சங்க காலம் / தேடல் – 2
தமிழர் மலர்ந்த விதம்
ஏறத்தாழ 1000 ஆண்டுகாலப் பரப்பில் நான்கு படிநிலைகளில் தமிழர் மலர்ந்தனர். வேட்டையாடுதல், மேய்த்தல், விளைவித்தல், விற்றல் என்ற நான்குவித தொழில் முறைமைகளில் அந்த மலர்ச்சி இருந்தது.
ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட காலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளாக இருக்கலாம். முதல் படிநிலையின் உச்சத்தில் இரண்டாம் படிநிலையின் தோற்றம் என்ற நிலையில் ஒவ்வொரு படிநிலையும் அமைவுபெற்றது. ஆனால், பின்னது வந்தவுடன் முன்னது அழிவுற்றது என்று கருதமுடியாது.
இக்கருத்தினை, “ஒன்று அழிந்து வந்தது. மற்றொன்று வளர்ந்து வந்தது. பழைய சமுதாயத்தின் குறிக்கோள்கள், கருத்துக்கள், தத்துவங்கள் முதலியன புதிதாகத் தோன்றும் சமுதாயத்தின் குறிக்கோள், கருத்துக்கள், தத்துவங்களுக்கு மாறுபட்டனவாக இருந்தன“[1] என்று நா. வானமாமலை கூறுவதோடு இணைத்துச் சிந்திக்கலாம். இறுதியில், இந்நான்கும் இணைந்தும் தனித்தும் ஓர்மை பெற்றிருந்தன.
இந்நான்கு தொழில்களும் நான்கு வெவ்வேறு தனித்தன்மையுடைய நிலப்பரப்பில் காலவோட்டத்துக்கு ஏற்ப உருவானவையே. வேட்டையாடுதல் – மலை, மேய்த்தல் – காடு, விளைவித்தல் – வயல், விற்றல் – கடற்கரை மணலும் கடலும். “நால் நிலப்பாகுபாடுகளும் அந் நால்நிலங்களின் இயற்கை விளைபொருட்களும் உற்பத்திப் பொருட்களும் உற்பத்திக் கருவிகளும் உணவு முறைகளும் மரம்-செடி-கொடிகளும் இசை முதலானவையும் வெவ்வேறுபட்டனவாய் இருந்தன“[2] என்று பெ. மாதையன் உறுதிபடுத்தியுள்ளார்.
வேட்டையிலும் விளைவித்தலிலும் இனக்குழு மரபினையும் விளைவித்தலிலும் விற்றலிலும் அரசுசார் நிறுவன மரபினையும் காணமுடிகின்றது. இது தேவைக்கு ஏற்ப நிகழ்ந்த மாற்றம். இதனை இனக்குழுக்கள் பெருங்குழுக்களாக மாறியமை என்று கொள்ளலாம். காலவோட்டத்தில் இனக்குழுத்தலைவர்கள் சிற்றரசர்களாகவும் சிற்றரசர்கள் பேரரசர்களாகவும் உருப்பெற்றனர்.
வேட்டையாடு விளையாடு
இனக்குழுத் தமிழர்கள் முதலில் வாழ்ந்தது மலைகளிலும் குன்றுகளிலும்தான். அக்காலத் தமிழகத்தில் இத்தகைய நிலவியல் சூழல் மிகுந்திருந்தமையும் இதற்கொருகாரணம். அங்கு கிடைத்த இயற்கைசார் உணவினை உட்கொண்டு அதற்குரிய தகவமைப்புடன் அத்தமிழர் வாழ்ந்துவந்தனர்.
அன்றாட உணவினை அந்தந்த வேளைக்கும் தேவைக்கும் ஏற்ப எடுத்தும் (தேன், புல்லரிசி), அகழ்ந்தும் (கிழங்கு, வேர்), பறித்தும் (இலை, பூ), கொன்றும் (வனவிலங்கு, பறவை ) உண்டனர். இவர்களின் பொருளாதாரம் (உணவாதாரம்) மூங்கில்நெல், பலா, வள்ளிக்கிழங்கு, தேன் முதலியவையே. குறிஞ்சித்திணையை மையமிட்ட சங்கப் பாடல்களில் இத்தகைய உணவுப்பொருட்களே இடம்பெற்றுள்ளன. சான்று புறநானூறு – 109.
இலக்கியத்தில் இத்தகைய நிலப்பரப்பினைக் குறிஞ்சி என்றும் அதற்குரிய நிலவெல்லையாக மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஔவையார் “மிசை“ என்று குறிஞ்சி நிலத்தைச் சுட்டியுள்ளார். மிசை என்பது “மேடு“ என்ற பொருள்படும்.
மலைக்காட்டுப்பகுதிகளில் வேடர், எயினர், மழவர், மறவர் ஆகிய பெயர்களால் சுட்டப்படும் வேடர்கள் இனக்குழுமுறையில் வாழ்ந்துவந்தனர். “குன்றுகளில் வாழும் மக்கள் மிகவும் புராதனமான (நாகரீகமற்ற) நிலையில் இருந்தார்கள்“[3] என்று கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். ஆம்! அவர்கள் காட்டுமனிதர்கள்தான். அதற்காக அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று கருதிவிடக்கூடாது.
குறுநில மன்னர்கள் பெரும்பாலும் இக்குன்றுப் பகுதிகளில் இருந்து அரசாண்டதாக இலக்கியங்கள் சுட்டியுள்ளன. இவர்கள் மலைத்தலைவர்கள். அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், கண்டீரக் கோப்பெருநள்ளி, இளவிச்சிக்கோ, ஓரி, கொண்கானங்கிழான், ஏறைக்கோன், குமணன், பிட்டங்கொன்றன் போன்றார்கள் குறிப்பிடத்தக்க மலைத்தலைவர்கள். இவர்களில் பலர் வள்ளல்களாக இருந்துள்ளனர். காரணம், இவர்களுடைய மலை உணவு வறட்சியற்றதாக இருந்துள்ளது.
நல்ல மேய்ப்பர்கள்
காலவோட்டத்தில் மலைகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் மலையைவிட்டு இறங்கிவந்தனர். அதாவது, மலையடிவாரத்தில் மண்டியிருந்த காட்டுப்பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆடுமாடுகளை மேய்த்தலும் சிறு அளவில் உழுதலும் இவர்களுடைய தொழிலாக இருந்தது. இந்நிலங்கள் புன்செய்நிலங்கள்தான். இவர்கள் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் குடியிருந்தனர். இந் நிலப்பகுதியை முல்லை என்றனர்.
காட்டுப்பகுதிகளில் வேட்டையாடி, கால்நடைகளை வளர்த்த ஆயர் (ஆ-பசு, நிரை – கூட்டம். ஆநிரையை மேய்த்ததால் இவர்களை ஆயர்கள் என்றனர்.), கோவலர், இடையர், அண்டர், பூழியர், குடவர் ஆகியோர் இனக்குழுமுறையில் இப்பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். இதற்குச் சான்றாக அகநானூற்றின் 101, 311, 393 ஆகிய பாடல்களைக் காட்டலாம். இவர்களிடம் இனக்குழுச் சமுதாயமான குறிஞ்சி நிலத்தவரின் பண்பாட்டு எச்சங்கள் மிகுந்திருந்தன. இவர்கள் கூட்டுழைப்பினர்கள். கூட்டாகவே உண்டனர். இவர்களின் உணவுப்பொருட்களாக வரகு, கொள், தினை, அவரைப் புழுக்கு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 190 முதல் 196 வரையிலான அடிகள்.
இவர்களின் வாழ்விடப் பகுதியைச் “சீறூர்“ என்று இலக்கியங்கள் சுட்டியுள்ளன. சான்று புறநானூறு – 285 முதல் 335 வரையிலான பாடல்கள். இந்தச் சீறூரினை ஆண்ட மன்னர்கள், இனக்குழுத் தலைமையையும் அரசமைப்பின் தலைமையையும் கொண்ட இருகலப்புநிலைத் தலைமையுடைய ஒருவகையான ஆட்சியினை நடத்தினர். இத்தலைமையினருக்குக் குடிமக்களாகத் துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவர்களின் பெருஞ்செல்வம் மாடுகள்தான். அவற்றைக் காக்கவும் அவற்றிலிருந்து பல்வேறு பொருட்களைப் பெற்றுத் தங்களின் உணவுத்தேவைகளைப் போக்கிக்கொள்ளவும் பெரும்பாடுபட்டனர். மாடுகளைத் தம் உடைமையாகக் கருதியதால் இவர்களின் சமுதாயத்தை “உடைமைச்சமுதாயம்“ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்களின் மாடுகளைப் பகைவர்கள் கைப்பற்றவரும்போது, அவர்களைத் தடுத்து அவர்களிடமிருந்து அவற்றைக் காக்கும்பொருட்டு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வழிபாடு செய்துள்ளனர். இச்செயலினை அகநானூறு – 67, 131 ஆகிய இரண்டு பாடல்கள் விளக்கியுள்ளன.
ஓர் ஆடவருக்கு ஒரு பெண் என்ற கற்புடை வாழ்க்கை இந்நிலப்பகுதியில் வேரூன்றியது. குறிப்பாக ஒருத்தி ஒருவனுக்காகவே வாழ்ந்தாள் என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் இலக்கியங்கள் “முல்லைசார்ந்த கற்பினள்“ என்று குறிப்பிட்டுள்ளன.
“ஏறுதழுவுதல்“ என்ற மாட்டினை அடக்கும் வீரத்தை ஓர் ஆடவனின் திருமணத்தகுதியாகக் கொண்டனர். இது முல்லைத்திணைக்குரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தது. இன்றுவரை கொண்டாடப்படும் விழாவாகத் தமிழரிடையே உள்ளது.
குறிஞ்சி நிலத்தில் தலைமையுடையோரின் பெண்கள் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், முல்லை நிலத்தில் தலைமையுடையோரின் மனைவி சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது நாகரிக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல். குறிஞ்சி நிலத்தலைவர்களின் பெயர்கள் இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ஆனால், முல்லை நிலத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பாகவே இலக்கியத்தில் புலப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களும் குறிஞ்சி நிலத் தலைவர்கள்போல வள்ளல் தன்மையுடன் இருந்தாலும் இவர்களின் நிலப்பரப்பில் தொடர்ச்சியான வளம் இல்லை.
வயலும் வாழ்வும்
காலவோட்டத்தில் உழவின் வழியாக உணவு உற்பத்திப் பெருக்கத்தை மிகுவிக்கக் கற்ற தமிழர்கள் ஆற்றுப்பாசனவசதியுடைய வயல்வெளிகளைத் தங்களின் தொழிலிடமாக, வாழ்விடமாகக் கொண்டனர். இவர்கள் மென்புல மக்கள். நன்செய் வேளாண்மையை உடையவர்கள். வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் என்று சுட்டப்பட்டது.
வயல் விளைவதற்குக் காரணமான மழையும் அதற்குரிய கடவுளான இந்திரனும் இவர்களால் போற்றப்பட்டனர். இந்திரனை வேந்தன் என்று அழைத்தனர். பின்னாளில் இவர்களின் தலைவர்கள் தங்களை “வேந்தர்கள்“ என்று அழைத்துக்கொண்டனர். ஆனால், இவர்கள் பெருநிலப்பரப்பினையுடைய மூவேந்தர்களுள் அடங்குபவர்கள் அல்லர். இந்நிலமக்களின் தலைவர்கள் “முதுகுடி மன்னர்கள்“ என்ற அழைக்கப்பட்டனர். இவர்கள் நிலவுடைமையாளர்களாகத் திகழ்ந்தனர்.
பணப்பயிர்களை விளைவித்தனர். பண்டமாற்றில் நெல்லை உயர்நிலைமதிப்புப் பெறச்செய்தனர். வளம் கொழிக்கும் நிலமாக மருதநில வயல்கள் இருந்தன. வாழ்வும் செம்மைப்பட்டது. கொண்டாட்டங்கள் பெருகின. “மருதநிலப் பகுதியில் வாழும் மக்கள் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்“[4] என்று கா. சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் உணவுப்பொருட்களாக வெண்ணெல் உணவு, கருப்பஞ்சாறு போன்றன இருந்தன. சான்று பெரும்பாணாற்றுப்படை – 255 முதல் 262 வரையிலான அடிகள்.
வேலைப்பிரிவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மதங்களின் செல்வாக்கு போன்றன இந்நிலத்தில் கிளைத்து வளர்ந்தன. வயலைப்போலவே இவர்களின் வாழ்வும் வளம்பெற்றிருந்தது.
நன்செய் வேளாண்மையின் அசுரவளர்ச்சியால் புன்செய் வேளாண்மை இழிவுக்குரியதாகக் கருதப்பட்டு மதிப்பிழந்தது. அதனால்தான், வென்ற அரசர் தோல்வியடைந்த அரசரின் விளைநிலங்களில் ஏரில் கழுதையைப் பூட்டி புன்செய் பயிர்களான வரகு, கொள் முதலிய தானியங்களை விதைத்து இழிவுபடுத்தினர். சான்று புறநானூறு -15, 392.
திரைகடலோடி திரவியம் தேடி
காலவோட்டத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக வணிகத்துக்கு முதன்மைத்தன்மை வழங்கப்பட்டது. நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாத வணிகர் வர்க்கம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தது. உள்நாட்டு வணிகக் குழுவினருக்கு “நிகமம்“ என்று பெயர் இருந்துள்ளது.
கடலும் கடல்சார் பகுதிகளும் இவர்களின் வணிகத்தளங்களாயின. பரதவர்கள் தங்களின் வணிகக்குழுவினருக்கு “நியமம்“ என்று பெயரிட்டிருந்தனர். இப்பகுதியை நெய்தல் என்றனர். நெய்தல் நிலத்தில் உமணர்கள் விளைவித்த உப்பு மருதநிலத்தில் விளைந்த நெல்லுக்கு ஒப்பாகப் பண்டமாற்றில் கருதப்பட்டது.
கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்து விலைமதிப்புடையதாக வெளிநாட்டு வணிகத்தில் கருதப்பட்டது. நா. வானமாமலை, “தென்கடலில் முத்துக்குளிப்புப் பற்றியும் கொற்கைக் கடல் முத்து தங்கள் சீமாட்டிகளை அணியச்செய்வது பற்றியும் அறிந்திருந்தார்கள். நம் நாட்டு இலக்கியச் சான்றுகளை அவை உறுதிப்படுத்துகின்றன. மேலும் கொற்கையில் அகப்படும் ரோம நாணயங்கள் தொடர்ச்சியாக அகஸ்டஸ் காலம் முதல் ஆர்க்கேடியஸ் காலம் (14-400கி.பி வரை) வரை கிடைப்பது இச்செய்திகளை ருசுப்படுத்தும் பொருட்சான்றாகும்“[5] என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
முடியுடை மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பட்டினங்களின் வளர்ச்சி அளப்பரியதாக உள்ளது. நிலைத்த அரசால்தான் வலுவான கடல்வாணிகத்தைச் செம்மையுற செய்யமுடியும். அந்தவகையில், சோழ வேந்தருக்கு புகாரும் (புறநானூறு – 30, பட்டினப்பாலை – 129-136, 216-218) சேர வேந்தருக்கு முசிறியும் (புறநானூறு – 343, அகநானூறு – 149) பாண்டியருக்குக் கொற்கையும் (அகநானூறு – 27,130,201, 296, ஐங்குறுநூறு – 185, 188, நற்றிணை – 23, சிறுபாணாற்றப்படை – 56-58) கடல்வணிகத் துறைமுகங்களாக அமைந்து வளம்தரும் அட்சயப் பாத்திரங்களாகத் திகழ்ந்தன.
இம்மூன்றாலும் அந்நியநாட்டு வணிகர்கள் நம்நாட்டில் கால்பதிக்க வழியேற்பட்டது. அவர்களின் பண்பாடும், பழக்க வழக்கங்களும், அடிமைகளை வாங்கிப் பணியமர்த்தும் வழக்கமும் நம்நாட்டிலும் ஏற்படலாயின.
பண்டமாற்றுமுறை கடல்கடந்து நிகழ்ந்தது. வணிகர்களின் வளமான வாழ்வினை மதுரைக்காஞ்சியின் 500 முதல் 506 வரையிலான அடிகள் எடுத்துக்காட்டியுள்ளன.
நான்கிலும் நாம்தான்
மலை,காடு,வயல்,கடல் என்ற நான்கு வெவ்வேறான நிலப்பரப்புகளில் வாழ்ந்ததும் படிப்படியாக முன்னேறியதும் தமிழர்தான். அவர்களின் சங்ககாலம் இந்நான்கிலும் ஊடுபாவாக விரவியுள்ளது.
நால்வகை நிலங்களையும் தனித்தனியே ஆண்ட நிலைமை மாறி, நானிலத்தையும் ஒருவர் ஆளும் பேரரசுநிலை உருவாகியது.[6] பாண்டிய நெடுஞ்செழியன் நானிலத்தோர் வழிபட ஆண்டுவந்தான் என்ற செய்தியைப் புறநானூற்றின் 17ஆவது பாடல் தெளிவுபடுத்தியுள்ளது. சேரமான் கோக்கோதை மார்பன் இவ்வாறு நானிலப்பகுதியை ஆண்டதனால் அவன் நாடன், ஊரன், சேர்ப்பன் எனப் புகழப்பட்டான்.
நானிலத்தையும் இணைத்து ஆளும் போக்கில் தொழில் அடிப்படையில் உரிமைகளும், மதிப்பும் வரிசைநிலையும் வகுக்கப்பட்டன. தொல்காப்பியத்தில் 70-84 ஆகிய நூற்பாக்களில் நால்வருணத்தாருக்குரிய வரையறைகள் வகுக்கப்பெற்றுள்ளன. நால்வருணம் (அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்) என்ற கோட்பாடு இந்நிலையில் வலுப்பட்டது.
1. வானமாமலை, நா., பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள், ஆராய்ச்சி 2: 9, ப.14.
2. மாதையன், பெ., சங்க்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், ப. 10.
3. சிவத்தம்பி, கா., திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், ஆராய்ச்சி 3: 2, ப.342.
4. மேலது.
5. வானமாமலை, நா., சங்கும் முத்தும் சமுதாய மாறுதல்களும் – 2, தாமரை, ஏப்ரல் 1969, ப.39.
6. மாதையன், பெ., சங்க்கால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், ப. 69.