36வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடல் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. சுற்றுலா செல்லும் உணர்வை ஏற்படுத்தும் அடர்த்தியான அழகிய மரங்கள் சாலையின் இரு பக்கங்களிலும் அணிவகுக்கின்றன. உள்ளே நுழைந்துவிட்டால் தனியொரு உலகம் இது. காலை வீசி நடந்தபடி மைதானத்தை நிதானமாக ஒரு முறை சுற்றி வந்த பிறகு அரங்குக்குள் நுழைவது நல்ல அனுபவம். விடுமுறை தினங்களில் இன்னும் கொஞ்சம் முன்பே வந்துவிட்டால், காலை நேர நடைபயிற்சியையும் இங்கே இனிதே முடித்துக்கொண்டுவிடலாம். மற்றபடி, அதிகம் நடந்து பழக்கமில்லாதவர்களுக்கு இந்த அரங்க நெடும்பயணம் வேதனையளிக்கலாம். புத்தகக் கண்காட்சிக்குள் நுழையும்போதே இப்படி சிலர் மூச்சு வாங்கியபடி இருந்ததையும், வந்தவுடனேயே உட்கார இடம் தேடியதையும் காண முடிந்தது.
வழக்கமாக இடம்பெறும் சாலையோரப் பழையப் புத்தகக் கடைகள் இந்த முறை இல்லை. நடைபாதையே இல்லை என்பதால் கடைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அத்தனை பெரிய மைதானத்தில் எங்காவது ஓரோரத்தில் இடம் ஒதுக்கியிருக்கலாமோ என்று தோன்றியது. பழைய இதழ்கள், பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் வாங்குவதற்கென்றே கண்காட்சிக்கு வருபவர்களுக்கு இது ஒரு ஏமாற்றம்.
இவை போக வேறு எந்த மாற்றமும் இல்லை. காலைத் தடுக்கும் அதே சிவப்புக் கம்பளங்கள். துர்நாற்றம் அடிக்கும் அதே டாய்லெட். அதே சுயமுன்னேற்ற நூல்கள். அதே கல்கி, சாண்டில்யன், பொன்னியின் செல்வன்.
இந்தக் கண்காட்சிக்குப் புது வரவு, SAGE Publications. டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் இவர்களுடைய மாபெரும் அரங்கங்களை இரண்டு ஆண்டுகளாகக் கண்டிருக்கிறேன். ‘இங்கே முதல் முறையாக பங்கேற்கிறோம். வரவேற்பு இருந்தால் தொடர்வோம்’ என்றார் பதிப்பகத்தைச் சேர்ந்தவர். ஆனால் மூன்று ஸ்டால்களுக்கு மேல் தரமாட்டோம் போன்ற விதிமுறைகள் இருந்தால் இப்படிப்பட்ட ஆங்கில பதிப்பகங்களை இங்கே எதிர்பார்க்கமுடியாது. இவ்வளவு பெரிய அரங்கில், தேவைப்படுவோருக்கக் கூடுதல் ஸ்டால்கள் அளிக்கலாமே?
சேஜ் பொதுவாக லைட் ரீடிங் புத்தகங்களைப் பதிப்பிப்பதில்லை. Academic Research புத்தகங்கள் மட்டுமே அதிகம் வெளியாகும். நம்முடைய திறனுக்கும் தேவைக்கும் ஏற்ப நூல்களைத் தேர்வு செய்து படிக்கலாம். டெல்லியில் இருந்ததைப் போலவே Bargain Counter என்று தனி அலமாரி ஒதுக்கியிருக்கிறார்கள். இங்கே சில நல்ல நூல்கள் 100, 200 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.
எடுத்துக்காட்டாக இரு நூல்கள் :
இது புது வரவு. சமீபத்தில் தி ஹிந்துவில் இந்நூல் குறித்து ஒரு விமரிசனம் வந்திருந்தது. தலைப்பில் பிரபகாரன் இருந்தாலும், இலங்கை அரசியல் குறித்தும் ஈழப் போராட்டம் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் எளிமையான நூல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
NHM மின்புத்தகங்களுக்கான அரங்கில் ஆர்வத்துடன் பலர் விசாரித்துக்கொண்டிருந்தனர். தமிழில் மின்நூல் படிக்கமுடியுமா? ஐஃபோனில் படிக்கலாமா? எப்படி வாங்குவது? எல்லா நூல்களும் இப்படிக் கிடைக்குமா?
கிழக்கு பதிப்பக அரங்கம். வரலாறு, அரசியல், வாழ்க்கை, மொழிபெயர்ப்பு என்று பல புதிய நூல்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றிய அறிமுகங்களை அடுத்தடுத்து அளிக்கிறேன். கூட்டம் அதிகமிருந்ததால் கிழக்கு அரங்குக்குள் செல்லமுடியவில்லை. நான்கு ஸ்டால்கள் இருப்பதில் உள்ள வசதி இப்போதுதான் தெரிகிறது.
விடியல் அரங்கில் மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் முழுத் தொகுதியும் கிடைக்கிறது. வேறு சில புதிய நூல்களும் வெளியாகியுள்ளன. வரும் நாள்களில் இங்கே அவற்றை அறிமுகம் செய்கிறேன். நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, விடியல் சிவாவின் மறைவு ஏற்படுத்தியுள்ள தாக்கம் இனிவரும் ஆண்டுகளில்தான் தெரியும் என்று சொன்னார். உண்மைதான். அவர் பணியாற்றிய சில புத்தகங்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் இருக்கும். அவை நின்றுபோகும்போதுதான் சிவாவின் பங்களிப்பு புரியவரும். விடியல் இனி எத்திசையில் பயணம் செய்யும், எப்படிப்பட்ட நூல்களைக் கொண்டுவரும், பழைய நூல்களைத் தொடர்ந்து பதிப்பிப்பார்களா போன்ற கேள்விகளுக்கு விடியலில் இருந்து யாராவது விரைவில் பதிலளிக்கவேண்டும்.
கிழக்கு அரங்குக்கு (246) எதிரில் உள்ள தமிழினி அரங்கம். நேற்றைய தி ஹிந்துவில் தமிழினி வசந்தகுமார் பதிப்புலகில் உள்ள ராயல்டி சிக்கல்கள் குறித்தும் நூல்கள் விற்பனை குறித்தும் பேசியிருந்தார்.
அழகிய அரங்கம். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இனிதான் விசாரிக்கவேண்டும்.
அடுத்த மூன்று நாள்களும் விடைமுறை தினங்கள் என்பதால் காலை 11 மணிக்குப் புத்தகக் கண்காட்சி தொடங்கிவிடும்.
அங்கேதான் சென்றுகொண்டிருக்கிறேன். இன்றைய அப்பேட், நாளைக்கு.
0
மருதன்