மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 23
கடந்த கால வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கடந்தகால மனிதராகவேண்டும். மின்சாரம் இருந்திராத காலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இன்றைய மின்சாரம் உங்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் அனைத்து அனுபவங்களையும் முற்றாகத் துடைத்துவிட்டு வேறொரு நபராக ஆகவேண்டும். இல்லையென்றால், மின்சாரம் இல்லாத காலகட்டத்து மனிதர்கள் நிரந்தரமாக சோக இருளில் மூழ்கிக் கிடந்ததாகத்தான் உங்களுக்குத் தோன்றும். அவர்களோ இரவென்றால் இருட்டாகத்தானே இருக்க வேண்டும் என்று சொல்லியபடி வாழ்க்கையை அமோகமாக வாழ்ந்துவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால், அவர்களைப் பார்த்து போலியாகப் பரிதாபப்பட்டு, ‘மின்சாரத்தைக் கண்டுபிடிக்கவிடாதவர்கள்’ பற்றிய முழக்கங்களை உருவாக்கிக் கொள்ள ஆரம்பிப்பீர்கள். உண்மையோ இருளில் இருக்கும் கரிய நிறக் கற்சிலைபோல் மவுனமாக உங்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்துக்கொண்டிருக்கும்.
கடந்த காலத்தில் ஒருவருக்கு, குறிப்பாகக் கடைநிலை சாதியினருக்கு மறுக்கப்பட்டவையாகச் சொல்லப்படுபவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவையாக இருப்பதை ஒருவர் பார்க்க முடியும். அல்லது, அவை வேறு வழியில் ஈடுசெய்ய முடிந்தாகவே இருக்கும். உதாரணமாக, பெருந்தெய்வக் கோயிலுக்குள் ஒரு தலித்தை நுழைய அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துக்கொள்வோம். அவருக்கு அவருடைய குலதெய்வக் கோயிலில் இருக்கும் தெய்வம்தான் முக்கியம். பெருந்தெய்வக் கோயிலில் இருக்கும் தெய்வத்தைத் தொழவிடவில்லை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்னையே அல்ல. உண்மையில் பெருந்தெய்வக் கோயிலுக்கு நான் ஏன் செல்லவேண்டும் என்பதுதான் அவருடைய கேள்வியாக இருந்திருக்கும். அந்தக் கோயிலின் பிரமாண்டத்தில் ஆரம்பித்து அங்கு மேற்கொள்ளப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே அவரைப் பொறுத்தவரையில் தேவையற்றவையே.
அவருடைய தெய்வ நம்பிக்கை என்பது அவருடைய முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக கைமாற்றித் தரப்பட்ட ஒன்று. அது அவருடைய அடையாளமாக, பெருமித அம்சமாக இருக்கக்கூடியது. அவர் அவருடைய குல தெய்வத்தை அவருக்கு உகந்த ஒரு நாளில் தொழும் சுதந்தரம் பெற்றவர். சாமியாடி, குறிசொல்லி அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது பூசாரி அங்கு இருப்பார் என்றாலும் அவர் மிகவும் அனுசரணையானவர். ஒரு தலித் தனக்குப் பிடிக்கும் சுருட்டும் சாராயமும் ஆட்டுக்கறியும்தான் தனது கடவுளுக்கும் பிடிக்கும் என்று எளிய முறையில் நம்பும்போது அதை அந்த பூசாரி மறுக்கவேமாட்டார். எனவே அந்தக் கோயிலில் இருக்கும் தெய்வத்துடன்தான் ஒரு தலித்துக்கு நெருக்கம் இருக்கும். அவர் தினமும் மூன்று நான்கு தடவை தீபாராதனையும் ஏராளமான அபிஷேகமும் மந்திரங்களும் பூவும் பொட்டும் பொங்கலும் புளியோதரையுமாக இருக்கும் ஒரு பெருந்தெய்வக் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்பதை மிகவும் இயல்பான, நியாயமான விஷயமாகவே பார்த்திருப்பார். அங்கு சமத்துவ மறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுபோல்தான் பல விஷயங்கள் அவர்களால் பார்க்கப்பட்டிருக்கும் (இது நிச்சயமாக என் விருப்பமோ முடிவோ அல்ல. அந்த வாழ்க்கை அவர்களால் பல நூறு ஆண்டுகளாக அமைதியாக வாழப்பட்டிருக்கிறது. எனவே, அதை அவர்கள் என்ன கோணத்தில் எடுத்துக்கொண்டிருப்பார்கள்? வெறும் மேல் சாதியின் அடக்குமுறைமட்டுமே காரணமாக இருந்திருக்குமா என்ற கேள்வியின் அடிப்படையில்தான் சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்).
தீண்டாமை மிகவும் கொடூரமான செயல் என்று இன்றைய நவீன மனம் சொல்கிறது. கூடவே, மேல் சாதியினரின் (பிராமணர்களின்) ஒடுக்குமுறையாக அராஜகமாக, சக மனித வெறுப்பாக அது முன்வைக்கப்படுகிறது. ஆனால், அது பல அடுக்குகளைக் கொண்டது. முதலில் தீண்டாமை என்பது தீட்டு என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. கடந்தகாலத்தில் பிராமணர்களின் வீடுகளில் மாத மலர்ச்சி நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதமானது அச்சு அசலாக தீண்டாமைக்கு சமமாகவே இருக்கும். அந்தப் பெண்கள் வீட்டுக்குள் நுழையக்கூடாது. யாரையும் தொடக்கூடாது. நல்ல காரியங்கள் செய்யும் பிறர் கண்ணில் படவே கூடாது. அவர்கள் தொட்ட பொருளை நீர் ஊற்றித்தான் வீட்டில் உள்ளவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட பிறகு எஞ்சும் உணவுதான் தரப்படும். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு பிறகு வேறு யாராலும் சாப்பிடப்படாது. இந்த இடத்தில் செயல்படுவது அந்தப் பெண்ணின் மீதான வெறுப்பு அல்ல; மாதவிடாய் மீதான ஒவ்வாமையே. இந்தத் தீட்டுதான் தீண்டாமையாக மாறுகிறது. பிராமணர்கள் தவிர பிற சாதியினர் மாத மலர்ச்சி நாட்களில் பெண்களை இந்த அளவுக்கு விலக்கிவைப்பது கிடையாது.
எனவே, பிற சாதியினர் அந்த விஷயத்தில் கறைபடிந்தவர்களாக அதாவது தீட்டானவர்களாகக் கருதப்பட்டனர். அதனால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் விலகி நின்றனர். பிற சாதியினரும் தீண்டாமையை அனுசரித்திருக்கிறார்கள். இங்கெல்லாம் செயல்பட்டது சக மனித வெறுப்பு அல்ல. தீட்டு தொடர்பான மன விலக்கமே. இந்த உணர்வுக்கு பிற சாதியினரின் அங்கீகாரமும் அனுமதியும் இருந்தது. அதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தனர். ஆம்… நாமெல்லாம் சுத்தபத்தமா இருக்கமாட்டோம். எனவே, ஒரு பிராமணர் நம்மிடம் இருந்து விலகி நிற்பது சரியே என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது. அந்தவகையில் அது ஒருபோதும் சக மனித வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவான வழிமுறை அல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அளவில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தனர். தீட்டு காலத்தில் பெண்கள் விதை நெல்லைத் தொடக்கூடாது, மங்கல காரியங்களின் முன் நிற்கக்கூடாது என அவர்களும் விலக்கைக் கடைப்பிடித்தே வந்திருக்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் பிராமணர்கள் அளவுக்கு தீவிரமாக கடைப்பிடிக்கமுடியவில்லையே என்ற எண்ணம்தான் அவர்கள் மனத்தில் இருந்ததே தவிர விலக்கி வைத்ததை அராஜகமாகப் பார்க்கவே இல்லை.
தீட்டு தொடர்பான ஒவ்வாமை எப்படித் தோன்றியது என்பதைப் பார்ப்பது அவசியம். பெண்களுக்கு இயற்கை தந்த ஒரு விஷயம் அது. தாய்மை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. எந்தவகையிலும் அது இழிவானதாகவோ விலக்கப்படவேண்டியதாகவோ பார்க்கப்படவேண்டிய ஒன்றே அல்ல. ஆணும் பெண்ணும் சமமாக இருந்த ஆதிகாலத்தில் அது இயல்பான ஒன்றாகவே எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. பழங்குடி சமயங்களில் பெண்கள் பூசாரியாக இருந்ததைக்கூடப் பார்க்க முடியும். ஆனால், அது பெண்ணுக்கேயான விஷயமாக இருந்ததால் பெண்ணைத் தனக்கு அடுத்தபடியாகக் கீழிறக்க ஆண்களுக்கு அது வழிவகுத்துவிட்டது. உண்மையில் இனப்பெருக்கம், உற்பத்தி ஆகியவற்றோடு தொடர்புடையதால் அது உயர்வாகப் பார்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படிப் பார்க்கப்பட்டு பெண் தெய்வமாக ஆக்கப்பட்டதும் நடந்தது. என்றாலும் அன்றாடச் செயல்பாடுகளில் ஆரம்பித்து போர், வேட்டை என்பது போன்ற உடல் வலு அதிகம் தேவைப்பட்ட செயல்கள் வரை இயற்கை தந்த விஷயமானது பெண்ணை மெள்ளப் பின்தங்க வைத்தது. தாய்மை உணர்வுகள் இயல்பாகவும் செயற்கையாகவும் மிகைப்படுத்தப்பட்டு பெண் இரண்டாம்பட்சமாக ஆக்கப்பட்டாள். இந்தக் காலகட்டத்தில்தான் தீட்டு சார்ந்த ஒவ்வாமை ஆரம்பித்திருக்கும்.
இங்கும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதற்கு பெண்களின் பரிபூரண சம்மதம் இருந்திருக்கிறது. இன்றும் சபரி மலைக்குப் பெண்கள் போகக்கூடாதா என்ற பெண்ணிய கோஷத்தை பெண்ணியவாதிகள் அல்லாத பெண்களிடம் போய்க் கேட்டால் அவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். பகவதி அம்மனில் இருந்து எத்தனையோ தெய்வங்களைத் தொழ அனுமதிக்கப்பட்டிருக்கிறதே… அவர்களை முதலில் தொழுது முடி. அதன் பிறகு ஐய்யப்பனைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லிவிடுவார்கள். சபரிமலைக்கு மாத மலர்ச்சிப் பருவத்தில் இருக்கும் பெண்கள் போகக்கூடாது என்பது எந்தவகையிலும் ஒடுக்குமுறையாகப் பெண்களால் பார்க்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.
இப்போது இந்த விஷயத்தின் இன்னொரு கோணத்தைப் பார்க்கலாம். மேல் சாதிக்காரரால் தொடப்படாததனால் கீழ் சாதிக்காரர் எதை இழந்துவிட்டார்… அவரைத் தொடுவதால் பெரிதாக எதை அடைந்துவிடப்போகிறார்? என்னைத் தொடாதே என்று சொல்லும் ஒருவரைப் பார்த்து உன்னைத் தொட்டு எனக்கு என்ன ஆகப்போகிறது என்ற கேள்வியை கேட்க முடியாமல் எது தடுத்திருக்கும்? பிராமண மதிப்பீடுகளையும் தலித் மதிப்பீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பல விஷயங்களில் தலித்கள் மேலானவர்களாக இருப்பது தெரியும். விதவை மறுமணம், பாலியல் சுதந்தரம், மது, மாமிசம் என கேளிக்கைகளில் ஈடுபடுதல் என பல விஷயங்களில் தலித்களின் வாழ்க்கை உயர்வானதே. மறு உலக வாழ்க்கை என்ற கற்பனையின் பெயரில் கைக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை வீணடிக்கவில்லை. இதை அவர்கள் மிகவும் பிரக்ஞைபூர்வமாகவேதான் பின்பற்றியிருக்கிறார்கள். விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட ஓர் சமுதாயத்தில் பசுவுக்கும் காளைக்கும் இருக்கும் முக்கியத்துவம் தெரிந்தநிலையில் அதை உணவாகக் கொள்பவர்களுக்கு என்ன சமூக அந்தஸ்து கிடைக்கும் என்பது தெரிந்தேதான் அவர்கள் அதைக் கைக்கொண்டிருக்கிறார்கள். கொன்னாப் பாவம் தின்னாப் போகும்… செரிக்கும் உணவைத் தின்னு என்பது அவர்களுடைய வாழ்க்கைப் பார்வை. அவர்களிடம்போய் மேல் சாதியினர் உங்களை மதிக்கவில்லையே என்று சொன்னால், காரஞ்சாரமாக இருக்கும் மாட்டுக்கறியை வாயில் போட்டு மென்று, இரண்டு மிடறு கள்ளைக் குடித்துவிட்டு, போடா நீயும் உன் …….மரியாதையும் என்றுதான் சொல்லியிருப்பார்.
பார்ப்பானின் கொடூரம் (?) தெரியவேண்டுமானால் பறையனாக இருந்து பார் என்று சொல்வார்கள். பறையரின் சந்தோஷம் தெரியவேண்டுமானாலும் பறையராக இருந்தால்தான் புரியும்.
0
B.R. மகாதேவன்