நரேந்திர மோடி என்றவுடன் ஏன் 2002 குஜராத் நினைவுக்கு வரவேண்டும்? ஏன் குஜராத்தில் அவர் செய்த நல்ல விஷயங்களை யாரும் அங்கீகரிப்பதில்லை? பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபிறகு மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் அனைத்திலும் மோடி வளர்ச்சியைத்தானே முன்வைக்கிறார்? பிறகு ஏன் ஓயாமல் இந்துத்துவம், மதவாதம், வகுப்புவாதம் என்று அநாவசியமாகக் குற்றம் சுமத்துகிறீர்கள்?
காரணம் கீழே.
- இந்துக்களின் குடியிருப்புகளில் முஸ்லிம்கள் இடம் வாங்குவதற்கு அனுமதிக்காதீர்கள் - பிரவீண் தொக்காடியா, விஹெச்பி
- மோடியை எதிர்ப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. அவர்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியவர்கள் – கிரிராஜ் சிங், பாஜக
- நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு அவர் பாடம் கற்பிப்பார் – ராம்தாஸ் கடம், சிவ சேனா
- இந்த நிலைக்கு உங்களை ஆளாக்கியவர்களை நீங்கள் பழிவாங்கவேண்டும் – அமித் ஷா, பாஜக
தேர்தல் நெருங்க நெருங்க போட்டிப்போட்டுக்கொண்டு மேலும் பல அபத்தமான, அப்பட்டமான வெறுப்பு பிரசாரங்கள் இதைவிட மோசமான தொனிகளில் வெளிப்படக்கூடும் என்றே நினைக்கிறேன்.
நரேந்திர மோடியும் பாஜகவும் இந்த வெறுப்பு அரசியலை கீழ்வருமாறு பயன்படுத்திக்கொள்கிறது.
- அமைதியாக இருந்து அதன்மூலம் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவைத் திரட்டுவது.
- பிரச்னை என்று வந்தால் மட்டும் சட்டென்று சிவ சேனாவிடம் இருந்தும் விஹெச்பியிடம் இருந்தும் விலகிக்கொண்டுவிடுவது. அதன்மூலம் இஸ்லாமியர்களை ஈர்க்க முயற்சி செய்வது. ‘அது அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம், எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.’
தயவு செய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று மிக மென்மையாக வேண்டி கேட்டுக்கொள்வதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை மோடியால். வைப்ரண்ட் குஜராத்தை உருவாக்க முடியும். தேசத்துக்கு என்னைவிட்டால் யாருமில்லை என்று சவால்விட முடியும். பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா என்று உலக அரசியல் பேசமுடியும். காஷ்மிரை, வட கிழக்கு மாநிலங்களை மாற்றிக்காட்டமுடியும். தமிழ்நாட்டுக்கு மிகை மின்சாரம் கொடுக்கமுடியும். ஆனால் இந்துத்துவ நண்பர்களை மட்டும் ‘நிர்வாகம்’ செய்யமுடியாது.
இதை எந்த வகை மாடல் என்று அழைப்பது?
இந்தியாவை வழிநடத்திச் செல்லமுடியும் என்று சொல்லமுடிந்த ஒருவரால் தனது இந்துத்துவ நண்பர்களை மட்டும் வழிநடத்திச்செல்லமுடியாததன் காரணம் என்ன? அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லையா அல்லது அவ்வாறு செய்ய விருப்பமில்லையா?
நரேந்திர மோடியை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. புரிந்துகொள்ள முடியாதது மோடியை ஆதரிக்கும் லிபரல்களைதான்.
- மோடியை அவர் முன்வைக்கும் வளர்ச்சி மாடலுக்காக மட்டுமே ஏற்கிறேன் என்று சொல்பவர்கள் அவருடைய குடையின்கீழ் செயல்படும் இத்தகைய இந்துத்துவ அமைப்புகளை மட்டும் எப்படி எதிர்க்கமுடியும்? அவை இல்லாமல் மோடி இல்லை என்பதை இவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லையா?
- அல்லது, மோடியால் இந்த இந்துத்துவ அமைப்புகளைச் சாந்தப்படுத்திவிடமுடியும் என்று நினைக்கிறார்களா? ஆம் எனில், முதலில் அதை மோடி செய்த பிறகு அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்?
- மோடினோமிக்ஸ் எனப்பபடும் வலதுசாரி வளர்ச்சி மாடலோடு இத்தகைய வெறுப்பு அரசியலும் சேர்த்தேதான் வரும் என்பதை இவர்கள் ஏற்கிறார்களா? இந்த வெறுப்பு அரசியலை மீறிதான் மோடியை அவர்கள் ஆதரிக்கிறார்களா?
- இஸ்லாமியர்களும் பிற சிறுபான்மையினரும் எக்கேடு கெட்டாலும் எனக்குப் பிரச்னையில்லை, எனக்குத் தேவை வளர்ச்சி மாடல் மட்டுமே என்பதுதான் அவர்கள் நிலைப்பாடா?
மோடியால் குஜராத்தில் கலவரங்களைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. இப்போதும் அவரால் தன் இந்துத்துவச் சகோதரர்களைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. இதன் பொருள், 2002 கலவரங்கள் எப்போதோ நடந்து முடிந்துவிட்ட கதையல்ல என்பதுதான். சமூக நீதிக்கு நேரடியாக உலை வைப்பவர்களைக் கட்டுப்படுத்தமுடியாத முடியாத ஒருவரை அல்லது கட்டுப்படுத்த விரும்பாத ஒருவரை எதற்கு நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்? அப்படிப்பட்ட ஒருவர் வந்து என்ன வளர்ச்சியைத் தந்துவிடப்போகிறார்? அத்தகைய வளர்ச்சிதான் ஏன் நமக்குத் தேவை?
0