காதல் அணுக்கள் / அத்தியாயம் 18
(அதிகாரம் – நிறையழிதல்)
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
பொத்தி வளர்ந்தவளின்
வெட்கக்கரையுடைத்து
கற்பைக்கறையாக்கும்
காதல் பெருவெள்ளம்.
*
குறள் 1252:
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
தனித்த நிசியில்
தணியாத பசியில்
துணிக்குள் கனியும்
தீராப்பெருங்காதலி.
*
குறள் 1253:
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
தும்மல் அடக்கலாம்
சிறுநீர் அடக்கலாம்
தூமையை? அஃதே
காதல் வேட்கையும்!
*
குறள் 1254:
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
காமக்கடன்கள் பொருட்டல்ல
என்றே இறுமாந்திருந்தேன்,
கற்பில் கர்வமுற்றிருந்தேன் –
ஒரு பிரிவு காணும் வரை!
*
குறள் 1255:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
ஐந்தரை அடி உயரமும்
ஏங்கிப் பெருந்துயரமாகி
வராதவனிடமே போகும்
வெட்கங்கெட்ட மனசு.
*
குறள் 1256:
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
விட்டோடியவன் பின்னே
ஓட வேண்டும் என்பதே
உடலிடம் தோற்குமொரு
காதலின் விநோத விதி.
*
குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
பிடித்தவன் காமம்
திறந்து கிடக்கும்
தேகம் கொஞ்சம்
நாணம் மறக்கும்.
*
குறள் 1258:
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
உடையாத புலன்கள்
திமிறித் துகள் ஆகும்
உடையவன் உதிர்க்கும்
கனிவான மொழியினில்.
*
குறள் 1259:
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
மகத்தான பலவீனத்துடன்
கட்டிக் கொண்டு நிற்கவே
நேரிடுகிறது – அவனைத்
திட்ட எத்தனிக்கையில்.
*
குறள் 1260:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
அவன் தொடுகையில்
உருகி வழியும் என்
ஊடல் அத்தனையும்
நெருப்பு நைலானாய்.
***