காதல் அணுக்கள் / அத்தியாயம் 11
அதிகாரம் – பசப்புறுபருவரல்
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
நீ தூரப் போனதால்
நிறமழிந்த உடலின்
வனப்பை எவனிடம்
அவிழ்த்துக் காட்ட?
*
குறள் 1182:
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
பிரிவின் பக்கவிளைவு
என்றாலும் பீற்றுகிறது
அவன் பெயர் சொல்லி –
வண்ணமிழந்த யாக்கை.
*
குறள் 1183:
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
என் வெட்கப் பேரழகை
விற்றுப் பெற்றதெல்லாம்
துக்கம் தின்ற காதலின்
செந்தேகத் தீற்றல்களை.
*
குறள் 1184:
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
நிற்காமல் தொடருமவன்
நேசத்தின் நினைவுகளினூடே
எங்கே மறித்துப் புகுந்தது
இந்த சருமத்தின் சீரழிவு?
*
குறள் 1185:
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
இறுகப் பற்றியிருக்கும் கரம்
மில்லிமீட்டர் விலகினாலும்
உட்புகுந்து சம்மணமிடுகிறது
உடம்பிலொரு நுட்பமாறுதல்.
*
குறள் 1186:
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
மின்வெட்டின் மறுநொடியில்
இருண்டிடும் குண்டுபல்பாய்
அவனைப் பிரிந்த அக்கணம்
என் தோல்பரப்பில் தீமூளும்.
*
குறள் 1187:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
வியர்வைக்களைப்பில்
விலகிய விநாடியில்
வியாதியாய்ப் படரும்
வெண்ணிறம் அழிய.
*
குறள் 1188:
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
ஆண் பிரிவது
பொருட்டில்லை;
பசலைத் திட்டு
மகளிர் மட்டும்.
*
குறள் 1189:
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
பிரிந்தவனின் குறுஞ்செய்தி
“நான் இங்கு நலம்” என்றால்
தேகத்தின் நிறமிழத்தல் கூட
இருந்துவிட்டுப் போகட்டுமே!
*
குறள் 1190:
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
அவன் பெயர் அவப்பெயர்
ஆகாது பிழைக்குமெனில்
நிறமின்மை முளைக்கட்டும்
என் மேனிப் பரப்பெங்கும்.
***