மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 18
நீண்ட நெடிய கேள்விகளும் விசாரணைகளும் ஆவணங்கள் பரிசீலனைகளும் முடிந்தபிறகு ஜூலை 14 என்று முத்திரை குத்தி எர்னஸ்டோவையும் ஆல்பர்டோவையும் அதிகாரிகள் அனுப்பிவைத்தார்கள். கொலம்பியா, வெனிசூலா இரு நாடுகளுக்கும் எல்லையாகத் திகழ்ந்த பாலத்தின் வழியாக இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சிடுசிடுப்பிலும் கடுமையிலும் கொலம்பிய அதிகாரிகளுக்கும் வெனிசூலா அதிகாரிகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கவில்லை.
மேற்கொண்டு முன்னேறுவதற்கு அனுமதி கிடைக்கும்வரை சான் அன்டோனியா டி டாச்சிரா என்னும் பகுதியில் இருவரும் காத்திருந்தார்கள். இங்கு அனுமதி என்பது அரசாங்க அனுமதி அல்ல. அதிகாரம் கையிலிருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அனுமதி வழங்கவும் மறுக்கவும் உரிமை பெற்றிருந்தார்கள். அவர்கள் சந்தேகிக்கும் நபர்களை அவர்களால் திருப்பியனுப்பமுடியும். சுங்கச்சாவடியில் பைகள் சோதனை செய்யப்பட்டன. எர்னஸ்டோ தனது ரிவால்வரை அழுக்கு மூட்டையில் வைத்திருந்ததால் அதிகாரிகள் அதைத் தீண்டவேயில்லை. ஆனால் மிகவும் சிரமப்பட்டு எர்னஸ்டோ பாதுகாத்த கத்தி சிக்கிக்கொண்டது.
வெனிசூலாவின் தலைநகரம் காரகாஸை அவர்கள் அடைந்தாகவேண்டும். தான் செல்லவிருந்த பகுதி குறித்து ஓரளவுக்கு அடிப்படையான தகவல்களையாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் எர்னஸ்டோ ஆர்வமாக இருந்தார். அவ்வாறே அருகிலிருந்த நூலகத்துக்குச் சென்று வெனிசூலா குறித்து படிக்க ஆரம்பித்தார். இந்த முறையும் ஆஸ்துமா மீண்டும் தலைதூக்கியதோடு அதிகப்படியான சிரமத்தையும் அளிக்க ஆரம்பித்திருந்தது. பேருந்தில் மூன்று நாள் பயணமா அல்லது சிறிய ஊர்தியில் இரு நாள்களா என்னும் கேள்வி வந்தபோது பேருந்தை நிராகரித்தார் எர்னஸ்டோ. ஆஸ்துமாவை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டியிருந்தது.
கையிருப்பு குறைவாக இருந்ததால், அடிக்கடி சாப்பிடவேண்டாம் என்று முடிவு செய்தார் எர்னஸ்டோ. ஒரு நிறுத்தத்தில், அனைவரும் வண்டியிலிருந்து இறங்க எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் மட்டும் வண்டியில் மூட்டைகளோடு அமர்ந்திருப்பதைக் கண்டு மனம் இறங்கிய ஓட்டுநர் இருவரையும் வரவேற்று தன் செலவில் நல்ல உணவு வாங்கிக்கொடுத்தார். தன்னிடம் இருந்த கடைசி மாத்திரைகளையும் விழுங்கிவிட்டு மூச்சு விடச் சிரமப்பட்டுக்கொண்டு எப்போது காரகாஸ் வரும் என்று காத்திருந்தார் எர்னஸ்டோ.
பொழுது புலரத் தொடங்கியபோது காரகாஸ் வந்து சேர்ந்தார்கள். களைப்பின் உச்சத்தில் இருந்தார் எர்னஸ்டோ. ‘அரை பொலிவார் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்த அறையிலிருந்த படுக்கையில் விழுந்தேன். ஆல்பர்ட்டோ எனக்குப் போட்ட அட்ரினலின் ஊசியின் துணையுடன் ஒரு பிணத்தைப் போல் தூங்கினேன்.’
காரகாஸில் எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பிரிய வேண்டியிருந்தது. எர்னஸ்டோ தன் மாமாவின் கார்கோ விமானத்தைப் பயன்படுத்தி மியாமிக்குச் செல்ல விரும்பினார். அங்கிருந்து பியூனஸ் ஏர்ஸ். ஆல்பர்ட்டோ காராகஸில் சிறிது காலம் தங்கியிருந்து, அருகிலுள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்ற விரும்பினார்.
பயணம் என்பது புதியனவற்றைக் கண்டுகொள்வது மட்டுமல்ல பயணம் என்பது விடைபெறுவது, விடைகொடுப்பது. மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்குவதற்கு முன்பு தன் காதலியிடம் இருந்தும் பயணத்தின்போது தனது மோட்டார் சைக்கிளிடம் இருந்தும் இறுதிகட்டத்தில் தன் நண்பனிடம் இருந்தும் எர்னஸ்டோ பிரியவேண்டியிருந்தது. ‘ஆல்பர்ட்டோ என்னுடன் இல்லாதது மிகுந்த வேதனையைத் தந்தது. ஒரு கற்பனையான தாக்குதலில் என் இடுப்பு ஒடிந்துபோனது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவனிடம் ஏதேனும் சொல்வதற்காக அடிக்கடி திரும்பினேன். அவன் அங்கே இல்லாததை பிறகுதான் என்னால் உணரமுடிந்தது… நாங்கள் இருவரும் இரண்டறக் கலந்திருந்து, ஒரே மாதிரியான நிலைமைகளில் ஒரே மாதிரியாகக் கனவு கண்டு வந்த பழக்கம் எங்களை மேலும் நெருக்கமானவர்களாக ஆக்கியிருந்தது.’
முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்டுகொண்டே செல்லும் ஏதாவதொரு அம்சம் வாழ்வில் உண்டா? வீட்டுக்குப் போயாகவேண்டும். படிப்பைத் தொடரவேண்டும். பட்டம் பெற்று, மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவேண்டும். சேகரித்த அனுபவங்களின் துணைகொண்டு தொழுநோய் மருத்துவத்தில் சாதனை படைக்கவேண்டும். ‘எனினும் விடைபெறுவது என்ற எண்ணமே எனக்கு மகிழ்ச்சி தரவில்லை.’
காரகாஸ் மலைகளின்மீது ஏறி சிறிது நேரம் நடந்தார் எர்னஸ்டோ. நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு தெளிவாக எதிர்காலம் குறித்து சிந்திக்க முயற்சி செய்தார். மலைகளில் கல் வீடுகளைக் காணமுடியவில்லை. திரும்பும் திசையெங்கும் குடிசைகளே நிறைந்திருந்தன. ஒரு குடிசைக்குள் நுழைந்து பார்த்தார். ஏழைமையின் பிடியில் சிக்கியிருந்த ஒரு குடும்பம் அங்கே வசித்துக்கொண்டிருந்தது. உங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று எர்னஸ்டோ கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். படம் எடுத்ததும் எங்களுக்கு அதை முதலில் கொடுப்பதாக இருந்தால் சம்மதிக்கிறோம் என்றார்கள். அது சாத்தியமில்லை, கழுவிய பிறகே படம் கிடைக்கும் என்று எர்னஸ்டோ சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. மறைந்திருந்து ஒரு குழந்தையைப் படமெடுக்க முயன்றார் எர்னஸ்டோ. அந்தக் குழந்தை பயத்துடன் தடுமாறிவிழுந்துவிட, கண்டபடி திட்டியபடி அவர்கள் எர்னஸ்டோவைத் துரத்தத் தொடங்கினார்கள்.
கிரானாடோவிடம் இருந்தும் வெனிசூலாவிடம் இருந்தும் விடைபெற்றுக்கொண்டு எர்னஸ்டோ ஒரு சரக்கு விமானத்தில் ஜூலை 27, 1952 அன்று மியாமி சென்று சேர்ந்தார். ஒரு நாள் அங்கிருந்துவிட்டு, திரும்பவும் காரகாஸ் சென்று, பிறகு அங்கிருந்து அர்ஜென்டினா வந்து சேர்வதுதான் அந்த விமானத்தின் பயணத்திட்டம். ஆனால் விமானத்தின் எஞ்சின் ஒன்று பழுதடைந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் சரிசெய்யப்படும்வரை மியாமியில் இருந்து விமானம் கிளம்பவில்லை.
முடிவடையவிருந்த பயணத்தின் திடீர் நீட்சி என்று கொள்ளலாம்தான். ஆனால் எர்னஸ்டோவிடம் இருந்தது ஒரு டாலர் மட்டுமே. ஒரு சிறிய விடுதிக்குச் சென்று, ஊருக்குச் சென்றதும் பணம் அனுப்புகிறேன் என்று மன்றாடி ஓர் அறையைப் பிடித்துக்கொண்டார். மற்ற விஷயங்களை வீடு திரும்பியதும் தன் தந்தை எர்னஸ்டோ குவேரா லிஞ்சிடம் பகிர்ந்துகொண்டார். இனி வருபவை எர்னஸ்டோ சீனியரின் குறிப்புகள்.
‘பணம் எதுவும் இல்லாமல் எப்படி நாள்களைக் கழித்தான் என்று வீடு திரும்பியதுமே அவன் எங்களிடம் கூறினான்… ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் அவன் நகரத்தின் மையத்திலிருந்த தனது விடுதியில் இருந்து சுற்றுலாத் தலமான கடற்கரைக்கு நடந்து சென்றான். அவன் அந்த வழியாகச் சென்ற வாகனங்களில் அரிதாகவே ஏற்றிக்கொள்ளப்பட்டான். இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் பதினைந்து கிலே மீட்டர் என்பதாக எனக்கு நினைவு. ஆனால் அவன் தன்னால் இயன்ற அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தான். அமெரிக்காவை, அதன் ஒரு சிறு பகுதியைத்தான் என்றபோதும், அறிந்துகொள்ள முயன்றான்.’ எர்னஸ்டோவின் பயணங்களுக்கு உந்து சக்தி இந்த இரு அம்சங்கள்தாம். இயன்ற வரை மகிழ்ச்சியாக இருப்பது. புதிய சூழலை முடிந்தவரை தெரிந்துகொள்ள முயன்றது.
எர்னஸ்டோவின் பயணத்தில் கடைசி கட்டம்வரை சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஒரு மாத காலத்தை மியாமியில் கழித்துவிட்டு, எஞ்சின் பழுது பார்க்கப்பட்ட பிறகு விமானத்தில் ஏறி, அது பறக்கவும் தொடங்கிவிட்டது. உறக்கத்தில் இருந்த எர்னஸ்டோவை ஒரு சிறுவன் அவசரமாக எழுப்பினான். ஆபத்து, சக்கரங்கள் வெளியில் வர முடியாதபடி விமானத்தின் அடிப்பகுதி செயலிழந்துவிட்டது, எழுந்திருங்கள்! எர்னஸ்டோ அதை ஒரு வேடிக்கையாக நினைத்து, மீண்டும் தூங்கப்போய்விட்டார். பயணிகள் என்று பார்த்தால் பைலட் போக, எர்னஸ்டோவும் அந்த சிறுவனும்தான் (அவன் குதிரை லாயத்தைச் சேர்ந்தவன்) விமானத்தில் இருந்தனர். மற்றபடி பழக்கூடைகள் கொண்ட பெட்டிகளே அதிகம் நிறைந்திருந்தன.
விழிப்பு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது லாரிகளும் கார்களும் தீயணைப்பு வண்டிகளும் விமானத்தைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதை எர்னஸ்டோ பார்த்தார். விமானத்தின் அடிப்பகுதி மெய்யாகவே செயலிழந்திருந்தது. ஆனால் எப்படியோ ஆபத்து எதுவுமின்றி விமானம் தரையிறக்கப்பட்டது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு தன் மகனைக் கண்ட அந்தத் தருணத்தை எர்னஸ்டோ சீனியரின் வார்த்தைகளில் பார்ப்போம்.
‘மியாமியிலிருந்து வரும் சரக்கு விமானம் ஒன்றில் எர்னஸ்டோ மாலையில் வரப்போவதாக ஒரு நாள் காலையில் பியூனஸ் ஏர்ஸிலிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. எட்டு மாதங்களாக, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று பயணம் முடிந்து கடைசியில் அவன் வீடு திரும்புகிறான்.
‘எஸேய்ஸா விமான நிலையத்தில் அவனை வரவேற்பதற்காகக் குடும்பத்தினர் அனைவரும் சென்றோம். அன்று பிற்பகலில் மழை வரும்போல் இருந்தது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் வெளிச்சமே இல்லை. சரக்கு விமானம் பிற்பகல் இரண்டு மணிக்கு வருவதாக இருந்தது. நாங்கள் இரண்டு மணி நேரம் முன்னதாகவே காத்திருந்தோம். விமானம் வந்து சேராததால் நாங்கள் எல்லோரும் பதற்றமடைந்தோம். கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் ஏதும் வரவில்லை. சரக்கு விமானங்கள் எப்போதும் குறித்த நேரத்துக்கு வருவது கிடையாது என்றும், அவற்றை யாரும் எதிர்பார்க்காதபோதுதான் ஓடுபாதையில் அவை இறங்குவது வழக்கம் என்றும் கூறி, அவர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.
‘அன்றும் அதுதான் நடந்தது. அந்த டக்ளஸ் விமானம் திடீரென்று தோன்றியது. மேகங்களினூடாகத் தாழ்வாகக் பறந்தது. விமான நிலையத்தை வட்டமிட்டுவிட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் தரையிறங்கியது. சில கணங்களுக்குப் பின்னர், மழைத் துளியில் நனைந்து விடாதவாறு மழைக்கோட்டு அணிந்தபடி, எர்னஸ்டோ விமானத்திலிருந்து வெளியில் வந்து, ஓடுபாதையின் எல்லையை நோக்கி ஓடிவந்தான். நான் மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்தேன். என் கைகளை வாயருகில் குவித்து, என்னால் முடிந்த அளவுக்கு உரக்கக் கத்தினேன். அந்த சப்தம் அவனுக்குக் கேட்டது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. பிறகு மேல்தளத்தில் நாங்கள் நின்றுகொண்டிருப்பதை அவன் கண்டுகொண்டான். எங்களைப் பார்த்து கையசைத்தபோது புன்னகையுடன் காட்சியளித்த அவனுடைய முகம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அது 1952ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்.’
முடிந்தது