றப்பட்டிருந்ததால், அரசாங்கம், அதன் தலைவர் உள்பட அனைத்தையும், அனைவரையும் பத்திரிகைகள் விமரிசனம் செய்தன. நீதிமன்றங்கள் சுதந்தரமாக இயங்க ஆரம்பித்தன.

அரசியலமைப்பு நீதிமன்றம் தனியே நிறுவப்பட்டு, 11 சுதந்தர நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். புதிதாக உருவாகவிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை பரிசீலித்து ஏற்றுக்கொள்ளவோ திருத்தங்கள் செய்யவோ நிராகரிக்வோ இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. 1996ல் அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது, பரவலான வரவேற்பைப் பெற்றது. ஜனநாயகத்துக்கு மதிப்பு கொடுத்து, பல அடுக்கு பரிசீலனைகள் கடந்தபிறகே, அச்சட்டம் அமலுக்கு வந்தது. இந்த அரசியலமைப்புச் சட்டம், முந்தைய இனஒதுக்கல் சட்டத்துக்கு நேர் எதிர் திசையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவருக்குமான சம உரிமையே அதன் அடிநாதமாக இருந்தது. சமத்துவம், ஜனநாயகம், பொறுப்புணர்வு, சுதந்தரம், ஒருங்கிணைப்பு, பன்முகத்தன்மை என்று பல கருத்தாக்கங்கள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.  The Bill of Rights எனப்படும் அம்சம், ஒருவரது தன்மானத்தையும், சமத்துவத்தையும், சுதந்தரத்தையும் உறுதிசெய்கிறது.

சில அடிப்படை உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியது. அனைவருக்கும் கல்வி. அனைவருக்கும் உடல்நலம். போதிய குடியிருப்பு வசதி. பணியாற்றுவதற்கும் வேலை நிறுத்தம் செய்வதற்குமான உரிமை. தகவல் பெறும் உரிமை. குழந்தைகள் பாதுகாப்பு. இன்னும் பல. ஒருவருடைய நிறம், பால், இனம், சமூகப் பின்னணி, பிறப்பு,  பால் சேர்க்கை, நம்பிக்கை, மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டப்பட மாட்டாது.

பாலின வேறுபாட்டைக் களைய மண்டேலா அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் எடுத்தது. 1984ம் ஆண்டே கட்சி, பாலின வேறுபாட்டுக்கு எதிரான கொள்கையை நிறுவி கட்சிக்குள் அதைக் கடைபிடித்து வந்தது. சிறையில் இருந்தபோதே மண்டேலா பெண்களின் அரசியல் வருகையை, அவர்களது பங்களிப்பை நன்கு அறிந்திருந்தார். ஆப்பிரிக்காவின் பண்டைய வரலாற்றிலும், பல வீரப் பெண்கள் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். தனது உரையாடல்களின் போதும், உரையாற்றும்போதும், மிகக் கவனமாக பெண்களுக்கு எதிரான பதங்களை, அவர்களை மட்டும்தட்டும் உவமைகளை களைந்து பாலின வேறுபாட்டைத் தவிர்க்க ஆரம்பித்தார். அரசியலமைப்புச் சட்டம் தொடங்கி அத்தனை அரசு ஆவணங்களிலும் மிகக் கவனமாக ஆண் மைய மொழி கட்டமைப்பை தவிர்த்து, இரு பாலினத்துக்கும் பொதுவான பதங்கள் பயன்படுத்தப்பட்டன. 1996 அரசியலைமைப்புச் சட்டம் உலகின் மிகச் சிறந்த பால் வேறுபாடற்ற ஆவணமாகக் கருதப்படுகிறது.

மண்டேலாவின் ஆட்சி (1994-1999) பல விஷயங்களைச் சாதித்தது. குறைந்த விலையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. மின்சாரமும் சுத்தமான குடிநீரும் லட்சக்கணக்கான கறுப்பின மக்களுக்குக் கிடைக்கப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பால் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். குழந்தைகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்பட்டது. யாரும் எங்கும் சென்று சுதந்தரமாக வசிக்கலாம். தொழில் நடத்தலாம். வேலைநிறுத்தம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

அதே சமயம், பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வெள்ளையர்களே இருந்தனர். தொழில்துறை பெருமளவில் வெள்ளையர்களிடமே இருந்தது. அதாவது, ஆப்பிரிக்கானர்களிடம். வங்கிகளை, பெரும் தொழிற்சாலைகளை தேசியமயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள மண்டேலா தயங்கினார். வங்கிகளை அவர் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதேபோல், வெள்ளையின தொழிலதிபர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை.

கட்சியின் கொள்கையின்படி, விடுதலை சாசனத்தில் குறிப்பிட்டிருந்தபடி, Reconstruction and Development Program (RDP) தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் சமத்துவம் நிலவவேண்டும், வளங்கள் மறுபங்கீடு செய்யப்படவேண்டும் போன்றவை இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். திட்டத்தை அறிவித்துவிட்டாலும், மேலதிகம் முன்னேற்றம் காணமுடியவில்லை.

தபோ ம்பெகி (Thabo Mbeki) போன்றவர்கள்  கொடுத்த அழுத்தத்தால், மண்டேலா ஆர்.டி.பி.யை கலைத்துவிட்டு,  Growth, Employment and Redistribution (GEAR) என்னும் செயல்திட்டத்தை அமல்படுத்தினார். முதலீட்டாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் உகந்த திட்டம் இது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் மூலம், பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டுவரலாம் என்று மண்டேலா நம்பினார். அதற்கான அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தன. ஆனால், விரைவில் நிலைமை தடம் மாறியது. 1996 தொடங்கி 2001 வரை 1.3 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசு கணக்கிட்டிருந்தது. நிஜத்தில், ஒரு மில்லியன் பேர் தங்கள் வேலையை இழந்தனர்.

உதவி செய்வதாக வாக்களித்திருந்த பல நாடுகள் பின்வாங்க ஆரம்பித்தன. அமெரிக்காவோடு தென் ஆப்பிரிக்காவுக்கு நல்ல உறவு இருந்தது என்றாலும் அது நடைமுறையில் லாபம் ஈட்டித்தரவில்லை. இன்னும் சொல்லப்போனால், தென் ஆப்பிரிக்காவுக்கு அமெரிக்கா அளித்துவந்த நிதியுதவி, நான்கு மடங்கு சுருங்கிப்போனது. அதே சமயம், தென் ஆப்பிரிக்காவில் தனியார் தொழில்துறையில் முதலீடு செய்ய அமெரிக்கா தயாராக இருந்தது. இதன் பொருள், தங்களுக்கு லாபம் அளிக்கக்கூடிய முதலீடுகளை மட்டுமே தென் ஆப்பிரிக்காவில் அமெரிக்கா மேற்கொள்ளும் என்பதுதான்.

1994 தேர்தல் வாக்குறுதிகளை மண்டேலா மீறினார். அரசாங்கத்திடம் இருந்த துறைகள் சிலவற்றை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். தனியார் தொழில்துறைகளை தேசியமாக்க நிறைய தயங்கிய மண்டேலாவால் இந்த முடிவை தயங்காமல் எடுக்கமுடிந்தது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுத்தமான குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளை முதல் முறையாகப் பெற்ற ஆப்பிரிக்கர்கள், அவற்றை இழக்கவேண்டிவந்தது. தனியாரிடம் இந்தத் துறைகள் ஒப்படைக்கப்பட்டதால், அவர்கள் கேட்ட தொகையை பல ஆப்பிரிக்கர்களால் அளிக்கமுடியவில்லை.

தனியார்மயமும் உலகமயமும் உள்ளே பரவப் பரவ வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, சுரங்கங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த பலர் வேலையிழந்தனர். மண்டேலா சில மாற்று திட்டங்களைக் கொண்டு வந்து தாற்காலிக நிவாரணம் அளிக்க முயன்றால் என்றாலும் அவை பலனளிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அந்நிய நிறுவனங்களின் சந்தையாக விரிவடைந்ததற்கு ஆப்பிரிக்கர்கள் விலை கொடுக்கவேண்டிவந்தது. இதை மண்டேலா தவிர்க்கவில்லை. தடுக்கவில்லை. கையில் முதலீட்டோடு வரும் முதலாளிகளை வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்ப அவர் தயாராக இல்லை. உள்ளே வரும் அத்தனை பேரும் வெள்ளையர்கள்தாம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

வெளித்தோற்றத்துக்கு, பல பொருளாதார மாற்றங்கள் நிகழ்வது போன்ற தோற்றம் இருந்தாலும், சில குறுகிய கால லாபங்கள் கிட்டினாலும், அடித்தளம் அதிகம் மாறவில்லை என்பதுதான் உண்மை. வெள்ளையர்களின் பொருளாதார பலம் அதிகரித்தது. கறுப்பர்களின் வாழ்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன என்றாலும், இந்த முன்னேற்றங்கள் சில புதிய கறுப்பின பணக்காரர்களை மட்டுமே தோற்றுவித்தது. ஏழை ஆப்பிரிக்கர்களின் வாழ்நிலை மாறவில்லை. மண்டேலா இதனை இப்படி எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். ஒரு கட்சிக்குத் தலைமை தாங்குவதும், ஒரு தேசத்தை வழிநடத்துவதும் ஒன்றல்ல. ஒரு நாட்டுக்குத் தலைமை தாங்கும்போது, விட்டுக்கொடுத்துதான் போயாகவேண்டும்.

மண்டேலா மீது சில கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ளைக்கார முதலாளிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகுகிறார், ஜொகன்னஸ்பர்க்கில் ஆடம்பர பங்களாக்களில அவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறார் போன்றவை அவற்றுள் சில. மண்டேலாவின் நடவடிக்கைகள் இந்த அச்சத்தை உறுதிசெய்வதாக இருந்தன. சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்குப் பதிலாக, விடுதலை சாசனத்தின் அம்சங்களை மெய்ப்பிப்பதற்குப் பதிலாக, நியோ லிபரல் பொருளாதார திட்டங்களை, மேலிருந்து கீழாகச் செயல்படுத்த ஆரம்பித்தார். அனைத்து சீர்திருத்தங்களும் கீழிருந்து மேலாகச் செய்யப்படும் என்பது அவர் முன்பு அளித்திருந்த உறுதிமொழி.

தேர்தல் வாக்குறுதி தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை பல ஆவணங்களில் சமத்துவம் என்னும் பதம் மிகுந்த ஆரவாரத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சமத்துவமின்மையே அதிகம் காணப்பட்டது. இன்றும்கூட, தென் ஆப்பிரிக்கா சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக இது நீடிக்கிறது. அதேபோல், நில சீர்திருத்தத்தையும் மண்டேலாவால் அமல்படுத்த இயலவில்லை. பல லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் நிறஒதுக்கல் ஆட்சிக்காலத்தில் தங்கள் நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியை மண்டேலாவால் தொடங்க மட்டுமே முடிந்தது.

எய்ட்ஸ் பேண்டமிக் தென் ஆப்பிரிக்கா முழுவதும் பரவி அந்த தேசத்தை உலுக்கியெடுத்தபோது, அரசாங்கம் பரிதாபமான, கையறு நிலையில் இருந்தது. பாலியல் தொழில் மூலமும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலை மூலமும் ஏழைமை மூலமும் அறியாமை மூலமும் எய்ட்ஸ் வேகமாகப் பரவியது. எய்ட்ஸ் நோய் தாக்கிய கருவுற்ற பெண்களின் விகிதாச்சாரம் (1990) 0.7 என்னும் நிலையில் இருந்து 10.5 (1995) ஆக உயர்ந்து, (1999) 22 சதவீதத்தைத் தொட்டது. என்றால், கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் மாண்டுபோயிருந்தனர் என்று பொருள். தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் இருந்த அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் அசிரத்தையுடன் இருந்தது. அரசு நிர்வாகத்தில் நிலவிய ஊழல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பின்னாள்களில், பதவியில் இருந்து இறங்கிய பிறகு, மண்டேலா எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது முந்தைய தவறுகளைச் சரிசெய்தார்.

மண்டேலா எடுத்த துணிச்சலான நடவடிக்கை, Truth and Reconciliation Commission (TRC) என்னும் அமைப்பை ஏற்படுத்தி, 1960 முதல் 1993 வரை நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள சொன்னது. இனஒதுக்கல் ஆட்சியின்போது தென் ஆப்பிரிக்கா அடைந்த பாதிப்பை, பெற்ற இழப்பை கணக்கிடுவதற்காகவும், தவறுகளை அடையாளம் காணவும், அவற்றை மீண்டும் செய்யாமல் இருக்க உதவவும் இந்த ஆய்வுகள் பயன்படும் என்று மண்டேலா நம்பினார். தவறிழைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் மண்டேலா அறிவித்தார். சர்வதேச அளவில் இதற்கு நல்ல வரவேற்பு கிட்டியது.

அதேபோல், தென் ஆப்பிரிக்காவின் கலாசார பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிகளை மண்டேலா மேற்கொண்டார். முன்பெல்லாம் அருங்காட்சியகங்களில் வெள்ளையர்களின் பெருமையை, சாதனைகளைப் பறைசாற்றும் கலைப்பொருள்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது. மண்டேலா இந்த வழக்கத்தை மாற்றினார். 1997ல் ரோபன் தீவுக்குச் சென்ற மண்டேலா, அங்கே ஒரு பாரம்பரிய அருங்காட்சியகத்தை நிறுவினார். இனஒதுக்கலின் நினைவுகளை, அதற்கெதிரான போராட்டத்தை நினைவூட்டும் சின்னமாக அந்தத் தீவு மாறியது.

உலக அரங்கிலும் பிரபலமான ஒரு தலைவராகவே மண்டேலா வலம் வந்தார். அணுஆயுதப் பரவலாக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். வட அயர்லாந்து, காங்கோ, அங்கோலா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக தென் ஆப்பிரிக்கப் படைகளை அனுப்பி அத்தேசங்களின் அச்சத்தை நீக்கினார். மனித உரிமைகளையும் அறத்தையும் மண்டேலா அரசு உலக அளவில் உயர்த்திப் பிடித்தது.

துண்டிக்கப்பட்டு கிடந்த தென் ஆப்பிரிக்காவை ஆப்பிரிக்கக் கண்டத்தோடு சேர்த்து பொருத்தினார். பலர் இதனை வரவேற்றனர் என்றாலும் சில ஆப்பிரிக்க நாடுகள் இதை தென் ஆப்பிரிக்காவின் மேலாதிக்க நோக்கமாக எடுத்துக்கொண்டன. சர்வதேச உறவுகளில் மண்டேலா எடுத்த சில முடிவுகள் குழப்பமானவை. தைவான், நிறஒதுக்கல் கால தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தது. ஏ.என்.சி.க்கும் கணிசமான அளவுக்கு நிதியுதவி செய்து அவர்கள் நம்பிக்கையை ஈட்டியிருந்தது. பிரிதொரு சமயம், மண்டேலா பெய்ஜிங் சென்றிருந்தபோது, சீனாவின் பிரமாண்டமான பளபளப்பைக் கண்டு சொக்கிப்போனார். சீனாவோடு உறவு வளர்த்துக்கொள்ள தன் விருப்பத்தை அவர் தெரிவித்தபோது, சீனா கறாராகச் சொல்லிவிட்டது. உங்களுக்குத் தைவான் வேண்டுமா சீனா வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். ஒரே சமயத்தில் இரண்டோடும் நீங்கள் கூட்டு வைத்துக்கொள்ளமுடியாது. தயங்காமல், தைவானைக் கத்தரித்துவிட்டு பெய்ஜிங்கோடு கைகுலுக்கிக்கொண்டார் மண்டேலா.

ஜனநாயகத்தை மீட்க உதவுவதாகச் சொல்லி பக்கத்து லெசோத்தாவுக்கு தென் ஆப்பிரிக்கா அனுப்பிய படைகள், அங்கே தேவையற்ற சேதத்தை ஏற்படுத்தியது. உலக அமைதிக்கு உரக்கக் குரல் கொடுத்த அரசாங்கத்தால் ஆயுத வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளமுடியவில்லை. 1995ல் நைஜீரிய சர்வாதிகாரி அபாச்சா, புகழ்பெற்ற எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கென் சரோ விவாவைக் (Ken Saro-Wiwa) கொன்றபோது, மண்டேலா அமைதியாக இருந்தார். அதற்காக விமரிசிக்கப்பட்டார்.

1994ல் மண்டேலா வின்னியை துணை அமைச்சராக நியமனம் செய்தார். அரசாங்கத்தை வின்னி விமரிசனம் செய்தபோது, அவர் நீக்கப்பட்டார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டனர். வின்னியை விவாகரத்து செய்தது பெரிய அளவில் ஊடகங்களில் வந்து மண்டேலாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.  ஜூலை 18, 1998 அன்று தனது எண்பதாவது பிறந்தநாளில், Graca Machel என்பவரை மண்டேலா திருமணம் செய்துகொண்டார்.

அதே 1998ம் ஆண்டு, விவாகரத்துப் பெற்ற மண்டேலாவின் முதல் மனைவி எவிலின், ஓய்வுபெற்ற ஒரு தொழிலதிபரை மணம் செய்துகொண்டார். தெற்கு ஜொகன்னஸ்பர்கில் இவர்கள் வசித்துவந்தனர். ஏப்ரல் 30, 2004ல் சுவாசக் கோளாறு ஏற்பட்டு எவிலின் இறந்துபோனார். மண்டேலா அப்போது டிரினிடாட் அண்ட் டொபேகோவில் இருந்தார். 2010 உலக கால்பந்து போட்டி நடைபெறும் நாடு தென் ஆப்பிரிக்காவாக இருக்கவேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்காக அவர் அங்கே பிரசாரம் செய்துகொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் பயணத்தை ரத்து செய்துவிட்டு இறுதி சடங்குகளில் கலந்துகொண்டார்.

விவாகரத்து பெற்ற பிறகு, எவிலின் ஊடகங்களில் வாய் திறந்து எதுவும் பேசியதில்லை. அவர் பேசியது ஒரே முறை. 1994ம் ஆண்டு, தென் ஆப்பரிக்காவின் முதல் ஜனநாயக தேர்தல் நடைபெற்றபோது தனது கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். இன்று, ஆப்பிரிக்கர்கள் சுதந்தரமாக வாக்களிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் மண்டேலாதான்!

0

இனவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின் போராட்டத்துக்கு க்யூபா அளித்த ஆதரவும் பங்களிப்பும் முக்கியமானது. தென் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல ஆப்பிரிக்காவிலும் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று மண்டேலாவைப் போலவே காஸ்ட்ரோவும் விரும்பினார்.

அசலான கம்யூனிச தேசங்களாக சோவியத் யூனியன், சீனா இரண்டும் திகழ்ந்தபோது, அவை தம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட பிற நாட்டு மக்களுக்கும் ஆதரவு அளித்துவந்தன. இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சோவியத்திடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் உதவியும் உத்வேகமும் பெற்றனர். ஸ்டாலின், மாவோ இருவரும் தொலை தேசங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அந்தப் போராட்டங்களில், ஒடுக்கப்படுபவர்கள் யார், ஒடுக்குபவர்கள் யார் என்பது பற்றிய மதிப்பீட்டை அவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அவர்களது வெளியுறவுக் கொள்கை அவ்வாறே வடிவம் பெற்றது.

ஃபிடல் காஸ்ட்ரோவின் பார்வையும் அவ்வாறே அமைந்திருந்தது. என்ன வளம் கிடைக்கும், எப்போது சுரண்டலாம் என்று கழுகுப் பார்வையுடன் பல நாடுகள் ஆப்பிரிக்காவைக் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, க்யூபா அத்தேசத்தை அக்கறையுடனும் மனிதாபிமானத்துடனும் அணுகியது. தெற்கு, மேற்று மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டங்களுக்குத்  தன் படைகளைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார் காஸ்ட்ரோ. 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளுக்குச் (அங்கோலா, நமீபியா, மொசாம்பிக், கினி பிசாவு, கேப் வெர்டே, சாவோ தோமே, பிரின்ஸிபி) சென்று க்யூபப் படைகள் போரிட்டன. கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் க்யூப ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், சமூகப் பணியாளர்கள் ஆப்பிரிக்காவின் போராட்டத்தில் பங்கேற்றனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்காவின் மெய்யான நண்பனாக ஃபிடல் காஸ்ட்ரோவைக் கண்டார் மண்டேலா. பல சந்தர்ப்பங்களில், காஸ்ட்ரோவை நன்றியுடன் அவர் நினைவுகூர்ந்தார். லத்தீன் அமெரிக்கா காஸ்ட்ரோவின் பின்னால் அணிதிரண்டுவருவதைக் கண்டு ஏற்கெனவே எரிச்சலைடைந்திருந்த மேற்குலக நாடுகள், மண்டேலாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. காஸ்ட்ரோவுடனான உறவுகளை மண்டேலா முறித்துக்கொள்ளவேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுக்கொண்டன. மண்டேலா பதவி ஏற்றபிறகு, பலமுறை இந்த கோரிக்கை மண்டேலாவிடம் எடுத்துச்செல்லப்பட்டது.

மண்டேலா இந்தக் கோரிக்கையை நிராகரித்தார். ஃபிடல் காஸ்ட்ரோ என் ஆருயிர் நண்பன், அவருடனான உறவு தொடரும் என்று அறிவித்தார். ‘வெள்ளை நிறவெறி ஆட்சி செய்த தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் உரிமைகள் இழந்து ஒடுங்கிப்போயிருந்தோம். அப்போது நீங்கள்தான் எங்கள் அரசுக்கு ஆதரவு வழங்கினீர்கள். க்யூபாதான் எங்கள் பக்கம் நின்றது. எங்களுக்கு உதவி செய்ய, போராளிகளையும் வைத்தியர்களையும் ஆசிரியர்களையும் க்யூபா அனுப்பிவைத்தது. எமக்காக ரத்தம் சிந்தியதற்காக, ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள், க்யூபாவுக்குத் தலை வணங்குகிறோம். இந்த சுயநலமற்ற சர்வதேசியத்தை நாங்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம்.’

ஆப்பிரிக்காவில் இயங்கிக்கொண்டிருந்த பல போராளி அமைப்புகள் தொடக்கக்கால ஏ.எம்.சியைப் போலவே மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தன. அந்த அமைப்புகளுக்கு சோவியத் நிதியுதவி அளித்தது. க்யூபா ஆயுத உதவிகள் செய்தது. குறிப்பாக, நமீபியாவின் சுதந்தரத்துக்கு க்யூபாவின் பங்களிப்பு கணிசமானது. அதே போல், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததிலும் க்யூபாவின் பங்கு முக்கியமானது.

0

மண்டேலாவின் நிர்வாக முறை, ஆட்சிமுறை, செயல்திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள் விமரிசிக்கப்பட்டன. ஆனால், எதுவொன்றும் அவரது பிம்பத்தை மாற்றியமைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் மண்டேலா உலகின் விருப்பத்துக்குரிய தலைவராகவே வளர்ந்து வந்தார். வண்ண ஆப்பிரிக்கச் சட்டைகள் அணிந்து அவர் வலம் வந்தபோது, தனது எண்பதாவது வயதில் ஒய்யாரமாக ஆப்பிரிக்க நடனம் ஆடியபோது, திரண்டு வந்த கூட்டத்தைப் பார்த்து கையசைத்தபோது, உலகம் மண்டேலாவை நேசித்தது. கருணையுள்ள முதியவராக, தேசத்தின் தந்தையாக அவர் பார்க்கப்பட்டார். பார்க்கப்படுகிறார்.

1997ம் ஆண்டு ஏ.என்.சி.யின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கட்சியின் தலைமை பொறுப்பை தபோ ம்பெகியிடம் ஒப்படைத்தார் மண்டேலா. அவரைத் தன்னுடனே வைத்திருந்து தகுந்த அரசியல் பயிற்சிகளை அளித்திருந்தார் மண்டேலா. பதவி மீது அவருக்கு இருந்த விருப்பமின்மையையும் அடுத்த தலைமுறையை வளர்த்துவிடுவதில் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் இது வெளிப்படுத்துகிறது. மண்டேலாவுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராக மாறினார் தபோ ம்பெகி.

தனது எண்பத்தோரு வயது மண்டேலா பதவியில் இருந்து விலகியபோது ஓய்வு பெறுவது அவரது நோக்கமாக இருக்கவில்லை.

0

நெல்சன் மண்டேலாவின் உருவப்படங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. கேப் டவுனிலிருந்து ஜொகனஸ்பெர்க் வரை. கடைத்தெரு முதல் பள்ளிக்கூடம் வரை. சைக்கிளின் முன்னால். காரின் பின் கண்ணாடியில். தபால் பெட்டியின் மீது. பேருந்தின் மீது. வீட்டுச் சுவர்களில். தவிர்க்க முடியாத சக்தியாக, ஒரு முக்கிய அடையாளமாக மண்டேலா மாறியிருக்கிறார். ‘மடிபாவை எங்களுக்குப் பிடிக்கும். அவரை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறோம்.’

தென் ஆப்பிரிக்கா நிறையவே மாறியிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டல்கள் திறந்திருக்கிறார்கள். செய்தித்தாள்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருபது சதவீத ஆப்பிரிக்கர்கள் தங்களை நடுத்தர வர்க்கம் என்று அழைத்துக்கொள்கிறார்கள். பெருமையாக. மற்றொரு பக்கம், மண் தரைகளும் ஒழுகும் மேற்கூரைகளும் அப்படி அப்படியே நீடிக்கின்றன. பல ஆப்பிரிக்கர்கள் ஜாகுவார் கார்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிக்னலில் வண்டியை நிறுத்தும்போது, பிச்சை கேட்டு கறுப்பு கைகள் நீள்கின்றன. சைரன் ஒலிகளுக்கு இடையே, தேய்ந்த குரலில், அம்மா தாயே!

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது தென் ஆப்பிரிக்காவில்தான். 45 மில்லியன் மக்களில் 5 மில்லியன் பேர். ஏழைமையும் மிக அதிகம். உலகளில், ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் நிறைந்த நாடு, தென் ஆப்பிரிக்கா. 1994 கணக்குப்படி, தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களின் per capita income ஆப்பிரிக்களைக் காட்டிலும் 9.5 மடங்கு அதிகம். எனவே, வன்முறையும் வழிப்பறிக்கொள்ளையும் அதிகம். 1994-95ல் 84,785 திருட்டு, வழிப்பறிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. 2002-03ல் இந்த எண்ணிக்கை 1,26,905 ஆக உயர்ந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். பதிவாகாத குற்ற விவரங்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம்.

இனஒதுக்கலை அதிகாரபூர்வமாகக் களைந்த பின்னர், தென் ஆப்பிரிக்கா சந்தித்த முக்கியப் பிரச்னைகளுள் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். அதன் காரணமாக தோன்றிய அந்நியர்கள் மீதான வெறுப்புணர்வு. தென் ஆப்பிரிக்கர்கள் அல்லாதவர்கள் காழ்ப்புணர்வுடன் நடத்தப்படுவதாக தொடர்ந்து  பல ஆண்டுகள் புகார்கள் வெளிவந்தன. பிழைப்பதற்காக பக்கத்து ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து வந்தவர்கள், தென் ஆப்பிரிக்கர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். பல சமயங்களில், அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். தங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை அந்நியர்களாகிய அவர்கள் பறித்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்கர்களோ, குற்றம் கூறினர். இதையடுத்து ஜொகன்னஸ்பர்கில் 2008ல் கலவரங்கள் வெடித்தன. இந்தக் கலவரங்களில் சோமாலியா, ஸ்வாஸிலாண்ட், நைஜீரியா நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக அடித்து விரட்டப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். அறுபது பேர் இறந்துபோனார்கள்.

மோதல்களை நிறுத்தச் சொல்லி மண்டேலா, டெஸ்மண்ட் டுட்டூ ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அந்நியர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு என்ன காரணம்? வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, ஊழல். அதன் காரணமாக எழுந்த அச்சம், பாதுகாப்பற்ற நிலை, கோபம். இதன் அடிநாதம், மண்டேலா அரசு அறிமுகப்படுத்திய நியோ லிபரல் பொருளாதாõரக் கொள்கை.

மண்டேலா பதவியேற்றபோது, அவர் அணுகுமுறை எப்படி இருக்குமோ என்னும் சந்தேகம் தென் ஆப்பிரிக்க, சர்வதேச முதலாளிகளுக்கு இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர், அவர்கள் துணையுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், கம்யூனிச சித்தாந்ததை உயர்த்திப் பிடித்தவர், ஒடுக்குமுறைக்கு ஆளாக சிறைவாசி. போராட்டக் குணம் கொண்டவர் வேறு. மண்டேலா அவர்களுடைய அச்சத்தைப் போக்கினார். கம்யூனிச சித்தாந்தத்தை நான் அறிவேன். ஆனால், நான் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. நான் அமைக்கப்போவது கம்யூனிச அரசு கிடையாது.

தென் ஆப்பிரிக்கா குறித்த சர்வதேச பார்வையும் மாற்றம் பெற்றது. மண்டேலா சிறையில் இருந்த சமயத்தில், பிரிட்டனின் பிரதம மந்திரி மார்கரெட தாட்ச்சர் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தார். ஏ.என்.சி. ஆட்சியை அமைக்கும் என்று கனவுகூட காணவேண்டாம் என்று 1987வரை அவர் அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று தடை செய்திருந்தது. பதவியேற்று, ஓய்வு பெற்ற பிறகும், மண்டேலா தீவிரவாதிகள் பட்டியலில்தான் இருந்தார். மிகச் சமீபத்தில்தான், ஜார்ஜ் புஷ் அரசு இந்தத் தடைகளை அகற்றியது. அமெரிக்க ரீகன் அரசாங்கம் நிறவொதுக்கல் தென் ஆப்பிரிக்காவுக்கு தன் முழு ஆதரவையும் அளித்தது. பின்னர், மண்டேலா சிறையில் இருந்து வெளிவந்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர், ஜார்ஜ் புஷ் சீனியர்.

மண்டேலா என்னும் தனிப்பட்ட ஆளுமை மீது அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டிருந்த மதிப்பு ஒரு காரணம். மறுப்பதற்கில்லை. அதே சமயம், மண்டேலாவின் பொருளதாரக் கொள்கைகளே இந்த இரு பெரும் நாடுகளை தென் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ய பெருமளவில் தூண்டின என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இனஒதுக்கலை ஆதரித்த இந்த இரு நாடுகளோடும் மண்டேலா சுமூகமான உறவே கொண்டிருந்தார். எனவேதான் காலனியாதிக்க எதிர்ப்பை ஊக்குவித்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பை அவரால் மேற்கொள்ளமுடியவில்லை. மேற்கத்திய உலகோடு அனுசரித்துப் போகவேண்டும் என்றே விரும்பினார்.

கோவன் ம்பெகி ஒரு மார்க்சிஸ்ட். ஆனால் அவர் மகன் தபோ ம்பெகி முதலாளித்துவத்தை ஆதரித்தார். தேசியமயமாக்கத்தை எதிர்த்தார். தென் ஆப்பிரிக்க கதவுகளை சர்வதேச முதலீட்டுக்காக அகலமாகத் திறந்துவிட்டவர். நியோ லிபரல் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி மண்டேலாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இதன் விளைவை தென் ஆப்பிரிக்கா இன்றும் அனுபவித்து வருகிறது. புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு புதிய கறுப்பின மேட்டுக்குடி வர்க்கம் உருவாக ஆரம்பித்தது. பொருளாதார அடித்தளம் மாறவில்லை என்பதால் ஆப்பிரிக்கானர்களும் தடங்கலின்றி மென்மேலும் வளர்ச்சியுற்றனர். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி பெருகிநின்றது. இந்தப் புதிய மேட்டுக்குடி ஆப்பிரிக்கர்களுக்கு குறைந்த கூலியில் பணியாற்ற பக்கத்து நாடுகளில் இருந்து ஏழை கறுப்பின மக்கள் தென் ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்தனர். ஏற்கெனவே தேக்கத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அந்நிய கறுப்பின  மக்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதை தென் ஆப்பிரிக்காவின் புதிய இனவெறுப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் (Xenophobia) எழுதின. இது பிரச்னையை திசைதிருப்பும் செயலே அன்றி வேறில்லை. இனத்துக்கு, நிறத்துக்கு அப்பாற்பட்ட பிரச்னை இது. இது பொருளாதாரப் பிரச்னை.

0

மண்டேலாவும் அவர் இயக்கமும் இடையில் சில காலம் வன்முறை மீது நம்பிக்கை வைத்திருந்தபோதும், பெரும்பாலும் அவர் அகிம்சை கொள்கையையே உயர்த்திப் பிடித்துள்ளார். உலகம் தழுவிய அளவில் மண்டேலா இன்று கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளோ ஆட்சிமுறையோ அல்ல, அவரது அகிம்சை வழிமுறையே. எதை அவர் முன்னிறுத்தினாரோ அதன் குறியீடாகவே அவர் இன்று மாறியிருக்கிறார். மாற்றப்பட்டிருக்கிறார். காந்தி, மார்ட்டின் லூதர் கிங் வரிசையில் நெல்சன் மண்டேலாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே காரணம்.

ஆப்பிரிக்காவின் முதன்மையான மகன் என்று மண்டேலாவை வருணிக்கிறார் காஸ்ட்ரோ. மண்டேலாவுடன் ரோபன் தீவுக்குச் சென்று பார்வையிட்டார். நீங்களும் மண்டேலாவைப் போல் தனிமைச் சிறையில் இருந்தவர்தானே என்று கேட்கப்பட்டபோது, அவசரமாக மறுத்தார் காஸ்ட்ரோ. நான் இருந்தது இரு ஆண்டுகள் மட்டும்தான். தயவு செய்து என்னை அவரோடு ஒப்பிடாதீர்கள். அவ்வாறு ஒப்பிட்டால் எனக்கு அவமானமாக இருக்கிறது.

மண்டேலா ஆப்பிரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ சொந்தமானவர் அல்லர், அவர் உலகுக்கு சொந்தமானவர் என்கிறார் மண்டேலாவால் ஈர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், நதின் கார்டிமர்.

1991ம் ஆண்டு காஸ்ட்ரோ கூறியது. ‘நேர்மையான மனிதர் என்பதற்கு உங்களுக்கு ஒரு உதாரணம் தேவைப்பட்டால், நெல்சன் மண்டேலாவை எடுத்துக்கொள்ளலாம். எதற்கும் விட்டுக்கொடுக்காத, துணிச்சலான, அமைதியான, புத்திசாலியான, செயல்வேகம் கொண்ட ஒரு நாயகன் உங்களுக்குத் தேவைப்படுகிறாரா? இதோ மண்டேலா இருக்கிறார். அவரை நேரில் சந்தித்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்து சேரவில்லை. பல ஆண்டுகளாக நான் இதுகுறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஒரு அடையாளமாக நான் அவரைக் காண்கிறேன்.’

பதவியைவிட்டு அகன்ற பிறகு துணிச்சலும் துடிதுடிப்பும் மண்டேலாவிடம் ஒட்டிக்கொண்டது. அதிகாரத்தில் இருந்தபோது சாதிக்கமுடியாத விஷயங்களை இப்போது செயல்படுத்தி பார்க்க அவர் விரும்பினார். நெல்சன் மண்டேலா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ‘46664: எய்ட்ஸுக்காக உங்கள் வாழ்வில் இருந்து ஒரு நிமிடத்தை ஒதுக்குங்கள்’ என்னும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட பிரசாரம், பரவலான கவனத்தைப் பெற்றது. (466 என்பது ரோபன் தீவுச் சிறையில் மண்டேலாவின் கைதி எண். 64 சிறையிலிருந்த வருடத்தைக் குறிக்கிறது). நான் ஒரு எய்ட்ஸ் நோய் சிகிச்சை ஆதரவாளர் என்னும் வாசகத்தை தனது டி ஷர்ட்டில் அணிந்து பெருமிதத்துடன் வலம் வந்தார். 2005ல் ஒரு கூட்டத்தில், வெடித்துக் கிளம்பிய அழுகைக்கிடையே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆம், என் சொந்த மகன் மக்காதோ, எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, இறந்துபோனான். தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் ஒன்று சேர்ந்து எய்ட்ஸை விரட்டியடிக்கவேண்டும்.

தொண்டு செய்வதை தனது முதன்மையான பணியாக மாற்றிக்கொண்டார். புஷ், இராக் மீது தொடுத்த யுத்தத்தை எதிர்த்தார். புஷ்ஷிடம் பேசி தன் வருத்தங்களைத் தெரிவிக்க அவர் விரும்பியபோது, அவர் தொலைபேசிக்குப் பதிலில்லை. உடனே மண்டேலா சீனியர் புஷ்ஷைத் தொடர்பு கொண்டார். உங்கள் மகனிடம் பேச முயன்றேன். அவர் பதிலளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மகனைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள். மகனை ஒரு தந்தையால் கண்டித்து வழிக்குக் கொண்டவரமுடியும் என்று நம்பும் ஓர் அப்பாவி ஆப்பிரிக்கத் தந்தையாக மண்டேலா வெளிப்பட்ட தருணம் இது.

nelson mandela book தனது 89வது பிறந்தநாளின்போது, தி எல்டர்ஸ் என்னும் பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். ஜிம்மி கார்ட்டர், டெஸ்மான் டுட்டு, கோஃபி அனான் போன்ற மூத்தவர்களோடு அணி சேர்ந்து அரசியல் வழிகாட்டலை நடத்தலாம் என்று திட்டமிட்டார். யுத்த பூமியாக மாறியிருந்த டாஃபருக்கு அமைதி குழு அனுப்புவது, உலக அமைதி குறித்து விவாதிப்பது என்று சில முயற்சிகளை மேற்கொண்டார்.

2009ல் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மண்டேலா தனது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தார். உலகை மாற்றும் கனவை யாரும் மேற்கொள்ளலாம் என்பதை ஒபாமாவின் வெற்றி உணர்த்துகிறது என்றார். காந்தியும் மண்டேலாவும் தன்னை ஈர்த்த முக்கியத் தலைவர்கள் என்று ஒபாமா முன்னர் கூறியிருந்தார்.

மண்டேலாவின் நோக்கங்களை, கனவுகளை கேள்விக்கு உட்படுத்தமுடியாது. தென் ஆப்பிரிக்கர்கள் சுதந்தர, ஜனநாயக தேசமாக உயிர்த்திருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். நிறவெறி ஆட்சியை உடைத்து ஜனநாயகத்தை மீட்டுக்கொண்டுவந்ததில் அவர் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் அவர் மேற்கொண்ட நடவடிக்கைககளும், அமல்படுத்திய பொருளாதாரத் திட்டங்களும் மண்டேலாவின் நோக்கங்களைச் சிதறடித்தன.

நூற்றாண்டுகால அடிமை வாழ்க்கையை, நூற்றாண்டு கால காலனியாதிக்க விளைவுகளை ஐந்தாண்டு காலத்தில் மாற்றிவிடமுடியாது என்பது நிஜம். மாற்றங்கள் உடனே நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று தேர்தல் வாக்குறுதியிலேயே மண்டேலா இதை அழுத்தமாக குறிப்பிட்டிருந்தது நிஜம். தென் ஆப்பிரிக்கா செல்லவேண்டிய பாதை நீண்டது என்பதிலும் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், மண்டேலா நிர்வாகம் ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் தெளிவாக அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவில்லை. கனவுக்கும் செயல்திட்டத்துக்கும் இடையே, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையே, லட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே  விழுந்துவிட்ட இடைவெளியை இந்த ஐந்தாண்டுகளில் மண்டேலாவால் குறைக்கமுடியவில்லை.

அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக 2006ம் ஆண்டு தனது 88வது வயதில் மண்டேலா அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடுமாறு தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் அவரை நிர்ப்பந்திப்பதாகவும், அரசாங்கத்தை விமரிசனம் செய்து அவர் சில சமயம் பேசுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் யூகங்கள் எழுந்தன.

தன் வாழ்க்கையின் மூலம், தன் போராட்டங்கள் மூலம், தன் சாதனைகள் மூலம், தன் அரசியல் பங்களிப்புகள் மூலம், ஏன், தன் தவறுகள் மூலமும் தென் ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவுக்கு, உலகுக்கு மண்டேலா தெரிவிக்க விரும்பும் செய்தி ஒன்றுதான். ஒரு உயிரி எப்போது முழு முற்றாக விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே!

நெல்சன் மண்டேலா (1918-2013) இன்று காலை மரணமடைந்தார்.  2009ம் ஆண்டு நான் எழுதிய நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாற்றில் இருந்து அவர் நினைவாக ஓர் அத்தியாயம் இங்கே.

Share/Bookmark


Viewing all articles
Browse latest Browse all 405

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!